சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம். தென்னிந்தியாவின் மிகப்பெரும் நுழைவாயில். இங்கிருந்து காஷ்மீர், கன்னியாகுமரி, கவுகாத்தி என்று இந்தியாவின் எல்லா முனைகளுக்கும் 70 க்கும் மேற்பட்ட தொடர்வண்டிகள் இயங்குகின்றன. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து 50 க்கும் மேற்பட்ட தொடர்வண்டிகள். ஆக வாரத்தின் 7 நாட்களிலும் 24 நேரமும் கண்ணயராமல் இருக்கும் இடம்.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் முக்கிய இயங்கு உறுப்பாக இருப்பவர்கள் 300-க்கும் மேற்பட்ட போர்ட்டர்கள் எனப்படும் சுமைதூக்கும் தொழிலாளிகள்.

20 முதல் 80 வயது வரை உள்ள இந்தத் தொழிலாளிகள் சிவப்பு சீருடை அணிந்து நடைபாதையின் எல்லா முனைகளுக்கும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஓட்டத்தின் இடையே ஒரு காலைப்பொழுதில் அவர்களைக் குறுக்கிட்டோம்.

***

கோவிந்த்

லக்கேஜ பாத்துட்டு பிளாட்பாரத்தின் அடுத்த முனைக்கு ஓடுவோம்; பக்கத்தில போனதும், வேணாம் நாங்களே இழுத்துப் போறோமுன்னு சொல்வாங்க.

“எனக்கு எங்கப்பா கொடுத்த வேல இது; அவருக்கு எங்க தாத்தா கொடுத்தது. நான் மூனாவது தலைமுறை. எம் பையன் இந்த வேலைய விரும்புவானான்னு தெரியல. விடியக்கால 3 மணிக்கு வந்தேன், இப்ப பகல் 11 மணியாகுது. இதோ இந்த ஒத்த 50 ரூபாதான் வருமானம்” என்று பணத்தை நீட்டினார்.

“இன்னும் காலையில சாப்பிடல, அடுத்து கூலி கெடக்குமான்னு தெரியல, அதனால இத ஒடைக்காத (செலவு செய்யாமல்) வச்சிருக்கேன். மதியம் சாப்பிடணும், எந்த கெட்ட பழக்கமும் இல்ல, அதனால தப்பிச்சிட்டேன். கட்டிங் போடுறவனாயிருந்தா இன்னேறம் பயித்தியம் புடிச்சிருக்கும்.

படிக்க:
தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?
♦ வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன் கவிதை

ஒரு ரயிலுக்கு ரெண்டு மூனு பேர்தான் கூலின்னு கூப்பிடுறாங்க- ஒரு ட்ரெயினுக்கு 12 கோச். ஒரு கோச்சுக்கு 72 சீட்டு. கணக்கு போட்டுக்குங்க. இதில அதிகபட்சம் 5 பேருகூட கூலிக்கு கூப்பிடுறதில்ல. எவ்வளவு வெயிட்டா இருந்தாலும் அவங்களே இழுத்து போயிடுறாங்க. நாலு வீலு, ஆறு வீலு, எட்டு வீலு சூட்கேசல்லாம் வந்துருச்சு. 5 வயசு கொழந்த 50 கிலோ சூட்கேச விளையாட்டா இழுத்துப் போகுது. குழந்தைங்களுக்குள்ளே போட்டி வேற. அழுது அடம்புடிச்சு அப்பா கையிலேருந்து வாங்கி இழுத்துப் போகுதுங்க. நாம பேச முடியல. லக்கேஜ் இருக்குறத பாத்துட்டு இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிக்கு ஓடுவோம், வேணாம் நாங்களே இழுத்துப் போறோமுன்னு சொல்வாங்க, வெறுங்கையோட திரும்புவோம். ஒரு பிளாட்பாரத்தை ஓடி திரும்புனா ஒரு கிலோ மீட்டர். இப்படி சும்மா சும்மா பல கிலோ மீட்டர் ஓடுவோம்.

சுமைதூக்கும் தொழிலாளர்களின் அடையாள அட்டை.

அடுத்தடுத்து ட்ரெயின் வரும்போது விடாம ஓடுறதுனால கிர்ருனு தலை சுத்தும். அப்பப்ப உட்கார்ந்து சமாளிப்போம். மாசத்துல சில நாளுகூட முழுசா 500 ரூபாய எடுத்துப் போகமுடியல. 200, 300ஐ தாண்ட மாட்டேங்குது. பல நேரம் அதுவும் கெடைக்காது.

பல வேளை டீ கூட கடன்லதான் குடிப்போம். 30 ரூபா பட்ட சோத்துக்கு பக்கத்துல உள்ளவன்தான் கடன் கொடுப்பான். இப்படித்தான் போகுது பொழப்பு.

வீட்டு வாடகை, பசங்க படிப்பு, சாப்பாட்டுச் செலவு, கரண்ட் பில்லுனு இந்த கஷ்டத்த தலையில ஏத்துனா வேற சுமைய தலையில ஏத்த முடியுமா? இப்படித்தான் வாழ்க்கை ஓடுது” என்றார்.

நாம் அவரிடம், “இவ்வளவு ஜனங்களையும், ரயிலையும் பார்க்குறீங்களே, நீங்க குடும்பத்தோட டூர் போயிருக்குறீங்களா? என்றோம்.

நம்மை ஆழமாகப் பார்த்தார். பிறகு பெருமூச்சுவிட்டபடி, “அப்படியெல்லாம் நெனச்சுக்கூட பார்த்ததில்ல…” என்றார்.

***

மதுரை

நடக்க முடியாதவுங்கள மூட்ட மாதிரி தோளு மேல சாச்சிகிட்டு போயி வண்டியில ஏத்தி விடுவோம். ஆனா, எங்கள தாங்குறதுக்குத்தான் யார் இருக்கா?

எனக்கு 54 வயது. கூலியா வந்து 25 வருஷமாகுது. கேரள பொழப்பு மொத்தமா போயிருச்சு. இங்கேருந்து யாரும் எந்த சரக்கும் வாங்கிப் போறதில்ல. ‘எந்தப் பொருள் கையில இருந்தாலும் அதுக்கு பில்லு எங்கேன்னு கொடச்சல் கொடுக்குறாங்க; ஜி.எஸ்.டி இல்லாத பில்ல ஏத்துக்க மாட்டேங்குறாங்க; நாங்க பொழப்பு நடத்த முடியலன்னு’ வியாபாரிங்க சொல்றாங்க. என்னமோ நடக்குது நாட்டுல. எல்லாரு வயித்துலயும் அடிச்சிட்டாங்க.

பணம் செல்லாதுன்னு சொன்னபோதே பாதி தொழில் போச்சு. இப்ப ஜி.எஸ்.டியால மீதித் தொழிலும் போச்சு.

படிக்க:
நானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை
♦ ஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் ! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

எங்க பொழப்ப ஏன் கேக்குறீங்க… வெள்ளச்சட்ட போட்ட பிளைட் டிரைவரா இருந்தாலும், ட்ரெயின் கார்டா இருந்தாலும் சரி…! அவங்களுக்கெல்லாம் குறிப்பிட்ட நேரந்தான் வேல, எங்கள மாதிரி செவப்புச் சட்டக்காரங்களுக்கு 24 மணி நேரமும் வேல. நடு ராத்திரி 12 மணிக்கு வந்து லக்கேஜோடு வந்தாலும் நாங்க ஓடுவோம்.

கூலி மட்டுமில்ல, நடக்க முடியாதவங்கள மூட்ட மாதிரி தோளு மேல சாச்சிகிட்டு போயி வண்டியில ஏத்தி விடுவோம். ஆனா, எங்கள தாங்குறதுக்குத்தான் யாரும் இல்ல.

நாள் முழுக்க இங்கே இருந்துட்டு வெறுங்கையோட வீட்டுக்கு போனா, சண்டைதான் வருது. நாங்க ஏதோ தெண்டச் செலவு செய்யிற மாதிரி, வீட்டம்மாங்க நேரடியா இங்கேயே வந்து கூலிக்காக நிக்கிறாங்க. கையில இருக்குற 50, 100 வாங்கிட்டுப் போறாங்க.

எங்க பாடாவது பரவாயில்ல, கல்யாணம் கட்டுன சின்னதுங்க, ‘இவன கட்டிகிட்டு நான் என்னதான் பண்றதுன்னு’ கண் கலங்குதுங்க. எதிர்காலம் கலக்கமா இருக்கு.

***

முருகேசன் (74)

சின்ன வயசுல 100 கிலோ லக்கேஜ அனாயசமா தோள்ல தூக்கிப் போடுவேன். இப்போ, 40, 50 கிலோவுக்கே மூச்சு வாங்குது.

அடுத்த வருசம் வந்தா, நான் சென்ட்ரலுக்கு வந்து 50 வருசமாகுது. சின்ன வயசுல 100 கிலோ லக்கேஜ அனாயசமா தோள்ல தூக்கிப் போடுவேன். இப்போ 40, 50 கிலோவுக்கே மூச்சு வாங்குது. அந்தக் காலத்துல இவ்வளவு போக்குவரத்து இல்ல. இப்ப எது கேட்டாலும் வாசல்படிக்கே வந்து நிக்குது. நம்மள மாதிரி கூலிகள யாரு சட்டப்பண்ணுவாங்க-

எனக்கு வயசாயிடுச்சு, நான் போகப்போறேன். படிச்சி முடிச்ச சின்னப் பசங்க இங்கே அல்லாடுறதுதான் கஷ்டமா இருக்கு.

***

ஜெயவேலு

ஃபோன தட்டுனா எல்லாமே கெடைக்குது. பின்ன எதுக்கு சுமைய தூக்கிகிட்டு வரணும். இப்பல்லாம் ஸ்டைலா தோள்பையோட போறாங்க.

நான் பிளஸ் டூ படிச்சிருக்கேன். நான் கூலியா வந்து 10 வருசமாகுது. இப்ப எல்லாமே ஆன்லைனிலேயே கிடைக்குது. ஊருக்குப் போக டிக்கெட்டு முதற்கொண்டு, சாப்பிடுற சோறு வரை எல்லாமே ஃபோன தட்டுனா கெடைக்குது. பின்ன எதுக்கு சுமைய தூக்கிகிட்டு வரணும். கைய ஆட்டிகிட்டு வர்றாங்க, ஸ்டைலா தோள்பையோட போறாங்க. முன்ன மாதிரி மூட்ட முடிச்சோட இப்ப யாரும் வர்றதில்ல.

***

பாலகுரு

போர்ட்டருக்கு சேர்ந்தா கேங்க் மேன் வேல கெடைக்குமுன்னாங்க; இப்போ கூலி வேலைதான் நெறந்தரமுன்னு ஆயிடுச்சு.

12-வது படிச்சிட்டு ஐடிஐ முடிச்சிருக்கேன். இங்கே போர்ட்டருக்கு சேர்ந்தா கேங்க் மேன் வேல கெடைக்குமுன்னு சொன்னதுனால ஆசைப்பட்டு வந்தேன். ஆனா, கூலி வேலைதான் நெறந்தரமுன்னு ஆயிடுச்சு.

படிக்க:
திருச்சி: ரெயில்வே திமிரை அடக்கிய சுமைப்பணி தொழிலாளிகள்
♦ நூல் அறிமுகம் : நினைவழியா வடுக்கள்

நாங்க ரவுடித்தனம், திருட்டுத்தனம் பண்றதா சிலர் புரளியை கௌப்புறாங்க. ஆனால், பயணிங்க மறந்து  போன, விட்டுட்டுப் போன பொருளுங்களையெல்லாம் எஸ்.எம்.ஆர் ரூம்ல ஒப்படைச்சிருக்குறோமுன்னு போயி கேளுங்க.

இரயில் நிலையத்திலேயே தவறவிட்ட பயணிகளின் பொருள்களை அலுவலகத்தில் ஒப்படைத்ததற்கான ஒப்புகைச் சான்று.

***

பீட்டர்

தண்டவாளத்துல தலைய கொடுத்த மாதிரிதான் எங்க கதை. இப்ப இருக்கவும் முடியல, வெளிய போகவும் முடியல.

நான் டீச்சர் ட்ரெயினிங் முடிச்சிருக்கேன். எங்கப்பா எடத்துல கூலியா வந்தேன். 2008ல லல்லு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சரா இருந்தபோது, போர்ட்டருங்கள கேங்மேனா நெரந்தரமாக்குனாரு. அந்த மாதிரி இப்ப செய்வாங்களோன்னு எதிர்பாக்குறேன். இப்போ போகவும் முடியல, இருக்கவும் முடியல. தண்டவாளத்துல தலைய கொடுத்த மாதிரிதான் எங்க கதை.

***

சைமன்

இப்போ போலீசு கெடுபிடி அதிகமாயிடுச்சு. காக்கிச் சட்டப் போட்டு வர்றவனெல்லாம் எங்கள அதட்டுறாங்க. இங்கே உட்காராதே, அங்கே நிக்காதேன்னு ரூல்ஸ் பேசுறாங்க. 24 மணி நேரமும் இங்கே நிக்கிறது போலீஸ்காரங்களுக்கு தலைவலியா இருக்கு. அவங்கள வாச் பண்றதா நெனச்சிக்கிறாங்க. அவங்களோட தப்ப மறைக்கிறதுக்கு நம்ம மேலே திருட்டுப்பட்டம் கட்டுறாங்க.

***

ஜெகன் பவுல்ராஜ் (ரயில்வே போர்ட்டர் சங்கத்தின் பொறுப்பாளர்)

வீல் வச்ச சூட்கேசு, பேட்டரி காருன்னு வந்தது போயி, இப்போ செல்ஃப் ட்ராலி வேற வரப்போகுதாம். இனி நாங்க வீட்டுக்குப் போகவேண்டியதுதான்.

இங்கே யார்கிட்டேயும் ஒற்றுமை இல்ல. பின்னாலதான் புலம்புவாங்க, எதையும் தடுக்க முடியல.

பேசஞ்சர் வீல் வச்ச சூட்கேச எடுத்து வந்தது போயி, இப்போ இங்கேயே பேட்டரி கார் வந்துருச்சு. மொதல்ல ஹான்டிகேப்புக்குனு சொன்னாங்க. இப்ப பேட்டரி கார கான்ட்ராக்டுக்கு விட்டு ஒருத்தருக்கு 10 ரூபா வசூல் பண்றாங்க. லக்கேஜ் மொத்தமும் அதுலதான் போகுது. இத கேக்க யாரும் வரல.

இதுல செல்ப் ட்ராலி வேற வரப்போறதா சொல்றாங்க. அது வந்தா சுத்தம். எல்லா கூலிகளும் வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.

ஊருக்குப் போற ஒவ்வொரு டிக்கெட்டையும் நிமிசத்துக்கு ஒரு வெல விக்கிறான். டைனமிக், தக்கல் விதவிதமா பேரு வேற. அத யாரும் கேக்கல. ஆனால், கூலி கொஞ்சம் அதிகம் கேட்டா, ரவுடித்தனமுன்னு போலீசிடம் கம்ப்ளயின்ட் பண்றாங்க.

சமீபத்துல வெளியில நிக்கிற ஆர்.பி.எப் எங்கள அதிகமா மெரட்டுறாங்க. இவங்க எல்லாம் நேத்து வந்த சின்னப் பசங்க. நாங்க 50 வருசமா தொழில் பண்றோம். இனிமே அவங்ககிட்டேதான் கையெழுத்து போட்டு உள்ளே போகணுமுன்னு சொல்றாங்க. இப்பவே அவங்களோட அட்டகாசம் தாங்க முடியல. சட்டம் வந்தா என்ன பண்ணுவாங்களோ, எங்க தலையெழுத்து.

இலவச வாடிக்கையாளர் சேவை மையம் போல, தங்களிடம் இரயில் பற்றிய விவரம் கேட்கும் பயணிகளுக்கு சளைக்காமல் உதவுகிறார்கள் இந்த செஞ்சீருடை பணியாளர்கள்.

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க