கடற்கரைவாசிகள் – (மெரினா பீச்சில் குடியிருக்கும் மக்களின் வாழ்க்கை அனுபவம்)
சென்னை மெரினா கடற்கரை, காலை 6 மணி.
கண்களை போர்த்திய பனிமூட்டம், மயிர்க்கால்கள் விரைத்திடும் குளிர். வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்தோரும் இளைஞர்களும் செல்லும் நீளமான நடைப்பயிற்சி சாலை. சாலை ஓரங்களை ஆக்கிரமித்து நின்ற கார்கள், இருசக்கர வாகனங்கள். இந்தச் சூழலுக்கு சற்றும் பொருந்தாத இன்னுமொரு காட்சியும் நம்மை வரவேற்றது. கக்கத்தில் கிழிந்த போர்வை, வெற்றுடம்பு, கலைந்த தலை, தூக்கக் கலக்கம். இவற்றுடன் மணற்போர்வையை விலக்கி வெளிவரும் மக்கள்.
யார் இவர்கள்?
அடுத்து என்ன செய்வது? எங்கே போவது? என்று ஆயிரம் கேள்விகளுடன் விடிந்த பொழுதை விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள், பிழைப்பு தேடி சென்னைக்கு வருபவர்கள், ஆதரவற்றோர்.
அவர்களிடம் நெருங்கிப் போவதே கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. யாரும் நம்மை சக மனிதனாகப் பார்க்கவில்லை. அவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. நம்மை நோக்கி இறுகிய பார்வை. “உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ” என்ற உடல்மொழிக்கு மேல் அவர்களிடம் எதிர்வினை இல்லை. இருந்தாலும் சிலரிடம் அணுகினோம்.
பக்கிரி
“எங்கள பூம் பூம் மாட்டுக்காரன்னு கிராமத்துல கூப்பிடுவாங்க. வேளாங்கன்னி பக்கம் ஊரு. எங்க தாத்தா, அப்பன் காலத்துல காளைகளை வளர்த்து, அதை அலங்கரிச்சு கிராமம் கிராமமா போயி வாசல்ல நின்னு கையேந்துவாங்க. நெல்லோ, அரிசியோ, பழஞ்சோறா மடியில் விழுந்ததை எடுத்து வந்தாங்க.
இந்தக் காலத்துல அந்தப் பொழப்பு சரிப்படுமா? இப்ப காளைய வளர்க்க முடியுமா? கிராமமும் முன்ன மாதிரி செழுமையாவா இருக்கு! வயிறுன்னு ஒன்னு இருக்குதே, ஆளுக்கொரு புதுத் தொழில புடிச்சிகிட்டோம்.
ஸ்டவ் ரிப்பேர், குடை ரிப்பேர், பிளாஸ்டிக் தொழிலுன்னு (குடம், வாளி விற்பனை) இப்ப தெருத்தெருவா அலையுறோம். வருஷத்துக்கு ரெண்டு வாட்டி மெட்ராஸ் பக்கம் வருவோம். பொங்கல், தீபாவளின்னு வந்தா ஒருமாசம் இங்கேயே தங்கி பொழப்பப் பார்ப்போம். இந்த பீச்சுதான் எங்களோட வீடு. வெட்டவெளிதான் படுக்கை. குளிரு, வெயிலு எல்லாம் பழகிப்போச்சு. கீழே மேலேன்னு உடம்ப பிளாஸ்டிக் சீட்டுனால மூடிக்குவோம். தூங்கியும் தூங்காமலும் பல நாளு போகும். காலை விடிஞ்சதும் வேலைக்கு கௌம்பிடுவோம்.
படிக்க:
♦ மெரினா மூலிகை ஜூஸ் : பிழியப்படும் வாழ்க்கை !
♦ சிலிண்டர் விலை : தேர்தல் முடிஞ்சதும் வச்சான் பாரு ஆப்பு !
இத வுட்டாலும் வேற இடமில்லை. குளிக்கிறது, வெளிக்கு போறது எல்லாம் கட்டணக் கழிப்பிடம், ரயில்வே ஸ்டேசன்னு போகவேண்டியதுதான்.
தெரு மேல போகும்போது சிலபேரு காசு கொடுப்பாங்க; அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க சோறு, பழந்துணிகூட கொடுப்பாங்க. பசியெடுத்தா வாய்விட்டு கேப்போம். இப்படித்தான் எங்க பொழப்பு பிளாட்பாரம், பீச்சுன்னு கழியுது. இப்பெல்லாம் ஊருக்கு திரும்பும்போது 5000 ரூபாகூட தேற மாட்டேங்குது. இப்போ வந்து 10 நாளாகுது. கையில 300 ரூபாகூட இல்ல. தினமும் சாப்பாட்டுக்கே 150, 200-ன்னு ஆகுது. பல நாளு அதுவும் இருக்காது.
முன்ன மாதிரி சுத்த முடியல. எங்கள பொறுத்தவரைக்கும் காலு எந்தளவுக்கு சுத்துதோ அந்தளவுக்குத்தான் சம்பாத்தியம்.”
***
சுரேஷ்
“தரங்கம்பாடி பக்கம் பொறக்குடி ஊரு. நாங்க கழைக்கூத்தாடி. இப்ப கம்பி மேலே நடந்தா யாரும் வேடிக்க பார்க்குறதில்லே. பொங்கல் முடிஞ்சதும் சென்னைக்கு வருவோம். எங்கே சுத்துனாலும் இங்கே வந்து படுத்துப்போம். இந்த இடம்தான் பாதுகாப்பு. ஒரு பக்கம் கடலு, மறுபக்கம் மீனவருங்க. எங்கள யாரும் தொந்தரவு பன்றதில்லே. ரோடு ரோடா போயி மோளம் அடிச்சி காசு கேப்போம். சிலபேரு கொடுப்பாங்க, யாரையும் தொந்தரவு பண்ண மாட்டோம். பெரும்பாலும் பங்களா பக்கம் தலைவைக்கவே மாட்டோம். பகல்ல நோட்டமிட்டு நைட்ல திருடுற கும்பலான்னு கேட்டு திட்டி அசிங்கப்படுத்துவாங்க.
நல்ல நாள்ல சில பேரு காருல வந்து சோத்து பொட்டலம், பிஸ்கட், துணின்னு கொடுப்பாங்க.
வெயில் காலத்துல மெட்ராஸ்ல இருக்க மாட்டோம். குடிக்க தண்ணிகூட கெடைக்காது. இப்பல்லாம் கிராமத்துப் பக்கம்கூட போக முடியல, கொழந்தைங்கள கடத்த வந்தீங்களான்னு தொறத்துறாங்க. பயமா இருக்கு.”
படிக்க:
♦ சாந்தோம் கடற்கரையில் டீ விற்கும் சந்தோஷ் ஊருக்கு போவாரா ?
♦ பொங்கல் : மண்ணைப் போற்றும் அறுவடைத் திருவிழாவா? கதிரவனை வணங்கும் திருவிழாவா?
***
அன்னபூர்னா
“சொந்த ஊரு சீர்காழி. ஏன் எங்கள பத்தி கேக்குற, ஏதாவது பணம் கொடுக்க போறீயா?
காலையிலேர்ந்து டீகூட குடிக்கல. பைசா இருந்தா ஏதாவது கொடு. எனக்கு ஒரே மண்ட வலி. பசி வேற…” என நம்மைப் பார்த்து நட்பாக சிரித்தார்.
“நீ சம்பாதிக்கிறத பேங்குல போட்டுடுறீயா?” என்று சீண்டினோம்.
“உடம்பு ஒரே காய்ச்சல், நடக்கக்கூட முடியல. ரோடு மேல போன வீட்டுக்காரரு வந்தாத்தான் சோறு. குழந்தைங்க இதுவரை எதுவும் சாப்பிடல. பையன் ஊருல எட்டாவது படிக்கிறான். அவனும் என்கூட வந்துட்டான். ஆனா, ரோட்டுக்குப் போகலாம் என்கூட வாடான்னா (பிச்சை எடுக்க), வரமாட்டேன்னு அடம்புடிச்சு அழுறான்” என்றார்.
நாம் பையனிடம், “மெட்ராஸ் பிடிச்சிருக்கா?” என்றோம்,
புடிச்சிருக்கு என்று தலையை ஆட்டினான்.
“பெரியவனானதும் என்ன செய்யப் போகிறாய்?” என்றோம்.
“பிளாஸ்டிக் வியாபாரத்துக்கு போவேன்” என்று மகிழ்ச்சி பொங்கினான்.
“ஏன் அம்மாகூட தெருவுக்கு போகமாட்டியா?” என்றதும் அவனது முகம் வாடியது; அந்தச் சிறுவனின் கண்களில் ததும்பிய நீர்த்திவளைகள் பீச்சிட்ட குண்டுகளாய் எமது நெஞ்சை உலுக்கியது.
***
சங்கீதா
சிறுவர்களின் குடை ராட்டினத்தின் அருகில் இரண்டு கைக்குழந்தகளுடன் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தார். “ஏம்மா” என்று குரல் கொடுத்த நம்மைப் பார்த்து மெல்ல எழுந்தார்.
“ஏன் குழந்தைகளோடு படுத்துக்கொண்டிருக்கிறீர்கள், வெளியூரா?” என்றோம்.
அவர் மேலும், கீழும் நம்மைப் பார்த்து எடைபோட்டு “நீங்கள் யார்?” என்றார்.
அவர் அனுமதியுடன் மணலில் உட்கார்ந்து, நம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு, தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
“எனக்கு சொந்த ஊரு மாயவரம். கோயம்பேடு மேட்டுக்குப்பத்தில் சொந்தக்காரங்க இருக்குறாங்க. நாங்க பொலுவா (அம்மி குத்துதல்) வேலை செய்யிறவுங்க. வேலையில ஒருத்தர்கிட்டே நேசமாகி அவரை கல்யாணம் கட்டிக்கொண்டேன். என் கணவரோட சேர்ந்து பட்டினம்பாக்கம் பிளாட்பாரத்திற்கு வந்தேன். அங்கே பக்கத்தில் இருந்தவங்க சரியில்லை. அதனால, பீச்சுக்கு வந்துட்டோம். இதுதான் எங்களுக்கு வீடு, படுக்கை எல்லாமும்” என்றார்.
குழந்தைகள் வெற்றுடம்புடன் மூக்கில் ஒழுகியபடி மணலில் சோர்ந்து கிடந்தனர். நம் அருகில் வந்து தோளோடு தோள் சாய்ந்து ஒட்டிக்கொண்டனர்.
படிக்க:
♦ இந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் !
♦ பயங்கரவாத பாஜக : இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமாம் !
மேலும், தொடர்ந்தார்.
“ரெண்டாவது குழந்தை பொறக்குற வரைக்கும் முதல் குழந்தைய இடுப்புல சுமந்து தெருத்தெருவா அலைஞ்சேன். இப்போ ரெண்டு குழந்தைங்குறதுனால வெளிய போறது சிரமமாயிருக்கு.
எங்க வீட்டுக்காரரு ரோட்டோரமா காத்துகிடந்து, கெடச்ச வேலைய செய்வாரு. பெயின்ட் அடிக்கிறது, கொத்தனாரு, கல்யாண வேலை, கிளீனரு… இப்படி எதாவதொரு வேலைக்குப் போயி சம்பாதிச்சு வருவாரு. அந்த வேலைக்கும் இப்ப மேஸ்திரிங்க வந்துட்டாங்களாம். நேரடியா யாரும் கூப்பிடுறதில்லேன்னு கஷ்டப்படுறாரு. எனக்கும் வேலை இல்லை, காலையிலேருந்து குழந்தைகளுக்கு ஒன்னுகூட வாங்கிக் கொடுக்க முடியல” என்றார்.
“இயற்கை உபாதைகளுக்கு என்ன செய்வீங்க?” என்றோம்.
தொடர்ந்தார், “அவசரத்துக்கு பக்கத்துல இருக்குற கக்கூசத்தான் நம்பியிருக்கோம். நான் குளிச்சு மூனு நாளாகுது. உடம்ப சுத்தம் பண்ணக்கூட முடியாது. குளிக்கணும், துணி துவைக்கனுமுன்னா, இங்கேயிருந்து ட்ரெயின் ஏறி வேளச்சேரி ஏரிப்பக்கம் போவோம். இப்போ, குழந்தைங்களயும் தூக்கிக்கிட்டு அலையவேண்டி இருக்கு.
முந்தானையில முடிச்சு போட்டுத்தான் நைட்ல தூங்க வைக்க வேண்டியிருக்கு. இங்கே குழந்தைங்க திருட்டு வேற அதிகம். அந்த பயத்தால ராவுல சரியாக்கூட தூங்குறதில்லை. அதான் பகல்ல கண்ணசந்துட்டேன். சொந்தக்காரங்ககிட்டே போகணுமுன்னாலும் அங்கேயும் பிளாட்பாரம்தான். என்ன பண்றது, சொந்தமா ஒரு வாடகை வீடு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்! வீட்டு சோறு சாப்பிட ஆசையா இருக்கு. எறாத் தொக்கு, மீன் குழம்புன்னு எல்லா குழம்பும் நல்லா வப்பேன்…. இங்கே என்னதான் செய்ய முடியும்?” என்று நம்மைப் பார்த்துச் சிரித்தார். வேதனையின் வெளிப்பாடாய் அந்தச் சிரிப்பு நமது நெஞ்சை இன்னமும் குத்திக்கொண்டே இருக்கிறது.
***
கனகவள்ளி
பார்ப்பதற்கு சிறுமிபோல இருந்தாலும், பெரிய மனுஷிபோல உட்கார்ந்திருந்தார். தோரணை மட்டுமல்ல, பேச்சும் அப்படித்தான் இருந்தது.
“எங்களப் பத்தி கேட்டு என்ன பண்ணப் போறீங்க?” என்றார்.
சிறு அறிமுகத்துக்குப் பிறகு,
“எங்கள தப்பான எண்ணத்துல பாக்குறவுங்கதான் நிறைய பேரு இருக்காங்க. மெட்ராஸ்ல வீடு இல்லாதவுங்க பாடு ரொம்ப கஷ்டம். பாக்குறவுங்க மதிக்க மாட்டாங்க. அசிங்கம் பண்றாய்ங்க.
ப்ளஸ் டூ படிச்சிருக்கேன். என்னோட அப்பா அம்மா கூலிக்காரங்க. நானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன். 7 மாசமாகுது. அவங்க வீட்டுல என்ன மதிக்கல. எப்பப் பார்த்தாலும் மூஞ்சிய காமிச்சிகிட்டே இருப்பாங்க. அதான் சரிப்படாம கௌம்பி வந்துட்டோம்.
படிக்க:
♦ ஓட ஓட விரட்டியது கிராமம் ! ஓடு… ஓடு… என்று துரத்துகிறது நகரம் !
♦ வண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை ! – படக்கட்டுரை
அவன் (கணவன்) வேலைக்கு கௌம்பிட்டான். கொஞ்சம் பணம் சேர்ந்தா ஊருக்குப் (கடலூர்) போயிடுவோம். இப்ப கையில காசு பணம் எதுவுமில்ல. இந்த நெலமையில அங்கே போனா, மாசம் மாசம் வாடகை எப்படி கொடுக்குறது, எப்படி சாப்பிடுறதுன்னு ஒரே யோசனையா இருக்கு. இங்கேயும் (பீச்) நிம்மதியா இருக்க முடியல. கொஞ்சம்கூட மரியாதையாவும் வாழ முடியல. கண்டவனும் முறைச்சுப் பார்க்குறான். வண்ட வண்டயா பேசினாலும் போக மாட்டேங்குறாய்ங்க. கல்ல எடுத்து அடிச்சாத்தான் போவானுங்க போல. சீக்கிரம் ஊரு பக்கம் போயிடணும்.
இங்கே வீடு இல்லாதவனுக்கு வேல இல்லேங்குறாங்க; வேலை இல்லாம எப்படி வீடு புடிக்க முடியும்? வாடகை கொடுக்க முடியும்? அது இவங்களுக்குப் புரியாதா?” என்றார்.
அவருக்கு என்ன பதிலைச் சொல்வது என்ற யோசனையில் எழுந்தோம்,
உடற்பயிற்சி முடித்தவர்கள் களைப்பு நீங்க இளநீர், மூலிகைச்சாறு பருகினார்கள். சிலர், வாகனங்களில் வீட்டை நோக்கிப் பறந்தனர். டயர்களில் ஒட்டிக்கொண்டிருந்த மணற்துகள் பொளபொளவென சிதறி மீண்டும் கடற்கரை தழுவியது.
வினவு புகைப்படச் செய்தியாளர்கள்