கடந்த பத்தாண்டில் ஒவ்வொரு வருடத்தின் மே மாதத்திலும் இலங்கையில் சர்ச்சைக்குள்ளாவதும், சர்வதேசம் முழுவதும் பேசப்படுவதுமான ஒரு பூமி உண்டெனில் அது முள்ளிவாய்க்கால்தான். 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் பதினெட்டாம் திகதி வரைக்கும் ‘மனிதாபிமான நடவடிக்கை’ எனும் பெயரில் கூட்டுப் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களின் குருதி சிந்திய நிலம் முள்ளிவாய்க்கால்.
முள்ளிவாய்க்கால் மனிதப் புதைகுழிகள் இன்றும் கூட முற்கம்பி வேலிகளுக்குள் அரச பாதுகாப்புப் படையினரின் காவலின் கீழ் இருப்பதைக் காண நந்திக்கடல் களப்பைத் தாண்டி புதுக்குடியிருப்பை நோக்கிப் பயணித்தால் போதுமானது. இப்போதும் தமிழர்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்திக் கொண்டிருப்பது அரச தீவிரவாதத்தின் இன்னும் முற்றுப் பெறா சர்வாதிகாரத்தின் பெயரிலேயே அன்றி நல்லாட்சிக்காகவல்ல.
முள்ளிவாய்க்கால் கூட்டுப் படுகொலையின் சாட்சிகளான சடலங்களின் சிதிலங்களையும் கூட புல்டோஸர்களைக் கொண்டு அழித்து விட்டது இராணுவம். மக்கள் இருந்தார்கள் என்பதற்கு அடையாளமாக அந் நிலங்களில் கைக் குழந்தைகளின் நைந்த ஆடைகள், சிறிய பாதணிகள், தாய்மார்களின் கந்தல் சேலைத் துண்டுகள், பீங்கான் தட்டுக்கள், கோப்பைகள் போன்றவைகள் ஆங்காங்கே புதையுண்டு கிடக்கின்றன.
முள்ளிவாய்க்காலில் கூட்டுப் படுகொலை செய்யப்பட்ட உயிர்களை நினைவுகூர ஒவ்வொரு மே மாதத்திலும் தமிழ் மக்கள் முனையும் போதெல்லாம் அரசாங்கத்தின் அதிகாரக் கரங்கள் அதைத் தடுத்திடக் காத்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட இந்த வன்முறை இன்று வரைக்கும் தீர்ந்த பாடில்லை.
2012 ஆம் ஆண்டு மே மாதம் பதினேழாம் திகதி பளை கத்தோலிக்க தேவாலயத்துக்குள் திடீரென நுழைந்த இராணுவம், இறுதி யுத்தத்தின் போது மரித்தவர்களை நினைவுகூரும் விதமான எவ்விதப் பூஜைகளும் நிகழ்த்தப்படக் கூடாதென அங்கிருந்த அருட்தந்தையிடம் உத்தரவிட்டது. அது மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சி நிகழ்ந்த காலம். அவர் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டு, மரித்தவர்களை நினைவுகூரும் மனிதாபிமானத்துக்கெதிராகக் கிளர்ந்து நின்ற நாள் அது.
அது மாத்திரமல்லாது 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரது ஆட்சிக் காலத்தில் சிறைச்சாலைக்குள் வைத்து படுகொலை செய்யப்பட்ட அரசியல் சிறைக் கைதிகளான வவுனியா கணேஷன் நிமலரூபன், யாழ்ப்பாணம் தில்ருக்ஷான் மரியதாஸ் ஆகியோரது சடலங்களும் கூட ராஜபக்ஷ அரசாங்கத்தை அக் காலத்தில் அச்சுறுத்தின. அந்த உடல்களுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு அவற்றை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் வாரக் கணக்கில் தாமதப்படுத்தியது அரசாங்கம். இறுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைத்த பின்னரும் கூட இறுதிச் சடங்குகளை எவ்வாறு எளிமையாக நடத்த வேண்டும் என்று தீர்க்கமாக உத்தரவிட்டிருந்தது.
இவ்வாறாக, அக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமிழர்களின் சடலங்களைக் கூடக் கண்டு பயந்தது போலத்தான் கடந்த நல்லாட்சி அரசாங்கமும் கூட, நீதிமன்றத்தால் விடுக்கப்பட்டிருக்கும் தடை உத்தரவைக் கையில் வைத்துக் கொண்டு யுத்தத்தில் மரித்தவர்களின் பெயர்கள் தாங்கிய கற்பதாகைகளைக் கண்டு பயந்து கொண்டிருக்கிறது.
படிக்க:
♦ ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!
♦ அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram
எவ்வாறாயினும், தமிழர்கள் ஒவ்வொருவரும் மஹிந்த ராஜபக்ஷவின் மோசமான சர்வாதிகார ஆட்சியை தோற்கடிக்கச் செய்து தாம் கனவு கண்ட சுதந்திரமான நல்லாட்சியைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் 2015 ஜனவரி மாதம் எட்டாம் திகதி கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க, தமது வாக்குகளைப் பயன்படுத்தியிருந்தார்கள்.
அதன் பலனாக 2015 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்கு, யுத்தத்தில் மரித்த தம் சொந்தங்களை நினைவுகூர அனுமதி கிடைத்தது. 2016 ஆம் ஆண்டும் கூட முள்ளிவாய்க்காலிலும், கிளிநொச்சியிலும் இன்னும் வடக்கின் பல இடங்களிலும், கிழக்கிலும் தமிழர்கள் தாம் இழந்த உறவுகளை நினைவு கூர்ந்து விளக்கேற்றி பூஜை செய்தார்கள். அதற்கு அப்போது எவ்வித தடையுத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அப் பூஜைகளால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் கூட ஏற்படவில்லை.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந் நிலைப்பாடு தடம் புரண்டது. இலங்கையில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூர்வதற்காக அவர்களது பெயர் விபரங்கள் கற்பதாகைகளில் பொறிக்கப்பட்டு அவை முள்ளிவாய்க்கால் தேவஸ்தானத்துக்கு அண்மித்த நிலத்தில் புதைக்கப்பட்டு, மரணித்தவர்களை நினைவுகூரும் சடங்கிற்கெதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கம் 2017-ம் ஆண்டு மே மாதம் 17-ம் திகதி நீதிமன்றத் தடையை இட்டது.
வருடத்துக்கொரு தடவை தமது உறவுகளை நினைவுகூறும் அச் சடங்கு தீவிரவாதக் கொண்டாட்டம் எனக் கூறியவாறு ராஜபக்ஷவின் அடிச் சுவட்டிலேயே தமது பாதங்களைப் பதித்துச் சென்று மரித்தவர்களை நினைவுகூர்வதற்கான தடையுத்தரவை நீதிமன்றத்தினூடாகப் பெற்றுக் கொண்டது கடந்த அரசாங்கம். இதன் மூலமாக ‘நல்லாட்சி’ எனும் பெயரில் ஒளிந்து கொண்டிருந்த அரசின் கோரமான நிஜ முகமும், மஹிந்தவின் மோசமான எண்ணக் கருக்களும் வெளிப்பட்டிருந்தன. இவ்வாறாக கொல்லப்பட்ட தமது அன்புக்குரியவர்களை நினைவு கூர்வதைத் தடுக்க நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுக் கொண்டிருந்த ஒரு அரசாங்கத்திடமிருந்து எவ்விதமான நல்லாட்சியை எதிர்பார்த்திருக்க முடியும்?
படிக்க:
♦ அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! மாநாட்டு நிதி தாரீர் !!
♦ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து லண்டனில் கூட்டம் நடத்தும் டிஐஜி வீ. பாலகிருஷ்ணன்
முள்ளிவாய்க்காலில் படுகொலையான ஆயிரக்கணக்கான மக்களுக்கென்று 2017-ம் ஆண்டு வரைக்கும் ஒரு கல்லறை கூட இருக்கவில்லை. அதுவரைக்கும் மரித்தவர்களின் உறவுகள் ஒவ்வொரு வருடமும் மெழுகுதிரி ஏற்றி வைத்து பூக்களிட்டு வழிபட்டதெல்லாம் தாமாக மனதில் வைத்துப் பூஜித்து வந்த கல்லறைகளின் முன்புதான். குரூரமான இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மனிதர்களில், இருநூற்றைம்பது பேரை அவர்களது உறவுகளின் சாட்சிகளோடு இனம் கண்டு பெயர், முகவரி, வயது, காலமான தினம் போன்ற தகவல்களைத் திரட்டியெடுத்து அவற்றை கருங்கல் பதாகைகளில் தமிழில் பொறித்து முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நினைவிடத்துக்கருகிலேயே புதைக்க ஏற்பாடு செய்தது ஒரு அரச சார்பற்ற நிறுவனம். அந்த இடம் 2017-ம் ஆண்டு மே மாதம் 18-ம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பதினேழாம் திகதி இரவு அதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மரணித்தவர்களை நினைவுகூர்வது மக்களின் உரிமை என்றபோதும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த தடை உத்தரவில் ‘நாட்டின் ஒற்றுமை, தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமை’ ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, காவல்துறையினரால் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனுவுக்கேற்ப எதிர்காலத்தில் மீண்டும் தலைதூக்கக் கூடிய தீவிரவாதப் போக்கை உத்தேசித்து இத் தடை உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
பல மணித்தியாலங்களாக நீடித்த வாதப் பிரதிவாதங்களின் பின்னர் முள்ளிவாய்க்கால் தேவாலயத்தினுள்ளே மாத்திரம் மரித்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய அனுமதித்த நல்லாட்சி அரசாங்கம் கற்பதாகைகள் பொறிக்கப்பட்டிருந்த நிலத்தில் எவ்விதப் பூஜையையும் செய்ய அனுமதிக்கவில்லை.
இந்த நிலைப்பாடு கடந்த 2018-ம் ஆண்டு வேறொரு விதத்தில் தொடர்ந்தது. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் கொழும்பில் இடம்பெற்ற செய்தி மாநாடொன்றில் வைத்து அமைச்சர் ராஜித, யுத்த கால கட்டத்தில் பொதுமக்களும் கூட கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களை நினைவுகூர இடமளிக்க வேண்டுமென்றும் தெரிவித்ததைத் தொடர்ந்து தீப்பற்றிக் கொண்ட ஊடகங்கள், சமூக வலைத்தளங்களினூடாக பற்றியெரியத் தொடங்கியிருந்தன.
இந் நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதி கடற்கரையில் ஒன்றிணைந்த நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவு கூர்ந்து மெழுகுதிரி ஏற்றி வைத்து அமைதியாக பிரார்த்தித்தார்கள். அந்த அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளைக் கண்டுகொள்ளாத சிங்கள சமூக வலைத்தள வீரர்கள் அங்கு இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்வைக் கண்டு தமது இராணுவத்தின் பெருமை பாடத் தொடங்கினார்கள்.
அதாவது மரித்தவர்களை நினைவு கூர வந்த தமிழ் மக்களுக்கு, இலவச குளிர்பானங்களை வழங்கிக் கொண்டிருந்தது இராணுவம். அதனைக் கருத்திற்கொண்டு மீண்டும் இராணுவத்தின் புகழ்பாடி அதனை உச்சத்திலேற்றிக் கொண்டாடித் தீர்த்தன சிங்கள சமூக வலைத்தளங்கள்.
விடயம் அதுவல்ல. இன்றும் கூட தமிழர்களின் இடங்களைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும் இராணுவம், இன்றும் கூட அப் பகுதிகளில் இராணுவ முகாம்களை நிறுவி வரும் இராணுவம், மரித்தவர்களின் கல்லறைகளையும் கூட புல்டோஸர்களால் அழிக்கும் இராணுவம், கிளிநொச்சியில் வைத்து இராணுவத்திடம் ஒப்படைத்த தமது உறவுகளைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் ‘எம்மிடம் அவ்வாறானதொரு பட்டியல் இல்லை’ எனக் கூறும் இராணுவம், உண்மையில் மரித்தவர்களை நினைவுகூர வந்த தமிழ் மக்களுக்கு இவ்வாறாக இலவச குளிர்பானங்களை வழங்கியது ஏன்?
கொலைநிலமான முள்ளிவாய்க்காலை நினைவுகூர்வதை தெற்கிலிருக்கும் சிங்கள மக்களில் அனேகமானவர்கள் எதிர்க்கும்போது வடக்கின் இராணுவம், நினைவுகூர வருபவர்களுக்கு இலவச குளிர்பானங்களை வழங்கியது ஏன்?
சித்திரவதைகளையும், படுகொலைகளையும் முற்றுமுழுதாக எதிர்க்கும் பௌத்த மதத்தை முன்வைத்து தம்மை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள இராணுவம் முயற்சிப்பதை வடக்கில் பரவலாக வைக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த விகாரைகளின் மூலமாகக் காணலாம். உண்மையில், இராணுவம் வடக்கில் இன்றும் கூட தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இவ்வாறுதான்.
இராணுவத்தின் அவ்வாறானதோர் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியே இந்த இலவசக் குளிர்பானத் திட்டம். முள்ளிவாய்க்காலில் கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கொல்லப்பட்டார்கள். அது இலங்கை இராணுவத்துக்கு நன்றாகத் தெரியும். அந்தக் குற்ற உணர்விலிருந்து விடுபட அது எடுக்கும் முயற்சிகளில் ஒன்றே இவ்வாறான ‘நற்சேவை’.
இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்கள் எப்போதும் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். இலங்கை இராணுவமானது தனது குற்ற உணர்விலிருந்து விடுபட வேண்டிச் செய்யும் இவ்வாறான நற்கருமங்கள் மீண்டும் மீண்டும் வடக்கின் தமிழ் மக்களது சுதந்திரத்தைப் பறிப்பதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.
எனவே தற்போதைய அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் தமிழர்கள் கூடுமிடங்களிலெல்லாம் இராணுவத்தைக் கொண்டு இலவச குளிர்பானங்களைப் பகிர்வதல்லாது, தமிழர்களது இடங்களிலிருந்து இராணுவத்தையும், இராணுவ முகாம்களையும் முற்றுமுழுதாக அகற்றி அம் மக்களுக்கு பரிபூரணமான சுதந்திரத்தை வழங்குவதுதான். இறுதி யுத்த காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துவதுவும், முள்ளிவாய்க்காலின் அடிப்படை உரிமையை தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதுவும்தான் உண்மையில் இலங்கையின் சிறந்த ஆட்சியாக அமையும்.
– எம். ரிஷான் ஷெரீப்