பூண்டும் வெங்காயமும் இஸ்கானும் …

ரு முழு அசைவ விருந்தில், ‘யாராவது சைவம் சாப்பிடுவோர் வரக்கூடும்’ என கருதி, கொஞ்சம் பேருக்கு சைவமும் சமைக்கப்படும். ஆனால், ஒரு முழு சைவ விருந்தில் இப்படி அசைவம் சாப்பிடுவோரைக் கருதி என்னைக்காவது அசைவமும் சேர்த்து சமைத்திருக்கிறார்களா?

‘பீடி இழுத்தா புகை வரும். புகை இழுத்தா பீடி வருமா?’ன்ற மாதிரி இருந்தாலும் இதுல ஒரு லாஜிக் இருக்குல்ல… கறிக்கஞ்சி குடிக்கலாம்னு நாலு பேர் வந்து ஏங்கிப் போவானேன்னு என்னைக்காவது இந்த சுத்த சைவ கும்பல் நினைச்சிருக்கா?

அசைவத்துக்கு ஆகும் செலவு, ‘அசைவம் சாப்பிடும் அனைவரும் சைவம் சாப்பிடுவார்கள் என்பதால்….’ என்ற லாஜிக்… அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்… அப்படி ஒரு சிந்தனையே இவர்களுக்கு கிடையாது.

பெருந்தன்மையா சைவமும் சமைக்கிறவன்கிட்ட வந்து, ‘பாத்திரம் எல்லாம் தனியா புழங்குனதுதானே..’ன்னு விசாரணை வேற. அவ்வளவு சுத்தபத்தம். இந்த சுத்தபத்த கும்பல்தான், இப்போது கர்நாடகாவில் கடையை திறந்திருக்கிறது.

பூண்டும், வெங்காயமும் உனக்குப் பிடிக்கலேன்னா நீ திங்காதே… அதுக்காக ஊர்ல எவனுமே தின்னக்கூடாதா என்ன? அதுவும் மதிய உணவு சாப்பிடும் ஏழைக் குழந்தைகளின் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்க மாட்டோம் என அட்டூழியம் செய்கிறது, கர்நாடக மாநிலப் பள்ளிகளில் மதிய உணவு திட்ட ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள Akshaya Patra Foundation-APF நிறுவனம்.

International Society for Krishna Consciousness (ISKCON) என்ற அமைப்பால் நடத்தப்படும் இந்த Akshaya Patra என்ற என்.ஜி.ஓ., இந்தியாவெங்கும் 12 மாநிலங்களில் 42 இடங்களில் 17.6 லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கர்நாடகாவில், 2,814 அரசுப் பள்ளிக்கூடங்களை சேர்ந்த 4 லட்சத்து 43 ஆயிரம் குழந்தைகளுக்கான மதிய உணவு வழங்கும் ஒப்பந்தப் பணியை இந்நிறுவனம் பெற்றுள்ளது. செலவை அரசும், அக்ஷய பாத்ரா-வும் பகிர்ந்துகொள்கின்றன. கர்நாடகாவில், ஒரு மதிய உணவுக்கு 14.33 ரூபாய் செலவாகிறது. இதில், அரசின் பங்கு 5.87 ரூபாய். அக்ஷய பாத்ராவின் பங்கு 8.46 ரூபாய். இதை நன்கொடைகள் மூலம் திரட்டுகிறது அந்த என்.ஜி.ஓ.

ஒப்பந்தம் கையெழுத்தாகும்போதோ அல்லது விண்ணப்பத்திலோ, ‘பூண்டு வெங்காயம் பயன்படுத்த மாட்டோம்’ என எந்த நிபந்தணையும் அவர்கள் வைக்கவில்லை. மாறாக அரசுத் தரப்புதான், ‘ஒரு வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் உணவில் வெங்காயம் பயன்படுத்த வேண்டும்’ என நிபந்தனை விதித்தது. இஸ்கான் தவிர, ஒப்பந்தத்தை பெற்றுள்ள இதர நிறுவனங்கள் அனைத்தும் இந்த நிபந்தனையை நிறைவேற்றுகின்றன.

படிக்க :
♦ சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு !
♦ மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா ?

இஸ்கான் மட்டும் மறுப்பது ஏன்? “ஏனெனில், பூமிக்கு கீழே விளையும் பூண்டு, வெங்காயம் போன்றவை ஒருவரின் சோம்பேறித்தனத்தை அதிகரிக்கும்; எதிர்மறை சிந்தனையை தூண்டும்.” என்கிறார் இஸ்கான் நிறுவனத்தின் ஆதரவாளரான ஜனானந்த கோஸ்வாமி மகராஜ்.

“உண்மையில், பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகள் எதையும் உண்பதில்லை என்பது ஒரு சமண நம்பிக்கை. பூமிக்கு கீழே விளையும் கிழங்குகள் மற்றும் காய்கறிகளை பூமிக்குள் புதைத்துவைத்தால் அது மறுபடியும் விளைச்சல் தரும். அப்படியானால், அதற்கு உயிர் இருக்கிறதுதானே? அதை உண்பது உயிர்கொலையில் வந்துவிடும் என்பது சமணர்கள் இதை தவிர்ப்பதற்கான காரணம். பழங்காலத்தில், சமணர்களின் பண்பாட்டு பழக்கங்களை பிராமணர்கள் தனதாக்கிக்கொண்டதால், இந்த பூண்டு, வெங்காய தவிர்ப்பு இவர்களுடன் சேர்ந்துவிட்டது’’ என வரலாற்றுக் காரணம் சொல்கிறார் மருத்துவர் ஷாலினி.

இப்போது பிரச்னை… பூண்டு, வெங்காயம் இல்லாத உணவின் சுவை அதை சாப்பிடும் மாணவர்களுக்கு அடியோடு பிடிக்கவில்லை என்பதுதான். “அப்படியே கீழே கொட்டிவிடுவோம்” என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பள்ளிகளுக்கான மொத்த உணவுப்பொருள் விநியோகம் குறைந்துபோனதைத் தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வில்தான் இந்த பிரச்சினையே வெளியே வந்தது.

கடந்த 2018 டிசம்பரில் இந்த சிக்கல் தொடர்பாக இஸ்கான் நிறுவனத்துக்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு இஸ்கான் நிறுவனம், ‘நாங்கள் பூண்டு, வெங்காயம் பயன்படுத்த மாட்டோம். அதற்கு இணையான சத்து கொண்ட மற்ற பொருட்களை பயன்படுத்துகிறோம்’ என திமிராக மறுத்தது. நியாயமாக அரசு, இந்த நிலையிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்க வேண்டும். மாறாக கர்நாடக அரசு, APF-ன் மெனுவை National institute of Nutrition (NIN)-க்கு ஆய்வுக்கு அனுப்பியது. 2019 பிப்ரவரியில் NIN, மேற்படி பூண்டு, வெங்காயம் இல்லாத மெனு சிறப்பாக உள்ளதாகவும், சத்தானது என்றும் ஒப்புதல் தந்தது. ஆகவே இஸ்கானின் அட்டகாசம் தொடர்கிறது.

உனக்கு கவுச்சி ஆகாது. அதனால வாயை மூடிக்கிற… ஓ.கே.. அதுல ஏதோ ஒரு லாஜிக் இருக்கு. பூண்டு, வெங்காயம் எல்லாம் கூடாதுன்னு சொன்னா… அதுல ஏதாவது லாஜிக் இருக்கா? பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா?

நன்றி : முகநூலில் பாரதி தம்பி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க