ந்தியாவின் ஐ.டி. துறையானது சுமார் 191 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடைய சேவைகளை உலகெங்கிலும் வழங்கி வருகிறது. ஏறத்தாழ 5 மில்லியன் மனித வளத்தைக் கொண்டது இத்துறை.

மீப்பெரும் மின்தரவு மற்றும் பகுப்பாய்வு முறைமைகள் (Big Data Analytics) முதல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வரை நான்காம் தொழில்நுட்பப் புரட்சிக்கான அடிப்படையைக் கொண்டிருப்பது இத்துறைக்கான தேவை வளர்வதற்கான அடிப்படையாக உள்ளது.

இத்துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஆகப் பெரும்பான்மை நடுத்தர வர்க்கம் கனவுகாணும் வாழ்க்கைத் தேவைகளை, வேலைக்குச் சேர்ந்த குறுகிய காலகட்டத்திலேயே பூர்த்தி செய்துகொள்வதற்கான வாய்ப்புகள் இத்துறையில் இருக்கின்றன.

நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளான சொந்தக் கார் வாங்குவது, வீடு வாங்குவது, வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவது முதலியன இத்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சில ஆண்டுகளிலேயே கிடைக்கப்பெறும் சாத்தியக்கூறு உள்ளது. இதற்கேற்ற வகையில், வங்கிகளும் தமது கிரெடிட் கார்டு சேவையை இத்துறையினரிடையே நன்கு பிரபலப்படுத்தி, அவர்களை இந்நுகர்வு கலாச்சாரத்தை நோக்கி இழுத்து இம்மோகத்தின் பின் ஓடத் தூண்டுகின்றன.

இவற்றுக்காகவே, தங்களை இயந்திரம் போல பாவித்து காலநேரம் பாராது உழைத்து வருகிறார்கள் ஐ.டி. ஊழியர்கள்.

மேலும், இத்துறையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளிடம் பிற துறையில் கணிசமாகக் காணவியலாத வேலைமுறை உண்டு. அதாவது, தான் வேலை செய்யும் அலுவலகத்திற்குச் செல்லாமல், மடிக்கணினி மூலம் அன்றைய தினத்திற்கான வேலையை வீட்டில் இருந்த படியே செய்ய முடியும்.

இந்த வேலை முறையானது, உற்பத்தித்துறை, கட்டிட வேலை போன்றவற்றிலோ அரசு வேலையில் ஈடுபடுவோருக்கோ கூட இதுநாள் வரை கிட்டியது இல்லை; கிட்டப்பெறுவதற்கான அடிப்படையும் இல்லை.

8 மணிநேரம் வேலை செய்யும் ஓர் ஆலைத்தொழிலாளி, தனது வேலைக்கு உரிய நேரத்தில் கிளம்பித் தயாராக வேண்டும். கால தாமதம் ஏற்பட்டு அவர் உரியநேரத்திற்கு வராமல் போனால், அவருக்கு அன்றைய தினத்திற்கான கூலி கிடைக்காது (ஆகப் பெரும்பான்மை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு). ஆனால், தனது சோர்வு காரணமாகவோ அல்லது தாமதமாக கிளம்ப நேரிட்டாலோ, ஓர் ஐ.டி. தொழிலாளி ஒரு முன்னறிவிப்பை மட்டும் தனது மேலாளரிடம் தெரிவித்து விட்டு, வீட்டில் இருந்தபடியே தனது வேலைகளைத் தொடர முடியும்.

அநேக நேரங்களில், தமது வீட்டுவேலைகளை கவனித்துக் கொள்ள வீட்டில் இருந்து வேலைசெய்யும் (WFH) இவ்வேலைமுறை  ஐ.டி. தொழிலாளர்களுக்கு ஒரு வரமாகவே இருந்து வருகிறது.

***

டந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்திலும் கூட, தமது பெரும்பான்மை தொழிலாளர்களை இந்த வேலைமுறை மூலம் வேலைசெய்யும் வலைபின்னலுக்கு ஐ.டி. நிறுவனங்களால் கொண்டுவர முடிந்தது.

ஊரடங்கின் துவக்கத்தில், ஐ.டி. துறையைச் சேர்ந்த பல்வேறு வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் தமது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கான நேரம் கிடைத்தது; தனது பிள்ளைகளின் படிப்பு மீது அக்கறை காட்ட இயன்றது என்றவாறெல்லாம் இவ்வேலைமுறையை விதந்தோதினர். ஆனால், ஊரடங்கு நீடிக்க நீடிக்க, வெளியே செல்ல இயலாமல் நான்கு சுவருக்குள் அடைபட்டிருப்பதும், பெருகிவரும் வேலை அழுத்தமும் சேர்ந்து ஒரு மன அழுத்தத்தை அவர்கள் மீது உருவாக்கின.

மேலும், முன்னர் சராசரியாக 7-8 மணிநேரம் வேலைசெய்த ஐ.டி தொழிலாளிகள் இப்போது ஊரடங்கு காலகட்டத்தில் 12-13 மணிநேரம் வேலைசெய்யப் பணிக்கப்பட்டனர். அலுவலகம் சென்ற நாட்களில் கூட அவர்களுக்கு தேநீர் இடைவேளை, உணவு இடைவேளை ஆகியவற்றிக்கு முறையே அரை மணிநேரம், ஒரு மணிநேரம் என்று இடைவேளை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஊரடங்கு காலகட்டத்திலோ, தலைமை நிர்வாகம் தனது கீழ் வேலைசெய்யும் அலுவலர்களுக்கு ஏற்படுத்திய வேலை அழுத்தத்தின் விளைவாக, தொழிலாளர்கள் சரியான நேரத்தில் உணவருந்தாமல்அதிக நேரம் கணினியில் – ஆன்லைனில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒரு சிறிய இடைவேளை எடுத்தால் கூட, உடனே ஒரு மின்னஞ்சல் அனுப்புவது, அதற்குக் குறிப்பிட்ட நிமிடத்தில் விடை தராவிடில் போன் செய்வது என இடைவெளியற்ற சுரண்டல் வடிவாக இந்த WFH வேலை முறை பரிணமித்துள்ளது.

ஒரு தொழிலாளி இந்த WFH வேலைமுறையில் முறையாக வேலை செய்கின்றாரா என்பதை பரிசோதித்தறிய பல்வேறு புதிய தொழில்நுட்பச் செயலிகள் வலம்வரத் துவங்கியுள்ளன. சாதாரணமாக, ஒரு புராஜெக்ட் முடிப்பதற்கு 2 வார காலம் ஆகுமென்றால், இந்த ஊரடங்கு காலகட்டத்தில், அந்தக் குறிப்பிட்ட வேலையை 10 நாட்களுக்குள் முடித்துக் கொடுக்க தனது அணிகளை நிர்பந்திக்குமாறு ஐ.டி நிறுவனங்களின் தலைமை நிர்வாகம் தமது மேலாளர்களுக்கு கட்டளையிட்டது. இதன் விளைவாக, குறிப்பிட்ட வேலைநேரம் என்ற வரைமுறை இல்லாமல் இராப்பகலாக, மேலாளர்களுக்குத் தனது வேலை குறித்து தெரிவிக்கும் சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். (புரொஜக்ட்டின் காலக்கெடுவைப் பொருத்து இவ்வழுத்தம் மாறுபடுகிறது).

இத்தகைய, ஒய்வு – உறக்கமில்லாத கடும் வேலைப்பளுவுக்கு இடையில் வேலை பார்க்கும் ஐ.டி. தொழிலாளிகள், தமது ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க இயலாது தவித்தனர். குறிப்பாக, சென்னையில் ஓர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த ஐ.டி தொழிலாளின் ஒருவர், ஏற்கனவே தனக்கு உடல் நிலை சரியில்லாத போதிலும் 12-13 மணி நேரம் பணிபுரிந்தார். அந்நிலையில் நிர்வாகத்தின் தொடர்ச்சியான, கடும் வேலைப்பளுவைத் தாங்க இயலாமல் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வேறேதும் தொழில்செய்து பிழைத்துக் கொள்வதாகக் கூறி தனது சொந்த ஊருக்கே சென்று விட்டார்.

இது போன்றதொரு பரந்துபட்ட வேலை பணிச்சுமை சூழல்தான் தற்போது ஐ.டி துறை எங்கும் நிலவி வருவதைக் காண முடிகின்றது. இச்சூழலுக்கு எந்த வகையிலும், குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட பதிவு செய்யாமல் பல ஐ.டி. தொழிலாளிகளை வேலைசெய்யத் தூண்டுவது எது?

***

தற்கான காரணம், நாம் ஏற்கனவே, குறிப்பிட்டுள்ள வெவ்வேறு வர்க்க அடுக்குகள் கொண்ட ஐ.டி தொழிலாளிகளிடம், தமது வாழ்வாதாரத்தைப் பேணிக்காப்பது, வங்கிக் கடன்களை அடைப்பது, கிரெடிட் கார்டு கணக்குகளை கட்டிமுடிப்பது என்பன போன்ற பல்வேறு காரணங்களால், எப்பாடுபட்டாவது வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருப்பது தான்.

ஐ.டி. தொழிலாளிகளின் ஓய்வு, உறக்க நேரம் உட்பட அவனது மொத்த மூளை உழைப்புச் சக்தியையும் இப்படி சக்கையாகப் பிழிந்து சுரண்டி எடுப்பதன் வாயிலாக, முதலாளித்துவ வர்க்கம் தனது தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை அதிகரித்துள்ளதாய் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாகவே, இன்போசிஸ், ஹெச்.சி.எல். போன்ற நிறுவனங்கள் இந்த ஊரடங்கு காலகட்டத்தில், தமது நிறுவனத் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் முன்னைக் காட்டிலும் கணிசமான சதவீதம் அதிகரித்துள்ளதை கண்டு புளகாங்கிதமடைந்துள்ளன.

படிக்க:
இந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு !
♦ தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி !

மேலும், இந்த கொரோனா நோய்த்தொற்றுச் சூழல் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, ஏற்கனவே உலகெங்கிலும் மந்தமாகியிருந்த பொருளாதாரம், மேலும் தீவிரமாக வீழ்ச்சியடையத் துவங்கியது. இந்தச் சூழலைக் காரணம்காட்டி உலகெங்கிலும் உள்ள முதலாளி வர்க்கம் தமது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலைநீக்கம் செய்வது அதிகரித்துள்ளது. மேலும், இந்தப் பொருளாதாரம் மீண்டு எழுவதற்கான எந்தவித அறிகுறியும் தென்படாத நிலையில், வேலையிழந்தோருக்கு மீண்டும் வேலை கிடைப்பதற்கான எவ்வித அடிப்படையும் தென்படவில்லை.

இந்த உலகளாவிய புறச்சூழலை சாதகமாக்கி, இந்திய ஐ.டி. முதலாளி வர்க்கம், வேலை செய்ய மறுத்தாலோ, தயக்கம் காட்டினாலோ, எவ்வித முன்னறிவிப்புமின்றி வேலைநீக்கம் செய்துவிடுவதாக மிரட்டிப் பணிய வைத்து ஐ.டி. ஊழியர்களைச் சுரண்டி வருகின்றனர்.

8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்னும் உரிமையென்பது தொழிலாளி வர்க்கம் தனது வியர்வையும் இரத்தமும் சிந்திய போராட்டங்களின் விளைபயனாக உதித்தது.

ஆனால், ஐ.டி. தொழிலாளி வர்க்கம் ஆட்படும் இந்த நவீன சுரண்டல் முறையானது, தொழிலாளியின் தார்மீக ஒய்வு, உறக்க நேரத்தையும் உறிஞ்சிக் கொழுத்து, குறைந்த கூலி கொடுத்து, தனது மூலதனத்தைப் பெருக்க முனையும் முதலாளி வர்க்கத்தின் லாபவெறியை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. அத்துடன், தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை இழந்து ஒரு கொத்தடிமை போன்ற வேலைமுறைக்கு செல்லும் அபாயத்தை துலக்கமாக புலனாக்குகிறது.

“சொல்வதைச் செய்; இல்லையேல் வெளியேறு (Do as instructed else  get out)” என்று முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்தின்மீது தற்போது தொடுத்துவரும் தாக்குதலை முறியடிக்க, ஐடி துறை ஊழியர்கள் சங்கமாக அணிதிரள்வது முன்னெப்போதைக் காட்டிலும் அவசியமாக உள்ளது.

– புதியவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க