ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை, என்னதான் புரட்சிகரமான வரிவிதிப்பு முறை என்று சொல்லி மோடி-நிர்மலா கும்பல் மார்தட்டிக் கொண்டாலும், அதன் மக்கள் விரோத-கார்ப்பரேட் ஆதரவு முகம் அவ்வப்போது அம்பலப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
அதன் ஓர் அம்சமாக, கடந்த ஜூலை மாத இறுதியில், இன்போசிஸ் நிறுவனமானது 2017-2022 நிதியாண்டில், அதன் வெளிநாட்டு கிளைகளில் இருந்து பெற்ற சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரி கட்டாமல், சுமார் ரூ.32,403 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, கர்நாடக அரசு.
அண்மையில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, இந்திய நிறுவனத்திற்கு வெளிநாட்டு கிளைகள் வழங்கும் சேவைகள் ஜிஎஸ்டி வரிக்கு உட்பட்டது அல்ல என்று இன்போசிஸ் கர்நாடக அரசிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
உடனடியாக அந்நிறுவனத்தின் தலைமை குழுவின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினரும், தலைமை நிதி அலுவலருமான மோஹன்தாஸ் பாய் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இது இருப்பதிலேயே மோசமான வரிவிதிப்பு பயங்கரவாதம் (tax terrorism). ஜி.எஸ்.டி அமைப்பு அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான விசயங்களில் தலையிடலாமா?” என்று கூப்பாடு போட்டுள்ளார்.
படிக்க: கர்நாடகா: வேலை நேரத்தை 14 மணிநேரமாக உயர்த்த முயற்சிக்கும் காங்கிரஸ் அரசு
இதற்கு ஆதரவாக, களமிறங்கிய தேசிய மென்பொருள் நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் (NASSCOM) இன்போசிஸ்கு எதிராக வழங்கப்பட்ட வரி ஏய்ப்பு தொடர்பான நோட்டீசை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளது. “இந்த நோட்டீசானது தகவல் தொழில்நுட்பத்துறையின் இயக்கம் குறித்தத் தவறான புரிதலை வெளிப்படுத்துகிறது. மேலும், ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் தொடர்பான அரசாங்கத்தின் அறிக்கைகள், இந்தியாவில் எளிதாக வணிகம் செய்வதை பாதிக்கும் வகையிலும் ஒரு வணிக ரீதியாக நிச்சயமற்ற தன்மையையும் தவிர்ப்பதை கவனத்தில் கொண்டு வழங்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளது.
அடுத்தகட்டமாக, இந்த நோட்டீஸ் வழங்கப்பட்ட அடுத்த நாளே, கர்நாடக அரசாங்கமானது இந்த நோட்டீசை திரும்பப் பெற்றுக் கொண்டதாக இன்போசிஸ் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த எஸ்.கே.ஐ. கேப்பிட்டல்ஸ்-(SKI capitals)-ன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நரிந்தர் வாத்வா, “இன்ஃபோசிஸ்க்கு எதிரான வரி ஏய்ப்பு அறிவிப்பை கர்நாடக அரசு திரும்பப் பெற்றிருப்பதானது ஆரோக்கியமான வளர்ச்சியைக் குறிப்பதாக இருக்கிறது. மேலும், இன்போசிஸ் போன்ற பெரிய புகழ்பெற்ற சர்வதேச வணிக நிறுவனத்திற்கு எதிரான இது போன்ற அறிவிப்புகளை வெளியிடும்போது ஜி.எஸ்.டி துறையானது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இது போன்ற நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான குற்றச்சாட்டுகள் இந்நிறுவனத்தின் வணிக செயல்பாடுகளை பாதிப்பதுடன், சந்தையின் நிலைத்தன்மையையும் கணிசமாக பாதிக்கும்” என்று குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த மாத துவக்கத்தில், இன்போசிசின் 32,403 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கை கர்நாடக அரசு, சரக்கு சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனரகத்திற்கு (டி.ஜி.ஜி.ஐ – DGGI) மாற்றியுள்ளது. டி.ஜி.ஜி.ஐ இது தொடர்பாக ஒரு நோட்டீசும் அனுப்பியுள்ளது. இதற்கும் இன்போசிஸ் தரப்பில், மேற்குறிப்பிட்ட வாதங்களே முன்வைக்கப்படுகின்றன.
இந்த வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, 2017-2018 ஆம் நிதியாண்டிற்கான வரி ஏய்ப்புக்காக வழங்கப்பட்ட அறிவிப்பை மட்டும் திரும்பப் பெற்றுள்ளது டி.ஜி.ஜி.ஐ. அதாவது, வரிசெலுத்தப்படாத ஐந்து முழு நிதி ஆண்டுகளில் (2017-2022) இன்போசிஸ் நிறுவனம் ஈடுபட்ட வரி ஏய்ப்புத் தொகையானது 32,403 கோடி ரூபாயாகும். இதில் 2017-2018 ஆம் நிதியாண்டிற்கான வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை மட்டும் திரும்பப் பெற்றுள்ளது சரக்கு சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனரகம். இந்த குறிப்பிட்ட நிதியாண்டில் மட்டும் ரூ.3,898 வரி ஏய்ப்பு செய்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று, இன்போசிஸ் நிறுவனமானது, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் இரண்டாவது மிகப்பெரிய வணிக நிறுவனமாகும். அதோடு இந்நிறுவனத்தின் நிறுவனரான நாராயண மூர்த்தி இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேச அளவில் அரசியல் செல்வாக்குடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன், நிறுவனரான நாராயண மூர்த்தி, சமீபத்தில் இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணிநேரம் உழைக்க வேண்டும் என்று வக்கிரமான முறையில் ஒரு நேர்காணலில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த செய்தி வெளியாகி, நாடு முழுவதும் நாராயண மூர்த்திக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழும்பின. இவரது மனைவியான சுதா மூர்த்தி, இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமனாராவார்.
இது போன்ற தனது அரசியல் செல்வாக்கு மட்டுமின்றி, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையில் இருக்கும் தீர்க்கப்படாத குளறுபடிகளையும் ஜி.எஸ்.டி நடைமுறையில் இருக்கும் பல்வேறு சிக்கல்களையும் பயன்படுத்திக் கொண்டு இந்த வழக்கில் இருந்து விடுபடுவதற்கான முயற்சியில் நாராயண மூர்த்தி முதல் கட்டமாக வெற்றி பெற்றுள்ளார்.
படிக்க: கர்நாடக தேர்தல் முடிவுகள்: தேர்தல் தோல்வி மட்டுமே பாசிசத்தை அளக்குமா?
மேலும், கர்நாடக காங்கிரஸ் அரசாங்கமானது இன்போசிஸ் மீதான வழக்கை திரும்பப் பெற்றதானது, எந்த அளவிற்கு கார்ப்பரேட் சேவையில் ஒற்றைக்கொள்கையுடன் ஆளும் வர்க்கக் கட்சிகள் இருக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஏற்கெனவே கார்ப்பரேட் தொடர்பான தங்களது கொள்கைகளைப் பொருத்தவரை, அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசுகளாக இருந்தாலும் வரைமுறையற்ற வகையில் சலுகைகளை வாரி வழங்குவதையே போட்டி போட்டுக் கொண்டு செய்து வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிப்பதால் மட்டும் ஆண்டுக்கு 1.45 இலட்சம் கோடி ரூபாய் இந்திய அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.
ஒரு நிறுவனத்தை பதிவு செய்வது முதல் சந்தைப்படுத்தல் வரை அனைத்தும் சலுகை விலையில் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது போக வாராக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் மக்கள் பணத்தை அப்படியே சுருட்டிக் கொண்டுபோய் கார்ப்பரேட்டுகளின் பைகளில் கொட்டுகிறார்கள். அதோடன்றி, குறைந்த கூலியில் அவர்கள் சுரண்டிக் கொழுப்பதற்கு ஏதுவாக தொழிலாளர் நலச் சட்டங்கள் யாவும் மனிதாபிமானமற்ற முறையில் அடியோடு மாற்றப்படுகின்றன. மேலும், இந்த ஜி.எஸ்.டி வரி முறையின் மூலம் ஆங்காங்கு குற்றுயிரும் குலையுயிருமாக இயங்கிவந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை கூண்டோடு அழித்து வருவதுடன் இவர்களுக்கு போட்டியாக உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்த்து, எந்த வகையிலும் கார்ப்பரேட்டுகளுக்கு சிறு தொந்தரவு கூட நேர்ந்துவிடாத வண்ணம் பாதுகாத்து வருகிறது இந்த மோடி-நிர்மலா பாசிச கும்பல்.
ஆனால், இத்தனை சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு இவர்களை எந்த வகையிலும் அசைத்துக் கூடப் பார்த்திராத இந்த வரி முறைக்குக் கூட கட்டுப்பட்டு வரி செலுத்தாமல், 32,403 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது இன்போசிஸ் நிறுவனம்.
சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் மீதான வரியை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தவறாமல் அதிகரித்து இந்திய வருமானத்தை பெருக்குவதற்காக அயராது பாடுபட்டுவரும் இந்த மோடி-நிர்மலா பாசிச கும்பலோ இந்த வரி ஏய்ப்பு தொடர்பாக வாயையே திறக்காமல், தங்களது எடுபிடியான டி.ஜி.ஜி.ஐ-இன் மூலமாக இன்போசிஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக நாடகமாடி வருகிறது.
உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் வகையில், ஒரே நாடு-ஒரே வரி என்கிற பெயரில், இந்தியாவில் பாலாறையும் தேனாறையும் ஓட வைப்பதாக சொல்லிக் கொண்டு, மோடி-நிர்மலா பாசிச கும்பலால் அமல்படுத்தப்பட்ட இந்த மக்கள் விரோத ஜி.எஸ்.டி முறையின் அம்பலபட்டுப் போன மற்றொரு பித்தலாட்டமே இந்த இன்போசிஸ் நிறுவனத்தின் வரி ஏய்ப்பாகும்.
ஜி.எஸ்.டி-ஆனாலும், நேர்முக வரியானாலும், மறைமுக வரியானாலும் அவை யாவும் எரிகின்ற வீட்டில் பிடுங்கியது வரை ஆதாயம் என்றிருக்கும் இந்த பாசிஸ்டுகளின் மக்கள் விரோத கொள்கையின் ஓர் அம்சமே ஆகும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube