Tuesday, May 17, 2022
முகப்பு தலைப்புச் செய்தி மெரினா மூலிகை ஜூஸ் : பிழியப்படும் வாழ்க்கை !

மெரினா மூலிகை ஜூஸ் : பிழியப்படும் வாழ்க்கை !

நடைபயிற்சிக்கு வருபவர்கள், இயற்கை உணவுப் பிரியர்களுக்காக மெரினாவில் விடியற்காலை 5 மணிமுதல் வேலைகளைத் தொடங்கும் தொழிலாளிகள்.

-

சில்லென்ற கடற்காற்றுடன் கார்மேகம் தூறலை தெளித்துக் கொண்டிருந்தது. நம்மாவாழ்வார் இலட்சிணை பொறித்த டி-சர்ட்டுடன் இளைஞர்கள்.

ஒருவர் கற்றாழையை வகுந்து சோற்றை ஒரு பாத்திரத்தில் சேகரிக்கிறார். இன்னொருவர் வாடிக்கையாளர்களுக்கு மண்குவளையில் சூப் பரிமாறிக் கொண்டிருக்கிறார். வேறொருவர் ஆனைநெருஞ்சிச் செடியை நீரில் முக்கி சாறு எடுத்துக்கொண்டிருக்கிறார். இப்படியாக மும்முரமாக சூப் மற்றும் ஜூஸ் விற்பனை நடந்துகொண்டிருக்கிறது.

கடை உரிமையாளர் ரவி

கடை உரிமையாளர் ரவி கூறும்போது,

சொந்த ஊரு மதுரை. இயற்கை உணவுமீது எனக்கு ரொம்ப ஆர்வம். அய்யா நம்மாழ்வார் பேருல, ஃபிரெண்ட் மகாலிங்கத்தோடு பார்ட்னரா சேர்ந்து இந்தக் கடையை நடத்திகிட்டிருக்கேன். மெரினா, பெசன்ட் நகர் மட்டும் இல்லாம இன்னும் ரெண்டு எடத்துல கடைபோட்டிருக்கோம்.

மொத்தம் 12 பேர் வேலை செய்யிறோம், எல்லாம் சொந்தக்காரங்கதான். கிட்டதட்ட ஆறு வருஷமா இந்தக் கடையை நடத்திகிட்டிருக்கோம். இப்ப, ஜூஸ், சூப், புட்டு, இனிப்பு என 30 வகையான உணவுகளை தயார் செய்கிறோம். கடவுள் புண்ணியத்துல ஒரு நாளைக்கு ஆறாயிரம், ஏழாயிரம் சம்பாதிக்கிறோம் என்று மனநிறைவோடு கூறுகிறார்.

மேலும் தொடருகிறார். “காலை அஞ்சிலேருந்து பத்தரை மணி வரைக்குதான் வியாபாரமே. அப்புறம் எல்லாத்தயும் மூட்டகட்டிகிட்டு வேனுல தூக்கிட்டு கௌம்பிடுவோம். அதுக்கப்புறம்தான் வேலையே. வீட்டுக்குப் போனதும் எல்லா பாத்திரங்களையும் கழுவ ஆரம்பிப்போம். அதை பிரிச்சி அடுக்குறதுக்கு பெரும்பாடாயிடும். பகல் 2 மணிக்குதான் மொத்த வேலையும் முடியும். ஏதோ குடும்பத்தோடு செய்யிறதுனால கொஞ்சம் கஷ்டம் இல்லாம போகுது. அப்புறம் அடுத்த நாளுக்குத் தேவையான கீரை, காய்கறிகளுக்கான ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்” என்றார் ரவி.

ஒரு ட்ரேயில் சக்கைகளை சேர்த்து, காட்சிக்கு வைத்திருந்தார்கள். இது என்ன புது அயிட்டம் என்று கேட்டதற்கு, “இதெல்லாம் பாத்தாத்தான் சில கஸ்டமர்கள் ஃப்ரெஷ்ஷா இருக்குன்னு நம்புவாங்க. அதனால தினமும் ஜூஸ் போடும்போது, அதன் சக்கையை எடுத்து வைப்போம்” என்றார்.

இதுவரை ரவுடிங்க தொந்தரவு எதுவுமே இல்ல. மகிழ்ச்சியா கடையை நடத்திகிட்டிருக்கோம் என்று கூறிக்கொண்டிருக்கும்போதே, ஜீப்பிலிருந்து இரண்டு போலீஸார் இறங்கி வந்தார்கள். டேய் தம்பி, சார் ரெண்டுபேருக்கும் கேப்பங் கூழும் பருத்திப் பாலும் ஊத்திக் கொடுப்பா என்று கூறிவிட்டு, நம்மை நோக்கி ஒரு மெல்லிய பார்வையை வீசினார்.

ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய அந்தப் பரிதாப பார்வையில், “இந்த அட்ஜெஸ்ட்மென்ட் கூட இல்லேன்னா கடை நடத்த முடியுமா?” என்பதும் அடங்கியிருந்தது.

வினவு புகைப்படச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க