இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கான வரி வெகுவாக குறைத்தே ஆக வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார்… இல்லை.. இல்லை.. உத்தரவு போட்டிருக்கிறார்.
குறிப்பாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கான வரியை முற்றிலும் ரத்து செய்யவேண்டுமென அவர் மிரட்டியிருக்கிறார்.
இந்தியாவிற்குள் தமது வர்த்தகத்தைத் தொடங்கியிருக்கும் ஹார்லி டேவிட்சன் எனப்படும் அமெரிக்க மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய சந்தையைக் கைப்பற்ற துடிக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் மட்டுமல்ல, ஒரு பில்லினியர் முதலாளியும் கூட. ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான இந்தியச் சந்தை என்பது உலக அளவில் உள்ள பெரிய சந்தைகளுள் ஒன்று. இனிமேலும் அமெரிக்காவை யாரும் கொள்ளையிட முடியாது எனவும் தொடர்ந்து இந்தியாவிற்கு வரி குறைப்பு தொடர்பாக அழுத்தம் கொடுப்போம் எனவும் அமெரிக்கத் தொலைக்காட்சியான சி.என்.பி.சி-யிடம் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.
“இந்தியாவை பாருங்கள் இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்காக நூறு சதவீதம் வரி போடுகிறார்கள். நான் உடனே இந்தியப் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் இந்த வரிவிதிப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று பேசினேன். உடனே பிரதமர் மோடி டேவிட்சன் பைக்குகளுக்கான இறக்குமதி வரியை 50 சதவீதமாக குறைத்திருக்கிறார். இது ஒரு தொலைபேசி அழைப்பிலேயே முடிந்துவிட்டது” என திங்களன்று சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
படிக்க:
♦ இத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சியின் வரலாறு !
♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !
அந்த நேர்காணலில் அமெரிக்கா பாரம்பரியமாக வர்த்தகம் செய்யும் அனைத்து கூட்டணி நாடுகளுக்கும் இந்த வரிக்குறைப்புக் கொள்கைகள் பொருந்தும். அதற்காக தொடர்ந்து பணி செய்வேன் என்றும் கூறியிருக்கிறார். “நாங்கள் (அமெரிக்கா) அனைவராலும் கொள்ளையிட விரும்பும் வங்கிகளாக இருக்கிறோம். இது அவர்களால் நீண்டகாலமாக செய்யப்படுகிறது. 800 பில்லியன் டாலர் பற்றாக்குறையை குறைப்பதற்குத் தொடர்ந்து பணியாற்றுவோம். இனிமேலும் நாங்கள் முட்டாள்களாக, மோசமாக செயல்படும் நாடாக இனியும் நாங்கள் இருக்கமாட்டோம்.” என்கிறார் அவர்.
இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் மீது ட்ரம்ப், அமெரிக்க நலன் சார்ந்து உத்தரவு போடுகிறார். கடந்த வருடம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், இரும்பு ஆகிய பொருள்கள் மீது முறையே பத்து மற்றும் இருபத்தைந்து சதவீத வரி அமெரிக்கவால் போடப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் வரை இந்தியா அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவிற்கு வரியே இல்லாமல் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. அந்த சலுகையை டிரம்ப் இப்போது ரத்து செய்து விட்டார். மேலும் ஈரான் மற்றும் வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டுமென அமெரிக்கா இந்தியாவை பலவந்தம் செய்திருக்கிறது. மேலும் எஸ்-4 எனப்படும் விமான பாதுகாப்பு நுட்பத்தை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்குவதையும் நிறுத்துமாறும் அமெரிக்கா உத்தரவு போட்டிருக்கிறது.
பொதுவில் புதுதில்லி பொருளாதார முன்னேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்கிறது. இருப்பினும் அமெரிக்காவின் உத்தரவுகளை மறுக்க முடியாமலும் இந்தியா இருந்து வருகிறது. இல்லை என்றால் பிரதமர் மோடி ஒரு போன் அழைப்பிலேயே ஹார்லி டேவிட்சன் பைக் மீது 50 சதவீத வரியை குறைத்திருப்பாரா என்ன?
உலக முதலாளித்துவ நெருக்கடியின் குவி மையமாக அமெரிக்கா இருப்பதால் அதிபர் ட்ரம்ப், சீனா, இந்தியா மற்றும் இதர நாடுகளின் மீது வர்த்தகப் போரைத் தொடுத்திருக்கிறார். அதன் பொருளாதார விளைவு இந்தியாவையும் விட்டு வைக்காது. ஹார்லி டேவிட்சன் எனப்படும் அதிஉயர் விலை கொண்ட பைக்குகள் மிகவும் ஆடம்பரமான வாகனங்களாகும். இதற்கு 100 என்ன 200 சத வரியே போடலாம். தற்போது 50% குறைத்த மோடி விரைவிலேயே அதை 0% வரியாகக் கூட நிறுத்தி விடலாம்.
படிக்க:
♦ எனக்கு ட்ரம்ப் பொம்மைதான் வேண்டும் – மெக்சிகோ குறும்படம்
♦ ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?
அடுத்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்கும் பட்சத்தில் இங்கே பல்வேறு தொழில்கள் நலிவடைய வாய்பிருக்கிறது. மேற்கு வங்கத்திலிருந்து டாடாவின் நானோ கார் தொழிற்சாலையை குஜராத்திற்கு ஒரு எஸ்.எம்.எஸ் மூலம் மாற்றிவிட்டதாக மோடி ஜம்பமடிப்பது வழக்கம். தற்போது நானோ கார் உற்பத்தியே நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது அமுக்கி வாசிக்கப்படும் ரகசியமாகவே இருக்கிறது என்பது தனிக்கதை. அதே போன்று ஒரு ஃபோன் காலிலேயே அமெரிக்க அதிபரின் உத்தரவை நிறைவேற்றியிருக்கிறார் மோடி.
மோடியின் இரண்டாவது ஆட்சி ஆரம்பமே இத்தகைய அடிமைத்தனத்தில் இருந்து தொடங்குகிறது. அமெரிக்க ஏற்றுமதி குறைந்தால் சங்கிலித் தொடர் போன்று பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு அதன் சுமைகள் இந்தியா போன்ற நாடுகளின் மக்கள் மீது ஏற்றப்படுவது உறுதி.
மதன்
நன்றி : ஆர். டி