Avatar
கலையரசன்
ன்னுடன் கூட வேலை செய்யும் கியூபா நாட்டவர் ஒருவர், தனது நாட்டு நிலைமை பற்றி நிறைய சுவையான தகவல்களை தெரிவித்தார். அவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

*****

கியூபாவில் பொதுவாக சம்பளம் குறைவுதான். எனது சக தொழிலாளி அங்கு ஓர் ஆங்கில ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவருக்கும் அதிக சம்பளம் இல்லை. அதனால் தனது ஆங்கில மொழிப் புலமையை பயன்படுத்தி சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்தார். அங்கு கொடுக்கும் சம்பளம் அதிகம்தான். அது வாழ்க்கைக்கு திருப்தியாகப் போதும். ஆனால் எல்லோருக்கும் சுற்றுலாத் துறையில் தொழில் செய்யும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக, சிறு தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுகின்றனர். கடை வியாபாரம், முடி திருத்துதல் போன்ற பல சேவைத் துறைகளில் திறமை உள்ளவர்கள் சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கலாம். அவர்கள் தமது வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் அரசுக்கு வரியாகக் கட்ட வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

எந்தக் காலத்திலும், சிறு தொழில் முனைவோர் பெருமளவு பணம் திரட்டி கோடீஸ்வரனாக வர முடியாது. உலகில் எந்த நாட்டிலும் இந்த அதிசயம் நடப்பதில்லை. ஆகவே இத்தகைய சிறு தொழில் முதலாளித்துவத்தால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இன்று வரையில் பெரிய நிறுவனங்களில் முதல் இடும் ஏகபோக உரிமை கியூப அரசிடம் மட்டுமே உள்ளது.

இருப்பினும் சிறு தொழில் முனைவோர் தமக்கு வரும் இலாபப் பணத்தைக் கொண்டு கியூபாவில் வசதியாக வாழ முடியும். அதிகபட்சம் சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளலாம். அது சரி, சிலநேரம் யாராவது ஓர் அதிர்ஷ்டசாலி அதிக இலாபம் சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தால் என்ன செய்யலாம்? அப்படியானவர்கள் தமது வீட்டையும், வியாபாரத்தையும் வேறு யாருக்காவது விற்று விட்டு வெளிநாடொன்றுக்குச் சென்று குடியேறி விடுவார்கள்.

அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஒருவர் எந்தளவு பணம் வைத்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. கையில் உள்ள பணத்தைக் கொண்டு அதிகபட்சம் காணி, வீடு, நகை, கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை வாங்கி வைத்திருக்கலாம். ஆனால், மாளிகை போன்ற வீடு கட்டி, ஊதாரித்தனமாக செலவழித்து பணக்காரத்திமிர் காட்டுவோர் கியூபாவில் வாழ முடியாது. அதாவது, சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வந்தாலும், அது எல்லை மீற விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

கியூபா முழுமையான சோஷலிச நாடு அல்ல. அந்நாட்டின் பொருளாதாரம் சில கட்டுப்பாடுகளுடன் முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. சுருங்கக் கூறின், முதலாளித்துவ உற்பத்தி சாதனங்கள் உருவாக்கும் செல்வம், அனைத்து மக்களுக்குமான சோஷலிச நலத் திட்டங்களில் முதலிடுவதற்கு உதவுகின்றது. கியூபாவுக்கு உலகவங்கி, IMF என்று யாருமே கடன் கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
கிரனடா : புரட்சியின் நாயகன் மொரிஸ் பிஷப் !
♦ ஃபிடல் காஸ்ட்ரோ – சிறப்புக் கட்டுரை !

கியூபா இன்னமும் ஓர் ஏழை நாடுதான். இருப்பினும் உலகில் பிற ஏழை நாடுகளில் உள்ள ஏழை மக்களைப் போன்று, கியூபாவில் யாரும் பட்டினி கிடப்பதில்லை. தெருவில் அல்லது குடிசையில் வசிப்பதில்லை. இலங்கையை விட சற்றுப் பெரிதான கியூபாத் தீவின் சனத்தொகை பத்து அல்லது பதினொரு மில்லியன்கள். இருப்பினும் அந்நாட்டில் ஒருவர் விடாது அனைவருக்குமான அத்தியாவசிய தேவைகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

அதாவது, எல்லோருக்கும் வசிப்பதற்கு ஒரு வீடு இருக்கிறது. தண்ணீர், மின்சாரக் கட்டணம் மிகவும் குறைவு. பிள்ளைகள் படிப்பதற்கு எந்த செலவும் இல்லை. பல்கலைக்கழகம் வரை கல்வி இலவசம். மருத்துவம் இலவசம். அது மட்டுமல்ல, எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரசு உணவுப் பொருட்களுக்காக பெருமளவு மானியம் ஒதுக்குகின்றது.

அரிசி, சீனி, மாவு, எண்ணை, மரக்கறி, இறைச்சி எல்லாம் அரசு கடைகளில் மிக மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். அதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் முத்திரைகள் அல்லது கூப்பன்கள் கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த உணவுப் பொருட்கள் அதிகபட்சம் இரண்டு கிழமைகள் தாராளமாகப் போதும். மிகுதி நாட்களுக்கு தேவையென்பதை அறிந்து மிச்சம் பிடிக்க வேண்டி இருக்கும். அல்லது சில பொருட்கள் தேவைக்கு அதிகமாக இருந்தால், அவற்றை அயலவருடன் பண்டமாற்று செய்து கொள்ளலாம்.

அயலவருக்கு இடையிலான பண்டமாற்று வணிகம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது. பண்டமாற்று செய்ய எதுவும் இல்லாவிட்டாலும், காசு கொடுத்தும் ஒரு பொருளை வாங்கலாம். உதாரணத்திற்கு, ஒரு கிராமத்தில் ஒருவர் கோழிப் பண்ணை வைத்திருந்தால், அவரிடம் கோழி, முட்டை வாங்கலாம். வீட்டுத் தோட்டத்தில் மாமரங்கள் வைத்திருப்பவரிடம், மாம்பழங்கள் வாங்கலாம். இப்படியான வணிகமும் அரசால் அங்கீகரிக்கப்பட்டதுதான். ஆனால், பிரச்சினை என்னவென்றால் இவற்றை விற்பவர்கள் சந்தையை வைத்து பொருட்களின் விலையை தீர்மானிக்கிறார்கள். அதாவது அந்த ஊரில் மற்றவர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு விற்கிறார்கள் என்பதை விசாரித்துவிட்டு, அயல்வீட்டுக் காரரும் தனது கோழியை அதே விலைக்கு விற்பார்.

அதை விட, கியூபாவில் சட்டவிரோதமான சந்தையும் (Black Market) உள்ளது. அங்கே எல்லா விதமான பொருட்களும், சேவைகளும் விற்கப்படுகின்றன. இந்த கறுப்புச் சந்தை இயங்குவது அதிகாரிகளுக்கு தெரிந்தாலும், கண்டும் காணாத மாதிரி இருப்பார்கள். எங்காவது யாராவது நிறையப் பணம் வைத்திருப்பது கேள்விப்பட்டால் மட்டும் தலையிடுவார்கள். இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று விசாரித்து கறுப்புச் சந்தை வணிகத்தில் சேர்ந்த இலாபம் என்று கண்டுபிடித்து விடுவார்கள். அதற்குப் பிறகு அது ஒரு குற்றமாகக் கருதி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

படிக்க:
திபெத் மடாலய மர்மங்கள் | கலையரசன்
♦ மத்திய பட்ஜட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் | மக்கள் அதிகாரம்

அண்மைக் காலத்தில், ரவுல் காஸ்ட்ரோ அரசாங்கம் கொண்டு வந்த முதலாளித்துவ பொருளாதார சீர்திருத்தம் காரணமாக, சிறு தொழில் முனைவோர் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்கும் வழக்கமும் வந்துவிட்டது. உதாரணத்திற்கு, ஒருவர் தனது வீட்டைத் திருத்தி, விரிவுபடுத்தி கட்டி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட முடியும். ஆனால், அது சர்வதேச தரத்துடன் கூடிய தங்குமிடமாக தயார்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்தத் தரம் இல்லா விட்டால், அதிகாரிகள் அனுமதி கொடுக்க மாட்டார்கள். அதனால், சில இடங்களில் இலஞ்சம் கொடுப்பதும் நடக்கிறதாம்.

கியூபாவில் சோஷலிசம் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில், அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் கூட சாதாரண வீடுகளில்தான் வசித்தார்கள். பணக்காரர் என்று யாரும் இருக்கவில்லை. இருந்தாலும், யாரும் தம்மிடம் பணம் இருப்பதாக வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஒருவர் தன்னை மற்றவர்களை விட வசதிபடைத்தவராக காட்டிக் கொள்வது அவமானத்திற்குரிய செயலாக கருதப்பட்டது. அந்த நிலைமை இன்றைக்கும் நீடிக்கிறது.

ஆனால், தற்போதைய முதலாளித்துவ சீர்திருத்தங்களுக்கு பின்னரான சமூக நிலைமையில் சில மாற்றங்கள் வந்துள்ளன. பல்வேறு முதலாளித்துவ உற்பத்தி நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்ட அரசாங்க அல்லது இராணுவ அதிகாரிகள் சிலரிடம் தாராளமாக பணம் புழங்குகிறது. அவர்கள் அந்தப் பணத்தை வைத்து கியூபாவில் ஆடம்பரம் காட்டுவதில்லை. ஆனால், அவர்களது பிள்ளைகள் பாரிஸ், லண்டன் என்று ஐரோப்பிய நகரங்களுக்கு சென்று தம்மிடம் உள்ள பணத்தை செலவழிக்கிறார்கள்.

(தொடரும்)

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

 

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.