ரலாறு காணாத வெப்பத்தினால் நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து மக்கள் குடிநீரைத் தேடி வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சமீப வாரங்களாக இந்தியா முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது.

கடந்த வாரம் திங்களன்று (3.6.2019) தலைநகரம் புது தில்லி ஜூன் மாதத்திலேயே அதிகமான வெப்பமாக 48 டிகிரி செல்சியசை கண்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் சாரு நகரில் வெட்பம் 50.8 டிகிரியைத் தொட்டது. இது பூமியிலேயே அதிக வெப்பம் நிலவும் பகுதிகளில் ஒன்றாகும்.

மேலும் தெற்கே சென்றால், வணிகத் தலைநகராம் மும்பையிலிருந்து 250 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிராமங்கள் அனைத்தும் வறட்சியால் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஒரு மதிப்பீட்டின் படி 90% மக்கள் இங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். வயதானவர்கள், கால்நடைகளை தவிர்த்து விட்டு, இந்த இடப்பெயர்வு நடந்து வருகிறது. மாராட்டிய மாநிலத்தின் பீட் பகுதிக்கு அருகே இருக்கும் ஹத்கார்வாடி கிராமத்திலிருந்து ஏறக்குறைய அனைத்து மக்களும் காலி செய்து வெளியேறி விட்டார்கள்.

அடிபம்பு குழாய்களும், கிணறுகளும் 45 -டிகிரி செல்சியசஸ் வெப்பத்தில் வறண்டு போய்விட்டன. அரசு அதிகாரிகளது மதிப்பீட்டின்படி 1972-ம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தில் இரண்டரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டார்கள். தற்போதைய வறட்சி அதையும் தாண்டிவிட்டது என்கிறார்கள்.  2018 டிசம்பர் முதல் 2019 மே மாதம் வரை ஹத்கர்வாடி கிராமத்தின் 10 -15 குடும்பங்கள் தவிர 2000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி இருக்கின்றனர்.

கர்நாடகா மாநிலத்தின் 80% மாவட்டங்களும், மராட்டிய மாநிலத்தின் 72% மாவட்டங்களும் வறட்சி மற்றும் வெள்ளாமை தோல்வியை சந்தித்திருக்கின்றன. இந்த இருமாநிலங்களின் 80 இலட்சம் மக்களும் வாழ்வதற்கே பெரும் சிரமத்தை எதிர் கொள்கிறார்கள். இரு மாநிலங்களுக்கும் பொதுவான நீராதார பகுதிகளில் முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது.

படிக்க:
♦ முதலாளிகளால் உருவாக்கப்பட்ட மராட்டிய தண்ணீர் பஞ்சம்!
♦ மனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் ?

நீர் பற்றாக்குறையினால் மராட்டிய கிராமங்களில் விவசாயம் சார்ந்த வாழ்க்கை அழிந்து வருகிறது. பயிர்கள் கருக, கால்நடைகளோ பட்டினி கிடப்பதோடு, குடிப்பதற்கே நீரின்றி தவித்து வருகின்றன. இப்பகுதியின் முக்கிய பயிர்களான சோளம், சோயா, பருத்தி, ஆரஞ்சு, நிலக்கடலை ஆகியவை கடும் பாதிப்பை அடைந்து வருகின்றன. உலகில் எல் நினோ விளைவாக சூழலியல் கடுமையாக பாதிக்கப்பட்டு, வழமையான தட்பவெட்ப நிலையும் மாறி வருகிறது. ஏற்கனவே வறட்சியாக இருக்கும் இந்தியா இந்த மாற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

வறட்சியால் இறந்து போன ஆடுகள் அருகில் விவசாயி – படம் : நன்றி – கார்டியன்.

பல மதிப்பீடுகளின்படி மராட்டிய மாநிலமே வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் வரும் இந்த தொடர் வறட்சியினால் ஏறக்குறைய 4,700 விவசாயிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்திருக்கின்றனர். அதில் கடந்த ஆண்டு மட்டும் 947 பேர் இறந்து போயிருக்கின்றனர்.

மராட்டிய மாநிலத்தின் பீட் நகரத்தில் குடிநீர் காலியாகி, உடைகளை துவைக்கவும், குளியல் – கழிப்பறை தேவைகளுக்குமான நீர் கூட இல்லை. தேவையான நீரைக் குடிக்காததினால் வரும் வெப்ப நோய்களாலும், மாசடைந்த நீரைக் குடிப்பதனால் வரும் வயிற்றுப் பிரச்சினைகளாலும் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வருகின்றன.

நகரத்தின் வசதி வாய்ந்த நடுத்தர வர்க்கம் ஆயிரம் லிட்டர் நீரை சுமார் 265 ரூபாய்களுக்கு தனியார் நீர் வணிகர்களிடமிருந்து பெற்று வருகின்றனர். கூடவே மருத்துவமனைகளுக்கு வரும் கூட்டமும் அதிகரித்து வருகிறது. சேறு கலந்த நிரை குடிப்பதற்கு மாடுகளே மறுத்து வருகின்றன. இந்த சேறு கலந்த நீர் வறண்டு போன அணைகள், குளங்களில் கொஞ்சம் இருக்கின்றன.

பீட் நகர அரசு மருத்துவமனையின் மருத்துவர் சந்தீப் தேஷ்முக், “கடந்த ஒன்றரை மாதமாக வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று உபாதைகள் காரணமாக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்து வருகிறது. மாசடைந்த நீரை குடிப்பதாலேயே இந்த பிரச்சினைகள் வருகின்றன, கொதிக்க வைத்த குடிநீரை அருந்துமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறோம் என்கிறார் அவர்.

மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 22 இலட்சம் பேரில் 2,40,000 மக்கள் பீட் நகரத்தில் வசிக்கின்றனர். இம்மக்களின் அதிகாலைத் துவக்கமே குடிநீரைத் தேடி அலைவதில் துவங்குகிறது. எந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் கிடைக்கும், எந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் தண்ணீர் இருக்கிறது என்று மக்கள் அலைந்து வருகிறார்கள்.

படிக்க:
♦ சென்னைக்குத் தேவைப்படும் தண்ணீருக்காக பாலைவனமாக்கப்படும் கிராமங்கள் !
♦ சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா ?

“தங்களது குடும்பத்தினர் கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை, அதற்காக நீரை செலவழிப்பது என்பது ஆடம்பரமாகி விட்டது. பெண்கள் இருட்டும் வரை காந்திருந்து திறந்த வெளியில் மலம் கழிக்கிறோம். விலை கொடுத்து வாங்கும் தண்ணீரில் 5 முதல் 10 லிட்டரை நீரை கழிப்பறைக்காக செலவழிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்” என்று சிவாஜிநகரில் வசிக்கும் உஷா ஜாதவ் தெரிவிக்கிறார்.

மே மாத இறுதிக்குள் 43% இந்தியா வறட்சியை அனுபவிக்கப் போகிறது. அதற்கு பருவமழை பெய்யாதது முக்கியக் காரணமாகும். 2017-ம் ஆண்டு நீங்கலாக 2015-ம் ஆண்டிலிருந்தே வறட்சி இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

மராட்டிய மாநிலத்தின் 20,000 கிராமங்களில் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது. அங்கே 35 பெரிய அணைகளில் நீரில்லை. 1000 சிறு அணைகளில் நீர் இருப்பு 8%-ற்கும் குறைவாகவே இருக்கிறது. அணைகளுக்கு நீரைத் தரும் ஆறுகள் அனைத்தும் வறண்டு போய் பாளம் பாளமாய் வெடித்து இருக்கின்றன.

மஹராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் வறண்டு போன கிணற்றில் நீர் ஊற்றும் அவலநிலை.

இந்தியாவின் 40% நீர்த் தேவையை நிலத்தடி நீரே அளிக்கின்றன. அவையும் அதிகமாக உறிஞ்சப்படுவதால் வறண்டு போய் வருகின்றன. இதை நிதி ஆயோக் தனது 2018-ம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மேலும் தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் நகரங்களை உள்ளிட்ட 21 நகரங்கள் 2020-ம் ஆண்டிற்குள் நிலத்தடி நீரை முற்றிலும் இழக்கப் போகின்றன. இந்தியாவின் 40% -த்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகைக்கு 2030-ம் ஆண்டிற்குள் குடிநீர் இல்லாத நிலை ஏற்படப் போகிறது.

தென்மேற்கு பருவக்காற்றுதான் இந்தியாவின் 80% மழை நீரை அளிக்கிறது. இந்த ஆண்டு அப்பருவக் காற்று தாமதமாவதாலும், வழக்கமான அளவை விட குறைவாகவே மழை பெய்வதாலும் பாதிக்கப்பட்ட மாராட்டிய மாநிலத்தின் வறட்சி தொடரப் போகிறது.

மராட்டியம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக பெரு வெற்றி அடைந்திருக்கிறது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத பிரதமர் மோடி, நாடு விட்டு நாடு பறந்து கொண்டிருக்கிறார். மத்திய அமைச்சர்களோ இந்துத்துவ அஜண்டாவில் கவனம் செலுத்தி வருகிறார்கள். மராட்டியத்திலும் மத்திய அரசிலும் பாஜகவே ஆட்சி செய்கிறது. கேட்டால் மழை இல்லை அதனால் வறட்சி என்ன செய்ய முடியும் என்று பாஜக-வினர் கூறலாம். மழை பெய்து விட்டாலும் அவற்றை தேக்குவதற்கு இங்கே வசதிகள் ஏதுமில்லை. எட்டு வழிச்சாலைகளிலும், புல்லட் ரயிலிலும் இலட்சம் கோடி ரூபாய்களை முதலீடு செய்யும் அரசு, அடிப்படைத் தேவையான குடிநீரை அளிக்க எந்த ஏற்பாட்டையும் செய்வதில்லை.

மோடி அரசின் ஸ்வச் பாரத்தை கடைபிடித்து கழிப்பறையில் போனால் நீர் காலியாகி விடும் என்று, மக்கள் மீண்டும் திறந்த வழி கழிப்பறைகளை நோக்கி போகிறார்கள். சென்னையில் இன்னும் ஓரிரு வருடங்களில் நிலத்தடி நீர் காலியாகி விடும் என்றால் பிரச்சினையின் அபாய நிலைமையை நாம் புரிந்து கொள்ளலாம்.

வறண்டு போன வாழ்க்கையை மீட்க நாம் இந்த அரசுகளோடு சண்டையிட வேண்டும். போராட்டமில்லாமல் குடிநீர் நம்மைத் தேடி வராது என்ற நிலையையும் அடைந்து விட்டோம்.


மதன்
நன்றி : த கார்டியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க