பத்திரிகைச் செய்தி

மத்திய பட்ஜெட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் !

06.07.2019

னித்த பொறுப்புடன் செயல்படும் முதல் பெண் நிதியமைச்சர் என்ற ‘பெருமை’யுடன் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள மத்திய நிதி நிலை அறிக்கை ‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்’ என்பது போலத்தான் இருக்கிறது.

45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயத்தில் தீராத நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை, பெருகிவரும் ஏற்றத்தாழ்வு, தொழில்துறை மந்தம், சிறு தொழில் நசிவு, வர்த்தகப் பற்றாக்குறை, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் நெருக்கடி என்று மூச்சுத்திணறும் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் சிக்கலில் தள்ளிவிடும் நிதிநிலை அறிக்கையே இது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் மதிப்பீடுகள் எல்லாம் முழுமையாக நிறைவேறக் கூடியவை அல்ல என்பதை மனதிற்கொண்டே நாம் பரிசீலிக்க வேண்டும். உதாரணமாக கடந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட வரி வருவாய் குறைவாகவே வசூலானது. இராணுவம் உள்ளிட்ட நிர்வாகத்திற்கான செலவை அரசு சிறிதும் குறைக்காது. எனவே வருவாய் குறைந்தால் முதலில் பலியாவது மக்கள் நலத்திட்டங்கள்தான்.

கிராமங்கள் ஏழைகள், விவசாயிகள் இவர்களை மையமாகக் கொண்டுதான் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பதாக நிதியமச்சர் பேசியிருக்கிறார். இது ஒரு ஏமாற்று. விவசாயத்திற்கு ரூ. 1,51,518 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 78% அதிகம் என்கிறார்.

இதில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஆறாயிரம் உதவித்தொகை வழங்க ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 75,000 கோடியைக் கழித்தால் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பது கடந்த ஆண்டைவிட ரூ. 21,686 கோடி குறைவு. இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளின் விளைபொருளுக்கு ஆதரவு விலைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை வெறும் ரூ. 3,000 கோடி. ‘சோளப் பொறி யானையைப் பசியை எப்படித் தீர்க்கும்?’

100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்ற ஆண்டை விட ரூ. 1,054 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது. 27% விவசாயிகளும், 28% சாகுபடிப் பரப்பும்தான் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதிப்பேரின் கதி என்ன?

படிக்க:
பாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்
♦ வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !

செலவில்லாத விவசாயம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியத்தை ஒழித்துக்கட்டும் சதித்திட்டத்திற்குத்தான் இப்படியொரு அழகான பெயர்.

45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மையைப் போக்க, புதிய வேலைவாய்ப்பை உருவாக்க ஒதுக்கியிருக்கும் தொகை ரூ. 4,583 கோடி. இது எத்தனை பேருக்கு வேலை வழங்கும் என்பது நிர்மலாவுக்கே வெளிச்சம். வேலைவாய்ப்பை உருவாக்க வாய்ப்புள்ள மூலதனச் செலவு சென்ற ஆண்டைவிட ரூ. 50,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வேலைவாய்ப்பில் மிகப் பெரும் பங்கு வகிக்கும் சிறு தொழில்களைப் பாதுகாக்க எந்தத் திட்டமும் இல்லை. 2 சத வட்டிச் சலுகைக்கு வெறும் ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் துறை எப்படி வளரும்? வாராக்கடனால் திணறும் வங்கிகள் எப்படிக் கடன் கொடுக்கும்?

கிராமப்புற மேம்பாடு, பள்ளிக்கல்வி, சமூக நலம் ஆகிய துறைகளுக்குக் கடந்த ஆண்டை விட நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறையில் உருப்படியான திட்டமேதுமில்லை.

44 தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்து 4 நெறிமுறைத் தொகுப்பாக மாற்றுவது என்ற அறிவிப்பின் மூலம் போராடிப் பெற்ற உரிமைகளை பறித்து, தொழிலாளிகளை கார்ப்பரேட் முதலாளிகளின் கொத்தடிமைகளாக்கும் துரோகத்தையும் அரங்கேற்றியிருக்கிறார் நிதியமைச்சர். மேலும் இருக்கும் வாய்ப்பு பறிபோகும் அபாயம் அதிகரிக்கும்.

அதே நேரத்தில் அந்நிய, தனியார் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குக் கதவுகளை திறந்து விட்டிருக்கிறார். இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீடு, விமானப் போக்குவரத்து, ஊடகத்துறை, இரயில்வே ஆகியவற்றில் வெளிநாட்டு மூலதனம் அனுமதிக்கப்படுகிறது. இருக்கும் பொதுத்துறைகளை அழிக்கும் நோக்கில் ரூ. 1,05,000 கோடிக்கு பங்குகளை விற்கத் திட்டமிட்டிருக்கிறார்.

ரிசர்வ் வங்கியின் சேமிப்பிலிருந்து ரூ. 90,000 கோடியை உருவுவதன் மூலம் அந்த நிறுவனத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறார். 99% தொழில் நிறுவனங்களுக்கு நிறுவன வரியைக் குறைத்திருக்கிறார். எனவே கார்ப்பரேட், தனியார் முதலாளிகளை வாழவைக்க உழைக்கும் மக்களை வதைக்கும் மக்கள் விரோத பட்ஜெட். அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த பட்ஜெட்டை வரவேற்றிருப்பதே, இது யாருக்கான பட்ஜெட் என்பது தெளிவாகும்.

தோழர் காளியப்பன்
மாநில பொருளாளர்

2 மறுமொழிகள்

 1. மோசடி என்ற தமிழ் வார்த்தையை இனி மோடி என்று கூடக் கூறலாம். அதற்கு அவரது அச்சே தின் தொடங்கி 2019-20 நிதிநிலை அறிக்கை வரை பல எடுத்துக்காட்டுக்களைக் காட்டலாம். மோடி அரசின் கீழ் நாடு, குறிப்பாக மைய அரசு திவால் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை மோடி அரசும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் திட்டமிட்டுச் சதித்தனமான முறையில் நாட்டு மக்களிடமிருந்து மறைத்துவிட முயலுகிறார்கள் என்பது இந்த நிதிநிலை அறிக்கையை விமர்சனபூர்வமாக அணுகும் யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

  “சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கிய பிறகும் நிதிப் பற்றாக்குறை 3.3 சதவீதத்திற்குள்ளாகவே உள்ளது” என மோடி அரசும் அவரது துதிபாடிகளும் கூறி வருகிறார்கள். இதுவொரு மிகப்பெரும் மோசடி. இது எப்படி சாத்தியமானது?

  மக்கள் அதிகாரம் தனது பத்திரிகை செய்தியில் சுட்டிக் காட்டியிருப்பது போல ரிசர்வ் வங்கி கையிருப்பில் இருந்து 90,000 கோடி ரூபாயை அபகரித்துக் கொண்டதன் வழியாகவும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ஒரு இலட்சம் கோடி ரூபாய் நிதியைச் சுருட்டியதன் வழியாகவும் நிதிப் பற்றாக்குறை குறைத்துக் காட்டப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு இனங்களும் வருவாய் அல்லாத வரவுகளைச் சேர்ந்தவை. சொத்தை விற்றுக் கடனை அடைப்பது போன்றது.

  மேலும், முன்பெல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் தமது முதலீட்டுகளுக்கு, செலவுகளுக்கு வாங்கும் கடன்கள் நிதிநிலை அறிக்கையில் காட்டப்பட்டு, நிதிப் பற்றாக்குறை கணக்கிடப்படும். மோடி அரசோ, பொதுத்துறை நிறுவனங்களை வாங்கும் கடன்களை நிதிநிலை அறிக்கைக்குள் கொண்டுவராமல், அக்கடன்களைப் பொதுத்துறை நிறுவனங்களின் வரவு-செலவு அறிக்கையிலேயே பராமரிப்பதன் மூலம் மைய அரசு பெறும் கடன்களையும் குறைத்து, நிதிப் பற்றாக்குறையையும் குறைத்துக் காட்டியிருக்கிறது.

  இதுவொருபுறமிருக்க, உள்நாட்டுக் கடன்களை ஈடுசெய்ய வெளிநாடுகளில் டாலரில் கடன்கள் வாங்கும் புதிய அபாயத்தையும் இந்தி நிதிநிலை அறிக்கை திறந்துவிட்டிருக்கிறது.

  2006-11 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தை தி.மு.க. ஆண்டு வந்த சமயத்தில் தமிழக அரசின் கடன் சுமை 50,000 கோடி ரூபாய் அதிகரித்ததைக் காட்டி, பார்ப்பன சோவும், ஜெயா கும்பலும் வானத்துக்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்தார்கள். அப்பொழுது, தி.மு.க. தலைவர் கருணாநிதி, “அரசு சமூக நலத் திட்டங்களுக்காக அல்லது தனது மூலதனத் தேவைகளுக்காகக் கடன் வாங்குவது தவறு கிடையாது” என கெய்னிசியப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் விளக்கம் அளித்தார்.

  இந்த விளக்கத்தை வலதுசாரி பார்ப்பனக் கும்பல் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேசமயம், 2011-16 ஆம் ஆண்டு கால ஜெயாவின் ஆட்சியில் தமிழக அரசின் கடன் சுமை முன்னைக் காட்டிலும் இரு மடங்கிற்கு மேல் கூடியபோது எந்தவொரு பொருளாதார நிபுணனும் வாயைத் திறக்கவில்லை.

  ஜெயா, தமிழக அரசின் கடன் சுமையை மறைக்கவில்லை. ஆனால், மோடியோ அதனை மறைத்து நிபுணத்துவம் வாய்ந்த நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டது போலக் காட்டிக் கொள்கிறார். இதை வேறுமாதிரியாகச் சொன்னால், தண்ணிக்குள் இருந்துகொண்டு கூசுப் போட்டிருக்கிறார் திருவாளர் மோடி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க