பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 21

டோக்ளியாட்டி

பாசிசத்தின் இராணுவ மற்றும் பிரசார அமைப்புகள்

துவரை, பாசிஸ்டுக் கட்சியின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றிக் கூறினோம். பாசிஸ்டுக் கட்சியின் ஸ்தாபன அமைப்பையும் அதன் அரசியல் நடவடிக்கைகளது தன்மையையும் எடுத்துரைத்தோம். புதிய சட்டதிட்டங்களை வகுத்துக் கொண்ட பிறகு, அது எவ்வாறு தன்னை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் விவரித்தோம்.

எல்லா வகையான உட்கட்சி ஜனநாயகமும் இல்லாதிருப்பதும், கட்சிக்குள் விவாதங்கள் மிக அரிதாகவே நடைபெறுவதும், உண்மையான அரசியல் வாழ்க்கை காணப்படாததும் பாசிஸ்டுக் கட்சியின் ஒரு முக்கியமான அம்சமாக எவ்வாறு இருந்து வருகிறது என்பதைச் சுட்டிக் காட்டினோம். அக்கட்சியின் இயல்பு எவ்வாறு ஒரு சிவிலியன் படைக்குரியதாக இருக்கிறது என்பதையும் பார்த்தோம்; கட்சிப் பதவிகளுக்கு எவ்வாறு தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை என்பதையும், குறிப்பாக சர்வாதிகார இயல்பை ஒத்த ஓர் அதிகாரவர்க்க இயல்பை அது எவ்விதம் பெற்றிருக்கிறது என்பதையும், எல்லா ஜனநாயக அமைப்புகளையும் ஒழித்துக் கட்டி, எவ்விதம் தன்னை ஒரு பகிரங்க சர்வாதிகார அமைப்பாக வெளிப்படுத்திக் கொண்டது என்பதையும் கண்டோம். பாசிஸ்டுக்கட்சியின் இந்த இயல்பு சர்வாதிகாரத்தின் இயல்பை அதாவது ஜனநாயகத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் இயல்பை ஒத்திருக்கிறது.

எனவேதான் ஒரு புது வகையான கட்சியை உருவாக்கி இருப்பதாக லெனினைப் பகடி செய்து முசோலினி கூறியதில் ஓரளவு உண்மை இருக்கிறது. இந்தப் புதிய அம்சம் – ஜனநாயகத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் ஒழித்துக் கட்டுதல், சர்வாதிகார வடிவங்களை கட்சி வரித்துக் கொள்ளுதல் என்னும் அம்சம் – உண்மையிலேயே கட்சிக்கு சில புதிய இயல்புகளை வழங்குகிறது என்பதில் ஐயமில்லை .

எனினும் இந்தக் கட்சியின் ஸ்தாபன வடிவங்கள் நிலையானவை அல்ல என்பதையும், கட்சியின் வளர்ச்சிப் போக்கில் அவை உருவானவை என்பதையும், முசோலினியால் முன்னுணரப்பட்டவை அல்ல என்பதையும் நாம் எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும்.

கட்சி அமைக்கப்பட்ட விதமும் தேசத்தின் வாழ்க்கையில் அது வகிக்கும் செல்வாக்கும் ஓர் உடனடியான விளைவை ஏற்படுத்தி இருக்கிறது : அதாவது ஒரு ஜனநாயக ஆட்சியில் பல்வேறு கட்சிகளிடையே நடைபெறும் போராட்டமும் தவிர்க்கமுடியாத முரண்பாடுகளும் பாசிஸ்டுக்கட்சிக்குள்ளேயே கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

இப்போது, பல்வேறு பாசிஸ்டு அமைப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

இன்று உருவாக்கப்பட்டுள்ள வடிவத்தில் பாசிஸ்டுக் கட்சி தேசத்தின் முழு வாழ்க்கையின் மீதும், மக்களில் அனைத்துப் பகுதியினர்மீதும் கட்டுப்பாடு செலுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது. இதற்குக் காரணம் உண்டு; பாசிஸ்டுக்கட்சி அளவுக்கு மீறி அதிகார வர்க்கமயமாக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு சீரான அமைப்பு என்பது வெளித் தோற்றத்திற்குத்தான். உண்மையில் அப்படியல்ல. அனைத்து மக்களையும் அனுசரித்துப் போகும் கோட்பாடு அதனிடமில்லை.

இன்று இத்தாலியில் பாசிஸ்டுக் கட்சியில் ஓர் உறுப்பினராக இருப்பதன் பொருள் என்ன? சில உறுப்பினர்கள் அரசியல் ரீதியில் செயலூக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர், கட்சிப் பொறுப்புகளில் இருந்து வருகின்றனர், அரசியல் செயற்பாடுகளில் பங்கு கொள்கின்றனர். ஆனால் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் மிகப் பெரும்பாலோர் அரசியல் ரீதியில் செயலற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். அப்படியிருந்தும் அவர்கள் இன்னமும் கட்சியில் இணைந்திருக்கின்றனர். ஏன்? ஏனென்றால் பல்வேறு நிர்ப்பந்த நிலைகள் காரணமாக அவர்கள் கட்சியில் சேர வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

வாழ்வதற்காக வேலை செய்ய வேண்டியிருப்பவர்களும் வேலை செய்து வாழ வேண்டியிருப்பவர்களுமான ஏராளமான குட்டி பூர்ஷுவா வர்க்கத்தினரும் மத்திய பூர்ஷுவா வர்க்கத்தினரும் கட்சியில் சேர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இந்த நிர்ப்பந்த நிலைகள் இருவகைப்பட்டவை; ஒன்று நேரடியானவை, மற்றொன்று மறைமுகமானவை. மறைமுகமான நிர்ப்பந்த நிலைகளை எடுத்துக் கொண்டால், உதாரணமாக, பாசிஸ்டுக் கட்சியில் உறுப்பினராக இருப்பது எந்த அரசு உத்தியோகத்தையும் வகிப்பதற்கு ஒரு முக்கிய தேவையாகும்; பாசிஸ்டுக் கட்சியில் உறுப்பினராக இருப்பது அரசு உத்தியோகங்களுக்கான தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு இன்றியமையாதது. இன்று இத்தாலியில் நீங்கள் ஒரு கட்சி உறுப்பினராக இல்லை என்றால் ஓர் எழுத்தராகவோ, ஆசிரியராகவோ, பல்கலைக் கழகப் பேராசிரியராகவோ ஆக முடியாது. இந்தவிதமான நிர்ப்பந்தம் எல்லாத் துறைகளுக்கும் பரவி வழக்குரைஞர்களாகவோ, பத்திரிகையாளர்களாகவோ இருக்க வேண்டுமென்றால் கட்சி உறுப்பினர்களாக இருப்பது அவசியத் தேவையாகிவிட்டது. கடந்த காலத்தில் மிகப் பெருமளவுக்கு சுதந்திரம் அனுபவித்து வந்த மருத்துவர்களும் இன்று இத்தகைய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். பாசிஸ்டுக் கட்சியில் சேராமல் நீங்கள் இன்று பொது நலவாழ்வு மருத்துவராக இருக்க முடியாது.

இவ்வாறுதான், வாழ்வதற்காக வேலை செய்ய வேண்டியிருப்பவர்களும் வேலை செய்து வாழ வேண்டியிருப்பவர்களுமான ஏராளமான குட்டி பூர்ஷுவா வர்க்கத்தினரும் மத்திய பூர்ஷுவா வர்க்கத்தினரும் கட்சியில் சேர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

மற்றொரு நிர்ப்பந்த வடிவம் ஆலைகளில் தொழிலாளர்கள் மீது பிரயோகிக்கப்படும் பகிரங்க நிர்ப்பந்த நிலையாகும். தொடர்ந்து வேலையில் இருக்க வேண்டுமென்றால் கட்சி உறுப்பினராக இருப்பது அவசியம் என்பது இன்னும் வலியுறுத்தப்படவில்லை என்பது உண்மையே. ஆனால் இந்த நிர்ப்பந்தம் வேறொரு முறையில் பயன்படுத்தப்படுகிறது; உதாரணமாக வேலையில்லாத இரண்டு தொழிலாளர்கள் வேலையில் சேர விண்ணப்பிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்; அவர்களில் ஒருவர் கட்சி உறுப்பினர், மற்றவர் கட்சி உறுப்பினரல்லாதவர்; அப்போது இவ்விருவரில் பாசிஸ்டுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆக, இவ்வாறு தொழிலாளர்களிடையே கூட முந்திய பழைய உறவுகளில் ஓரளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். உழைக்கும் சக்தி இன்னும் விற்கப்படுகிறது என்பதும், முதலாளிகளால் வாங்கப்படுகிறது என்பதும் உண்மையே. ஆனால் இன்று இந்தப் பாரம்பரியமான உறவுகளில்கூட அரசியல் அமைப்புகள் ஊடுருவி வருவதை இன்று பார்க்கிறோம்.

இந்த நிர்ப்பந்த நிலையை மனத்திற் கொண்டு, பாசிஸ்டுக் கட்சி உறுப்பினர்களைப் பார்த்தீர்களானால், அவர்கள் அரசியல் ரீதியில் செயலற்று இருப்பதையும், அரசியலில் பங்கு கொள்ளாதிருப்பதையும் மட்டுமன்றி, அவர்கள் நுட்பமான முறையில் பாசிசத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதையும் காண்பீர்கள். இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஒரு பிராந்தியத் தலைவர் தமது அறிக்கை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். கூட்டுறவு முறையில் அமைந்த ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்தின் ஊழியர் ஒருவரை ஒரு நாள் அவர் சந்திக்க நேர்ந்தது. இது ஒரு பெரிய தொழில் துறை நகரில் நடை பெற்றது. அவர் புலம்பிக் கொண்டிருந்தார். என்ன விஷயம்? என்று நம்முடைய தோழர் கேட்டார். பாசிஸ்டுக் கட்சியில் சேருவதற்கு நாற்பது லயர் தரவேண்டியிருப்பது குறித்து தான் மனக்கசப்பு அடைந்திருப்பதாக அவர் பதிலளித்தார். அதில் நீங்கள் ஏன் சேர வேண்டும்? இல்லையென்றால் ஆட்குறைப்பின்போது எனக்குத்தான் முதலில் சீட்டுக் கிழியும் என்று அவரிடமிருந்து பதில் வந்தது. அப்படியானால் உண்மையில் நீங்கள் ஒரு பாசிஸ்டு இல்லையா? பாசிஸ்டா? பாசிஸ்டுகள் நரகத்துக்குப் போகட்டும்!

படிக்க:
கியூபாவில் ஒருவர் பணக்காரனாக உருவாகவே முடியாதா ?
கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல் !

இந்த நபரை எடுத்துக் கொள்ளுங்கள். இவர் எவ்வாறு ஒரு செயலூக்க மிக்க உறுப்பினராக இருக்க முடியும்? பாசிஸ்டுக் கட்சியுடன் இவருக்குள்ள உறவுகள் முற்றிலும் பொருளாதாரப்பந்தங்களால் பிணைக்கப்பட்டவை, அவர் தமது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியிருப்பதால்தான் பாசிஸ்டாக இருக்கிறார். அரசியல் பிணைப்புகள் மிக நுட்பமானவை.

இதனை நீங்கள் பொதுமைப்படுத்திப் பார்த்தால், எல்லா இடங்களிலும் இதே போன்ற காட்சியைத்தான் காண்பீர்கள். ஒட்டுமொத்தக் காட்சியைப் பார்ப்பீர்களேயானால் வெகுஜனங்களை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர வேண்டுமானால் பாசிசம் எவ்வாறு இதர பல அமைப்புகளையும் நிறுவ வேண்டியுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இது ஏன்? ஏனென்றால் இத்தகைய அமைப்புகளை உருவாக்கவில்லை என்றால், இந்தப் பகுதியினர் தூர விலகிச் செல்வர் அல்லது பாசிஸ்டுக்கட்சியைத் தீவிரப்படுத்துவர். கட்சியை இவ்விதம் தீவிரப்படுத்துவது அதன் இயல்பு காரணமாக பாசிசத்துக்கே அபாயத்தை உண்டு பண்ணக்கூடும்.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க