பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 2 | பாகம் – 9

டோக்ளியாட்டி

பாசிசத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இன்று தோற்றுவிக்கப்படவில்லை; அவை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பாதையில் முன்னேறவில்லை. எப்போதும் போலவே இப்போதும் இந்த வாய்ப்புகள் பொருளாதார நிலைமையுடனும் வர்க்கப் போராட்டத்துடனும் பிணைக்கப்பட்டுள்ளன.

இதனை நாம் மனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப் பாடம் நெடுகிலும் இதனை நாம் வலியுறுத்துவோம்; ஏனென்றால் பாசிசத்தின் இன்றைய வாய்ப்புகள் நிலையானவை, நிலைநாட்டப்பட்டவை, நீடிக்கக்கூடியவை, நிரந்தரமானவை என்று நாம் கருதினோமானால் நாம் அத்துடன் ஒழிந்தோம். அரசு எந்திரம் என்பது வர்க்க உறவுகளிலிருந்து தோன்றும் ஓர் அரசியல் மேல் கட்டுமானமே அன்றி வேறல்ல என்பதை நாம் எப்போதுமே மனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கருத்தை விளக்குவதற்கு இத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சியை உதாரணமாக எடுத்துக் கொண்டு பார்ப்போம்.

இந்த ஆய்வை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கிறேன். முதல் காலகட்டம் ரோம் படையெடுப்பு வரையிலும் 1922-ம் ஆண்டு வரையிலுமானது. இரண்டாவது காலகட்டம் 1922 முதல் 1925 வரையிலானது. சர்வாதிகாரமல்லாத ஒரு பாசிச ஆட்சியை அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட காலகட்டம் என இதனைக் கூறலாம்; மூன்றாவது காலகட்டம் 1925 முதல் 1930 வரையிலானது. இந்தக் காலப் பகுதியில்தான் சர்வாதிகாரத்திற்கு அடித்தளமிடப்பட்டது. மாபெரும் பொருளாதார நெருக்கடி இந்தக் காலகட்டத்தில்தான் தொடங்கிற்று.

ரோம் நகர் பேரணியில் முசோலினி மற்றும் கருஞ்சட்டைப் படையினர்.

ரோம் படையெடுப்பு வரையிலான காலகட்டத்தின் ஒரு முக்கியமான அம்சம், பாசிசம் எத்தகைய உறுதியான, தெளிவான திட்டத்தையும் கொண்டிராததுதான். 1919 முதல் 1922 வரை பாசிசம் மேற்கொண்ட தொடர்ச்சியான நிலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தீர்களேயானால் அவை தொடர்ந்து மாறி வந்திருப்பதைக் காணலாம். இந்தக் காலப்பகுதியில் எத்தகைய நிலைமை நிலவியது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதைப் பற்றி நாம் ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அந்தக் காலகட்டத்தின் முக்கிய அம்சங்களை இங்கு மீண்டும் கோடிட்டுக் காட்டுகிறோம்; ஆழமான புரட்சிகர நெருக்கடி; அடிப்படை அரசியல் அமைப்புகளின் முறிவு; முக்கியமாக மிகப் பெரும்பாலான தொழிலாளர்களிடையேயும் விவசாயிகளிடையேயும் பொதுவான அதிருப்தி; நிலைமையில் மாற்றம் ஏற்படும் பொருட்டு ஓரணியாக ஒன்று திரள வேண்டும் என்று புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திடமும் விவசாயிகளிடமும் ஏற்பட்ட உந்துதல் போக்கு முதலியவை.

இந்தக் காலகட்டத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பூர்ஷுவா வர்க்கம் மேற்கொண்ட திட்டம் என்ன? அவர்கள் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு திட்டங்களைக் கைக் கொண்டனர்.

இவற்றில் முதல் திட்டம் நிட்டியினுடையது 2: நிட்டி, நிதி மூலதனத்தின் பிரதிநிதி. பல வங்கிகளின் பிதாமகர். மிகப்பெரிய இத்தாலிய வங்கியான டிஸ்கவுன்ட் வங்கியை நிறுவியவர். அதே சமயம் அவர் தீவிர முற்போக்காளர்; ஜனநாயக மனோபாவம் கொண்டவர். நிட்டியின் திட்டத்தில் இரண்டு அம்சங்கள் அதாவது நிதிமூலதனத்தின் மேலாண்மையும் ஒரு ஜனநாயகத் திட்டமும் இணைந்திருப்பதைக் காண்கிறோம். எடுத்தஎடுப்பில் பார்க்கும்போது இந்த இரண்டு அம்சங்களும் பரஸ்பரம் முரண்பட்டவையாகத் தோன்றக்கூடும். முந்தையது நிதி மூலதனத்தை ஆதரிக்கிறது. பிந்தையது சமூக வளர்ச்சிகளைக் கிளர்த்திவிடும் மிகவும் முன்னேற்றமடைந்த அம்சத்தைக் குறிக்கிறது.

பிரான்செஸ்கோ சாவரியோ நிட்டி (Francesco Saverio Nitti)

இந்தத் திட்டம் எதைப் பிரதிநிதித்துவப்படுத்திற்று? நெருக்கடி நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழியைக் காணும் பூர்ஷுவாக்களின் முயற்சியை அது பிரதிநிதித்துவப்படுத்திற்று. சமுதாயம் மிக ஆழமான மாற்றத்தைக் காணும் என்று நிட்டி முன்னுணர்ந்தார். குடியரசு வடிவிலான அரசாங்கத்துக்கு மாறக் கூடிய வாய்ப்பு இருப்பதை அவர் மறுக்கவில்லை; அரசியல் நிர்ணய சபை ஏற்படக் கூடிய சாத்தியக் கூறையும் அவர் நிராகரிக்கவில்லை. பாபுலர் கட்சியுடன் மட்டுமன்றி சோஷலிஸ்டுகளுடனும் ஒத்துழைக்க அவர் தயாராக இருந்தார்.

சில பிரிவினரைத் தன்பக்கம் ஈர்க்கும் பொருட்டு அவர்களுக்கு சலுகைகள் அளிக்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். எனினும் இக்கொள்கையை மேலும் விரிவுபடுத்தி, முற்போக்கு சக்திகளுக்கும் சலுகைகள் வழங்க ஆரம்பித்தார்.

பூர்ஷுவாக்களில் மிகவும் பிற்போக்கான பகுதியினரின் விருப்பத்துக்கிணங்க “ராயல் கார்ட்” எனும் காவற்படையை அவர் உருவாக்கினார். பின்னர் இதனைத் தன் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அதேசமயம் சமூக ஜனநாயகவாதிகளுடனும் இரகசியத் தொடர்பு கொண்டிருந்தார். முற்போக்கான பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அவர்களுடன் விவாதித்தார்.

பாஸ்சி டி கம்பாட்டிமென்டோ.

அவருடைய திட்டத்தை பாஸ்சி டி கம்பாட்டிமென்டோவின் 1919-ம் வருட பியஸ்ஸா சான் செபல்குரோ திட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவை கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்திலும் ஒத்திருப்பதைக் காணலாம். பாஸ்சி திட்டம் ஒரு குடியரசுத் திட்டம்; நிட்டி திட்டத்திலும் குடியரசுப் பற்றி நிறைய குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாஸ்சி திட்டம் அரசியல் நிர்ணய சபையைப் பற்றிப் பேசுகிறது. நிட்டியும் இதில் சற்றும் பின்வாங்கிவிடவில்லை; முதலாளிகள் மீது படிப்படியாக வரி விதிப்பது போன்ற பல முதலாளித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகள் முந்தைய திட்டத்தில் அடங்கியிருக்கின்றன. பிந்தைய திட்டமும் இத்தகைய நடவடிக்கைகளைப் பற்றிப் பிரஸ்தாபித்துள்ளது.

மிகவும் முன்னேறிய அரசியல் சாகசச் செயல்கள் மூலம் நெருக்கடியைச் சமாளிப்பதற்கு 1919-ம் ஆண்டிலும் 1920-ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களிலும் இத்தாலியப் பூர்ஷுவாக்கள் மேற்கொண்ட முயற்சியை இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 1919-ம் வருட பாஸ்சி டி கம்பாட்டிமென்டோ திட்டத்தில் இந்த முயற்சி பிரதிபலிப்பதையும் காணலாம்.

நிட்டியின் திட்டம் தோல்வியடைந்தது. அது செயல்படுத்தப்படவில்லை, அதனை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு அப்போது நிலைமை உருவாகியிருந்தது. பல முரண்பட்ட அம்சங்களுடன் அது மோதிற்று. சமாளிக்க முடியாத அரசியல் இடையூறுகள் காரணமாக அது தவிர்க்க இயலாதபடி முடிவுக்கு வந்தது.

படிக்க:
தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் !
பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?

உண்மையில் நிட்டியின் திட்டத்தைச் சீர்குலைத்தவர்கள் பாட்டாளி வர்க்கத்தினரும் தென்பகுதி விவசாயிகளும்தான். பூர்ஷுவாக்களின் சீர்த்திருத்த தந்திரோபாயங்களுக்கு இலக்கான இந்த மக்கள் இன்னும் மிகத் தீவிரமான பிரச்சினைகளை எழுப்பினர். மின்விசைப் பிரச்சினை, நிலங்களைக் கைப்பற்றுதல் போன்றவை இவற்றில் அடங்கும். அச்சமயம் தொழிற்சங்க நடவடிக்கைகள் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த பிராந்தியம் எமிலியா என்பது. இப்பிராந்தியத்தைச் சேர்ந்த பண்ணைத் தொழிலாளர்கள் எழுப்பி வந்த பிரச்சினைகள் கிராமப்புறத்தில் தனிச் சொத்துரிமையின் அடித்தளங்களையே ஆட்டி அசைத்துக் குலுக்குவதாக இருந்தன. சமுதாயத்தின் சகல அஸ்திவாரங்களையும் ஆட்டங்காணச் செய்வதாக இருந்தன. நிட்டியின் திட்டம் வெறும் கற்பனாவாதத் திட்டமாக இருந்தது. எனவே, அது தவிர்க்க முடியாதபடித் தகர்ந்து போயிற்று.

கியோவான்னி கியோலிட்டி (Giovanni Giolitti)

அடுத்து, பூர்ஷுவாக்கள் மற்றொரு முயற்சியை மேற்கொண்டனர். யுத்தப் பிற்காலத்தில் தோன்றிய இக்கட்டான நிலைமையிலிருந்து கியோலிட்டியின் 3 துணை கொண்டு மீள்வதே பூர்ஷுவாக்களது இந்த இரண்டாவது முயற்சியின் நோக்கம். கியோலிட்டி ஒரு பழம்பெரும் பூர்ஷுவா ராஜதந்திரி. போரின்போது தோல்வி மனப்பான்மை கொண்ட ஒரு துரோகியாக மாறினார்(!). அவரும்கூட அரைகுறையான குடியரசு நிலைகளை மேற்கொண்டார். உதாரணமாக, டொரனேரோவில் அவர் நிகழ்த்திய உரையில் போர்ப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை அரசிடமிருந்து விலக்கிக் கொள்வதற்கு அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று யோசனை கூறினார். அதேசமயம் முடியாட்சியின் கடைந்தெடுத்த ஆதரவாளராகவும் இருந்துவந்தார். முடியாட்சியை நவீன முறையில் மாற்றியமைத்தவரே அவர்தான் என்றுகூடக் கூற வேண்டும். இவ்வாறெல்லாம் இருந்துங்கூட அவர் குடியரசு நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் போக்கினைக் கடைப்பிடித்தார்.

ஆனால் கியோலிட்டியின் திட்டம் நிட்டியின் திட்டத்திலிருந்து சில அம்சங்களில் மாறுபட்டதாக இருந்தது. நிட்டியின் திட்டம் ஏற்கெனவே தோல்வியடைந்துவிட்ட நிலைமையில் கியோலிட்டி அதிகாரத்துக்கு வந்தார்.

கியோலிட்டியின் திட்டத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்; ஒருபுறம் பாசிசத்துக்கும், பாட்டாளி வர்க்கத்தை நசுக்குவதற்கு அதனை ஓர் ஆயுதந்தாங்கிய இயக்கமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் முக்கியத்துவம் அளித்தல்; மறுபுறம் சோஷலிஸ்டுக் கட்சியை அடக்கி ஒடுக்குவதற்கும் புரட்சியாளர்களை நாட்டைவிட்டு விரட்டுவதற்கும், சீர்திருத்தவாதிகளைத் தனிமைப்படுத்தி அவர்களை அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதற்கும் திட்டமிடுதல் ஆகியவையே அந்த இரண்டு அம்சங்கள்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

2. பிரான்செஸ்கோ சாவரியோ நிட்டி, (1868-1953), லுகானியாவைச் சேர்ந்த பொருளாதாரவாதியும் தீவிர அரசியல்வாதியுமாவார். 1919 ஜூன் முதல் 1920 ஜூன் வரை இத்தாலியின் பிரதம மந்திரியாக இருந்தார்.

3. கியோவான்னி சியோலிட்டி (1842-1928) 1892-93, 1906-09, 1911-14, 1920-21 ஆண்டுகளில் பிரதம மந்திரியாக இருந்தார். 20-ம் நூற்றாண்டு துவக்கத்திற்குப்பின் இத்தாலிய அரசியலில் மிகப் பிரபலமான புள்ளியாக இருந்தார். அல்குனி டெமி டெல்லா குயிஸ்டியோனி என்ற முற்றுப் பெறாத தமது கட்டுரையில் கிராம்ஸி கியோலிட்டியின் முன்னேற்றத்தைப் பற்றியும் அவரது உள்நாட்டுக் கொள்கையின் அடிப்படை பற்றியும் மிகத் தெளிவான, துல்லியமான பரிசீலனையை அளித்துள்ளார்.

ரத்தக்களறியான 1890-1900 ஆண்டுகளுக்குப் பின், முற்றிலும் ஒதுங்கி நிற்கும், முற்றிலும் பலாத்காரம், முற்றிலும் சர்வாதிகாரம் – இவற்றை பூர்ஷுவாக்கள் கைவிடவேண்டியிருந்தது. தெற்கேயுள்ள விவசாயிகளும் வடக்கேயுள்ள தொழிலாளிகளும் ஒரே சமயத்தில் – ஒன்றிணைந்து செயல்படாவிடினும் – கலகத்தில் எழுந்தனர்; புதிய நூற்றாண்டில் ஆளும் வர்க்கம் புதிய கொள்கையை துவக்கியது.

அதாவது, வர்க்க கூட்டணிகள், வர்க்க அரசியல் அணி, பூர்ஷுவா ஜனநாயகம், அது இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்: கிராமப்புற ஜனநாயகமா – அதாவது தெற்கத்திய விவசாயிகளுடன் கூட்டணியா அல்லது சுதந்திரமான வியாபாரம், வயது வந்தோருக்கு வாக்குரிமை, நிர்வாகம் கீழ்மட்டத்திற்கு அதிகாரம் வழங்குதல், உற்பத்திச் சரக்குகளுக்கு குறைந்த விலைகள் ஆகியவையா? அல்லது வயது வந்தோர் வாக்குரிமை இல்லாமல் ஒரு முதலாளித்துவ – விவசாயி அணி, சுங்கவரி பாதுகாப்பு, மையப்படுத்தப்பட்ட அரசு (விவசாயிகள் மீது, குறிப்பாகத் தெற்கிலும் தீவுகளிலும் உள்ளவர்கள் மீது, பூர்ஷுவா ஆட்சியின் வெளிப்பாடு) ஊதியம், தொழிலாளர் உரிமைகள் பற்றிய சீர்திருத்தவாதக் கொள்கை. அது இரண்டாவது தீர்வைத் தேர்ந்தெடுத்தது. பூர்ஷுவாக்களின் ஆட்சியை கியோலிட்டி உருவகப்படுத்தினார்.

ஸ்குவாட்ரிஸ் மோ (Squadrismo)

1919 அக்டோபர் 19-ம் தேதி டிரோனேரோவில் கியோலிட்டி ஆற்றிய உரை இத்தாலியின் யுத்தபிற்கால நெருக்கடியை தீர்ப்பதற்கான மிக முற்போக்கான பூர்ஷுவாத் திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.  யுத்தத்தில் இத்தாலி தலையிட்டதை கியோலிட்டி விமர்சித்தார். 1914-15 ஆண்டுகளில் அவர் எடுத்த நடுநிலைமைக் கொள்கையை நினைவுபடுத்தினார் (கியோலிட்டியை “ஒரு தோல்வி  மனப்பான்மை கொண்ட தேசத்துரோகி” என்ற தேசியவாதிகளின் குற்றச்சாட்டை பற்றி டோக்ளியாட்டி அப்பொழுது குறிப்பிட்டது) யுத்தப் பிரகடனம் செய்ய அரசருக்கும் மந்திரி சபைக்கும் உள்ள உரிமையை எடுத்துவிட்டு அந்த உரிமையை நாடாளுமன்றத்துக்கு வழங்க, கார்ல் ஆல்பர்டின் அரசியல் சட்டத்தின் 5-வது ஷரத்தை திருத்த வேண்டுமென்று கூறினார்.

படிப்படியான வருமானவரி, சொத்துரிமை வரி திட்டத்தைக் கொண்டு வருவதாகவும் நிறுவனங்களின் பங்குகள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார். நீர் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு அரசின் தலையீடு சாத்தியம் என்று தனியார் தொழில்களைப் பயமுறுத்தினார். வெளிநாட்டு வர்த்தகத்தின் மீது அரசின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை முன்வைத்தார். அரசின் அடித்தளத்தை விரிவுபடுத்தி லிபரல் ஜனநாயகக் கட்டுக்கோப்பிற்குள் பூர்ஷுவாக்களின் பொருளாதார அரசியல் அதிகாரத்தை பாதுகாக்கும் திட்டத்திற்கு டிரோனேரோவின் அவரது உரை உருக்கொடுக்கிறது. இதன்மூலம் புரட்சிகர இயக்கத்தின் முன்னேற்றத்தை கூர்மழுங்கச் செய்ய முடியும் என்று கருதினார்.

எனினும் 1920-ல், மீண்டும் கியோலிட்டி பிரதம மந்திரியாக இருந்தபோது, நிலைமை ஏற்கனவே மாறியிருந்தது. வளர்ந்து வரும் பாசிஸ்டு இயக்கம், புரட்சிகர இயக்கத்திற்கு மட்டுமின்றி அவர் பாதுகாக்க விரும்பிய லிபரல் அரசுக்கும் ஒரு ஆபத்தை ஏற்படுத்தியதை இந்த வயது முதிர்ந்த ராஜதந்திரியால் கண்டுகொள்ள முடியவில்லை. தொழிலாளர் இயக்கத்திற்கு எதிர்சக்தியாக ஸ்குவாட்ரிஸ்மோவை பயன்படுத்த கியோலிட்டி முயன்றார். 1921 தேர்தலில் அவர் அமைத்த தேர்தல் கூட்டணியில் பாசிஸ்டுகளைச் சேர்த்துக் கொண்டதன் மூலம் அவர்களுக்கு நாடாளுமன்றத்தின் கதவுகளைத் திறந்து விட்டார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க