privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

கோவிட் 19-க்குச் செய்ய வேண்டியதும், நிதி திரட்டும் வாய்ப்புகளும் ஃபோர்ஸ் (F.O.R.C.E.) ஆய்வறிக்கைக்கான எதிர்வினையும் – ஒரு வர்க்கப் பார்வை

-

லக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்திய அரசோ ஊரடங்கு மூலம் ஆகப் பெரும்பான்மையான மக்களை வீடுகளில் அடைத்து வைத்திருப்பதையே, நோய்த் தொற்று பரவலின் தாக்கத்தை குறைக்கும் முதன்மை நடவடிக்கையாக கடைபிடித்து வருகிறது. மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்பதோடு இத்தகைய சூழல் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கையும் பெரிய அளவில் முடங்கியுள்ளது.

குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் (FY 2019-2020) இறுதிக் காலகட்டத்தில் இந்த நோய்த்தொற்று பரவியதால், அரசின் வருவாய்க்கான மூலங்கள் முற்றிலும் சுருங்கின. பல்வேறு நிதி நடவடிக்கைகள், குறிப்பாக, நிதியாண்டுக்கான வரி செலுத்துவது / வாங்குவது தொடர்பான நடவடிக்கைகள் பெரிதும் முடங்கிப் போயுள்ளன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் நாள் டிவிட்டர் வலைதளத்தில் இந்திய வருவாய் துறையின் (Indian Revenue Service – IRS) அதிகாரபூர்வ பக்கத்தில், 50 இந்திய வருவாய்த் துறை அதிகாரிகளால் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஓர் அறிக்கை வெளியானது. நிதி திரட்டும் ஆதார வழிகள் மற்றும் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை (F.O.R.C.E) என்ற பெயரிலான இந்த அறிக்கையானது, பல்வேறு துறைகளில் வரி வருவாயை அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய ஓர் ஆய்வறிக்கை ஆகும்.

அந்த ஆய்வறிக்கை கூறும் பரிந்துரைகள் யாவை? மத்திய நிதியமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) ஆகியன மறுநாளே அதற்கெதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கான காரணம் என்ன?

F.O.R.C.E. – அறிக்கை வலியுறுத்தும் சில முக்கிய பரிந்துரைகள்:

1) பெரும் பணக்காரர்களுக்கான வரி விதிப்பு சதவீதத்தை உயர்த்துதல்:

43 பக்கங்களைக் கொண்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அவ்வறிக்கை, கொரோனா நோய்த் தொற்றின்போது பல்வேறு நாடுகள் தங்களது பொருளாதாரத்தை மீட்டெடுக்க, புனரமைக்க, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இந்தியாவில் அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான குறுகிய, இடைக்கால, நீண்டகால இடைவேளைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளை தமது பரிந்துரைகளாக அவ்வறிக்கை கொண்டிருந்தது.

அவற்றில் பிரதானமாக, ஒரு பரிந்துரையானது பெரும் பணக்காரர்களைப் பற்றியது. அவற்றில்,

  • ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு தற்போது இருக்கும் 30 சதவீத வரியை 40 சதவீதம் வரை உயர்த்தலாம். அல்லது,
  • ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கும் மேல் நிகர சொத்து மதிப்பு வைத்திருப்பவர்களுக்கு செல்வ வரி (Wealth Tax) மறு அறிமுகம் செய்வதன் மூலம் வரி விதிக்கலாம்.

– என இரு முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த வரி விதிப்பின் மூலம் இந்திய அரசிற்கு ரூ. 50,000 கோடி வரி வருவாய் வருவதை வைத்து, பொருளாதாரத்தில் தமக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த, அதிக செலவு தரும் 5 முதல் 10 திட்டங்களை அரசு கண்டறிய வேண்டும்; அந்தத் திட்டங்களுக்கான மொத்த செலவு மதிப்பையும் அரசு ஒரு பொது இணையதளம் உருவாக்கி வெளியிட வேண்டும்; அந்தத் திட்டங்களுக்கு ஆகும் மொத்த செலவையும், இந்த மேற்கூறிய வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, மொத்தமாக இந்த திட்டங்களுக்கு மட்டுமே தனியாகச் செலவிட வேண்டும்; மேலும், இந்தத் திட்டங்களுக்கு ஆகும் செலவினங்களையும் இந்த இணையதளத்தில் அரசு  வெளியிட வேண்டும் – எனப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய இந்த முக்கிய பரிந்துரையானது, பெரும் பணக்காரர்களுக்கு வரி விலக்கு செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ள நிதி அமைச்சகத்திற்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது ஆளும் பா.ஜ.க., இதற்கு முன்னர் ஆட்சி செய்த காலத்தில்தான் இந்தச் செல்வ வரியானது ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாகவே, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இந்தப் பரிந்துரை அறிக்கையைத் தயாரித்த 50 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளின் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

படிக்க:
♦ 176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் !
♦ ரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா ?

2) பரம்பரை சொத்து (Inheritance) வரியை மறுஅறிமுகம் செய்தல்:

அறிக்கையின் மற்றுமொரு முக்கிய பரிந்துரையானது, பரம்பரை சொத்து வரியை மறுஅறிமுகம் செய்வது பற்றியது. பரம்பரை சொத்து வரியானது, மேலை நாடுகளில் சுமார் 55 சதவீதம் வரை வரி விதிப்பு செய்யப்படுகின்றது. இந்தியாவிலும் கூட 1985 வரை நடைமுறையில் இருந்த பரம்பரை சொத்து வரி விதிப்பானது, நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளது என்று கூறி, பின்னர் ரத்து செய்யப்பட்டது.

இந்த வரி விதிப்பை மறுஅறிமுகம் செய்யும்போது, செல்வம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் குவிவது பெருமளவில் குறையும்; மேலும், இத்தகைய முடங்கியிருந்த செல்வம் வரி விதிப்பின் மூலம் பரவலான பயன்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புள்ளது; இதுதவிர, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் முன்னர் இருந்த பல்வேறு நடைமுறை சிக்கல்களின்றி, இவ்வரி விதிப்பை அமல்படுத்த முடியும் – என்பதாக ஒரு பரிந்துரை இடம் பெற்றுள்ளது.

மேற்கூறிய பரிந்துரை எந்த வர்க்கத்தின் நலனைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை அறிந்த மத்திய அரசும், மத்திய நேரடி வரிகள் வாரியமும் (Central Board for Direct Taxes) இந்திய வருவாய்த் துறையின் டிவிட்டர் வலைதளத்தில் வெளியான அறிக்கையானது, இத்துறையின் கருத்தாக கருத இயலாது – என அறிக்கை வெளியான மறுநாளே கூறியிருப்பதன் மூலம், இந்த அரசாங்கம் யாருக்கானது என்பதைத் தெளிவாக்கியது.

3) இணைய பயன்பாட்டுச் சேவைகள் / காம் சேவைகள் வழங்கும்  நிறுவனங்கள் மீதான வரி விதிப்பை உயர்த்துதல்:

ஊரடங்கின்போது ஆகப் பெரும்பான்மை மக்களை வீட்டுக்குள் முடக்கியபோது, அரசின் பல்வேறு பொருளாதார மூலாதாரக் கூறுகளும் முடங்கியபோது, கொரோனா பாதிப்பின்போது இயங்கிய பொருளாதாரம் என்பது டிஜிட்டல் / ஆன்லைன் / இணைய வர்த்தகத்தின் பொருளாதாரம் சார்ந்ததுதான். இச்சூழலானது, தமது தேவைகளுக்காகப் பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்கும் நிறுவனங்களான, அமேசான் (Amazon), நெட்பிளிக்ஸ் (Netflix), சூம் (Zoom), ஸ்விக்கி (Swiggy), சொமேடோ (Zomato) போன்ற நிறுவனங்களைத்தான் பெரிதளவில் மாத வருவாய் உள்ள மக்களை சார்ந்திருக்குமாறு செய்கிறது. ஆகவே, இந்தக் காலகட்டத்தில், அது தழைத்தோங்கும் பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது.

ஆகையால், தமது தொழிலைப் பெருமளவு விரிவுபடுத்த வாய்ப்புள்ள இத்தகைய நிறுவனங்களின் மீதான வரி விதிப்பை ஒரு சதவீதம் உயர்த்துவதன் மூலம், வரி வருவாயைப் பெருக்க இயலும் என அவ்வறிக்கை பரிந்துரை செய்திருப்பது மிகவும் ஏற்புடையதாகும். ஏனெனில், பல்வேறு அரசு / தனியார் துறைகளிலிருந்தும், கொரோனா நிவாரண நிதியாக பல்வேறு மக்களும் தம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்து வரும் வேளையில், இந்த நிலைமையில் இயங்கிவரும் ஒரே தொழிலான விளம்பரச் சேவைகளுக்கு 6-இலிருந்து 7 சதவீதம் வரி விதிப்பை அதிகரிப்பதும், இணைய வர்த்தக நிறுவனங்களிடம் 2-இலிருந்து 3 சதவீதமாக வரி விதிப்பை அதிகரிப்பதும் அநியாயமானது என்று கருத இயலாது.

அறிக்கை தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மேற்கொண்ட நடவடிக்கைகள்:

இந்த அறிக்கை டிவிட்டர் வலைதளத்தில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி இரவு 10 மணியளவில் மக்கள் கருத்திற்காக வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை வெளியான மறுநாள் மாலை 5 மணியளவில் மத்திய நேரடி வரிகள் வாரியமானது, இவ்வறிக்கை வெளியாவதற்கு காரணமாக இருந்த 50 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளின் மீது தன்னிலை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 28-ஆம் தேதி, இந்த அறிக்கையைத் தங்களுக்கு கீழுள்ள இளம் அதிகாரிகளைத் தயார் செய்யுமாறு கோரியதாக துபே மற்றும் பகதூர் ஆகிய இருவர் மீதும், மேலும் இந்த அறிக்கையை டிவிட்டர் வலைதளத்தில் மக்கள் அறியும்படி வெளியிட்ட பூஷண் என்பவர் மீதும் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசை அழுத்தும் வருவாய் பற்றாக்குறையும், நிலவும் கட்டமைப்பிற்கு அப்பால் இருக்கும் தீர்வும்:

இந்த அறிக்கை உருவாவதற்கு முன்னோடிகளாக இருந்த, வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த 3 அதிகாரிகளும் சுமார் 10 ஆண்டு காலமாக இந்த துறையில் பணியாற்றியுள்ளனர். மேலும், அவர்கள் இந்த அறிக்கையை ஏப்ரல் 23-ஆம் தேதி அன்றே மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு எந்தவித கருத்தையும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவிக்காத நிலையில், அவர்கள் ஏப்ரல் 26-ஆம் தேதி டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில், ஏற்கெனவே பல்வேறு மாநிலங்கள் போதிய வரி வருவாய் இல்லாமல் மத்திய அரசிடம் தொடர்ந்து அதிகளவு நிவாரண நிதியைக் கோரி நிர்பந்தித்து வரும் வேளையில், இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை ஏற்கத்தக்கவை / ஏற்கத்தகாதவை என்றுகூட பரிசீலிக்காமல் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

மேலும், இந்த அறிக்கை வெளியாவதற்கு உதவி புரிந்த 50 ஐ.ஆர்.எஸ். இளம் அதிகாரிகளில் கணிசமானோர் இத்துறைக்கு வந்து 2 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள். ஆக, தனது துறையின் (ஐ.ஆர்.எஸ்) வருவாயை அதிகரிப்பதற்கான சில பரிந்துரைகள் செய்வதென்பது, அந்தத் துறை இயங்குவதற்கான அடிப்படையான முன்முயற்சியாகும். அதனைக்கூட மறுப்பதென்பது, அரசின் அதிகாரத் திமிரையும், அரசின் பல்வேறு துறைகள் எவ்வாறு முடங்கியுள்ளன என்பதை உணர்த்துகிறது.

படிக்க:
♦ டில்லி : மாற்றுக் கருத்துக்களை நசுக்க ஊரடங்கைப் பயன்படுத்தும் அரசு !
♦ அவுரங்காபாத் விபத்து மட்டுமல்ல, கொரோனா ஊரடங்கால் 383 பேர் இறந்திருக்கிறார்கள் !

அமெரிக்காவில் வரி வருவாய் குறைந்துள்ளதன் விளைவாக, கொரோனா தாக்குதல் தீவிரமடைந்துள்ளதோடு, அடிக்கட்டுமான அமைப்பே நெருக்கடியில் இருப்ப்தை பல பொருளாதாரவாதிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இதன் விளைவாக, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் தீவிரமடைகின்றன. எனவே, முதலாளித்துவ நாடுகளில் கூட சந்தைகளை இயங்க வைக்க முடியாமல் அரசுகள் தடுமாறுகின்றன. எனவே, சந்தைகளை இயங்க வைக்கவும், சந்தைகளின் ஆதாயங்களைப் பரவலாக விநியோகிக்கவும் தவிர்க்கவியலாமல் பெருமுதலாளிகளது செல்வத்தின்மீதும், கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களின் மீதும் வரி விதிப்பு வீதத்தை அதிகரிப்பது மிகமிக அவசியத் தேவையாக உள்ளது.

அரசாங்கத்தால் வரி குறைவாக உறிஞ்சப்படும்போது, தொழில் நிறுவனங்கள் தங்கள் லாபத்திலிருந்து அதிகமாக மறுமுதலீடு செய்யும் என்று வரி அதிகரிப்பை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இது எந்த வகையிலும் உண்மையில்லை என்று ஏற்கெனவே பல பொருளாதாரவாதிகள் நிரூபித்துள்ளனர். தொழில் நிறுவனங்கள் தங்களது லாபத்தை மறு முதலீடு செய்யாமல், வெள்ளையாகவும் கருப்பாகவும் இந்தச் செல்வத்தை வரியில்லா சொர்க்க நாடுகளுக்குக் கடத்திச் சென்று பதுக்குகின்றன என்பதே உண்மை.

கோடீசுவர முதலாளிகள் மீதும், அவர்களது கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் உலகளாவிய குறைந்தபட்ச வரிவிதிப்பை அனைத்து நாடுகளும் செயல்படுத்தப்படுத்த வேண்டுமென கொரோனா தாக்குதல் நிலவும் இத்தருணத்தில் பல்வேறு பொருளாதாரவாதிகளும் ஜனநாயகவாதிகளும் கோரி வருகின்றனர். ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி மக்கள் வரிப் பணத்தை வாரிவழங்கிய மோடி அரசு, இந்த நோய்த்தொற்று நெருக்கடி காலகட்டத்தில், அவர்களிடம் இருக்கும் கொள்ளை லாபத்தில் ஒரு சிறு சதவீதத்தை வரி என்ற வகையில் போட்டு வசூலிக்க வேண்டுமென பரிந்துரைத்தால்கூட, அதைக் கண்டு பதற்றமடைந்து எதிர்வினையாற்றுகிறது.

இந்த அறிக்கை தொடர்பான மோடி அரசின் இந்த நடவடிக்கையானது, எவ்வாறு அரசின் அனைத்து துறைகளும் கார்ப்பரேட் நலன்களின் சேவகனாக, தொங்கு சதையாக மாற்றப்பட்டு வருகின்றது என்பதைப் பறைசாற்றுகிறது. ஆக, ஒட்டுமொத்ததில், இந்த அரசுக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு பெரும்பான்மை மக்களுக்கு குறைந்தபட்ச நன்மை செய்வதுகூட சாத்தியமற்றது என தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, அரசின் ஒவ்வொரு உறுப்பும், எவ்வாறு தான் ஏற்றுக்கொண்ட வேலைகளைச் செய்ய இயலாமல் போய், மக்களுக்கு எதிரானதாய் மாற்றமடைந்து வருகிறது என்பதை அரசின் தொடர்ச்சியான இந்த நடவடிக்கைகள் மேலும் மேலும் அப்பட்டமாகத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறது. ஜனநாயக சக்திகள் இதை புரிந்து கொண்டு மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பது குறித்து முன்வரவேண்டும்.

– புதியவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க