“வாழ்வு என்பது பொருள்கள் மற்றும் நிகழ்வுகளில் பொதிந்துள்ள முரண்பாடே ஆகும். அது தமக்குள்ளே தொடர்ச்சியாக உருவாகிக்கொண்டும் மறைந்து கொண்டும் இருக்கின்றது. முரண்பாடு தீர்ந்தவுடன் வாழ்வு முடிந்து, மரணம் அடியெடுத்து வைக்கிறது”. அண்மையில் இந்திய அரசாங்கம் வெளியிட்ட ‘விலங்குகள் மீதான கொடுமை தடுப்பு (கால்நடை சந்தைகளை ஒழுங்குபடுத்துதல்) விதிகள்- 2017’ பற்றி சிந்திக்கத் தொடங்கியபோது ஃபிரடெரிக் ஏங்கெல்ஸின் இந்த மேற்கோள் நினைவுக்கு வந்தது.

எனது சொந்த முரண்பாடுகள்: நடைமுறையில் இல்லையெனினும் பிறப்பால் நான் ஒரு இந்து. வலியுணர்ச்சி (nociceptors) கொண்டதாக அறியப்பட்ட விலங்குகளை சாப்பிடுவதைத் தவிர்க்கும் அதே நேரத்தில் இந்தியாவில் எந்தவொரு உணவுக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் திணிப்பதையும் நான் எதிர்க்கிறேன்.

எனவே இறைச்சியின் விஞ்ஞானத்தைப் பற்றி குறிப்பாக என்னுடைய இந்த இரட்டை நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்வதை விட, நமது மூளை, பரிணாமம் மற்றும் எதிர்காலத்தில் இறைச்சியின் தாக்கம் குறித்து விவாதிக்க முடிவு செய்தேன்.

இறைச்சி இல்லாவிட்டால் நாம் மனிதர்களாக இருக்க மாட்டோம் :

மனித பரிணாம வளர்ச்சியின் முதல் ஆறு மில்லியன் ஆண்டுகளில் நம் முன்னோர்கள் அடிப்படையில் சைவ உணவு உண்பவர்களாகவே இருந்தனர். சுமார் 2 – 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் நம்முடைய உணவு பழக்கத்தில் ஒரு மாற்றம் வந்தது. நாம் இறைச்சி உண்ணிகளாக மாறிய பின்னரே நமது மூளையின் அளவு அதிவேகமாக அதிகரித்துள்ளது என்பதையும் ஆராய்ச்சி இப்போது நிறுவியுள்ளது. இன்று நாம் மனிதர்களாக இருக்கவும் மேலும் மனிதக் குரங்குகள் போன்ற பிற விலங்குகளை விட மிகவும் அறிவாளிகளாக இருக்கவும் இறைச்சி எப்படி உதவியது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

முதலாவது: இறைச்சியைப் போல திறனுள்ள வகையிலோ அல்லது அதிக அளவிலோ ஆற்றல் மற்றும் முதன்மையான ஊட்டச்சத்துக்களை காய்கறி உணவு வழங்கவில்லை. நவீன மனிதனின் மூளைக்கு மிக அதிக ஆற்றல் தேவையாக உள்ளது.

இரண்டாவது: ஆரம்பகால மனிதர்களின் இரைப்பைக் குழாய்கள் பழங்கள், இலைகள் மற்றும் வேர்களை செரிக்க உதவும் அளவுக்கு பெரிதாக இருந்தன, மேலும் ஆற்றலும் மிக அதிகமாக தேவையாக இருந்தன. ஆகவே, நாம் நம்முடைய உணவுப்பழக்கத்தை மாற்றியமைக்கும் போது, அதிக அளவில் ஆற்றலைப் பெறுவதற்காக நம்முடைய வயிற்றுப்பகுதி சிறியதாகி மூளை மிகப் பெரியதாக மாறியது. கருவிகளைப் பயன்படுத்துவதில் நாம் மிகவும் கைத்தேர்ந்தவர்களானதும், சமைக்கத் தொடங்கியதும் கூட இதற்கு உதவின.

படிக்க:
கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !
♦ பாரதமாதாவின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் | படக்கட்டுரை

சமீபத்திய வரலாறும் எதிர்காலமும்:

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் டி.என். ஜா சர்ச்சைக்குரிய ‘புனித பசுவின் கட்டுக்கதை’ என்ற பெயரில் நூலை 2002-ல் வெளியிட்ட பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. வேத காலங்களில் உணவு விருப்பத்தேர்வுகள் குறித்த அவரது கடுமையான அறிவார்ந்த ஆராய்ச்சியின் முடிவுகளை இந்த நூல் ஆவணப்படுத்தியது. அந்தக் காலங்களில் பசுக்கள் பலியிடப்பட்டதுடன் மாட்டிறைச்சியும் உணவாக உட்கொள்ளப்பட்டது என்று அவர் எழுதினார். நாம் அவரது கூற்றை நம்பினால், சற்றேறக்குறைய 30% இந்தியர்கள் அதற்கு பிறகு மரக்கறி உணவுக்கு மாறியுள்ளனர்.

இந்தியாவில் தான் உலகின் மிக அதிகமான மரக்கறி உண்பவர்கள் விகிதம் உள்ளது. முழுமையான எண்ணிக்கையில் உலகின் பிற பகுதிகளை விட அதிகமான மரக்கறி உணவு உண்பவர்களை இந்தியா கொண்டுள்ளது.

எனவே மனிதர்களின் சமீபத்திய ஊட்டச்சத்து வரலாறு சில கேள்விகளை எழுப்புகிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சி உண்ணும் பழக்கம் நம் மூளையின் பரிணாம வளர்ச்சியை மேலும் தூண்டியதா? மனிதர்கள் நம் மூளையை மேலும் வளர்ப்பதற்கு இறைச்சி உண்ணும் பழக்கம் முதன்மையாக இருக்கிறதா? எல்லா இந்தியர்களும் நீண்ட காலம் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால், இதன் விளைவாக நமது மூளையின் அளவுகளில் கணிசமான வேறுபாடு இருக்குமா? நம்முடைய அறிவுத்திறனை இறைச்சி உண்ணும் மற்றவர்களுடன் இன்னமும் ஒப்பிட முடியுமா? இந்திய அரசின் அறிவிப்பானது மாட்டிறைச்சிக்கும் அப்பாற்பட்டது. இது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டால், மற்ற இறைச்சி உண்ணும் பழக்கத்தையும் இது பாதிப்பது மட்டுமல்லாமல், பால் போன்ற பிற விலங்கு புரத மூலங்களையும் தடை செய்யக்கூடும்.

மாதிரிப் படம்

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் ஒன்று தெளிவில்லாமல் உள்ளன, அல்லது நன்கு ஆராயப்படவில்லை. ஒரு கற்பனையான மதிப்பீடு என்னவென்றால், ஒரு சில ஆயிரம் ஆண்டு பழக்கத்தை விட சில ஆயிரம் தலைமுறை உணவு பழக்கம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

பேறு காலத்தில் இறைச்சி சாப்பிடுவது கருவின் மூளையின் வளர்ச்சியை தூண்டுகிறதா என்பது குறித்து சமீபத்திய ஆராய்ச்சி சிறிது வெளிச்சம் காட்டுகிறது. வழக்கமான ஒரு பேறு காலத்தில் மூளை மெதுவாக உருவாகி மிகவும் சிக்கலானதாகவும் முதிர்ச்சியானதாகவும் மாறும். தாய்மார்களுக்கான இரும்புச்சத்து குறைபாடு பிறக்கும் சந்ததிகளின் மூளையின் சிக்கலை எதிர்மறையாக பாதித்ததை புதுமையான நரம்பு-படவியல் (neuroimaging) நுட்பங்களைப் பயன்படுத்தி சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.

படிக்க:
இறைச்சியை மறுக்கும் மோடியின் இந்தியாவில் குழந்தை இறப்பு அதிகம்
♦ சீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன ? | கேள்வி – பதில் !

வேறு சொற்களில் கூறுவதானால், இரும்புச்சத்தின் சரியான அளவு பிறந்த குழந்தையின் சரியான அளவு மூளையுடன் தொடர்புடையது. இறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இறைச்சி சாப்பிடுவது கருவின் மூளைக்கு நன்மை பயக்கும் என்பதற்கு சில மறைமுக சான்றுகளை இந்த ஆய்வு வழங்குகிறது. கர்ப்பிணிப் பெண்களிடையே இரத்த சோகை அதிக அளவில் உள்ள இந்தியாவுக்கு இது இன்றியமையா தேவையாக இருக்கும்.

மூளை மற்றும் பரிணாம வளர்ச்சியில் உணவுப் பழக்கத்தின் மீதான கட்டுப்பாடுகளின் தாக்கமானது தற்போதைய பகிர்மான முறையின் ஒரு தவறாகவும் இருக்கலாம். இது வரலாறு மற்றும் அறிவியலை மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் கூட புறக்கணித்து சித்தாந்தத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

கட்டுரை : ஜெய் தேசாய் (நரம்பியல் மருத்துவர்)
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி வயர்.

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க