privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காநீங்கள் சிரிப்பதும் அழுவதும் ஃபேஸ்புக் கையில் !

நீங்கள் சிரிப்பதும் அழுவதும் ஃபேஸ்புக் கையில் !

-

ன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் ஃபேஸ்புக் இன்னபிற சமூக வலைத்தளங்கள் கருத்து சுதந்திரத்தை அளிக்கும் நவீன சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சுதந்திரத்தின் உண்மை நிலை என்ன?

பேஸ்புக் சோதனை
பார்க்கும் நபரின் நிலைத்தகவல்களை (status) கண்காணித்து அவை அவர் பெற்ற நேர்மறை அல்லது எதிர்மறை உணர்வுகளை பிரதிபலிக்கின்றனவா என சோதிக்கப்பட்டிருக்கின்றன

முகநூல் தனது பயனர்களின் நிலைத்தகவல்களை கொண்டு அவர்களுடைய மன உணர்வுகளை தூண்டும் திறன் குறித்த ஆய்வை நடத்தியுள்ளது சமீபத்தில் வெளியானது. ஆங்கில ஊடகங்களில் பரவலான விமரிசனத்திற்கு உள்ளான இந்த ஆய்வு, கருத்து சுதந்திரம் குறித்த நமது கேள்விக்கு விடையளிக்கிறது.

கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பயனர்கள் தங்களது முகப்பக்கத்தில் பெறும் செய்தி ஓடைகளை (newsfeeds) மாற்றியமைத்து ஒருவர் தொடர்ச்சியாக நேர்மறை அல்லது எதிர்மறை கருத்துக்களை மட்டும் காணுமாறு செய்திருக்கிறது முகநூல் நிறுவனம்.

இதைத் தொடர்ந்து அச்செய்தி ஓடைகளை பார்க்கும் நபரின் நிலைத்தகவல்களை (status) கண்காணித்து அவை அவர் பெற்ற நேர்மறை அல்லது எதிர்மறை உணர்வுகளை பிரதிபலிக்கின்றனவா என சோதிக்கப்பட்டிருக்கின்றன. சுமார் ஒரு வாரம் வரை நடத்தப்பட்ட இச்சோதனையில் சுமார் 7 இலட்சம் பயனர்களின் நிலைத்தகவல்கள் மாற்றப்பட்டு அவற்றுக்கான அவர்களது எதிர்வினையும், பேஸ்புக்கில் நடத்தையும் கண்காணிக்கப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் ஆங்காங்கே இச்சோதனைக்கு எதிர்ப்பு கிளம்பிய போது, தனது சோதனை குறித்த தகவல், சரியான முறையில் பயனர்களுக்கு தெரிவிக்காததற்காக வருத்தம் தெரிவித்துள்ள ஃபேஸ்புக், தனது பயனர்களை சோதனயில் ஈடுபடுத்தியதற்காக மன்னிப்பு எதையும் கோரவில்லை.

சென்ற ஜூன் மாதம் இச்சோதனை குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் பேஸ்புக் பயனர்கள் மத்தியிலும் கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பின. பல்வேறு பத்திரிக்கைகளும் மனித உரிமை அமைப்புகளும் முகநூல் நிர்வாகத்திற்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ட்விட்டர் தளத்திலும் கூட ஃபேஸ்புக்கிற்கு எதிர்ப்பை பதிவு செய்து அதை புறக்கணிக்குமாறும் நிலைத்தகவல்கள் பகிரப்பட்டன. இங்கிலாந்தின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பும்,  அமெரிக்காவின் FTC-யும் இப்பிரச்சனை தொடர்பாக பேஸ்புக்கிடம் விளக்கம் கோரியுள்ளன.

பேஸ்புக் சோதனை
நமது நாட்டில் பேஸ்புக் தங்களை சோதனை எலிகளாக்கியதற்கும், நிலைத்தகவலை கண்காணித்ததற்கும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை.

ஆனால் நமது நாட்டில் பேஸ்புக் தங்களை சோதனை எலிகளாக்கியதற்கும், நிலைத்தகவலை கண்காணித்ததற்கும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. சொல்லப் போனால் இக்காலத்தில்தான் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. அடிமைத்தனத்தில் ஊறிய இந்திய மனங்களுக்கு ஃபேஸ்புக்கின் இந்த கண்காணிப்பு முறை பெரிய முரண்பாட்டை ஏற்படுத்தாமலும் இருந்திருக்கலாம்.

ஏற்கனவே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு ஒட்டுக் கேட்ட விவகாரம் வெளியான போதும் அப்போதைய மன்மோகன் அரசும் கள்ள மவுனம் சாதித்தது நினைவிருக்கலாம். மன்மோகனை செயலற்ற பிரதமர் என்று விமர்சித்து, தான் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிடம் யாரும் வாலாட்ட முடியாது என்று அறைகூவிய மோடியின் அரசும், பாஜகவை ஒட்டுக் கேட்க வேண்டுமென கூறிய அமெரிக்காவின் ஆவணங்கள் வெளியானதற்கு முணுமுணுப்பை தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை.

மேலும் தேர்தல் காலத்தில் மோடி கோஷ்டியின் கார்ப்பரேட் விளம்பரப் படையெடுப்புக்கு பேஸ்புக் பெரிதும் பயன்பட்டது. பதிலாக பேஸ்புக்கிற்கு பாஜகவின் கார்ப்பரேட் நன்கொடைகள் பயன்பட்டது. அதை ஒட்டி மோடி அதிகம் தேடப்படும் தலைவர் என ஃபேஸ்புக் அதிகாரிகள் சொல்லியதும் நினைவிருக்கலாம். இந்த பின்னணியில் பார்த்தால் இந்தியாவில் ஃபேஸ்புக்கின் சோதனைக்கு எதிர்ப்பு இல்லை என்பதன் காரணம் புரியும்.

முன்னர் கூகிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தமது பயனர்களின் தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்புடன் பகிர்ந்து கொள்வது குறித்து செய்தி வெளியான போதும் அந்நிறுவனங்களின் பயனர்களிடம் சிறு சலசலப்பு கூட எழவில்லை என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தனது பயனர்களின் நிலைத்தகவல்களை கண்காணிப்பதையும், உளவு நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்வதையும் சுட்டிக் காட்டும் போது, “ஆம் கண்காணித்தால் என்ன, நான் தவறு செய்யவில்லையே” – என சிலர் வாதிட்டார்கள். நாம் தவறு செய்வதை கண்காணிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுத்தது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை. சொல்லப் போனால் இந்துத்துவம் உருவாக்கியிருக்கும் முசுலீம் எதிர்ப்பு சிந்தனையின் நீட்சியாக, தீவிரவாதிகளை கண்காணிக்க இத்தகைய தியாகம் அவசியம் என்றே இவர்கள் நியாயப்படுத்தினார்கள்.

பேஸ்புக் சோதனை
தொலைக்காட்சி விளம்பரங்கள் முதல் நூற்றுக் கணக்கான வழிகளில் நமது உணர்ச்சிகளை கார்ப்பரேட்டுகள் தம் விருப்பப்படி வளைப்பதற்கு இந்த முடிவுகள் பேஸ்புக்கால் விற்கப்படும் என்று உறுதியாக நம்பலாம்.

ஆனால் இங்கே ஃபேஸ்புக் ஆய்வு செய்தது தனது விளம்பர வருமானத்தை அதிகரித்துக் கொள்ள, பயனர்களின் மனோபாவம் எப்படி இருக்கும் என்று தூண்டில் புழு போட்டு ஆசை காட்டி மோசம் செய்ததற்கு நிகரானது. இப்படி தனது பயனர்களை சோதனையில் ஈடுபடுத்துவது பேஸ்புக்கிற்கு முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் அந்நிறுவனத்தின் தகவல் விஞ்ஞானிகள், பயனர்களின் மன உணர்வுகளை செயற்கையாக பலமுறை தூண்டியுள்ளனர். இதை ஃபேஸ்புக்கின் முன்னாள் தகவல் விஞ்ஞானியாக பணியாற்றிய ஆன்ட்ரூ லாட்வினா தெரிவித்துள்ளார்.

இந்த சோதனைக்கு எதிரான எதிர்ப்புகள் அனைத்திலும் முகநூல் தனது பயனர்கள் அறியாமல் அவர்களை உளவியல் சோதனைக்கு உட்படுத்தியதும், அவர்களது நிலைத்தகவல்களை கண்காணித்ததும், செய்தி ஓடைகளை மாற்றியமைத்ததும் மட்டுமே தார்மீகப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. பிரச்சனையின் அபாயகரமான மறுபக்கம் இச்சோதனை முடிவுகளில் உள்ளது.

உணர்ச்சிமிகு பகிர்தல்களின் மூலம் அவ்வுணர்ச்சி நிலைகளை பயனர்களின் பகுத்தறிவுக்கு தெரியாமலேயே கடத்த முடியும் என முகநூலின் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது முகநூல் நிலைத்தகவல்கள் ஒருவரின் உணர்ச்சிகளின் மீது, மனநிலையின் (mood) மீது வினையாற்றுகின்றன என்பதோடு ஒருவர் காணுறும் செய்தி ஓடைகளை (newsfeeds) மாற்றியமைப்பதன் மூலம் அவருடைய உணர்ச்சிகளையும் மாற்றியமைக்க முடியும் என்கிறன அம்முடிவுகள். நாளடைவில் அவர் என்ன அரசியல் பார்வையினை கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கூட இதன் மூலம் செய்ய முடியும். தகவல் தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் அத்தகையவை.

எதிர்ப்புகள் ஒருபுறமிருக்க தொலைக்காட்சி விளம்பரங்கள் முதல் நூற்றுக் கணக்கான வழிகளில் நமது உணர்ச்சிகளை கார்ப்பரேட்டுகள் தம் விருப்பப்படி வளைப்பதற்கு இந்த முடிவுகள் பேஸ்புக்கால் விற்கப்படும் என்று உறுதியாக நம்பலாம்.

மகிழ்ச்சி, துன்பம் இன்ன பிற மனித மன உணர்வுகளை நண்பர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதாக நீங்கள் பயன்படுத்தும் வசதி, உங்கள் மன உணர்வுகளை செயற்கையாக தூண்ட முடிவதையும், உங்கள் மனநிலையின் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? மேட்ரிக்ஸ் படத்தில் வருவதைப் போல மெய்நிகர் உலகின் மாய உணர்ச்சிகள் உங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை ஃபேஸ்புக்கின் சோதனை நிருபித்திருக்கிறது. இனி நீங்கள் அழுவதும் , சிரிப்பதும் உங்கள் கையில் இல்லை. அவர்கள் அழச்சொன்னால் அழ வேண்டும், சிரிக்கச் சொன்னால் சிரிக்க வேண்டும்.

அப்போது அழுவதற்கும், சிரிப்பதற்கும் உரிய கருப்பொருளும், நிகழ்வுகளும் தலைகீழாக கூட மாறியிருக்கலாம். ஆக ஃபேஸ்புக் மூலம் நீங்கள் உங்கள் உலகை கட்டியமைக்க முடியாது. ஃபேஸ்புக்தான் உங்களது அறிவு, அரசியல் பார்வையினை கட்டியமைக்கும்.

–    மார்ட்டின்.

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க