மிழ் நாட்டில் சுமார் 2 கோடியே 16 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏப்ரல்,மே, ஆகிய மாதங்களுக்கு இவர்களுக்கு அரிசி,துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்கள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜூன் மாதத்திற்கும் இது நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் தன் பங்கிற்கு 5 கிலோ அரிசி கொடுக்கிறது. இது போக பலசரக்கு சமான்களும் ரூ.500 மதிப்பில் தொகுப்பாக ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு விளம்பரப்படுத்தியது.

ஆனால் ரேசன் கடைகளில் கேட்கும் போது பலசரக்கு சாமான்கள் இல்லை என்று பதில் வந்தது. ரேசன் பொருட்களாவது முறையாகக் கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை. முறைகேடாகத்தான் வினியோகிக்கப் பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூபாய் 1000 அரசு அளித்த போது அதோடு சேர்த்தே ரேசன் பொருட்களும் வழங்கப்படவில்லை. காலதாமதமாக வழங்கப்பட்டது. இதில் நடைபெற்ற முறைகேடுகளை எதிர்த்து மக்கள் குரல் கொடுத்தனர்.

ரேசனில் வினியோகிக்கப்பட்ட பொருட்களும் தரமாக இல்லை. புழுத்த துர்நாற்றமடித்த அரிசி வினியோகிக்கப்பட்டது. அது வீடியோ எடுக்கப்பட்டு வாட்ச் அப்பில் வைரலாக வந்தது. இருந்தாலும் அரசும் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. சமைத்துச் சாப்பிடத் தகுந்த அரிசி மிகக் குறைவாகவே சப்ளை செய்யப்பட்டது. இது பற்றி கடை பொறுப்பாளரிடம் கேட்கும் போது எங்களுக்கு தரப்படுகிற பொருளை நாங்கள் கொடுக்கிறோம் என்று சொல்லி முடித்துக் கொள்கிறார்கள்.

புழுத்த அரிசி பெரும்பாலும் ஆடு,மாடு,கோழிகளுக்குத் தீவனமாகத் தான் பயன்படுகிறது. நல்ல அரிசி,பொருட்களை ஆளும் கட்சிக்காரர்களின் துணையோடு கடத்திவிடுவதாக மக்கள் சொல்கின்றனர். பொருட்களின் தரம், அளவு, முறைகேடுகளைக் கண்டித்து மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் அரசனி முத்துப்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் சென்ற மாதம் போடப்பட்ட அரிசி ஆக மோசமாக இருந்துள்ளது. பாதிக்குப் பாதி கருப்பு அரிசி கலந்து, புழுக்கூடு மற்றும் வண்டுகள் ஊர்ந்து கொண்டும் கெட்ட வீச்சம் அடித்துக்கொண்டும் இருந்துள்ளது. கடை ஊழியரிடம் நல்ல அரிசி வேண்டும் என்று மக்கள் கேட்டதற்கு அவர், ”வேறு அரிசி எதுவும் இல்லை. இதுதான் இருக்கிறது. வேணும்னா வாங்குங்க. இல்லைனா போங்க” என்று சொல்லிவிட்டார்.

இது பற்றி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,மதுரை செயற்குழு உறுப்பினர் அய்யாக்காளையிடம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடைக்குப் போய் கேட்ட அவருக்கும் அதே பதில் தான் கிடைத்துள்ளது. கோபமடைந்த மக்கள் அரிசி வாங்க மறுத்ததோடு நல்ல அரிசி தரவேண்டும். உரிய அதிகாரிகள் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று கோரி தோழர் அய்யாக்காளை தலைமையில் கடையை முற்றுகையிட்டனர். குடிமைப் பொருள் வட்டாட்சியர், மற்றும் சிவகங்கை வட்டாட்சியருக்கு அய்யாக்களை போன் செய்தார் .மக்கள் கடையை முற்றுகையிட்டுக் காத்திருந்தனர். வெகு நேரம் கழித்து அதிகாரி ஒருவர் வந்தார். தாசில்தார் கொரோனா பிரச்சினைக்காக கள வேலையில் இருக்கிறார். இப்போதைக்கு அவரால் வரமுடியாது. இருக்கிற அரிசியை வாங்கிச் செல்லுங்கள்.பின்னர் பார்க்கலாம் என்று சொன்னார்.

புழுத்த அரிசியை அள்ளிக் காட்டிய பெண்கள் “இந்த அரிசியை நீங்களும் உங்கள் அதிகாரிகளின் குடும்பத்தினரும் பொங்கிச் சாப்பிடுவீர்களா?” என்று கேட்டனர். வந்தவர் பதில் சொல்ல முடியாமல் திரும்பிச் சென்றார். மக்களும் அரிசியை வாங்காமல் நாளைக்கு நல்ல அரிசி வரவேண்டும் இல்லாவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்று எச்சரித்துவிட்டுச் சென்றனர். இந்த செய்தியை அய்யாக்காளை போனில் தாசில்தாருக்குத் தெரிவித்தார். மறு நாள் நேரில் வருவதாகச் சொன்னார் அதிகாரி. சொன்னது போலவே மறு நாள் இரண்டு அதிகாரிகளும் ஜீப்பில் வந்து இறங்கினர். மக்களும் கூடியிருந்தனர்.

அதிகாரிகள் அரிசியைப் பார்த்தனர். இந்த  நெருக்கடியான சூழ்நிலையில் இந்த அரிசியை வாங்கிப் போகச் சொல்ல அவர்களால் முடியவில்லை. அரிசியைக் கையில் அள்ளிப் பார்க்கக்கூட அவர்களால் முடியவில்லை. வண்டும் புழுவும் அவர்களது உடலில் கொரோனா போலப் பற்றிக்கொள்ளுமோ என்ற பயம். இதற்கிடையில் தோழர் அய்யாக்காளை சிவகங்கை நகர் ரேசன் கடை ஒன்றில் வழங்கப்பட்ட அரிசியைக் கொஞ்சம் எடுத்துவந்திருந்தார்.

அதை அதிகாரிகளிடம் காட்டி “நகர்ப்புறத்தில் ஓரளவுக்கு நல்ல அரிசியைப் போடுகிற நீங்கள் கிராமத்து மக்களுக்கு மட்டும் இப்படிப் புழுத்த அரிசியைப் போடுகிறீர்களே ஏன்?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு, “அந்த அந்த மாவட்டங்களில் கொள்முதல் செய்கிற நெல்லைத்தான் அரிசியாக்கி அந்த அந்த மாவட்டங்களில் வினியோகிக்கிறோம்” என்று குடிமைப் பொருள் வட்டாட்சியர் கூறியுள்ளார். அப்படியானால் உங்கள் மாவட்டத்தில் விளைகிற நெல்லின் தரம் இவ்வளவுதான் என்பது போல அவரது பேச்சு இருந்துள்ளது. அப்படியானால் நெல்லே விளையாத மாவட்டங்கள் மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு கம்பு, சோளம் கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள்தான் வழங்கப்படுகிறதா என்று கேட்கத் தோன்றுகிறது.

“அடுத்த மாதம் நல்ல அரிசி போட ஏற்பாடு செய்கிறோம்.இப்போதைக்கு இதை வாங்கிச் செல்லுங்கள் ” என்று சமாதானம் செய்தவரிடம் மக்கள் அடியோடு மறுத்துவிட்டனர். எனவே நளைக்கு வேறு நல்ல அரிசி போட ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள் அதிகாரிகள். மக்கள் முணுமுணுப்போடு கலைந்தனர்.

ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாட்கள் கழிந்தது. புது அரிசி வாங்குவதற்காக மக்கள் வந்தனர். அரிசி போடப்பட்டது ஆனால் அதே புழுத்த அரிசி. ஊர் பேர் தெரியாத கொள்ளை நோயால் வேலை இழந்து, வருமானம் இழந்து ரேசன் அரிசியை நம்பி பிள்ளை குட்டிகளுடன்  பசியைப் போக்க வேண்டிய  நிலையில் இப்படி சாப்பிட முடியாத புழுத்த அரிசியை எடப்பாடி அரசு போடுகிறது. என்ன செய்வது?

“அரிசிய வாங்காதிய. நல்ல அரிசிய போடுறேன்னு மூணு நாள் காக்க வச்சிட்டு பழையபடிக்கு அதே புழுத்த அரிசியப் போடுறானுக. இருங்க தாசில்தாருக்கு போன் போட்டு கேப்போம்” என்று தோழர் அய்யாக்காளை சொல்ல மக்கள் அதைக் கேட்காமல் கடைக்காரரிடம் வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டு அரிசியை வாங்கி மூடையைக் கட்டி தலையில் சுமந்துகொண்டு வீட்டை நோக்கி நடையைக்கட்டினர். அய்யாக்காளை கசங்கிய மனதோடு வெறித்துப் பார்த்தபடி அசையாமல் நின்றார்.

இந்தக் கையறு நிலைமையை அரசனி முத்துப்பட்டி கிரமத்து மக்கள் மட்டுமல்ல பல கோடி கூலி, ஏழை, நடுத்தர விவசாயிகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் வீடற்று வீதியில் வீசப்பட்டுள்ள பஞ்சைப் பராரிகளும் சந்தித்து வருகின்றனர். யாரையும் நம்பமுடியாத சூழலில் தன் காலை மட்டும் நம்பி தன்னையும் தன் குடும்பத்தையும் அதன் மீது ஏற்றி பல ஆயிரம் மைல் தூரம் நடக்கத் துணிந்துவிட்டனர். அவர்களது போராட்டத்தை மரணத்தை நோக்கித் திருப்பிவிட்டனர் மோடியும் அமித்ஷாவும் எடப்பாடியும்.

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க