னதை ஒருமுகப்படுத்துவது ஒரு பெரிய சவால். நமக்கு மட்டுமல்ல இதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருக்கும்; கொண்டிருந்த, முறையே இந்தக்கால மற்றும் அந்தக்கால துறவிகளுக்கும் இதேதான் சிக்கல்.

நாம் மிகவும் விரும்பி ஒரு நூலை வாங்குகிறோம்; படிக்கத் திறந்து அமர்ந்தவுடன் பல்வேறு சிந்தனைகள் மனதை ஆக்கிரமித்து விடுகின்றன. அவர்களுக்கும் கூட இதேதான் பிரச்சினை. நாம் கடிகாரத்தைப் பார்க்கிறோம் – அவர்கள் சூரியனின் நிலையை வெறித்துக் கொண்டிருந்தனர்.

அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஒரு வேலையில் அமர்ந்தவுடன் எழும் உணவு குறித்த சிந்தனையோ, பாலுறவு குறித்த சிந்தனையோ இன்ன பிற கவனச்சிதறல்களோ பெரும் சவால்தான். கனவுகள் கூட சில சமயம் தொந்தரவு செய்கின்றன.

அடுத்து வரும் செய்யுட்கள் பட்டிணத்தார் எழுதிய கச்சித்திரு அகவல். கொஞ்சம் நீளம்தான் என்றாலும் மூக்கைப் பிடித்துக் கொண்டு படித்து விடுங்கள்.

மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்;
முள்ளும் கல்லும் முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சென உரைத்தும்,
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால்

துள்ளும் வரால் எனச் சொல்லித் துதித்தும்,
தசையும் எலும்புந் தக்கபுன் குறங்கை
இசையுங் கதலித் தண்டென இயம்பியும்
நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும்,

மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை ஆலிலை யென்றும்,
சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந்து ஏறி
உகிரால் கீறல் உலர்ந்து உள் உருகி

நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்,
குலையும் காமக் குருடர்க்கு உரைப்பேன்;
நீட்டவும் முடக்கவும் நெடும் பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவும் உதவி இங் கியற்றும்

அலங்கையைப் பார்த்துக் காந்தள் என்றுரைத்தும்,
வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப்
பாரினில் இனிய கமுகெனப் பகர்ந்தும்,
வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மலர் என்றும்,

அன்ன முங் கறியும் அசைவிட்டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்
கூறிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்
தண்ணீர் பீளை தவிராது ஒழுகும்

கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும்
உள்ளுங் குறும்பி ஒழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும்
கையும் எண்ணெயும் கலவாது ஒழியில்
வெய்ய அதரும் பேனும் விளையத்

தக்க தலை யோட்டில் முளைத்து எழுந்த
சிக்கின் மயிரைத் திரள் முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்
தோலும் இறைச்சியும் துதைந்து சீப்பாயும்

காமப் பாழி; கருவிளை கழனி;
தூமைக் கடவழி; தொளைபெறு வாயில்;
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி!
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்;
நச்சிக் காமுக நாய்தான் என்றும்

இச்சித் திருக்கும் இடைகழி வாயில்;
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி;
புண் இது என்று புடவையை மூடி
உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்

மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி;
நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி;
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி;
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி;

மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்;
இத்தை நீங்கள் இனிது என வேண்டா;
பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை

முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட அண்ணலைக் கச்சியிற் கடவுளை
ஏக நாதனை இணையடி இறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!

பாருங்களேன், காமத்தை வென்ற பட்டிணத்தார் கூட சதா நேரமும் அதனோடுதான் கட்டிப்புரண்டு மல்லுக்கட்டி இருக்கிறார். தியானத்தில் அமர்ந்து ”தன்னைத் தான் அறிந்த” நிலை குறித்து சித்தர் பெருமக்கள் பேசியது கூட குறைவுதான்..

படிக்க:
ஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு : மிரட்டும் ட்ரம்ப் ! பம்மிய மோடி !
♦ சூப்பர் டீலக்ஸ் : அரதப் பழசான அத்வைதம் | திரை விமர்சனம்

“அண்டத்தைப் பிண்டத்தில் கண்டதையும், பிண்டத்தை அண்டத்தில் கண்டதையும்” குறித்து அவர்கள் “விண்டிலர்”. முகநூலும், ட்விட்டரும், வாட்சப்பும், நெட்ஃப்ளிக்சும், அமேஸான் பிரைமும், டிக்டோக்கும், தொலைக்காட்சி அக்கப் போர்களும் நமது கவனத்தைக் குலைத்துப் போடுகின்றது என்றால்; அந்தக்கால துறவிகளின் தவத்தை சோறும், சதையும் ஆட்டிப் படைத்துள்ளன.

மனதின் அலைபாய்தலைக் குறித்து தீவிரமாக சிந்தித்த அந்தக்கால துறவியர் பெருமக்கள், அதற்கான காரணத்தை மூளைக்கு வெளியே தேடி அலைந்துள்ளனர். மேலை நாட்டு ஞானிகளுக்கும் கூட இதே சிக்கல்தான். கிறிஸ்தவ மெய்யியலின் தந்தை எனப் போற்றப்படும் ஜான் கேஸ்ஸியன் (கிபி 360 – 435) இதைக் குறித்து எழுதியுள்ளார். “திடீர் குறுக்கீடுகளால் மனம் செலுத்தப்படுகின்றது” என்ற ஜான், அது “ஒரு குடிகாரனைப் போல் அலைந்து திரிகிறது” என்கிறார். நல்ல வேளையாக ஜானின் காலத்தில் திறன்பேசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

கிறிஸ்துவுக்குப் பிந்தைய நூற்றாண்டுகளில் வந்த பாதிரிமார்கள் பெரும்பாலும் தனிமையில்தான் தங்கள் நேரத்தைக் கழித்தனர். ஜானின் காலத்துக்குப் பின்னர் மடாலயங்கள் தோன்றி வளரலாயிற்று. கிறிஸ்தவ துறவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்கிற நடத்தை விதிகளும் உருவாக்கப்பட்டன.

ஏறத்தாழ அதே காலகட்டத்தில் பௌத்த சங்கங்களிடம் இருந்து பார்ப்பனியம் மடங்கள் எனும் வடிவத்தை களவாடிக் கொண்டதையும், அதே போன்ற ஒழுக்க நெறிகள், விதிமுறைகள் உருவாக்கிக் கொண்டதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

மடாதிபதிகள் அல்லது சாமியார்கள் அல்லது துறவரம் பூண்டவர்கள் சதா காலமும் இறை நினைப்போடு வாழ வேண்டும். தியானத்தில் இருக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் விசேடமான ஆற்றல்களைப் பெறுவார்கள் என்றும், உடல் மற்றும் உள்ளத்தின் பலவீனங்களை கடந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது.

இறை நினைப்பில் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் பின்பற்றிய முறைகள் மிகவும் கடுமையானவை. தாங்கள் மிகவும் விரும்பிய அனைத்தையும் – குடும்பம், சொத்துக்கள், தொழில் – என அனைத்தையும் துறந்துள்ளனர். முடிந்தவரை அன்றாட வாழ்வியல் கடமைகளில் இருந்து தங்களை துண்டித்துக் கொண்டனர்.

ஆனால் உடல் என்று இருக்கும் வரை அதனுள் இருக்கும் இரசாயனங்கள் வேலை செய்து தானே தீரும்? மத்திய கால கிறிஸ்தவ துறவிகள் உடல் அதற்கே உரிய முறையில் உணவு, காமம் போன்றவற்றைத் தேடும் எனவும் அதன் மூலம் மனதைப் பின்னுக்கு இழுக்கும் எனவும் கருதினர்.

எனினும் அவர்கள் உடலை மறுக்கவில்லை; நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மடாலயங்கள் பரவிய சமயத்தில் பாதிரிகளும், சகோதரிகளும் குறைந்த உணவை உட்கொண்டதோடு திருமண பந்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதே போல் கடுமையான உடல் உழைப்பையும் மேற்கொண்டனர்.

இதே காலகட்டத்தைச் சேர்ந்த இந்திய யோகிகளும் ஏறத்தாழ இதே வழிமுறைகளைப் பின்பற்றியுள்ளனர் என தனது “யோகா பாடி” எனும் நூலில் நிறுவியுள்ளார் மார்க் சிங்கிள்டன். குடும்ப வாழ்க்கையை, சொத்துக்கள், உறவுகள் என அனைத்தையும் துறந்து விட்டு காடு மலைகள் எனச் சுற்றியலைவது, மரத்தில் தலைகீழாய்த் தொங்குவது, ஆணிப் படுக்கையில் படுப்பது, ஒற்றைக் காலில் நாட்கணக்கில் நிற்பது என கடுமையான யோக சாதனைகளை முயற்சித்துப் பார்த்துள்ளனர்.

அனைத்து முயற்சிகளையும் உடல் தோற்கடித்த பின், சில கற்பனையான காட்சிகளில் மனதை லயிக்கச் செய்யும் முறைகளையும் பரிசோதித்துள்ளனர். மனதை அந்தக் காட்சிகளின் போக்கில் செலுத்துவது, அதனூடாக அதன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது என ஏராளமான முறைகளைப் பரிசோதித்துள்ளனர். ஜான் காஸ்ஸியன் பைபிளின் சங்கீதத்தில் வரும் வசனங்களை திரும்பத் திரும்ப ஒப்பிக்கும் முறை ஒன்றை முன்வைத்துள்ளார். நமக்கும் நாமாவளி பஜனை அறிமுகமானது தானே. மனதைக் குவிக்க “ஓம் நமச்சிவாய” “ஜெய் சிறீராம்” என மலை மலையாக நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் குவித்தவர்களை நமது பள்ளி நாட்களில் பார்த்திருப்போம் – ஏன் நாமே கூட அப்படி எழுதியிருப்போம்.

படிக்க:
நீங்கள் சிரிப்பதும் அழுவதும் ஃபேஸ்புக் கையில் !
♦ அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?

ஆனால், இத்தனை நூற்றாண்டுகளாக ஞானிகள் இகலோக தொந்தரவுகளில் இருந்து தப்பித்து பரலோக அனுபவத்தை அடையவும், புறநிலை இன்னல்களில் இருந்து தப்பித்து, அகநிலை இன்பத்தை அடையவும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அத்தனையும் வியர்த்தமாகியுள்ளது.

எல்லா பெரிய சிக்கல்களுக்கும் இருப்பது போன்றே இதற்கும் எளிமையான தீர்வு ஒன்றுள்ளது. புறநிலை எதார்த்தங்களை அங்கீரிப்பதும், அதற்குள்ளேயே அதற்கான தீர்வைத் தேடுவதும்தான் அந்த எளிமையான தீர்வு.

ஓட ஓடத் துரத்துகிறது என்றால் ஏன் ஓட வேண்டும்? ட்விட்டரும் முகநூலும் டிக்-டோக்கும் நம் கவனத்தை இழுக்கிறது என்றால், அஞ்சி சுருங்கிக் கொள்ளத் தேவையில்லை.

அவை ஏன் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, நமது கவனச் சிதறலும்; நாம் செய்து கொண்டிருக்கும் நேரக் கொலையும், யாருக்குச் சாதகமாய் முடிகிறது என்பதை ஆராய்வது, மெய்நிகர் உலகின் மயக்கங்களில் இருந்து தெளிவடைவதற்கான துவக்கமாக இருக்கும்.

சாக்கியன்

4 மறுமொழிகள்

  1. “அவை ஏன் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, நமது கவனச் சிதறலும்; நாம் செய்து கொண்டிருக்கும் நேரக் கொலையும், யாருக்குச் சாதகமாய் முடிகிறது என்பதை ஆராய்வது, மெய்நிகர் உலகின் மயக்கங்களில் இருந்து தெளிவடைவதற்கான துவக்கமாக இருக்கும்.”

    Superb!

  2. பட்டினத்தார் மிக சரியா தான் பாடியிருக்கிறார் , பெண்களை அவர் இழிவு படுத்தவில்லை. மாறாக,பெண்களை உச்சி முதல் பாதம் வரை அனுபவிக்க வேண்டிய போகபொருள் என்று நினைக்கும் முட்டாள்களுக்கு தான் அந்த பாடலை அவர் எழுதியுள்ளார், அவர்களின் மனசாட்சியாக நின்று பாடி இருக்கிறார் அவ்வளவே …

    //அவை ஏன் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, நமது கவனச் சிதறலும்; நாம் செய்து கொண்டிருக்கும் நேரக் கொலையும், யாருக்குச் சாதகமாய் முடிகிறது என்பதை ஆராய்வது, மெய்நிகர் உலகின் மயக்கங்களில் இருந்து தெளிவடைவதற்கான துவக்கமாக இருக்கும்.//

    இவை எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பே ஓஷோ சொன்னவை தான், புதிதாக ஒன்றுமில்லை.. ஆனால் அந்த பக்குவநிலை அடைவதற்கும் ஒரு முதிர்ச்சி வேண்டும், அதை கொடுப்பது தான் ஆன்மிகம்.. கம்யூனிச சமூகம் சாத்தியமாக வேண்டுமென்றாலும் அங்கே “தன்னை போல பிறரை நினைக்கும்” ஆன்மிகம் இருந்தால் தான் முடியும்.. மற்றபடி அறிவியலால் முடியாது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க