Sunday, July 21, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்திருச்சி: ரெயில்வே திமிரை அடக்கிய சுமைப்பணி தொழிலாளிகள்

திருச்சி: ரெயில்வே திமிரை அடக்கிய சுமைப்பணி தொழிலாளிகள்

-

ரெயில்வே அதிகாரிகளை அடிபணிய வைத்த சுமைப்பணி தொழிலாளர்களின் போராட்டம்.

திருச்சி ரெயில்வே குட்செட்-ல் 400-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். தமிழகத்தின் சரக்கு கையாள்வதில், நம்பர் 1 குட்செட் என்று வகைப்படுத்தப்பட்ட திருச்சி குட்செட் யார்டுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், இங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை கூட இரயில்வே நிர்வாகத்தால் தரப்படவில்லை. பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து, புகைப்படம் உள்ளிட்ட அடையாள அட்டைக்கான விவரங்கள் அனைத்தும் ஒப்படைத்த பிறகும் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றனர். குட்செட் தொழிலாளி என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருப்பதுடன் இரவில் வேலை முடித்து செல்லும் போது காவல் துறையிடம் சிக்கி தண்டம் கட்டுவதும் அவமானப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. 30 ஆண்டுகளாக இந்தச்சிக்கலுக்கு விடிவில்லை.

trichy-load-men-protest-banner-1மேற்படி 400 தொழிலாளர்கள் மட்டுமின்றி தினசரி பல நூறு லாரிகள் வந்து செல்வதால் அதன் ஓட்டுனர் மற்றும் கிளீனர்கள் வந்து காத்திருந்து சரக்குகளை ஏற்றிச்செல்கின்றனர். இவ்வளவு பேர் கடுமையான பணியில் ஈடுபட்டுள்ள குட்செட்-டில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதில்லை. வியர்வையால் உடல் வற்றி நீர்ச்சத்து அற்று அவதியுறுவதுடன் பலருக்கும் சிறுநீரகக் கல் பிரச்சினை ஏற்பட்டு பெரும் வேதனையையும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகிறார்கள்.

அத்துடன் சிமெண்டிலும் யூரியா போன்ற இரசாயனத்திலும் அழுக்கு மற்றும் உடல் அரிப்புகளைத் தாங்கி வேலை செய்தாலும் வேலை முடித்து குளிக்கக் கூட தண்ணீர் வருவதில்லை. அழுக்கு கோலத்துடன் குளிக்காமல் வெளியில் செல்ல முடியாமல் தண்ணீருக்காக இரவு 12 மணி வரை காத்திருந்தது பத்திரிகைகளில் ஏற்கெனவே அம்பலமாகியுள்ளது. கடுமையான வேலையை முடித்து விட்டு உடல் அசதியுடன் எப்போது கட்டையை சாய்க்கலாமென்று ஒட்டுமொத்த உடலும் ஏங்கும் நிலையில் பசியுடன் துன்புற்ற தருணங்கள் பல உண்டு. இதற்காகவே இந்த வேலையை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு பலரும் சென்று விட்டனர்.

ரெயில்வேயை உலகத் தரத்திற்கு நவீனமாக்குவதாக ஆட்சியாளர்கள் கதைத்து வந்தாலும் தொழிலாளர்கள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் துன்புறும் நிலை மாறவில்லை. பணியிடத்தில் கொட்டகை அமைக்கக் கோரி ஆண்டுகள் பலவாயின. ஆனால், கொட்டகை வந்த பாடில்லை.

அவ்வளவு ஏன், சரக்குகளைக் கையாள அடிப்படையான சாலை வசதியைக் கூட சரிவர செய்து தராமல் குண்டும் குழியுமான சாலைகளில் லாரிகள் தடுமாறுகின்றன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்திய போதெல்லாம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி தருவது, நடவடிக்கை எடுப்பது போல அதையும் இதையும் அளப்பது, ஆய்வு செய்வது என அதிகாரிகள் பாவ்லா செய்வது, பின் அத்தனையையும் கிடப்பில் போடுவது என்பது தொடர் கதையாக உள்ளது. தொழிலாளர்களின் வேதனை மட்டும் தொடர்ந்து கொண்டேயுள்ளது. மீண்டும் கோரிக்கை, மீண்டும் போராட்டம், மீண்டும் வாக்குறுதி, மீண்டும் அதிகாரிகளின் சூரத்தனங்கள், மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்பது…. இப்படி ஒரு முறையல்ல, இருமுறையல்ல நூறு முறைக்கு மேலாக நடந்துள்ளது.

இந்நிலையில், அதிகாரிகள் 27-07-2014 அன்று எழுத்துப் பூர்வமாக தந்த வாக்குறுதியை அமுல்படுத்தாதது குறித்து பேசுவதற்காக 30-04-2015 அன்று CITU தொழிற்சங்கத் தலைவர்கள் சென்ற போது அவர்களை சந்திக்காமல் அலைக்கழித்து அவமானப்படுத்தி திருப்பியனுப்பினர் DRM அலுவலக அதிகாரிகள்.

அதிகாரிகளின் ஆணவமான அலட்சியத்தால் தொடர்ச்சியாக காயப்படுத்தப்பட்ட நிலையில் குட்செட் –ல் செயல்படும் 4 சங்கங்களும் (CITU, AITUC, INTUC மற்றும் பு..தொ.முவின் இணைப்பு சங்கமான சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் ஆகிய சங்கங்கள்) ஒன்று பட்டு 15-ம் தேதி DRM அலுவலக முற்றுகை மற்றும் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தின.

trichy-good-shed-protestகோரிக்கைகள்:

  1. ரெயில்வே குட்செட் யார்டில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் அனைவருக்கும் உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும்.
  2. சுகாதாரமான குடிநீர், கழிப்பிடம், குளிப்பதற்கு தாராளமான தண்ணீர் வசதி, காற்றோட்டமான ஓய்வறை ஆகியவற்றை உடனடியாக செய்து தர வேண்டும்.
  3. வேலையிடத்தில் வெயில், மழை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பாக வேலை செய்ய கொட்டகை (Shed) அமைத்துத் தர வேண்டும்.
  4. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிட்டுத்தர வேண்டும்.
  5. அதிகாரிகளின் அலட்சியம், மெத்தனம், தொழிற்சங்கங்களை அவமதிக்கும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இது பற்றி 9-ம் தேதியே கடிதம் தந்த நிலையிலும் சங்கங்களை அழைத்துப் பேசக்கூட விரும்பவில்லை ரெயில்வே நிர்வாகம். 15-ம் தேதி திட்டமிட்டவாறு வேலைநிறுத்தம் தொடங்கியது. சரக்கு இறக்கி ஏற்றும் வேலை முற்றாக ஸ்தம்பித்தது. லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களும் ஒத்துழைத்தனர். அதன் தொடர்ச்சியாக திருச்சி DRM அலுவலகத்தை முற்றுகையிட தொழிலாளர்கள் திரண்டனர்.

முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்கி விடலாமென்று மனப்பால் குடித்த நிர்வாகம் நூற்றுக்கணக்கான போலீசைக் குவித்தது. கைது செய்வதற்கு ஏதுவாக 3 பேருந்துகளைக் கொண்டு வந்து அச்சுறுத்த முயன்றது. ஆனால், இந்த அச்சுறுத்தலை அலட்சியப்படுத்தி 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் நீண்டகால ஆதங்கத்தை முழக்கங்களாக்கி ஆக்ரோசமாக வெளிப்படுத்தினர். அனைத்து சங்கமும் ஒன்று பட்டு கூட்டாக எதிர்ப்பை தெரிவித்ததால் வேறு வழியின்றி பேச்சு வார்த்தைக்கு அழைத்தது ரெயில்வே நிர்வாகம்.

பேச்சுவார்த்தையின்போது, “ஓய்வறை என்றால் எப்படி…. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வேண்டுமா? தரைக்கு டைல்ஸ் போட வேண்டுமா?” என்றெல்லாம் எகத்தாளமாக பேச ஆரம்பித்தனர் அதிகாரிகள்.

“ஏன் போட்டால் என்ன? ஏ.சி-யில் உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு எங்களின் கோரிக்கை எகத்தாளமாகத்தான் இருக்கும். ஜங்சன் நடைபாதையில் டைல்ஸ் ஒட்டும் உங்கள் நிர்வாகம் வெயிலில் மூட்டை தூக்கி உழைக்கும் எங்களுக்கு ஓய்வறையில் டைல்ஸ் போட்டால் குறைந்து விடுமா?” என்று சூடாகவே எதிர் கேள்வி எழுப்பப்பட்டது.

தண்ணீர் விசயத்தைப் பற்றி பேசும்போது பம்ப் ஹவுஸ் திறன், திருச்சி மாநகரத்துக்கே போதிய தண்ணீரில்லை என்பது போன்ற பொதுவான விசயங்களை முன்வைத்து சில நாட்கள் தண்ணீர் வராததை நியாயப்படுத்தினர்.

“புழுதியிலும் அரிப்பிலும் வேலை செய்துவிட்டு தண்ணீர் வரவில்லை என்று அப்படியே பேருந்தில் ஏறி வீட்டுக்கு செல்ல முடியுமா?” என்றும், “தண்ணீர் வராததற்கான நிலைமையைப் பற்றி பேசும் அதிகாரிகளுக்கு அத்தகைய சூழலை எதிர்கொள்ள தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று சிந்திக்கத் தெரியாதது ஏன்?” என்றும் கேள்வியெழுப்பப்பட்டது.

இவ்வாறே வேலையிடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளாததற்கு தொழிலாளர்களை பொறுப்பாக்கியும் குளிக்குமிடத்தில் குடித்துவிட்டு பாட்டிலை போடுவதாகவும் குற்றம் சாட்டிய விசயத்திற்கும் பதிலடி தரப்பட்டது. இத்தகைய பதிலடிகளால் அதிகார போதை தெளிந்த நிலையில் அடுத்தடுத்த விசயங்களை அடக்கத்துடன் பேச ஆரம்பித்தனர்.

சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை 18-05-2015 – க்குள் வைத்து விடுவதாகவும் அடையாள அட்டை தொடர்பாக முடிவெடுக்க உரிய அதிகாரி வராததால் அன்று முடிவு தெரிவிப்பதாகவும் கூறினர். அந்த அடிப்படையில் முற்றுகையை விலக்கிக்கொண்டாலும் அதிகாரிகள் மீதான நம்பிக்கையின்மை காரணமாக வேலை நிறுத்தத்தைக் கைவிட முடியாது என்று அறிக்கப்பட்டது.

அதிகாரிகள் அவகாசம் கோரியிருந்த 18-05-15 அன்று மதியத்திற்கு மேலும் அடையாள அட்டை வழங்காததால், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் சென்று DRM அலுவலக முற்றுகையை மீண்டும் தொடங்கினோம்.

இனியும் தொழிலாளர்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்த ரெயில்வே நிர்வாகம் அடையாள அட்டை தவிர்த்த அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றுவதாகவும் அதற்கான டெண்டர் நடைமுறைகளை தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தது. தற்போது போதிய கொள்ளளவுடன் கூடிய சின்டெக்ஸ் டேங்க் வைப்பது, ஓய்வறை ஒதுக்கி அதில் டைல்ஸ் பதிப்பது போன்ற ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு நடை பெற்று வருகிறது. சாலை, கொட்டகை தொடர்பான டெண்டர் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டையைப் பொருத்தவரை தமிழகத்தில் எங்கும் வழங்கப்படாததை முன்வைத்து மாநிலம் தழுவிய அளவில் எடுக்க வேண்டிய முடிவு என்பதால் அவகாசம் கோரியுள்ளனர் அதிகாரிகள். நாமும் இக்கோரிக்கைக்காக மாநிலத்தின் அனைத்து குட்செட்டுகளையும் இணைத்து விரிவாக நடத்தலாமென்ற திட்டத்துடன் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்.

trichy-load-men-protest-banner-2ஒன்று பட்ட தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றி தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பே இத்தகைய ஒன்று பட்ட போராட்டத்திற்கு நாம் அழைத்த போது, தாங்கள்தான் பெரிய சங்கம் என்ற கர்வத்துடன் மற்றவர்களைத் தவிர்த்துவிட்டு தனியே பெயரளவிற்கான ஒரு போராட்டத்தை நடத்தியது CITU சங்கம். அதன் மூலம் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலைக்கும் அதிகாரிகளின் அலட்சியத்திற்கும் ஆளான நிலையில் அந்த சங்கத்தின் நிர்வாகிகளில் சிலரே ஒன்று பட்ட போராட்டத்தின் அவசியத்தை உணந்து இத்தகைய ஒற்றுமைக்கான முயற்சியை முன்னெடுத்தனர். இதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு பிற சங்கங்களும் ஊக்கமாக ஆதரித்தன. அதற்குரிய பலனும் கிடைத்துள்ளது. இத்தகைய ஒற்றுமை தொடர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தொழிலாளர்களின் விருப்பமாக உள்ளது.

உரிய ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றுவதன் வாயிலாக ஒற்றுமையை பராமரிக்க முடியும் என்பதை இந்த போராட்டம் உணர்த்தியுள்ளது. இந்த அனுபவத்துடன் அனைத்து குட்செட் தழுவிய அடுத்தகட்ட போராட்த்திற்கான தயாரிப்பை முன்னெடுக்க முயற்சித்து வருகிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல் :
சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்,
( பு.ஜ.தொ.மு-வுடன் இணைக்கப்பட்டது.),
திருச்சி.

  1. கடைனிலை தொழிலாளர்களை தரக்குறைவாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடத்துவது நமது பாரம்பரியம் போலும்! பாரம் சுமக்கும் தொழிலாளர்கள், துப்புறவு பணி தொழிலாளர்கள் ஆகியோர் ஒப்பந்தகாரர் மூலம் பணியில் அமர்த்தப்படுவதால், மற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்கும் தொழிற்சங்க உரிமையும் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது! ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் கூட இவர்களைநேரடி பணியில் அமர்த்தாமல் ஒப்பந்ததாரர் மூலம் அடிமைகளாய் நடத்தப்படுகின்றனர்! இவர்களுக்கான சுகாதார வசதிகள், உணவு மற்றும் குடினீர் வசதிகள் தர நிர்வாகங்களிடம் கேட் கவும் உரிமையில்லையாம்! தொழிலாளர்நல அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை! பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கேவியட், அப்பீல்கள் என்று முடக்கப்பட்டு விட்டன! வீட்டுவேலை செய்வோர், செக்குரிட்டி தொழிலாளர்கள், பாரம் சுமக்கும் மற்றும் டிரான்ஸ்போர்ட் தொழிலாளர்களுக்கு பி எfப், இ எஸ் அய் வசதியில்லை! பணிநேர வரையறையுமில்லை! கூட்டு பேரம், தொழிற்சங்க அங்கீகாரம், விலைவாசி புள்ளியுடன் இணைந்த குறைந்த பட்ச ஊதியம் இவற்றுக்காக போராடும் அமைப்பும் இவர்களுக்கென தனியாக இல்லை! அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, விலைவாசி உயர்வுக்கேற்ற அகவிலைப்படி உயர்வு, வேலைநேர வரயறை அறவே இல்லை! பேங்க், எல் அய் சி மற்றும் அரசுத்துறை தொழிலாளர்கள் பெரும்பாலும் பார்ப்பன, உயர்சாதியினராய் இருப்பதால் போராடி பல சலுகைகளை பெறுகின்றனர்! இந்த அமைப்பு சாரா தொழிலாளார்களுக்கென போராட யாரும் முன்வருவதில்லை, தானாக இணைந்து போராடும் மனத்திண்மையும் இவர்களுக்கு இல்லை! சாதி மற்றும் கள்ள ஓட்டு அரசியல்களுக்கு இவர்களே மூலதனம்! இவர்களிடம் சுயமரிமயாதை உணர்வையும், போராட்ட உணர்வையும் புதிய கலாச்சார அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்!

  2. சங்கம் நடத்துவதைத் தொழிலாகக் கொண்டுள்ளவர்களின் பிடியில் இருந்து சுமைப்பணி தொழிலாளர்களை மீட்டுள்ள புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணிக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். சுமைப்பணி தொழிலாளர்களின் வாழ்வில் விடியல் பிறக்க வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க