Sunday, September 15, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஃபிடல் காஸ்ட்ரோ - சிறப்புக் கட்டுரை !

ஃபிடல் காஸ்ட்ரோ – சிறப்புக் கட்டுரை !

-

ஃபிடல் காஸ்ட்ரோ : அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராளி !

castr_pic1
கியூபா தேசிய விடுதலைப் புரட்சியின் நாயகன் பிடல் காஸ்ட்ரோ.

காஸ்ட்ரோ மறைந்து விட்டார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற தேச விடுதலைப் போராளி என்ற முறையில் அவரை நாம் நினைவு கூர்கிறோம். உலக மக்களின் இன்றைய முதன்மை எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அடியோடு வெறுக்கின்ற உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட நாட்டு மக்கள் காஸ்ட்ரோவின்பால் விசேடமான ஈர்ப்பும் மரியாதையும் கொண்டிருக்கின்றனர். இதனைப் புரிந்து கொள்கின்ற அதே நேரத்தில், காஸ்ட்ரோவின் பாத்திரத்தை அவர் வாழ்ந்த காலத்தின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து விளங்கிக் கொள்வது அவசியம்.

VIDEO: Cuban People Pay Tribute to Fidel Castro at Revolution Sq
தமது தேசியத் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் கியூபா மக்கள்.

1959−இல் பாடிஸ்டா என்ற அமெரிக்க  கைக்கூலி சர்வாதிகாரியின் ஆட்சியைத் தூக்கியெறிந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய காஸ்ட்ரோவின் தலைமையிலான ‘‘ஜூலை−26 இயக்கம்’’ என்பது நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரைக் கொண்ட ஒரு ஆயுதக்குழு. இது ஒரு விவசாயிகள் இயக்கமோ, தொழிலாளர் இயக்கமோ அல்ல. காஸ்ட்ரோவின் கூற்றுப்படியே ‘‘சிறுமுதலாளித்துவ வர்க்கத்துக்குரிய தவறான கருத்துகளும் குறைபாடுகளும் கொண்ட, பாடிஸ்டாவின் சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிவது என்பதற்கு மேல் தெளிவான கொள்கைகள் எதையும் கொண்டிருக்காத’’ ஒரு இயக்கமாகவே அது இருந்தது.
[இத்தாலிய கம்யூனிஸ்டு கட்சி பத்திரிகைக்கு (லா யூனிடா) காஸ்ட்ரோ அளித்த பேட்டி, பிப். 1, 1961,]

இருப்பினும், பாடிஸ்டாவின் ஆட்சிக்கும் அதற்கு துணை நின்ற நிலப்பிரபுக்கள் மற்றும் அமெரிக்க முதலாளிகளுக்கும் எதிராக குமுறிக் கொண்டிருந்த விவசாயிகளும் தொழிலாளர்களும் புரட்சியை ஆதரித்தனர். கியூபா பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த கரும்புத் தோட்டங்கள், சர்க்கரை ஆலைகள் ஆகிய அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க முதலாளிகளின் சொத்துகளை நாட்டுடைமை ஆக்கியதால் ஆத்திரம் கொண்ட அமெரிக்க அரசு, ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அமெரிக்காவில் குடியேறிய கியூபாவைச் சேர்ந்த பிற்போக்குவாதிகளைக் கொண்டு படை திரட்டி, ஏப்ரல் 1961−இல் சி.ஐ.ஏ. தொடுத்த இந்தப் போரில் (Bay of  Pigs War) கியூபா வென்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கியூபா மக்களின் தேசிய உணர்வை இது தீவிரப்படுத்தியது.

castro_pic6
சோவியத் ரசியாவைத் திருத்தல்வாதப் பாதையில் தள்ளிய குருச்சேவுடன் பிடல் காஸ்ட்ரோ. (கோப்புப் படம்)

காலனியாதிக்கத்துக்கும், ஏகாதிபத்திய கைக்கூலி அரசுகளுக்கும் எதிராக உலகம் முழுவதும் தேச விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்து வந்த இந்த காலத்தில், பிற்போக்கு அரசுகளையும் இராணுவ சர்வாதிகாரங்களையும் ஆதரித்து வந்த அமெரிக்கா, சீனாவுக்கும் ரசியாவுக்கும் எதிரான அணு ஆயுத அச்சுறுத்தல்களையும் தொடங்கியிருந்தது. ரசியாவைக் குறிவைத்து துருக்கியிலும், இத்தாலியிலும் அணு ஆயுத ஏவுகணைகளை அமெரிக்கா நிறுவியிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்காவை குறிவைத்து, 1962−இல் கியூபாவில் அணு ஆயுத ஏவுகணைகளை நிறுவியது, முதலாளித்துவம் மீட்கப்பட்ட நாடான ரசியா.

சமூக ஏகாதிபத்தியமாக உருவெடுத்திருந்த சோவியத் யூனியனுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான பனிப்போரின் துவக்கமாக அமைந்த இந்த காலகட்டத்தில், அமெரிக்கத் தாக்குதல் அபாயத்தை நிரந்தரமாக எதிர்நோக்கியிருந்த காஸ்ட்ரோ, ரசிய ஏவுகணைத் தளத்தை, கியூபாவுக்குக் கிடைத்த பெரும் தற்காப்பாகக் கருதினார். கென்னடி – குருசேவுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் பதின்மூன்றே நாட்களில் இருதரப்பும் அணு ஆயுதத்தை அகற்றிக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தன. அணு ஆயுத தளத்தை அகற்ற வேண்டாமென்ற காஸ்ட்ரோவின் கோரிக்கையை குருசேவ் பொருட்படுத்தவும் இல்லை; இந்த முடிவு குறித்து காஸ்ட்ரோவுக்குத் தெரிவிக்கவும் இல்லை. அமெரிக்காவுடனான குருசேவின் இந்த சமரசத்தை மாவோ வெளிப்படையாக விமரிசித்தார். கியூபாவைச் சதுரங்கக் காயாக குருசேவ் பயன்படுத்திக் கொண்டதை சீரணிக்க இயலவில்லையென்ற போதிலும், காஸ்ட்ரோ இது குறித்து வெளிப்படையாக விமரிசிக்கவில்லை.

000

1960−களின் தொடக்கமான இந்த ஆண்டுகளில்தான், குருசேவ் கும்பல் ரசியாவில் முதலாளித்துவ மீட்சியை அமல்படுத்தத் தொடங்கியிருந்தது. சோசலிச முகாமுக்கும் ஏகாதிபத்திய முகாமுக்கும் இடையில் சமாதான சகவாழ்வு, ஆயுதப் புரட்சிக்கு பதிலாக அமைதி வழி மாற்றம் என குருசேவ் முன்வைத்த திருத்தல்வாதக் கொள்கைகளை எதிர்த்து, மாவோவின் தலைமையிலான சீன கம்யூனிஸ்டு கட்சி, ரசிய கம்யூனிஸ்டு கட்சியுடன் தீவிரமான கருத்துப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. கட்சிகளுக்கு இடையில் நடந்து வந்த இந்த விவாதம், அடுத்து வந்த ஆண்டுகளில் வெளிப்படையான கருத்துப் போராட்டமாக மாறியது. சர்வதேச கம்யூனிஸ்டு இயக்கத்தில் பிளவும் ஏற்பட்டது.

castr_pic8
வியட்நாமின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 1973−இல் வியட்நாமுக்குச் சென்ற பிடல் காஸ்ட்ரோ விடுதலைப் போராளிகளுடன்….. (கோப்புப் படம்)

உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த வியத்நாம், கொரிய கம்யூனிஸ்டு கட்சிகள், சீன – ரசிய பிளவைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்து, நடுநிலை வகித்தன. ஆனால், கியூபா அப்படி நடுநிலைகூட வகிக்கவில்லை. மாறாக, ரசிய ஆதரவு நிலையையே எடுத்தது.

நவம்பர் 1960−இல் சே குவேரா தலைமையிலான கியூபா தூதுக் குழுவினர் மாவோ மற்றும் சூ என் லாயுடன் நடத்திய உரையாடல், லத்தீன் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கும் நடக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களின் மீது அக்கறை காட்டுவதாகவே அமைந்திருந்தது. இதற்கு மாறாக, அமைதி வழி மாற்றம் என்ற குருசேவின் நிலையை ஆதரித்து காஸ்ட்ரோ எடுத்த முடிவு,  சர்வதேச பாட்டாளி வர்க்க நலனைக் கருத்தில் கொண்டோ, ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்கான பாதை குறித்த அக்கறையிலிருந்தோ எடுக்கப்படவில்லை. மாறாக, அமெரிக்காவின் அச்சுறுத்தலிலிருந்து கியூபாவைத் தற்காத்துக் கொள்வதற்கும், அரசியல், பொருளாதார, ராணுவ ரீதியாக தாக்குப்பிடித்து நிற்பதற்கும் ரசிய சார்பு நிலையே உகந்தது என்ற கோணத்தில் காஸ்ட்ரோ சந்தர்ப்பவாதமாகவே முடிவெடுத்தார். சீனத்துக்கு தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் திடீரென்று நிறுத்திய குருசேவ் கும்பல், அந்நாட்டை திடீரென்று நெருக்கடியில் தள்ளிய சூழலிலும், சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நலனை முன்னிறுத்தி, திருத்தல்வாதத்துக்கு எதிராக மாவோ உறுதியான நிலை எடுத்ததை இங்கே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ரசிய ஆதரவு நிலையின் தொடர்ச்சியாக, ரசியாவின் செக்கோஸ்லோவாக்கிய ஆக்கிரமிப்பு, எத்தியோப்பிய தலையீடு முதல் ஆப்கன் ஆக்கிரமிப்பு வரையிலான சமூக ஏகாதிபத்திய நடவடிக்கைகள் அனைத்தையும் காஸ்ட்ரோ ஆதரித்தார். அமெரிக்காவும் ரசியாவும் மேல்நிலை வல்லரசுகள் என்றும், உலகப் போரின் ஊற்றுக் கண்ணாக ரசிய சமூக ஏகாதிபத்தியம் இருக்கிறது என்றும் வரையறுத்த மாவோவின் மூன்றுலக கோட்பாட்டை (1974) நிராகரித்தது மட்டுமின்றி, கூட்டுச்சேரா இயக்கத்தில் சில மூன்றாம் உலக நாடுகள், ‘‘அமெரிக்காவைப் போலவே ரசியாவும் ஏகாதிபத்தியமே’’ என்று குறிப்பிட்டு விமரிசித்தபோது, அதனை காஸ்ட்ரோ கடுமையாக எதிர்த்தார். ‘‘கோமேகான்’’ (COMECON) என்ற ரசிய சார்பு நாடுகளின் சர்வதேச பொருளாதார கூட்டமைப்பில் அங்கம் வகித்தது மட்டுமின்றி, பனிப்போர் காலத்தில் ரசியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளிலும் கியூபாவை ஈடுபடுத்தினார்.

castro_pic7
அங்கோலா தேசிய விடுதலைப் போரில் பங்கேற்ற கியூபாவின் இராணுவ வீரர்கள்.

இருந்த போதிலும், கியூபாவுக்கும் ரசியாவுக்கும் இடையில் முரண்பாடுகளும் தோன்றாமல் இல்லை. அமெரிக்க கைப்பாவை சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்களை ஆதரித்து காஸ்ட்ரோவும் சே குவேராவும் தெரிவித்த கருத்துகள், ‘‘அமைதி வழி மாற்றம்’’ என்ற குருசேவின் திருத்தல்வாதக் கொள்கைக்கும், அந்த நாடுகளைச் சேர்ந்த போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல் செயல்பாட்டுக்கும் எதிரானதாக இருந்தது. 1975−இல் அங்கோலாவின் சோவியத் ஆதரவு எம்.பி.எல்.ஏ. படைக்கு எதிராக தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசு போர் தொடுத்தபோது, ரசியாவின் ஆட்சேபத்தையும் மீறி, ஆயிரக்கணக்கான கியூபா துருப்புகளை அங்கோலாவுக்கு அனுப்பினார் காஸ்ட்ரோ. இதன் விளைவாக தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசு போரில் முறியடிக்கப்பட்டது. இது தென் ஆப்பிரிக்க கருப்பின மக்களின் ஆதரவை மட்டுமின்றி, கியூபாவிலும் பல்வேறு நாடுகளிலும் நிறவெறி அரசுக்கு எதிராக குமுறிக் கொண்டிருந்த கருப்பின மக்களுடைய பேராதரவையும் காஸ்ட்ரோவுக்குப் பெற்றுத் தந்தது. கியூபாவுடனான ரசிய உறவில் இத்தகைய முரண்பாடுகள் இருந்தபோதிலும், பூகோள ரீதியில், அமெரிக்காவுக்கு அருகில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கியூபா இருந்த காரணத்தினாலும், காஸ்ட்ரோ பெற்றிருந்த சர்வதேச செல்வாக்கின் காரணமாகவும், ரசிய சமூக ஏகாதிபத்தியம் இவற்றையெல்லம் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

பனிப்போர் காலகட்டத்தில் சர்வதேச அரங்கில் கியூபா மேற்கொண்ட பல நடவடிக்கைகளில், அது ஒரே நேரத்தில் சமூக ஏகாதிபத்தியத்தின் தொங்குசதையாகவும், உணர்வு பூர்வமான அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. அன்றைய சர்வதேச சூழலில், வியத்நாம், இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா மற்றும் பல ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சர்வாதிகாரங்கள் அனைத்துக்கும் அமெரிக்கா ஆதரவளித்து வந்தது. அந்த வகையில் அமெரிக்கா பல நாட்டு மக்களுக்கு எதிரியாக இருந்தது. இத்தகைய சூழலில், அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்களை ஆதரிப்பது, சாத்தியமான இடங்களில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகளை நடத்துவது என்ற நடவடிக்கைகள் மூலம் ரசிய சமூக ஏகாதிபத்தியம், மூர்க்கமான முறையில் உலக மேலாதிக்கத்துக்கு முயன்று கொண்டிருந்தது.

கியூபாவைப் பொருத்தவரை, வாயிற்படியில் ஒவ்வொரு கணமும் சி.ஐ.ஏ.வின் சதிவேலைகளை எதிர்கொண்டிருந்த காஸ்ட்ரோவுக்கு, அமெரிக்காவை சாத்தியமான இடங்களிலெல்லாம் பலவீனப்படுத்தவதென்பது, சர்வதேசக் கடமையாக மட்டுமின்றி, கியூபாவின் உடனடி தேசிய நலனுக்கு அவசியமான தேவையாகவும் இருந்தது.

000

1980−களின் இறுதி மற்றும் 1990−களின் துவக்கத்தில் நேர்ந்த ரசிய, கிழக்கு ஐரோப்பிய போலி சோசலிசங்களின் வீழ்ச்சி, தனியாக அமெரிக்காவை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியை காஸ்ட்ரோவுக்கு உண்டாக்கியது. அதுநாள் வரை மாவோவின் சோசலிச சீனத்துக்கு செல்லாத காஸ்ட்ரோ, 1995−இல் முதலாளித்துவம் மீட்கப்பட்ட சீனத்துக்கு சென்றார். சர்வதேச உறவுகளில் வன்முறையைப் பயன்படுத்தாமல் இருந்ததற்காக கன்பியூசியஸ் சமாதானப் பரிசை சீன அரசு  காஸ்ட்ரோவுக்கு வழங்கியது. முன்னர் ரசியாவை முதன்மையான வணிகக் கூட்டாளியாக கொண்டிருந்த கியூபாவுக்கு, இப்போது சீனா முதன்மையான வணிகக் கூட்டாளி ஆகிவிட்டது.

castro_pic5
1960−களில் மக்கள் சீனத்திற்குச் சென்ற கியூபா தூதுக் குழுவின் தலைவரான சே குவேரா தோழர் மாவோவுடன்…. (கோப்புப் படம்)

போலி சோசலிச வீழ்ச்சிக்குப் பின்னர், காஸ்ட்ரோ, எல்லா லத்தீன் அமெரிக்க பிற்போக்கு அரசுகளுடனும் நெருக்கமான உறவைப் பேணினார். அந்த அரசுகளுக்கு எதிரான இடதுசாரி கொரில்லாக்களின் போராட்டங்களை எதிர்த்தார். ‘‘கொரில்லாப் போராட்டங்களின் சகாப்தம் முடிவடைந்து விட்டது’’ என்றும், ‘‘மைய நீரோட்ட அரசியல்தான் ஒரே தீர்வு’’ என்றும் பிரகடனம் செய்தார்.

கொலம்பியாவில் அமெரிக்க கைக்கூலியான அதிபர் யூரிப்−இன் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடிவந்த, எஃப்.ஏ.ஆர்.சி.(FARC) புரட்சியாளர்களையும், சுமார் 20,000 பேரைக்கொண்ட அவர்களது விவசாயிகள் படையையும் விமரிசித்தது மட்டுமின்றி, அவர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு தேர்தல் பாதைக்கு வரவேண்டும் என்றும் கூறினார். ஏற்கெனவே ஒருமுறை தேர்தல் பாதையை தெரிவு செய்தபோது, நூற்றுக்கணக்கான போராளிகள், சி.ஐ.ஏ. வால் பயிற்றுவிக்கப்பட்ட கொலம்பிய கொலைப்படையினால் கொன்று குவிக்கப்பட்ட அனுபவம் இருந்த போதிலும், இப்படியொரு தற்கொலைப் பாதையை கொலம்பிய புரட்சியாளர்கள்மீது காஸ்ட்ரோ திணிப்பதற்கு காரணம் இருந்தது.

சர்வதேசப் பாட்டாளி வர்க்க உணர்வு என்பதை ஒரு அறம் சார்ந்த விழுமியமாகவும், சேவை மனப்பான்மையாகவும் கொண்டிருந்த காஸ்ட்ரோவின் அரசியல், கியூபாவின் தேசிய நலனை மையப்படுத்தியதாகவும், திருத்தல்வாதத்தின் புதிய வடிவமாகவுமே இருந்தது. இயற்கைப் பேரழிவுகள், கொள்ளை நோய்கள் போன்றவற்றிலிருந்து ஏழை நாடுகளின் மக்களைக் காப்பாற்றுவதற்கு கியூபாவின் மருத்துவர் குழுக்களை பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பியது போன்ற நடவடிக்கைகளை நாம் இந்தக் கண்ணோட்டத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 1990−க்குப் பிந்தைய காலத்தில், லத்தீன் அமெரிக்காவின் விடுதலை இறையியலில் தொடங்கி, 21−ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம் என்ற பெயரிலான தன்னார்வக்குழு அரசியலையும், அமெரிக்க சார்பு மையவாத அரசியலையும் அவர் ஆதரித்தார்.

000

காஸ்ட்ரோவின் இந்த நிலைப்பாடுகள் பிறழ்வுகள் அல்ல. இவற்றின் வேர்கள் கியூபா புரட்சியின் வரலாற்றிலேயே உள்ளன. கியூபாவின் புரட்சி என்பது ஒரு குறிப்பிட்ட வரலாற்று சூழலில், ரசிய – அமெரிக்க பனிப்போரின் பின்புலத்தில் வெற்றி பெற்றது. காங்கோ, சிலி, கவுதமாலா, நிகராகுவா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களுக்கு ரசியாவின் ஆதரவுக்கிடையிலும் இத்தகைய வெற்றி கிட்டவில்லை. அமெரிக்காவின் இடையறாத ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளையும் எண்ணற்ற கொலை முயற்சிகளையும் மீறி கியூபா தாக்குப்பிடித்து நிற்க முடிந்ததற்கு காஸ்ட்ரோவின் ஆளுமையும், அவருடைய மக்கள் செல்வாக்கும் தனிச்சிறப்பான காரணங்களாக இருந்திருக்கின்றன. ஆனால் இதன் காரணமாகவே கியூபாவை சோசலிச நாடென்று அங்கீகரித்துக் கொள்ளவியலாது.

castro_pic3
பாடிஸ்டா அரசைத் தூக்கியெறிய தோளோடு தோள் நின்ற போராளிகளுடன் பிடல் காஸ்ட்ரோ. (இப்படம் 1952−இல் இரகசியமாக இயங்கிவந்த தளமொன்றில் எடுக்கப்பட்டது.)

வலது, இடது போலி கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரை, ரசியாவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் தம்மைத்தாமே முதலாளித்துவ நாடுகள் என்று பிரகடனம் செய்யும் வரையில், அவற்றை சோசலிச நாடுகள் என்றே கூறிவந்தனர். அவ்வண்ணமே சீனத்தையும், வியத்நாமையும்கூட இன்னமும் சோசலிச நாடுகள் என்று கூறிவருகின்றனர். இன்னொருபுறம், சோசலிசத்துக்கான மார்க்சிய−லெனினிய வரையறைகளை எதிர்ப்பவர்களான புதிய இடதுகளும்  மற்றும் இடதுசாரி அறிவுத்துறையினர் என்று அறியப்படுவோரும், ரசிய − சீனத் தோல்விகளுக்குப் பின்னர், ‘‘எதார்த்தத்தில் நிலவும் சோசலிசம்’’ (actually existing socialism) என்றொரு புதிய வரையறையை − அதாவது இலக்கணமே கிடையாது என்றொரு இலக்கணத்தை − உருவாக்கியிருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி, ‘‘இன்னொரு உலகம் சாத்தியமே’’ என்ற உலக சமூக மன்றத்தின் (WSF) முழக்கத்தை முன்வைக்கும் தன்னார்வக் குழுக்களும், பிரேசில், ஈக்வடார், சிலி, வெனிசூலா உள்ளிட்ட நாடுகளின் அரசுகளையும், ‘‘சோசலிசம்’’ என்று சித்தரிக்க வசதியாக, ‘‘21−ஆம் நூற்றாண்டு சோசலிசம்’’ என்றொரு புதிய சிவப்பு வண்ணத்தைக் கண்டு பிடித்திருக்கின்றனர்.

மொத்தத்தில், இவையனைத்தும் உலக முதலாளித்துவத்தின் தாக்குதலை எதிர்கொள்ளவியலாத, அல்லது எதிர்கொள்ள விரும்பாத செயலின்மையின் விளைவுகளே ஆகும். முதலாளித்துவ சீர்திருத்தத்தையே சோசலிசம் என்று கொண்டாடும் அரசியல் கண்ணோட்டமும், சே குவேரா – காஸ்ட்ரோ போன்றோரை நாயகர்களாகக் கொண்டாடி ஆறுதலடையும் வழிபாட்டு மனோபாவமும் இத்தகைய செயலின்மையிலிருந்தே பிறக்கின்றன.

இத்தகையோரைப் பொருத்தவரை மார்க்சியம் என்பது செயலுக்கான வழிகாட்டியாக இல்லை. எனவேதான் காஸ்ட்ரோவைக் கம்யூனிசத் தலைவராக கொண்டாடுபவர்கள் யாரும், அவர் வகுத்துத் தந்த ‘‘புரட்சிக்கான பாதை என்ன’’ என்பது குறித்துப் பேசுவதில்லை. காஸ்ட்ரோவால் அமல்படுத்தப்பட்டு, ‘‘புரட்சிக்கான புதிய பாதை’’ என்று ரெஜிஸ் டெப்ரே (Regis Debray)யால் கொண்டாடப்பட்ட ‘‘ஃபோக்கோ’’ (FOCO) என்ற கொரில்லா குழு நடவடிக்கை, எல்லா நாடுகளிலும் தோல்வியையே தழுவியிருக்கிறது. பாட்டாளி வர்க்க அரசியலையும் மக்கள் திரள் பாதையையும் நிராகரிக்கின்ற அந்த சாகசவாத வழி,  புரட்சியாளர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி, புரட்சியின் தோல்வியை உத்திரவாதப்படுத்தும் என்கிற காரணத்தினால்தான், தீவிர அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான சே குவேராவை அமெரிக்க ஏகாதிபத்தியமே தயங்காமல் பிரபலப்படுத்துகிறது.

கியூபாவின் புரட்சி வெகுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்படவில்லை என்பது மட்டுமல்ல, ‘‘மார்க்சிய−லெனினியம்தான் தனது வழிகாட்டும் சித்தாந்தம்’’ என்று காஸ்ட்ரோ அறிவித்துக் கொண்ட போதிலும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அரசியல் உள்ளடக்கமாக கொண்ட, சோவியத்துகளைப் போன்ற அதிகார உறுப்புகள் அங்கே உருவாக்கப்படவில்லை. போலி சோசலிச ரசியாவைப் போன்ற அரசு முதலாளித்துவ, அதிகார வர்க்க ஆட்சியை ஒத்த இன்னொரு வடிவமாகவே அது இருந்தது. சே குவேரா, காஸ்ட்ரோ ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதும், காந்திய அறத்துடன் ஒப்பிடத்தக்கதுமான, அரூபமான ‘சோசலிச அறம்’, தனது பாதுகாப்புக் கவசத்தின் கருணையில் வாழவேண்டிய நிலையில்தான் கியூபாவின் பாட்டாளி வர்க்கத்தை வைத்திருந்தது. வர்க்கப் போராட்ட நடைமுறையில் பாட்டாளி வர்க்கத்தை ஈடுபடுத்தவோ, அதிகாரம் என்ற ஆயுதத்தை ஏந்தவோ பாட்டாளி வர்க்கத்தை அது பயிற்றுவிக்கவில்லை.

ஆகவே, போலி கம்யூனிஸ்டுகளும் முதலாளித்துவ தாராளவாதிகளும் முன்வைப்பது போல, காஸ்ட்ரோவை ஒரு கம்யூனிசப் புரட்சியாளர் என்றோ, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க தலைவரென்றோ வரையறுக்கவியலாது. கியூபாவில் அவர் நிகழ்த்திய புரட்சியை பாட்டாளி வர்க்கத் தலைமையிலான சோசலிசப் புரட்சி என்று கருதவும் முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராளியாகவே அவரைக் கருத முடியும். தேசிய முதலாளித்துவ வர்க்கத்துக்குரிய ஊசலாட்டமும் சமரசமும்தான் காஸ்ட்ரோவின் பிற்கால வாழ்க்கையில் அவரிடம் வெளிப்பட்டன.

‘‘கம்யூனிஸ்டு கட்சியிலும் சோசலிச சமூகத்திலும் முதலாளித்துவத்தை மீட்பதற்கான முயற்சிகள் நடக்கும்’’ என்ற மாவோவின் கருத்தையும் கலாச்சாரப் புரட்சியின் அவசியத்தையும் காஸ்ட்ரோ ஏற்கவில்லை. ‘‘மாவோ தனது தலையால் சாதித்ததை காலால் அழித்துவிட்டார்’’ என்று 1977−இல் அமெரிக்க நிருபர் பார்பரா வால்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார் காஸ்ட்ரோ. கலாச்சாரப் புரட்சி குறித்த காஸ்ட்ரோவின் இந்த விமரிசனம், அவர் ஃபோக்கோ கோட்பாட்டின் சித்தாந்த செல்வாக்கிலிருந்து விடுபடாததையும், திருத்தல்வாத அரசியலில் ஊன்றி நின்றதையுமே காட்டுகின்றன. அதிகார வர்க்க அரசாக இருந்த போதிலும், கியூப அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அதற்கு ஒரு நற்பெயரை ஈட்டித் தந்திருக்கின்றன.

castro_pic4
பிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் கியூபா மருத்துவத் துறையில் அடைந்துள்ள மாபெரும் பாய்ச்சலின் ஒரு பதிவு.

தொழில்மயமாக்கத்தையோ, வளர்ந்த பொருளாதாரத்தையோ கொண்டிராத நிலையிலும், அமெரிக்காவின் தலையீடுகள், தடைகள் போன்றவற்றால் நிரந்தரமாகத் துன்புறுத்தப்பட்ட நிலையிலும், முன்னேறிய நாடுகளால்கூட சாதிக்கவியலாத மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை கியூபா அமல்படுத்தியிருக்கிறது. ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரையில் தரமான இலவசக் கல்வி, மக்களின் ஆரோக்கியத்தை பேணும் விதத்திலான தரமான மருத்துவம், மருத்துவத்துறை அறிவியல் முன்னேற்றம், கருப்பினத்தவர், கலப்பினத்தவர் உள்ளிட்ட பல்வேறு இன மக்கள் வாழுகின்ற சமூகத்தில் பேணப்படும் சமத்துவப் பண்பாடு – என முதலாளித்துவ நாடுகளே அங்கீகரிக்கும் வகையிலான சாதனைகள் பலவற்றை காஸ்ட்ரோவின் தலைமை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

ஆனால் இவற்றையெல்லாம் தாங்கி நிற்பதற்குத் தேவையான தற்சார்பு பொருளாதாரத்தை கியூபா பெற்றிருக்கவில்லை. கரும்பு உற்பத்தி – சர்க்கரை ஏற்றுமதி என்பதையே தனது முதுகெலும்பாக கொண்டிருந்த கியூபா, புரட்சிக்குப்பின் அமெரிக்காவுக்குப் பதிலாக ரசியாவுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்தது. சந்தை விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு சர்க்கரையை வாங்கிக் கொண்டதுடன், எண்ணற்ற உதவிகளையும் ரசியா செய்தது. ரசியாவின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, காஸ்ட்ரோவின் அரசு சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைத்தது. சுற்றுலாத் தொழில் அதற்கேயுரிய பண்பாட்டுச் சீரழிவுகளான இரவு விடுதிகள், போதை மருந்து, விபச்சாரம், ஊழல் ஆகிய அனைத்தையும் கொண்டு வந்ததுடன் சமூக ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கச் செய்தது. எண்ணெய் வளமிக்க வெனிசுலாவின் அதிபரான சாவேஸ் கணிசமான அளவுக்கு உதவிய போதிலும் பொருளாதார தற்சார்பை கியூபாவால் எட்ட இயலவில்லை.

தற்போதைய கியூபா அதிபரும் பிடலின் சகோதரருமான ராவுல் காஸ்ட்ரோ, தனிச்சொத்துடைமையை அங்கீகரிக்கும் பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதுடன், தாராளமயக் கொள்கைகளையும் அமல்படுத்த தொடங்கியிருக்கிறார். அமெரிக்காவுடனான உறவைப் புதுப்பித்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் கியூபாவுக்கு ஒபாமா வருகை தந்திருப்பது முக்கியமானதொரு திருப்புமுனையாகும். மூன்று நாட்கள் கியூபாவில் தங்கியிருந்த ஒபாமா, காஸ்ட்ரோவைச் சந்திப்பதையோ, தனது உரைகளில் காஸ்ட்ரோவின் பெயரைக் குறிப்பிடுவதையோ கவனமாகத் தவிர்த்தார். கடந்த அக்டோபர் மாதம் கியூபாவுக்கு எதிரான வணிகத் தடைகளையும் ஒபாமா நீக்கியிருக்கிறார். அமெரிக்கப் பொருட்களும், பண்பாடும் இனி தடையின்றி கியூபாவுக்குள் நுழையும்.

1961−இல் பன்றிகள் வளைகுடாவில் (Bay of Pigs) வீரஞ்செறிந்த கியூப மக்களால் தடுத்து விரட்டப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள், இன்று அதிகார பூர்வமாக கியூபாவுக்குள் நுழைகிறார்கள். காஸ்ட்ரோ விடை பெறுகிறார். ஒபாமாவின் கியூபா வருகையையொட்டி அவருக்கு பகிரங்க மடல் ஒன்றை எழுதியிருந்தார் காஸ்ட்ரோ. அக்கடிதத்தில் கியூபாவின் 55 ஆண்டுகாலப் போராட்டத்தை பெருமையுடன் நினைவு கூர்ந்திருக்கும் காஸ்ட்ரோ, ‘‘பேரரசு எங்களுக்கு எதையும் வழங்கத் தேவையில்லை’’ என்று அதில் குறிப்பிடுகிறார்.

துயரம் தோய்ந்த அந்தச் சொற்கள், காயம்பட்ட அவருடைய தன்மான உணர்வையும், தள்ளாத முதுமையிலும் அடங்க மறுக்கும் சுயமரியாதை உணர்வையும், தன்னுடைய உணர்வுடன் ஒன்றாத கியூபாவின் சமுகத்திலிருந்து தனித்து விடப்பட்ட அவரது கையறு நிலையையும் ஒருங்கே வெளிப்படுத்துகின்றன. இந்தத் துயரம் தனிநபரின் துயரமன்று. கியூபா கடந்து வந்த பாதையை, தயக்கமற்ற விமரிசனப் பார்வையில் பரிசீலிப்பதன் வாயிலாக மட்டுமே இந்தத் துயரிலிருந்து விடுபடமுடியும்.

-சூரியன்,
புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2016

  1. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த புரட்சியைப் பற்றி எழுதியாயிற்று! இப்ப கூபா எப்படி இருக்கிறது என்றும் எழுதலாமே? முழுவதும் கம்யூனிசம் அல்லது கட்டற்ற காபிடலிசம் இரண்டுமே தவறுதான்! சீனா மாதிரியான பிராக்டிகலிசம் தான் நமக்கும் உகந்தது!

    • Cuba is very good compared to India or China,

      Education is very best compared to All developed countries,
      A study by UNESCO reported that Cuban students showed a high level of educational achievement. the study was taken during the height of an economic depression; he report indicated that the test achievement of the lower half of students in Cuba was significantly higher than the test achievement of the upper half of students in other Central and South American countries in the study group.

      Medical System is very Good,

      Agriculture is mostly organic.

      Life is not rich but is peaceful.

  2. =போலி சோசலிச வீழ்ச்சிக்குப் பின்னர், காஸ்ட்ரோ, எல்லா லத்தீன் அமெரிக்க பிற்போக்கு அரசுகளுடனும் நெருக்கமான உறவைப் பேணினார். அந்த அரசுகளுக்கு எதிரான இடதுசாரி கொரில்லாக்களின் போராட்டங்களை எதிர்த்தார்= இந்த வரிசையில் ராஜபக்சேவுக்கு காஸ்ட்ரோ முட்டுக்கொடுத்ததைக் குறிப்பிடாதது ஏன்?

  3. அருமையான பதிவு !!!

    //துயரம் தோய்ந்த அந்தச் சொற்கள், காயம்பட்ட அவருடைய தன்மான உணர்வையும், தள்ளாத முதுமையிலும் அடங்க மறுக்கும் சுயமரியாதை உணர்வையும், தன்னுடைய உணர்வுடன் ஒன்றாத கியூபாவின் சமுகத்திலிருந்து தனித்து விடப்பட்ட அவரது கையறு நிலையையும் ஒருங்கே வெளிப்படுத்துகின்றன.// காஸ்டிரோவின் கடைசி காலத்தில் அவர் கட்டிய (பாட்டாளிவர்க்க) பலமான அடித்தளமில்லாத கியூபா அடிபணிவதை காண சகிக்காமல் அவர் போய்விட்டார் போலும்.

  4. அது என்னங்க யார்யாரோ காஸ்டிரோவை கொண்டாடி முடித்து அடுத்த வேலை பார்க்கிற நேரத்தில் காஸ்டிரோவை தூக்குறீங்க.நானும் அவர் இறந்த நாளிலிருந்து கட்டுரையை தேடிக்கிட்டு இருக்கிறேன்.பிறகு நானே நினைத்தேன்,என்னவோ.. இவரையும் கள்ளகம்யூனிஸ்ட் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டதோ வினவுன்னு ஒரு டவுட்டு.அப்படியும் நம்ப மனசு வரல்ல. அப்ப என்னதான் காரணமா இருக்கும்னு ஒரே குழப்பம்.எதுக்கு லேட்டோ..?

  5. போலி சோசியலிச வாத கூட்டத்திடம் ஆட்சி அதிகாரம் சென்று விடக்கூடாது என்று தானே சாகும் வரை ஆட்சி என்னும் முள் கிரீடத்தை அணிந்து மக்களுக்காக தியாகம் செய்தவர் .

    சாகும் தருவாயில் கூட போலி சோசியலிசவாதிகளின் அச்சுறுத்தி எண்ணி தமயனுக்கு முள் கிரீடத்தை பரிசாக கொடுத்த தியாக திரு விளக்கு !

    ஏகாதிபத்தியதாய் ஒழிக்க அமெரிக்காமேல் அணு குண்டு போட வேண்டும் என்று ரஷ்ய
    எஜமானனை வலியுறுத்திய மாவீரன் !

    அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதித்து யார் என்ன செய்தாலும் ஆதரவு தருவார் . ரஷ்யா ஆப்கனை பிடித்தாலும் சரி, இந்தியா இலங்கையை பிடித்தாலும் சரி , அமெரிக்காவை எதிர்த்து செய்கிறோம் என்று சொல்லிவிட்டால் உடனே ஆதரவு கொடுப்பார் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க