சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலையை தாறுமாறாக உயர்த்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு. நேற்று (12.02.2020) மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலையை திடீரென்று ரூ.147 உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறது மோடி அரசு.
இந்த விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 734 -லிருந்து ரூ. 881-ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் ரூ.685-லிருந்து ரூ.830-ஆகவும், டெல்லியில் ரூ. 714-லிருந்து ரூ. 859-ஆகவும் கொல்கத்தாவில்ரூ. 747-லிருந்து ரூ. 896-ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு, டில்லி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாள் அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து இன்றுவரை அமல்படுத்தப்பட்ட விலை உயர்வுகளிலேயே மிகப்பெரிய விலை உயர்வு இது.
கடந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தல் மே 19, 2019 அன்று முடிந்தபின்னர் படிப்படியாக கேஸ் விலையை அதிகரிக்கத் தொடங்கியது பாஜக அரசு. எரிவாயு விலை மட்டுமல்ல, பெட்ரோல், டீசல் விலையும் கூட தேர்தல் சமயத்தில் அதிகரிப்பது கிடையாது.
அதே போல, மாதத் தொடக்கத்தில்தான் சமையல் எரிவாயு விலை உயர்வு அறிவிக்கப்படும். ஆனால் இந்தமுறை கிட்டத்தட்ட 2 வாரம் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம் டில்லி தேர்தல்.
இதற்கு முந்தைய விலை உயர்வு ஜனவரி 1, அன்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் ரூ. 290 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட மிகப்பெரிய விலைவுயர்வு இதுதான்.
படிக்க:
♦ ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் !
♦ கையேந்தி பவன் சிலிண்டர்களும், அம்பானி போட்ட ‘ஆட்டையும்’
இதே சமயத்தில் படிப்படியாக கேஸ் மானியத்தைக் குறைத்துவருகிறது மோடி அரசு. தற்போது கேஸ் விலை ரூ.147 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மானியத் தொகையிலும் ரூ. 147 உயர்த்தப்பட வேண்டும் அல்லவா? ஆனால் தற்போது வெறும் ரூ. 138 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. எனில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த மானியத்தில் தற்போது ரூ. 9 வெட்டு விழுந்துள்ளது. இந்த விலை உயர்வின் தாக்கம் நடுத்தரவர்க்கத்தினர் மட்டுமல்லாது, அடித்தட்டு வர்க்கத்தினரின் தலையில்தான் விடியும். எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறோம் ?
நந்தன்