ந்தியாவில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கின் நிழலுக்கு மத்தியில் மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும் டில்லி போலீசு, கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்கு துளியும் சம்பந்தமில்லாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேடுதல் நடத்துவது, தொலைபேசிகள், ஆவணங்களையும் பறிமுதல் செய்வது, தடுப்புக்காவலில் அடைப்பது, விசாரணை செய்வது, பெருவாரியான நபர்களைக் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளே அதன் நிகழ்ச்சி நிரலில் நிரம்பியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்குமாறு உச்சநீதிமன்றம் அனைத்து அரசாங்கங்களுக்கும் வழிகாட்டுதல் கொடுத்துவரும் வேளையில், இந்தக் கைதுகள் நடந்து வருவதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

கைது செய்யப்பட்டவர்களின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும், இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்படும் பாகுபாடுமிக்க திருத்தங்கள், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடு செய்ததோடு தொடர்புடையவை. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டில்லியில் இருக்கும் உழைக்கும் வர்க்கத்தினரின் குடியிருப்புகளைச் சுற்றி வன்முறைமிக்க மதவெறிப் படுகொலைகளைத் தூண்டிவிட்டு, அதில் பங்கேற்றதாகவும் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

1947-ம் ஆண்டு பிரிவினை சமயத்தில் தலைநகர் டில்லியில் ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு நடந்த மிகப்பெரிய இந்து – முஸ்லீம் கலவரம் இதுதான்.
நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர், கடந்த மார்ச் மாத இறுதியில் உள்துறை அமைச்சகம் குற்றப் பிரிவு போலீசுக்குக் கொடுத்த வழிகாட்டுதல்களுக்குப் பிறகுதான், இந்த தடுப்புக் காவல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

வடகிழக்கு டில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கடந்த மார்ச் 22 முதல் ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை மட்டும் 25 முதல் 30 கைதுகள் வரை நடந்துள்ளன என்று ‘தி இந்து’ நாளேடு தெரிவிக்கிறது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை செய்தியின்படி ஊரடங்கின்போது மட்டும் சுமார் 50 கைதுகளும், மொத்தத்தில் 802 கைதுகளும் நடந்துள்ளன. மேலும் சில தரப்புகளிலிருந்து வரும் தகவல்கள் கைது எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்கின்றன. ஒவ்வொருநாளும் சுமார் ஆறு முதல் ஏழு கைதுகள் நடைபெறுவதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கின் கீழ், ஊடகங்கள் மற்றும் சட்ட சேவைகளின் மீதான கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக சரியான எண்ணிக்கையை உறுதி செய்வதென்பது கடினமானது. டில்லி படுகொலை நிகழ்வுகளைத் தொடர்ந்த வாரங்களில் அப்பகுதி மக்களோடு நெருங்கிப் பணியாற்றிய எனது வழக்கறிஞர் நண்பர்களால் இந்த மதிப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சஃபூரா சர்கார்

அப்பகுதி முசுலீம் மக்கள் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து உமர் காலித், ஜாமியா மிலியா இசுலாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு தலைவர்களான மீரான் ஹைதர், சஃபூரா சர்கார் ஆகியோரை உள்ளடக்கிய இளம் இசுலாமிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் சஃபூரா சர்கார் கர்ப்பிணிப் பெண் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் அனைவரின் மீதும் கருப்புச்சட்டமான ஊபா சட்டத்தைப் பாய்ச்சியுள்ளது மோடி அரசு. பின்னர் இந்த தேடுதல்வலை இடதுசாரி மாணவர் தலைவர்களுக்கும் விரிவாக்கப்பட்டது. அனைத்திந்திய மாணவர் கழகத்தின் மாணவர் தலைவர் கன்வால்ஜித் கவுர் வீட்டில் தேடுதலை மேற்கொண்ட போலீசு அவரது அலைபேசியை பறிமுதல் செய்தது.

டில்லி போலீசின் இந்த “தொடர்பற்ற கைதுகள்” குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்ட டில்லி சிறுபான்மையினர் கமிசனின் தலைவர், டில்லி போலீசு கமிசனருக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஊரடங்கு காலத்திலும் “ஒவ்வொரு நாளும் டஜன்கணக்கான முசுலீம் இளைஞர்களை போலீசு கைது செய்வதாக” அதில் குறிப்பிட்டிருந்தார். பெருந்தொற்றுச் சூழலை வகுப்புவாதமாக்குவதாக விமர்சனம் செய்ததற்காக சிறுபான்மையினர் கமிசன் தலைவர் மீது தேச விரோத வழக்கைப் பதிவு செய்துள்ளது டில்லி போலீசு.

படிக்க:
உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுங்கள் ! – ஆனந்த் தெல்தும்டேவின் திறந்த மடல் !
♦ பாஜக கரு.நாகராஜனின் காலித்தனத்தை கண்டிக்கிறோம் ! நியுஸ் 7 தொலைக்காட்சியே மன்னிப்பு கேள் !

கைதுகளையும், தடுப்புக் காவல் நடவடிக்கைகளையும் போலீசு இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கையில், சட்ட உதவிகள் ஊரடங்கின் கீழ் அனுமதிக்கப்பட்ட “அவசிய சேவைகள்” பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் அடிப்படை உரிமைகளை இடைநீக்குவது என்பதே இதன் பொருள்.

சட்டப்பூர்வ நெறிமுறைகளுக்கு மதிப்பேதுமில்லை. போலீசின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட கொடுக்கப்படவில்லை. பெரும்பாலும் அவர்கள் இந்தக் கைதுகளின் முகாந்திரத்தை புரிந்து கொள்ள முடியாதவர்களாகவும், சட்ட உதவிக்கு ஏற்பாடு செய்ய போதுமான சமூக தொடர்பும் நிதியாதாரமும் இல்லாதவர்களாகவும், பயமடைந்த குழப்பமடைந்த சூழலில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்கள் அனைவரும் பெரும்பாலும் ஊரடங்கு மற்றும் டில்லி படுகொலையால் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த குறு வணிகர்களாகவும் அல்லது தினக்கூலிகளாகவும் இருப்பதன் காரணமாக அவர்களின் கையறுநிலை தீவிரமாகியுள்ளது.

கைது செய்த 24 மணிநேரத்திற்குள் நீதிபதி முன்பு குற்றம்சாட்டப்பட்ட நபர் நேர்நிறுத்தப்பட வேண்டும் என்ற சட்டப்பூர்வ தேவை வெறும் கண் துடைப்புக்கானதாக சுருக்கப்பட்டது. திறந்த நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல், சிறைகளிலேயே அது நடைபெற்றது. சிறை வளாகத்திலேயே குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் நீதிபதிகளின் முன்னர் நேர்நிறுத்தப்பட்டதோடு, தங்களுக்காக வாதிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டனர். ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் விதிமுறைகளைக் காரணம் காட்டி, இந்த வழக்கு கேட்பிற்கு வழக்கறிஞர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை. கீழ் நீதிமன்றங்களில் வீடியோ கான்பெரன்சிங் வழக்குக் கேட்பு வசதியும் கிடையாது.

பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமைப் போராளிகளுக்கு, போலீசு நடவடிக்கைகளால் குறிவைக்கப்பட்டவர்களை நெருங்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருந்தது. பயம் மற்றும் இரகசியத்தின் திரைமறைவுகளை சில ஊடக அறிக்கைகள் மட்டுமே ஊடுருவின. இந்த சுகாதார அவசரநிலையில், நீதி என்பது அவசியத் தேவையில்லை. சட்டத்திற்கு முன்னர் அனைவரும் சமம் என்ற கொள்கையும் தன்னளவில் ஊரடங்கிக் கொண்டது.

பெருந்தொற்று காலகட்டம் என்பதைக் காரணமாக வைத்துக் கொண்டு உலகெங்குமுள்ள வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஜனநாயக உரிமைகளை நசுக்குதல், குடிமக்கள் இயக்கங்களின் மீது முன்னெப்போதுமில்லாத பெரும் அதிகாரத்தை செலுத்துவது குறித்து பல செய்திகள் இருக்கின்றன. ஆளும் இந்திய அரசு நிறுவனம் அந்த நெறிமுறைகளைக் கடன் வாங்கியிருக்கின்றன என்பது கண்கூடாகத் தெரிகிறது.

தீவிரமான நம்பிக்கை மற்றும் அமைதி நிறைந்த ஜனநாயக உறுதிப்பாட்டைக் கொண்ட நிலைமைகளை இந்தியா காணுறுவது என்பது ஏற்கெனவே பழங்கால நினைவுகளாகி வருகின்றன. குடிமக்களுக்கான உரிமைகளை மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் அரசாங்கத்தின் முயற்சியிலிருந்து, இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்ட அறங்களைக் காக்க பல்வெறு மத அடையாளங்கள், வர்க்கம், சாதி, பாலினம் மற்றும் மொழியைக் கொண்ட குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எழுந்து நிற்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டத்திற்குப் பின்னர், முன்னெப்போதுமில்லாத வகையிலான அளவும் அறமுனைப்பும் கொண்ட இந்த இயக்கத்தின் வெற்றி ஆளும் அரசை மோசமாக கலகலக்கச் செய்துள்ளது. ஏனெனில் இது ஆளும் அரசின் பெரும்பான்மைவாத திட்டத்தின் ஆன்மாவில் அறைந்துள்ளது.

இந்தியாவின் குடியுரிமைச் சட்டத் திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் வன்முறையானவை மற்றும் தேசவிரோதமானவை என்ற புனைகதையை உருவாக்குவது மற்றும் பெருந்தொற்றுப் பிரச்சினையைக் காரணம் காட்டி அனைத்து மாற்றுக் கருத்துக்களையும் இழிவான வகையில் அழித்தொழிப்பது என்ற வகையிலேயே ஆளும் அரசு இந்த மக்கள் எழுச்சிக்கு எதிராகக் கடுமையாகப் போரிடுகிறது என்பது கண்கூடு.

அரசின் இந்தப் போர், அதன் போக்கில் தடுத்து நிறுத்தப்படவில்லை எனில் ஜனநாயகம் மற்றும் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டமும் தீவிரமாக பலவீனமடையும்.


கட்டுரையாளர் : ஹர்ஸ் மந்தேர், அமிதான்ஷு வர்மா

தமிழாக்கம் : நந்தன்
நன்றி : ஸ்க்ரால். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க