வாகனங்களில் சுங்கச் சாவடிகளைக் கடப்பவர்கள் எல்லோரும், திடீரென யாரோ தங்களை உலுக்கியதைப் போல் ஒரு விழிப்புணர்வு நிலைக்கு உள்ளாவார்கள். தெருக்களில் கூவி விற்கும் தலைச்சுமை வியாபாரிகளைப் போல் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் சிறு வியாபாரிகளின் ஓயாத குரல்கள் காதைத் துளைக்கும்.

பொருட்களைப் பார்த்தாலே போதும், அது பயணிகளின் மடியில் வந்து விழும். அது வேண்டும் என்று கேட்க வேண்டியதில்லை, மல்லுகட்டி பேரம் பேசவேண்டியதில்லை. அவித்த வேர்க்கடலை, பிஞ்சு வெள்ளரி, காரம், சிப்ஸ், நொறுக்குத் தீனிகள்; வெயிலுக்கு மோர், தர்ப்பூசணி…. அந்த லிஸ்டில் இப்போது பலவண்ணக் குடைகள். ரூபாய் 100, 150, 200 என்று அளவுக்கேற்ற விலைகள்.

சுங்கச்சாவடியை நாம் கடக்கும்போது, “சார் குடை வேணுமா? எடுத்துக்குங்கோ. பேபி குடை, பேமிலி குடை, லேடீஸ் குடை, தாத்தா குடை…. விதவிதமான கலர் சார். 3D கலர், ரெயின்போ கலர், செக்டு, பிளைன் சார்” என்று பின்னாலேயே ஓடிவந்தார்கள், வடநாட்டு இளம் தொழிலாளர்கள்.

திரும்பிப் பார்த்தால், நாலாபுறமும் குடைகளால் மூடியது போல் வடநாட்டு இளைஞர்கள். நிற்கும் எல்லா வாகனங்களையும் நோக்கி குடையுடன் ஓடிக்கொண்டிருந்தார்கள். அதில் இளம் பெண் தொழிலாளர்களும் உண்டு. அவர்களை அணுகி, அவர்கள் வாழ்க்கையைப் பற்றி வேறு வேறு கேள்விகளைக் கேட்டாலும் அதில் அவர்களுக்கு அக்கறையில்லை. குடையைப் பற்றி 10 வார்த்தைகள் மட்டும் உள்ளீடு செய்வது போல் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

படிக்க:
♦ சிலியின் வசந்தம் !
♦ ஜனவரி 8 – 2020 வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !

இந்த மொத்த வியாபாரக் காட்சிக்கும் உயிர், அதிகம் போனால் 3 நிமிடம் மட்டுமே. அடுத்தடுத்து பயணிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். சுங்கச்சாவடியில் டிராஃபிக் கிளியராகி வண்டிகள் நகர்ந்து கொண்டே இருக்கும். அதற்குள் வியாபாரம் முடித்து பண்ட பரிவர்த்தனை நடக்க வேண்டும். பணம் இவர்கள் கைக்கு, குடை அவர்கள் கைக்கு.

வியாபாரத்தை வெற்றிகரமாக முடிப்பது, சாலை விபத்தில் தப்பிப்பது மாதிரிதான். அது ஒரு மேஜிக்.

இவர்களை விட்டு விலகி அங்கேயே சாலையோரத்தில் குடைகளைச் சாத்தி வைத்துவிட்டு உட்கார்ந்தபடி வியாபாரம் செய்த தொழிலாளர்களை அனுகினோம்.

அய்லு, தெலுங்கு

சொந்த ஊரு ரேணிகுண்டா. இப்போ மெட்ராஸ் பெரம்பூர்லதான் தங்கியிருக்கேன். சாப்பாடு எல்லாம் இங்கேதான், பொட்டலம் சோறு. வீட்டுல செஞ்சி எடுத்துவர நேரமில்லை. கார்ல போரவங்க வர்றவங்க சில பேரு இந்த குடையை வாங்குவாங்க. இதுல செலவுக்கு 300 கெடச்சா போதும். சரக்கெல்லாம் பேரிசுக்கு போயி வாங்குவோம். மழை, வெயிலுன்னா இங்கேயே ஓரமா ஒதுங்கிக்குவோம். பசங்களும் அந்த டோல்கேட்டுல வியாபாரம் செய்யிது என்றார்.

அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே, குடை விலையை விசாரித்தார், ஐயப்பன் மாலை போட்ட கேப் டிரைவர்.

300, 200 என்று விலையைச் சொல்ல அவர் தடலடியாக 75 ரூபாய் வருமா? 80 ரூபாய் வருமா? என்றார். என்ன கேட்கிறே சார்? என்று அய்லு அவரை பரிதாபமாகப் பார்க்க, விலை கேட்ட டிரைவரை நாம் கோபமாக, இப்படியா விலை கேட்பது என்றோம்.

அதற்கு அவர் ரெடிமேட் பதிலை தந்தார். அப்படி கேட்டாத்தான் 150 ரூபாய்க்கு கொடுப்பாங்க. கொஞ்சம் அசந்தாலும் நம்மல ஏமாத்திடுவாங்க என்று கூறியபடி நகர்ந்தார்.

***

ராஜி, ஆட்டோ டிரைவர்.

உடம்பு முடியாதபோது சீசன் வியாபாரம் இப்படி உட்கார்ந்தது மாதிரி செய்வேன். இப்போ குடை போட்டிருக்கேன். சுமாரா போகுது. சரியா போகலன்னா அத ஓரங்கட்டிட்டு ஆட்டோ ஓட்ட ஆரம்பிப்பேன். இதுக்கு முன்னே கார் டஸ்டர், மொபைல் ஸ்டேண்ட் போட்டு வித்தேன். அது கொஞ்சம் போச்சு.

காலத்துக்கு ஏத்த பிசினஸ் ஏதாவது பன்னணும். ஒரே தொழில் பண்ணினா பொழக்க முடியாது. எது போட்டாலும் பளிச் பளிச்சுனு பார்த்து வாங்கிப் போடுவேன். வாங்குறவங்களுக்கும் சரக்க உடனே புடிக்கணும். அப்பத்தான் போட்டியில நிக்க முடியும்.

படிக்க:
♦ உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் ?
♦ அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை

***

நாராயணன்

இளம் வயது, நொடிந்த தேகம். வாய்முழுக்க பான்பராக். மஞ்சள் காமாலை நோய் கண்டது போல் கண்கள். அரைமயக்கப் பார்வை. முதுகிலிருக்கும் பைதான் அவரது நடமாடும் கடை.

குழந்தைகள் விளையாடும் அட்டை வீடு, விளையாட்டு மேஜிக் போர்டுகள் என்று பல பொருட்களை வைத்திருந்தார். ஒன்று 50 ரூபாய். ஓடி ஓடி கார் கண்ணாடிகளில் காண்பித்து, ஃபிப்டி என்று கையால் சைகை காண்பிக்கிறார். ஒரு சிலர் கண்ணாடியை இறக்கி நோட்டமிடுகின்றனர். சிலர் வாங்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்தவாறே போய்விடுகின்றனர். நாங்கள் பார்த்தவரை யாரும் வாங்கவில்லை. கவலையுடன் சோர்ந்திருந்த நாராயணனிடம் பேச்சு கொடுத்தோம்.

குழந்தைகள் விளையாடும் அட்டை வீடு.

“எனக்கு ஆந்திரா. சின்ன வயசிலேயே தமிழ்நாட்டுக்கு வந்தோம். எங்க அப்பா குடை, பிளாஸ்டிக் வாலி ரிப்பேர் செய்வாரு. இப்ப இல்ல. எங்க ஃபேம்லில எல்லோரும் ஹான்டிகேப்டு. என் பொஞ்சாதிக்கு 2 காலிலும் பாதமில்லை, வெறும் குதிகால்தான். இழுத்திழுத்து நடக்கும். பொறந்த 2 பசங்களும் வளர்ச்சியில்லாம சூம்பி போய்ட்டாங்க. நிமிர்ந்து நடக்க மாட்டாங்க. நாங்க இடுப்புல வச்சிதான் தூக்கிகிட்டு போவணும். ஆஸ்பத்திரியில எல்லோருக்கும் ஹேன்டிகேப்டுன்னு சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க. அத வச்சி ஏதாவது வேல கெடைக்குமான்னு அலைஞ்சோம். எந்த உதவியும் யாரும் பண்ணல. எங்க கவுன்சிலரும் எதுவும் செய்யல. சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டம். எனக்கு உடம்பு முடியல, கவல. அதான் அடிக்கடி பான்பராக் போடுவேன். அத உட முடியல. சோறு இல்லாமலே இப்படி நெறைய நாளு நிப்பேன். பசங்களுக்கு ஏதாவது வாங்கி போகணுமுன்னு ஆசையா இருக்கும், பணம் இருக்காது.

தினமும் 400 ரூபா கெடச்சா போதும், என் செலவுக்கு 100, வீட்டுக்கு 300ன்னு கொடுக்கலாம். காலையிலேர்ந்து 50 ரூபாய்க்கு ஒரு பீசுதான் வித்துச்சு. இங்கே வியாபாரம் இல்ல, அந்தப் பக்கம் போயி பார்க்கலாம்” என்று மெதுவாக விலகிப் போனார்.

நாராயணன் வாழ்க்கை நெடுகத் தொடரும் ஏழ்மையின் வலி நம் நெஞ்சையும் கனமாக்கியது.

***

மேலும் படங்களுக்கு :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க