எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

ள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் புத்தகங்களை தாறுமாறாக தரையில் எறிந்தேன். ஒருவருமே என்னை திரும்பி பார்க்கவில்லை. அம்மா குனிந்தபடி அரிவாளில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார். என் அண்ணன்மாரைக் காணவில்லை. அக்கா சங்கீத நோட்டுப் புத்தகத்தை திறந்துவைத்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். என் சின்னத் தங்கச்சி வாய்துடைக்காமல் தள்ளாடி நடந்து வந்து தன்கையை என்வாய்க்குள் நுழைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்தாள். நான் என் பிரகடனத்தை வெளியேவிட்டேன். ‘இன்று முதல் நான் மச்சம், மாமிசம் சாப்பிடமாட்டேன். இனி மேல் என் உணவு மரக்கறிதான்.’ அப்பவும் அம்மா நிமிர்ந்து பார்க்கவில்லை. எனக்கு வயது எட்டு.

அன்று குடுமி வாத்தியார் வகுப்பில் பாடம் எடுத்தபோது சொன்ன கதை மனதில் பதிந்துவிட்டது. ஒன்றும் புரியாமல் அன்றும் திருக்குறளை பாடமாக்கி ஒப்புவித்தோம். ஒருமுறை எங்கள்வாத்தியார் கடலில் விழுந்துவிட்டார். அவருக்கு நீச்சல் தெரியும் ஆனால் உடம்பில் காயம்பட்டு ஒரு துளிரத்தம் சிந்திவிட்டது.  சுறாமீன்கள் அவரை நோக்கி வரத்துடங்கின. சுறாக்களுக்கு ரத்தம் கால்மைல் தூரத்துக்கு மணக்கும். அவைக்கு நாலுவரிசைப் பற்கள். ஒரு பல்போய்விட்டால் இன்னொருபல் அந்த இடத்தை நிரப்பிவிடுமாம்.  சுறாக்களின் செட்டைகள் குவிந்து கும்பிடுவது போல தோற்றமளிக்க நாலுதரம் வாத்தியாரை சுற்றிவிட்டு அவை போய்விட்டனவாம். ஏன் தெரியுமா?

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.”
என்ற குறள் தான்.

என் தம்பி அடாவடித் தனமானவன். வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டான். அவன் கேட்டான், ‘சுறாக்களுக்கு வாத்தியார் மரக்கறிக்காரர் என்பது எப்படித் தெரியும். ஏன் நாலு வரிசைப்பல்லை வைத்துக்கொண்டு அவரை கடித்துக் குதறவில்லை.’ ‘மக்கு, மக்கு. ரத்தத்துளியை அவை மணந்துதான் வந்தன. அது மரக்கறி ரத்தத்துளி என்பது அவைக்கு தெரியாதா? நீபோ’ என்று தள்ளினேன். அவன் எரிச்சலோடு திரும்பும்போது ‘சுறாக்களுக்கு மணக்கவும் தெரியும்.  திருக்குறளும் தெரியும்’ என்றான்.

அன்றிரவு சாப்பாட்டுக்கு நான் உட்கார்ந்தபோது ஆச்சரியம் காத்திருந்தது.  எங்கள் குடும்பத்தில் நாங்கள் சகோதரங்கள் ஏழு பேர்.  எல்லோரும் நிரையாக அவரவர் தட்டுகளுடன் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் தட்டில் மீன்குழம்பு கமகமவென்று மணந்தது.  தரையிலே கொஞ்சம் இடைவெளிவிட்டு சின்ன வாழைஇலை ஒன்று போடப்பட்டிருந்தது. அதில் இடியப்பம், சம்பல், கத்தரிக்காய் குழம்பு என்று பரிமாறப்பட்டிருந்தது. நான் அம்மாவை பார்த்தேன். அவர் சாப்பிடு என்பதுபோல தலையை ஆட்டினார். அப்படித்தான் நான் மரக்கறிக்காரன் ஆனேன்.

அதன் பின்னர் அம்மா எனக்காக தனிச் சமையல் செய்ய ஆரம்பித்தார். தனித்தனி சட்டி பானைகள், தனியாக வாழை இலை.  அடுப்புக்கூட தனி அடுப்பு என்றால் நம்பமுடியாது தான்.  அகப்பையை அக்கா கவனயீனமாக மாறிப்பாவித்துவிட்டால் அதைதூக்கி எறிந்துவிட்டு அம்மா புது அகப்பைவாங்குவார்.  வீட்டிலே என் மகத்துவம் திடீரென்று உயர்ந்தது.  எல்லோரும் நிரையாக உட்கார்ந்து சாப்பிடும்போது எனக்கு நடக்கும் பிரத்தியேக கவனிப்பும் உபசரிப்பும் எல்லோருக்கும் எரிச்சலைக் கிளப்பிவிடும்.  ஒருதடவைஐயா,  ‘ஒரு தடியெடுத்து முழங்காலுக்கு கீழே நாலு அடிகொடுக்காமல் செல்லம் கொடுக்கிறீர்’ என்றார். அம்மா, ‘வாத்தியார் நல்லது தானே செய்தார். உயிர் கொலை பாவம் தானே.  அவனை தடுத்தால் அந்தப்பாவம் என்னைத்தானே வந்து சேரும்’ என்றார்.

படிக்க:
படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !
♦ யாழ்ப்பாணத்தில் இலவச வாசகசாலை !

நான் மரக்கறிக்கு மாறியதில் என் மகிமை வரவர உயர்ந்து கொண்டே போனது.  பக்கத்து வீட்டில் இருந்து யாராவது வந்தால் என் புகழ் பாடாமல் அம்மா அவர்களை திருப்பி அனுப்பமாட்டார்.  எதோ நான் பள்ளிக்கூடத்தில் முதல் பரிசு பெற்றதுபோல பாராட்டுவார். மரக்கறி சாப்பிட்டால் சுறாக்கள்கூட கும்பிடுமாம்.  அப்பிடி வாத்தியார் சொல்லியிருக்கிறார். இது வீட்டிலே பெரும்புயலைக் கிளப்பியது.  எல்லோருடைய எரிச்சலையும் செயலாக மாற்றியது என் தம்பி தான்.

எனக்கு முன் வந்து உடம்பை நெளித்தபடி ‘ஓ, எங்களுக்கு இன்றைக்கு வாளை மீன் கறி. உனக்கு பாவம் வாழைக்காய் வெள்ளைக்கூட்டு’ என்று விட்டு வயிற்றைப் பிடித்துச் சிரிப்பான். அடுத்த நாள் ‘எங்களுக்கு இன்றைக்கு றால் பொரியல்.  உனக்கு முசுட்டை இலை வறை. பாவம்’ என்பான்.  இன்னொருநாள் எட்டத்தில் நின்று தன் பின்பக்கத்தை காட்டி நெளிப்பான்.  பின்னர் முன்னுக்கு வந்து நின்று நாலுபக்கமும் வளைவான்.  நான் பாய்ந்து கைகளைப் பிடித்து மிரட்டுவேன்.  விட்டதும் நாடாச்சுருள் போல தானாகச் சுழன்று உள்பக்கம் ஓடிவிடுவான். ‘ஓ, பாவம் உனக்கு பூசணிக்காய்.  பினைந்து பினைந்து சாப்பிடு. எங்களுக்கு ஆட்டு இறைச்சி வறுவல்.’ எனக்கு தாங்க முடியவில்லை.  நான் சேர்த்து வைத்த புகழ் எல்லாம் இவனால் சேதம் அடைந்து கொண்டே போனது.

அரிதட்டு

ஒரு நாள் பின்னேரம் அம்மா அரிதட்டில் மாவை இட்டு இரண்டு கைகளையும் முழுக்கநீட்டி அரித்துக் கொண்டிருந்தார். அருமையான சமயம். இரண்டு கைகளும் வேலையில் இருப்பதால் அடிப்பதற்கு அவை உதவப்போவதில்லை. கெஞ்சுவதுபோல குரலை மாற்றி அம்மாவிடம் முறைப்பாடு வைத்தேன். அவையளுக்கு நல்லநல்ல இறைச்சிக்கறி, சாப்பாடு, எனக்குபூசணிக்காயா? தம்பிகூடச் சிரிக்கிறான். நான் பேசிக் கொண்டேபோக அம்மா ஒன்றுமே சொல்லாமல் உடம்பிலேமா படாமல் அரித்துக் கொண்டே இருந்தார். எனக்கு அது துணிச்சலைக் கொடுத்தது.  அவர்களுக்கு இறைச்சி என்றால் எனக்கு உருளைக்கிழங்கு. அந்தக் காலத்தில் உருளைக் கிழங்கு சரியான விலை. அதன் ருசிக்கு ஈடுஇணை கிடையாது. மீன் என்றால் எனக்கு கத்தரிக்காய் குழம்பு. றால் பொரியல் என்றால் எனக்கு வாழைக்காய் பொரியல். நண்டுக்கு ஈடு முருங்கைக் காய். இப்படி நீண்ட பட்டியல் தயாரித்து சமையல் சுவற்றில் சோற்றுப்பசையால் ஒட்டிவைத்தேன். அம்மா அதைப் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லவில்லை.

அதன் பிறகு பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் என் உணவில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் என் மனம் சிலவேளைகளில் தடுமாற்றம் கண்டிருக்கிறது. ஒரு நாள்படலையை திறந்து வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தேன். நண்டுக் குழம்பு வாசனை மூக்கிற்குள் நுழைந்து வயிற்றுக்குள் போய் விட்டது. வாய் ஊறத் தொடங்கியது. நண்டுக் காலை அம்மா ஒவ்வொன்றாக உடைத்துத்தர நான் சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. நான் அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்தேன். அம்மா ‘நண்டு தானே. ஒரு சின்னக் காலை உடைத்துதாறேன், கொஞ்சம்சாப்பிடு’ என்று சொல்லியிருந்தால் என் வைராக்கியம் உடைந்து சிதறியிருக்கும். அம்மா என்னைக் கண்டதும் ஊர்ப் பெரியவரைக் கண்டது போல சட்டியை சட்டென்று மூடி மணம் என் பக்கம் வராமல் பார்த்துக் கொண்டார். பட்டியலில் நான் எழுதியபடி பக்கத்து அடுப்பில் முருங்கைக்காய் வேகிக் கொண்டிருந்தது.

படிக்க:
நடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை
♦ பத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்

ஒரு நாள் அம்மாவுக்கு பெரிய சவால் ஒன்று வந்தது. எங்கள் ஊரில் சாம்பல் கணவாய் அருமையாகத் தான் கிடைக்கும். அதன் ருசி தனியாக இருக்கும். கணவாய் சமைப்பதில் அம்மாவுக்கு ஒரு ரகஸ்யத் திறமை இருந்தது. அம்மாவினுடைய சமையலை ஐயா பாராட்டினதே கிடையாது. ஆனால் கணவாய் சமைத்தால் அந்தப் பாராட்டுக் கிடைக்கும். அன்று ஐயா எப்படியோ சிரமப்பட்டுத் தேடி வாங்கிவந்த சாம்பல் கணவாயை அம்மா தன் முழுத் திறமையை பாவித்து சமைத்தார். கணவாய் சமைக்கும் போது இரண்டு பிடிமுருங்கை இலைபோட வேண்டும். அதுருசியைகூட்டும். அம்மா எங்கேயோ அலைந்து முருங்கை இலை சம்பாதித்து கணவாய் கறியை சமைத்து முடித்து விட்டார். அது எழுப்பிய மணத்திலிருந்து உச்சமான ருசியை அது கொடுக்கப் போகிறது என்பது நிச்சயமாகிவிட்டது. அம்மா ருசி பார்ப்பதே இல்லை. மணத்தை வைத்தே அவருக்கு தெரிந்து விடும்.

கணவாய்கறி சமைக்கும் நாட்களில் அம்மா வேறு ஒரு கறியும் வைப்பது கிடையாது. கணவாயும், வெள்ளை சோறும் மட்டுமே. அப்போழுதுதான் அதன் முழுச்சுவையையும் உள்வாங்கி அனுபவிக்க முடியும். கணவாய் என்றால் அம்மா ஒரு சுண்டு அரிசி கூடப் போட்டு சமைத்திருப்பார். எல்லோரும் இரண்டு மடங்கு சாப்பிடும் நாள் அது. முழுச் சமையலையும் முடித்து ஓய்ந்த போது தான் அம்மாவுக்கு திடுக்கிட்டது. எனக்கு என்ன சமைப்பது என்று அவர் தீர்மானிக்கவில்லை. சுவரிலே ஒட்டிவைத்த நீண்ட பட்டியலைப் பார்த்தார். அதிலே கணவாய் கிடையாது. அம்மாவுக்கு பதற்றம் தொற்றியது. என்ன சமைப்பது? நேரமும் ஓடிக் கொண்டிருந்தது.

கணவாய் கறி – மாதிரிப்படம்.

அன்று மத்தியானம் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தபோது அம்மா எனக்கு தனியாக வாழை இலை போட்டு வெள்ளைச் சோறும் அதன்மேல் ஒருவித குழம்பும் ஊற்றியிருந்தார். எனக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருந்த என் தம்பி விளிம்பு உடைந்த என்னுடைய பீங்கான் கோப்பையை தனதாக்கியிருந்தான். ஏராளமான மக்கள் கூடியிருப்பதுபோல பெரும்கூச்சலுடன் கணவாய் கறியை சப்பி..சப்பி சாப்பிட்டனர். எனக்கு முன் இருப்பது என்ன என்று எனக்கு தெரியாது. பெயர் தெரியாத ஒன்றை நான் அதுவரை உண்டது கிடையாது. ஒரு வாய் அள்ளி வைத்தேன். என் எட்டு வயது வாழ்க்கையில் அதுபோல ஒன்றை நான் ருசித்தது கிடையாது. முன்னரும் இல்லை. பின்னரும் இல்லை. கணவாய் கறிபோலவே சதுரம்சதுரமாக வெட்டியிருந்தது. மிருதுவாகவும் அதேசமயம் இழுபடும்தன்மையுடனும் இருந்தது. கடிக்கும் போது சவ்வு சவ்வாக ருசியை நீடித்தது. கணவாய் போல வேகுணம், மணம் ருசி. என்னால் நம்பவே முடியவில்லை. அந்த ருசி என்றென்றும் என் நாவில் தங்கிவிட்டது. அதன் பின்னர் அப்படியான ருசி என் வாழ்வில் மறுபடியும் கிடைக்கவே இல்லை.

என்னுடைய ராச்சியம் இப்படி சில வருடங்கள் ஓடியது. பின்னர் அம்மா இறந்துவிட்டார். பத்து வருடங்களுக்குப் பின்னர் அக்கா அந்த ரகஸ்யத்தை சொன்னார். சமையல் கட்டிலிருந்து அம்மா வெறி பிடித்தவர்போல வெளியே ஒடினார். நேரம் போய்க்கொண்டிருந்தது. எனக்கு என்ன சமைப்பது என்று அவரால் முடிவெடுக்க முடியவில்லை. அவர் என்ன சமைத்தாலும் அது கணவாய்க் கறியின் ருசிக்கு சமானமானதாக இருக்க வேண்டும். எங்கள் வளவில் 20 -25 தென்னை மரங்கள் நின்றன. அதிலே வெவ்வேறு மரங்களில் 12 இளம் காய்களை பறிப்பித்தார். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக அவரே வெட்டித் திறந்து ஆராய்ந்தார். சிலதிலே வழுக்கை தண்ணீர்போல படர்ந்திருந்தது. சில கட்டிபட்டு தேங்காயாக மாறியிருந்தன. இரண்டுக்கும் இடைப்பட்டதாக ஒரு தேங்காயை கண்டுபிடித்து அந்த வழுக்கையை பக்குவமாக தோண்டி எடுத்தார். அது தோல் போல மெத்தென்று இருந்தது. அதை ஐந்து தரம் தொட்டு அது ஆட்டுச் செவிப்பதம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். சதுரம் சதுரமாக வெட்டி ஒரு கணவாய்க் கறி சமைப்பதுபோல பக்குவமாகச் சமைத்தார்.

அன்று எல்லோரும் நிரையாக உட்கார்ந்த பிறகு எனக்கு பரிமாறினது அது தான். முதலும் கடைசியுமாக அதைசாப்பிட்டேன். அதன் பிறகு அப்படி ஒன்று எனக்கு கிடைக்கவே இல்லை. ஏனென்றால் ஒருவருக்கும் அப்படி ஓர் உணவு இருப்பது தெரியாது. ஒரு பழ இலையான் போல பிறந்த அன்றே அது மறைந்துவிட்டது.

இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன். ஒரு வார்த்தை பேசாமல் ஒரு தாய் தன் 8 வயது மகனை திருப்திப்படுத்த என்னவெல்லாம் செய்தார். உலகத்தில் பிள்ளைகள் எல்லாம் வெவ்வேறுமாதிரி இருப்பார்கள். தாய்மார் எல்லாம் ஒன்றுதான்.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க