நம்மாழ்வார் அவதாரமெடுக்கும் தமிழக கட்சிகள் – உண்மை என்ன ?

18
24

ய்யா நம்மாழ்வார் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் நம் அரசியல்வாதிகளுக்கு திடீர் அக்கறை முளைத்திருக்கிறது. நம்மாழ்வார் பெயரில் விவசாயத் திட்டம், இயற்கை விவசாயத்திற்கு மானியங்கள், விவசாயத்திற்கு தனி பட்ஜெட், விவசாயக் கடன் தள்ளுபடி என தேர்தல் வாக்குறுதிகளை பல கட்சிகளும் அறிவித்திருக்கின்றன. காதல்-காமெடி-டூயட்-சென்டிமென்ட்-சண்டை-குத்துப்பாட்டு-என மசாலா படத்தின் வெற்றி பார்முலா போல இருக்கும் இவர்களின் தேர்தல் அறிக்கைகள் ஒரு பக்கம் இருக்க, விவசாயத்தின் மீது இவர்களின் திடீர் அக்கறைக்கு காரணம் என்ன? இவர்கள் கூறுவது நடைமுறை சாத்தியமானதா?

farmers
நடைமுறையில், ஒரு சில பணக்கார விவசாயிகளும், ஐ.டி.துறையிலிருந்து வரும் புதுப் பணக்காரர்களும்தான் இயற்கை விவசாயம் செய்கின்றனர்

50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயன்படுத்திய ரசாயான உரங்களால் மேல்மண்ணில் உள்ள உயிர்ச்சத்துக்களை முற்றிலுமாக இழந்து நிலமே மலடாகிவிட்டது! பிள்ளைக்கு புட்டிப் பால் ஊட்டுவதைப் போல, அவ்வப்போது ரசாயான உரம் போட்டால்தான் எதுவும் விளையும் என்கிற அளவுக்கு சீரழிந்து கிடக்கிறது விவசாயம்! இந்நிலையில், எருவையும்-மண்புழு உரத்தையும் போட்டு ஒரே நாளில் இயற்கை விவசாய நிலமாக மாற்ற முடியுமா?

“ரசாயன உரத்தின் பாதிப்பிலிருந்து நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற வேண்டுமானால், குறைந்தது 3 வருடமாகும். முதல் வருடத்தில் ரசாயன உரம் 75 சதவீதம், இயற்கை உரம் 25 சதவீதம், அடுத்த ஆண்டில் 50:50, அடுத்து 25:75 என்று படிப்படியாக இயற்கை உரப் பயன்பாட்டை அதிகரிப்பதன் வாயிலாகவே இயற்கை விவசாயத்திற்கு உகந்ததாக நிலத்தை மாற்றமுடியும்! இந்த 3 வருடத்திலும் சராசரியை விட குறைந்த விளைச்சலே கிடைக்கும்!” என்கிறார்கள் நிபுணர்கள்! இவ்வாறு முறையான பரிசோதனைக்கும்,கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்ட நிலத்திற்குத்தான் ‘அபெடா’ நிறுவனம் ‘ஆர்கானிக்’ சான்றிதழ் வழங்குகிறது! இச்சான்றிதழ் இருந்தால்தான் விளைபொருள்களை ஏற்றுமதி செய்ய முடியும்!

ஏற்கனவே உரம் முதலான இடுபொருட்கள் விலை உயர்வு, விளைபொருட்கள் விலை வீழ்ச்சி என்று கடனில் மூழ்கி நிலத்தை விட்டு ஓடும் நிலையில் உள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு இதுவெல்லாம் ஒத்துவருமா?

நடைமுறையில், ஒரு சில பணக்கார விவசாயிகளும், ஐ.டி.துறையிலிருந்து வரும் புதுப் பணக்காரர்களும்தான் இயற்கை விவசாயம் செய்கின்றனர். 10 ஏக்கர் நிலம் இருந்தால், 9 ஏக்கரில் ரசாயன உரம் போட்டுவிட்டு, ஒரு ஏக்கரில் இயற்கை விவசாயமும் செய்கிறார்கள். இவர்களுக்கு 3 வருட இழப்பு அல்லது வருமானக் குறைவு என்பது பெரிய பாதிப்பாக இருக்காது. மேலும் நம்மாழ்வார் முன்வைக்கும் இயற்கை விவசாயம், நம் பாரம்பரிய விவசாயத்தோடு தொடர்புடையது. இது பன்னாட்டுக் கம்பெனிகளின் வீரியரகப் பயிர்களுக்கு பயன்படாது என்பதே உண்மை! ஏனெனில், வீரியரகப் பயிர்கள் அனைத்தும் ரசாயன உரங்களின் தன்மைக்கு ஏற்பவே உருவாக்கப்படுகின்றன.

ரசாயனப் பாதிப்புகளில்லாத இயற்கை உணவுப் பொருள்கள் என்பது நடுத்தர வர்க்கத்தின் விருப்பம் என்பதையும் தாண்டி பேஷனாகி விட்டது. உடனே முதலாளிகளும் மூலிகை-இயற்கை ஆர்வலர்களாக உருமாறத் தொடங்கி விட்டனர். இதனால்தான் பப்பாளி-வேம்பு சோப்பு, கற்றாழை கிரீம், மூலிகை பற்பசை, துளசி மிட்டாய், புதினா பிஸ்கட்டுகள் போன்றவை சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன, மேலும், உலக நாடுகளின் ஏற்றுமதி சந்தையில் இது அதிக லாபம் ஈட்டக் கூடியதாகவும் இருக்கிறது. அதிகரித்துவரும் இதன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது நம்நாட்டு விவசாயத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

“நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கரில் இயற்கை விவசாயம் அறிமுகப்படுத்தப்படும்” என அறிவித்துள்ள பிஜேபி அரசு, நடப்பு பட்ஜெட்டில் இதற்காக 412 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது!

‘வேளாண் மின்னணு மேடை, வேளாண் சந்தைகளை இணையதளம் மூலம் இணைப்பது, வேளாண் பொருள்களுக்கான ஆன்லைன் சந்தை ஆகியவை மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போகிறோம்” என்று நடப்பு பட்ஜெட்டில் மோடி அரசு தம்பட்டம் அடித்ததையே தி.மு.க, ம.ந.கூ, பா.ம.க ஆகியவற்றின் தேர்தல் அறிக்கைகளும் வழிமொழிகின்றன.

இதன் மூலம், உலகின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, நம்நாட்டில் ஒரு பொருளை அதிகளவில் கொள்முதல் செய்வதன் மூலம் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் விலையை உயரவிட்டு, பிறகு அதிக விலைக்கு சந்தையில் விற்றுக் கொள்ளையடிக்க முடியும்! ஏற்கனவே இத்தகைய பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் வர்த்தக சூதாட்டத்திற்காக வேளாண் பொருள்களின் மீதான ஆன்லைன் வர்த்தகத்தை ஏற்கனவே அனுமதித்துள்ளது மத்திய அரசு! அண்மைக் காலங்களில் உப்பு, புளி, மிளகாய், மஞ்சள், பயறுவகைகள், எண்ணெய் வகைகள் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் கடும் விலைவாசி உயர்வுக்கும் இந்த ஆன்லைன் வர்த்தகமே முக்கிய காரணம்!

வேளாண் பொருள்கள் விற்பனைச் சந்தையில், பெரு முதலாளிகளும், பன்னாட்டுக் கம்பெனிகளும் நுழைவதற்கு வழிவகுப்பதுதான் ஆன்லைன் வர்த்தகத்தின் உண்மையான நோக்கம்.! பொட்டலம் மடித்துக் கொடுக்கும் அண்ணாச்சி மளிகைக் கடைகள் இருந்த இடத்தில், சூப்பர் மார்க்கெட்டுகளும், சலுகை விலையில் விற்கும் பெரும் மால்களும், வணிகப் பெயரிட்ட மளிகைச் சாமான்களின் விற்பனையும் அதிகரித்து வருவது, ஆன்லைன் வர்த்தகத்தின் மற்றுமொரு கோர முகம்தான் !

அந்நியக் கம்பெனிகள் சில்லறை விற்பனையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு தேவையானதை மொத்தமாக ஒரே இடத்தில் கொள்முதல் செய்வதற்கு வசதியாக தற்போது வேளாண் சந்தைகளையும் ஆன்லைனில் இணைக்கும் திட்டத்தில் மோடி அரசு இறங்கியுள்ளது!. அரைகுறையாக இன்னமும் நிலத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு-குறு விவசாயிகளை, நிலத்திலிருந்து விரட்டியடிக்கவும், சிறுவணிகர்களை முற்றாக ஒழித்துக் கட்டவுமே இது உதவும்!

இவ்வாறு ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் மக்கள் விரோத,தேசத்துரோகக் கொள்கைகளால் கட்டி எழுப்பப் பட்டிருக்கும் நிலையில், தனி பட்ஜெட், கடன்தள்ளுபடி, இயற்கை விவசாயம், ஆகியவற்றால் விவசாயிகளை வாழ வைக்கப் போகிறோம் என்கின்றன ஓட்டுக்கட்சிகள்!

வெயிலில் விவசாய மக்களை வம்படியாக அழைத்து வந்து கொல்லும் அ.தி.மு.கவின் தேர்தல் கூட்டங்கள் ஒரு புறம். இன்னொரு புறம் நம்புகின்ற அப்பாவிகளுக்கு, “தமிழகத்தின் தொழில்வளர்ச்சியை மேம்படுத்த, முதலீட்டாளர்களின் நீண்டகால நண்பனாக அரசு செயல்பட, அரசியல் சாராதவர்களைக்!! கொண்ட மாநில பொருளாதார வளர்ச்சி வாரியம் அமைக்கப்படும்” என்று முதலாளிகளுக்கு ஆதரவாக ஆப்படிக்கிறார் கலைஞர்! தி.மு.க, அ.தி.மு.க வுக்கு மாற்று தேடுபவரா நீங்கள்? இதோ, பெரும் முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டும்” என்கிறது மாற்று அரசியல் புகழ் ம.ந.கூட்டணியின் தேர்தல் அறிக்கை! நீங்கள் ஓடி ஒதுங்குவதற்கு சட்டமன்ற ஜனநாயகத்திற்குள் பாதுகாப்பான இடம் எதுவுமில்லை!

– விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி.

சந்தா