இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் திமிர்ப் பேச்சு

எவ்வளவு நேரம் தான் மனைவியின் / கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று 'செல்லமாக' கேட்கிறார் எல்&டி யின் சுப்பிரமணியன். ஆனால் மனைவியை / கணவனை, குழந்தைகளை கொஞ்ச நேரம் கூடப்பார்க்க முடியவில்லை; மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்கிற ஏக்கம் தான் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிரம்பியிருக்கிறது.

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, எல்&டி சுப்பிரமணியன்
இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் திமிர்ப் பேச்சு

தொழிலாளர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய வைக்க முடியவில்லையே என்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நான் வேலை செய்கிறேன். வீட்டில் எவ்வளவு நேரம் தான் மனைவியின் / கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள்? வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என்று வாய் மொழிந்திருக்கிறார் எல் & டி தொழில் நிறுவனத்தின் சேர்மனான தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ். என். சுப்பிரமணியன்.

“ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்று 6 நாட்கள் அல்லது 10 மணி நேரம் என்று ஏழு நாட்கள் வேலை செய்ய வேண்டும். இந்தியாவில் இளைஞர்கள், இந்தியா என்னுடைய நாடு, நான் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்வேன் என்று முன் வர வேண்டும். நாட்டில் எவ்வளவோ பேருக்கு வேலை இல்லை. 80 சதவீத மக்கள் இன்னும் இலவச அரிசி வாங்கி உண்ணும் நிலையில் இருக்கிறார்கள். எனில் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் நாம்தான் அவர்களின் வறுமையைப் போக்க உழைக்க வேண்டும்.” என்று அறம் பொங்கப் பேசியிருக்கிறார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி.

ஆர்.பி.ஜி குரூப் சேர்மன் ஹர்ஷ் கோயங்கா “பணியும் வாழ்வும், அதாவது வாழ்வுக்கும் வேலைக்குமான உறவு, என்பது நம் விருப்ப பூர்வமானது அல்ல; மாறாக அத்தியாவசியத்தின்பார்ப்பட்டது. அதிலிருந்து தான் முடிவு செய்ய வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். அதாவது, எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டியது தான் என்று கூறியிருக்கிறார்.

“வேலை நேரத்தைக் கூட்டுவதைவிட வேலைத் திறனைக் கூட்ட வேண்டும் என்பது முக்கியம்”. அதாவது இதே நேரத்தில் இன்னும் இறுக்கிப் பிழிய வேண்டும் என்று வேறு கோணத்தில் ஆலோசனை வழங்கியிருக்கிறார் மகேந்திரா குரூப் சேர்மன்.

ஆனால் இந்தியாவில் இன்றிருக்கும் வேலை நிலைமையே மண்டை வெடிப்பதாக இருக்கிறதென்று புலம்பாத ஐடி. ஊழியர் இல்லை. தொழில்துறை சார்ந்த தொழிலாளர்களோ காண்ட்ராக்ட் முறைகளில் சிக்கி எந்த உரிமைகளும் இன்றி பாதுகாப்பற்ற முறையில் மிருகத்தனமாக வேலை வாங்கப்படுகிறார்கள். ஆனால் இன்னும் எஞ்சியிருக்கும் இரத்தத்தை உரிஞ்ச வேண்டும் என்கிறார்கள் இந்திய கார்ப்பரேட் முதலாளிகள்.


படிக்க: 70 – 90 மணிநேர வேலை: தொழிலாளி வர்க்கம் கிள்ளுக்கீரையல்ல!


அதே சமயம் உலக அளவில் இன்றைய நிலையில் நாடுகள் பலவும் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை குறித்துப் பரிசீலித்துக் கொண்டிருக்கின்றன. நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகள் ஏற்கனவே வாரத்திற்கு 4 நாட்கள் என்கிற வேலைமுறையில் உள்ளன. ஜப்பான், பிரிட்டன், ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் நாடுகள் வேலை நாட்களைக் குறைக்கப் பேசிக் கொண்டிருக்கின்றன.

போர்ச்சுக்கல் நாடு வேலை நேரம் போக மற்ற நேரங்களில் மேலதிகாரிகள் ஊழியர்களைச் சந்திக்கக் கூடாது என்று ஒரு சட்டம் இயற்றியிருக்கிறது. பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வேலை நேரத்திற்குப் பிறகு அதிகாரிகள் தொலைப்பேசியில் அழைத்தாலோ குறுஞ்செய்தி அனுப்பினாலோ ஊழியர்கள் அவற்றை ஏற்கவோ பதிலளிக்கவோ வேண்டியதில்லை என்று சட்டம் இயற்றி இருக்கின்றன.

ஆனால் நம் நாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளிகள் மட்டும் இந்தியாவில் ஊழியர்களும் தொழிலாளர்களும் இன்னும் அதிக நேரம் உழைக்க வேண்டும்; இப்போது உழைப்பது போதாது; இந்தியாவில் எல்லோரும் 12 மணி நேரம் உழைப்பதைச் சட்டப்படி உறுதி செய்ய வேண்டும் என்று கூக்குரலிடுவது ஏன்?

ஏனென்றால், இன்றைய நிலையில் நமது நாட்டின் கார்ப்பரேட் முதலாளிகளின் இலக்கும் விருப்பமும் வேறாக இருக்கிறது. அதாவது வேலை நேரம் என்ற வரம்பு இருக்கக் கூடாது என்பதே அவர்களின் விருப்பம். ’தூங்கி எழுந்தால் வேலை செய்ய வேண்டியதுதானே. அதைவிட வேறென்ன வேலை?’ என்பதே தொழிலாளர் வாழ்க்கை குறித்து அவர்களின் கண்ணோட்டம்.

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 70 மணி நேர வேலையை முன்மொழிந்திருக்கிறார் என்றால், அதற்கு ’நாட்டு மக்களின் நலன்’, ’நாட்டை முன்னேற்ற வேண்டும்’, ’உலக நாடுகளின் முன் நாட்டின் கௌரவத்தை உயர்த்த வேண்டும்’ என்று உயர்ந்த நோக்கம் இருப்பதாகச் சவடால் விடுகிறார். தேசத்தின் பெருமை, தேச பக்தி, நாட்டு நிலைமை போன்றவை எல்லாம் தமது சொந்தப் பேராசையை, லாப வெறியை மறைப்பதற்காகப் பயன்படுத்துகின்ற பொருளற்ற வெற்றுச் சொற்றொடர்கள்தான். அவர்களின் விருப்பம் மற்றும் நலனைத்தான் ‘தேசத்தின் நலன்’, ‘தேசத்தின் தேவை’ என்றெல்லாம் தேசத்தின் மீது ஏற்றிச் சொல்கிறார்கள். அதில் வேறெதுவும் இல்லை.

ஒரு முதலாளியைப் பொறுத்தவரை அவரது சொந்த வர்க்கத்தில் அவரது பெருமை, கவுரவம், அதற்கு அடிப்படையான பணம் இவையே முதன்மையானதாகும். அவரது மனைவி மக்களின் நன்மை உயர்வு எல்லாம் கூட தவிர்க்க முடியாதத் துணை விளைவுகள்தான். லாபம்தான் அவருடைய வாழ்வியக்கத்தின் அச்சு.


படிக்க: 90 மணிநேர வேலை: கார்ப்பரேட் கொள்ளையர்கள் ஓலமிடுவது ஏன்?


எவ்வளவு நேரம் தான் மனைவியின் / கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று ‘செல்லமாக’ கேட்கிறார் எல்&டி யின் சுப்பிரமணியன். ஆனால் மனைவியை / கணவனை, குழந்தைகளைக் கொஞ்ச நேரம் கூடப்பார்க்க முடியவில்லை; மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்கிற ஏக்கம் தான் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிரம்பியிருக்கிறது. ஆனால் முதலாளிக்கோ பணமும் லாபமும் தரும் மகிழ்ச்சியை வேறு எதுவுமே தருவதில்லை. அவருக்கு மனைவியோ / கணவனோ, குழந்தைகளோ, உறவுகள் நண்பர்களோ எல்லாம் பணத்துக்கு அப்புறம்தான்.

அவர்களைப் போலவே நாமும் அவர்களைப் பார்த்துக் கேட்க வேண்டும் – ”நீங்கள் எப்படி 24 மணி நேரமும் பணத்தையே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்? அதுவும் இந்த காலத்தில் பணம் எனும் காகிதத்தைக் கூட தொடுவதில்லை. வெறும் எண்கள் மாறுவதையே எப்படி நாள் முழுவதும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? எண்களின் உயர்வு கண்டு எப்படி மகிழ்ச்சி அடைகிறீர்கள்?” என்று உண்மையில் நாம் தான் அவர்களைப் பார்த்துக் கேட்க வேண்டும்.

இதே போன்று இன்னும் பல முதலாளிகள் பல்வேறு சமயங்களில் பலவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். தொழிலாளர்கள் எல்லோருக்கும் ஒரே வேலை நேரம் என்பதே சரியல்ல என்றும் வேலை நேரத்தைத் தீர்மானிக்க இன்னும் பல காரணிகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் தொழிலாளர்கள் நலன் சார்ந்து பேசுவதாக கருத்துரைக்கின்றனர். அதாவது எல்லாவற்றுக்கும் ஒரே அணுகுமுறை (One Fits All – approach) பொருந்தாது; ஐ.டி. துறை ஊழியர்கள், உற்பத்தித் துறை சார்ந்த தொழிலாளர்கள், மருத்துவ சேவைத்துறை சார்ந்தவர்கள் மற்ற பல்வேறு வகை சேவைத்துறை சார்ந்த அலுவலர்கள் என்று வகை பிரித்து வெவ்வேறு வேலை நேரங்கள் நிர்ணயிக்க வேண்டும் என்கிறார்கள். வேலை முறையை, வேலை நேரத்தை அவரவர் வேலைத் திறனை அதிகரிக்கும் வகையில் ஊழியர்கள் நலன் சார்ந்து தீர்மானிக்க முடியும் என்றும், ஷிப்ட்டு முறையை அனைத்திலும் கொண்டு வரலாம் என்றும் ஊழியர்களுக்கு வசதியாக அவர்களே அமைத்துக் கொள்ளும் வகையில் கூடச் செய்யலாம் என்றெல்லாம் கூறுகிறார்கள். சாரமாகப் பார்த்தால், எல்லாமும் ஊழியர்களை இன்னும் அதிகமாகச் சுரண்டுவது எப்படி என்பதைப் பற்றித்தான்.

தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பது அவர்களின் உற்பத்தித்திறனைப் பாதிக்கும் என்று எத்தனையோ ஆய்வு முடிவுகள் இருக்கின்றன. அம்முடிவுகள் பற்றி எல்லாம் அறியாதவர்கள் அல்ல இவர்கள். அறிவியல் ஆய்வு முடிவுகளை விட அடக்குமுறையில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள் இந்திய கார்ப்பரேட் முதலாளிகள்.


படிக்க: அமேசான் நிறுவனத்தைத் திணறடித்த “பிளாக் ஃப்ரைடே” வேலை நிறுத்தப் போராட்டங்கள்


ஆகவே தொழிற்சாலைச் சட்டங்களும் தொழிலாளர்கள் நலச்சட்டங்களும் குறிப்பிட்ட வகை தொழில்களுக்குக் குறிப்பிட்ட சட்டம் என்று தனித்தனியே வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் நைச்சியமாகப் பேசுகின்றனர். இவற்றின் மூலம் உழைக்கும் வர்க்கத்தை எந்தச் சட்டப்பாதுகாப்பும் இல்லாமல், எந்த வித ஒற்றுமைக்கும் வழியில்லாமல் பிரித்து வைத்து, போராடும் வலிமையிழக்கச் செய்து, நிர்க்கதியாக்க உதிரிகளாக நடுத்தெருவில் நிறுத்திட வேண்டும் என்பதே இதன் சாரம். அதுவே அவர்களின் எண்ணம், நோக்கம் எல்லாமுமாகும்.

சொத்து சேர்ப்பது, பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்வின் குறிக்கோள் என்று ஆக்கிக் கொண்ட உன்னைப் பராமரிக்க, உனது வீட்டைப் பராமரிக்க வீட்டின் சுற்றுப்புறத்தைத் தோட்டத்தைப் பராமரிக்க என்று உனது பங்களாவில் 50 பேர் 100 பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் நீ சொல்கிறபடி ஞாயிறு திங்கள் என்று எதுவும் பார்க்காமல் ஆண்டு முழுவதும் எல்லா நாளும் 24 மணி நேரமும் உன் வீட்டு வேலைக்காரர்களாக உழைக்கக்கூடும். அப்படியே உழைக்கும் வர்க்கம் முழுவதும் இருக்க வேண்டும் என்று பேராசைப்படுகிறார்கள் இந்த அயோக்கியர்கள்.

நான் வேலை செய்கிறேன் நீ ஏன் செய்யக்கூடாது என்று முதலாளிகள் கேட்கிறார்கள். எனில் நாமும் அவர்களைப் பார்த்துக் கேட்போம் எங்கள் குடும்பம் தங்கி வாழ்வதற்கு 800 அல்லது 1000 சதுர அடி வீடு வசதியானது என்று இருக்கிற பொழுது உனக்கு மட்டும் எதற்கு லட்சம் சதுர அடிகளில் வீடு? எல்லோரும் பேசி வைத்தாற்போல் ஏன் 15 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் எழுப்பி அதற்கு மேல் முள் கம்பி வேலி அமைக்கிறீர்கள்? 1000 சதுர அடியில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோமே நீ மகிழ்ச்சி கொள்ள ஏன் லட்சம் சதுர அடி தேவைப்படுகிறது?

ஏனெனில் இவர்கள் முதலாளிகள். மனிதர்களில் அவர்கள் வேறு வகை. தொழிலாளர்கள் அல்லது ஊழியர்கள் என்பவர்கள் வேறு வகை, அதாவது வேறு வர்க்கம். அதிலும் தொழில்துறை முதலாளிகள் என்பவர்கள் நூற்றாண்டுகள் பழமையானவர்கள். ஆனால் இவர்களோ இன்றைய ஏகாதிபத்திய உலகின் நவீன கார்ப்பரேட் முதலாளிகள். அதிலும் இந்தியாவின் நாராயண மூர்த்தியும் சுப்பிரமணியனும் அகர்வால்களும் இன்னும் தனிச்சிறப்பானவர்கள். இவர்களின் எஜமானர்களான அமெரிக்கா ஐரோப்பா முதலிய வளர்ந்த நாடுகளின் முதலாளிகளின் பாரம்பரியம் வேறு. ஆனால் இந்திய கார்ப்பரேட் முதலாளிகள் தங்களின் வாழ்வியல் கொள்கைச் சித்தாந்தமாகப் பார்ப்பனியத்தை ஏற்றிப் போற்றுபவர்கள். இவர்கள் முற்றிலும் வேறு வகையைச் சேர்ந்தவர்கள். மனிதனை சக மனிதனாக பார்த்தறியாதவர்கள். பார்க்கத் தெரியாதவர்கள். அதனால் இவர்கள் இயல்பிலேயே பாசிஸ்டுகள்.

உண்மையைச் சொன்னால் இவர்களுக்கு முதலாளித்துவத்தையும் தொழில் நுட்பத்தையும் அறிமுகப்படுத்திய ஐரோப்பியர்களே பாசிசத்தின் பக்கம் சாய்ந்து வரும் இக்காலத்தில் பாசிசத்தின் மூல வேர்களை அதாவது மனிதனைப் பிறப்பிலேயே கீழ் நிலைப்படுத்தி அடிமைப்படுத்தி விடுவதைப் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் பாரம்பரியத்தின் சனாதனத்தின் சொந்தக்காரர்கள் இந்திய கார்ப்பரேட் முதலாளிகள். எனவே இவர்கள் விஷப் பூச்சிகள். இவர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

முன்காலத்தில் கல்வியும், பயிற்சியும், தகுதி திறமையும், அனுபவமும் பெற்ற ஒரு தொழிலாளி 16 மணி நேரம் 14 மணி நேரம் என்று உழைத்தால் அவன் 30 / 35 வயதில் மாண்டு போவதைத் தடுக்க முடியவில்லை. அப்படிப்பட்ட தொழிலாளியை உருவாக்க முதலாளி வர்க்கத்திற்கு பெரும் செலவும் காலமும் பிடித்தது, பொன் முட்டையிடும் வாத்தை அறுத்துத் தின்று விடுவதாக ஆகிப்போகிறது என்பதை ஒரு வர்க்கம் என்ற முறையில் உணர்ந்த முதலாளிகள் வாத்தைக் குறைந்த பட்சமாவது பாதுகாத்து வளர்க்க வேண்டிய தேவையை உணர்ந்து 18, 16, 14,12, 10 மணி நேர வேலை என்று படிப்படியாகக் குறைத்து வந்ததை ஒரு வழியாகத் தொழிலாளர்களின் போராட்டம் 8 மணி நேரம் என்று இறுதி செய்தது.

வரலாற்றில் சோசலிசத்திற்கு நேர்ந்த தோல்விகள் மற்றும் பாட்டாளி வர்க்கம் அடைந்திருக்கும் பின்னடைவுகள் போன்ற பல காரணங்களால் இன்றைய ஏகாதிபத்திய உலகம் மனித குலத்தின் வரலாற்றையே பின்னோக்கி இழுக்க முயல்கின்றது. அந்த பாதையில் பார்ப்பனியத்தின் துணையோடு தொழிலாளர்களை மீண்டும் பழைய முறையில் 12 மணி நேரம் கசக்கிப் பிழியும் நோக்குடன் வெறி கொண்டு முயற்சி செய்கிறார்கள் இந்திய கார்ப்பரேட் முதலாளிகள். அதன் வெளிப்பாடுதான் இந்தத் திமிர்ப் பேச்சு.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



5 மறுமொழிகள்

  1. இவர்கள் இவ்வளவு திமிராக பேசுவதற்கு தைரியத்தை கொடுத்தவர்கள் யார்?

  2. முதலாளிகள் வரி ஏய்ப்பு செய்வார்கள். தேர்தல் நிதி தந்து அதை சரிக்கட்டுவார்கள். லாபத்தை குறைத்து பொய் கணக்கு எழுதி குறைந்த போநஸ் தருவார்கள். வீட்டுக்கு பெயிண்ட் அடித்து வி‌ட்டு ஆபீஸ் கட்டிடத்துக்கு பெயிண்ட் அடித்த தாக பில் போடு வார்கள்.

  3. பொன்முட்டையிடும் வாத்து கதை
    அதீத எதிர்பார்ப்பு தவறானது
    அலுவலகநேரம் முடிந்து வீட்டுக்கு செல்லவும், வீட்டிலிருந்து அலுவலகம் செல்லவும் குறைந்தது இரண்டு மணி நேரம் செலவு ஆகிறது,வீட்டிலிருந்தே வேலை பார்த்தாலும் சாத்தியமில்லாதது,
    பத்து மணி நேர உழைப்பு வாரத்தில் ஆறு நாட்கள் சிறந்தது

  4. One sided wrong notional thinking
    Even China,Russia North Korea are having long hours of work. These countries economics are fast developing. This article is highly prejudicial and without logic. European economics are going downside.

  5. இந்த நாராயணமூர்த்தி, சுப்பிரமணியன், அகர்வால் இத்யாதிகளிடம் வேலை செய்பவர்களில் விவரமான திறமைசாலிகளே, இன்னும் ஏன் இந்த இத்யாதிகளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்; விவரமாக வெளியே வந்து உங்களுக்குள் கூட்டணி அமைத்து இந்த இத்யாதிகளின் நிறுவனங்களை விட பெரிய அளவில், பெரிய லெவலில் நிறுவனங்கள் அமைத்து, மற்ற சக ஊழியர்களையும் வெளியே இழுத்து அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அளித்து இந்த இத்யாதிகள் மண்ணைக் கவ்வும் படியாக, சிறப்பாக நிறுவனங்களை நடத்தலாமே?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க