நான்கு சுவற்றுக்குள்ளும் பாதுகாப்பில்ல…!

‘உடைக்கப்பட்ட டி.வி.. சிதறடிக்கப்பட்ட பொம்மைகள்…’ கடந்த 19-ம் தேதி உ.பி போலீசால் தனது வீடு சூறையாடப்பட்டதை பயம், பீதி, சீற்றம் என ஒருசேர பிரதிபலிக்கிறார் ரசியா கத்தூன்.

“கடந்த 19-ம் தேதி மதிய நேரம், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துக் கொண்ட இரு நபர்கள், போலீசாரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க எங்கள் வீட்டினுள் நுழைந்தார்கள். அவர்களைப் பிடிக்க, பின்தொடர்ந்து வந்த போலீஸ்காரர்கள் அந்த நபர்களை கைது செய்யாமல், வீட்டில் இருந்த எங்களை வெறித்தனமாக தாக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் என் காலிலும் வயிற்றிலும் எட்டி உதைத்தார்கள்; தகாத வார்த்தைகளால் பேசினார்கள். ‘எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள்?‘ என்று கேட்ட பிறகு, முன்பைவிட மூர்க்கத்தனமாக தாக்க ஆரம்பித்தார்கள்” என்கிறார் லக்னோவின் தவுலத்கஞ்ச் பகுதியில் வசிக்கும் 65 வயதான பெண்மணி ரசியா கத்தூன்.

ரசியா கத்தூன். (நன்றி – படம் : தி பிரிண்ட்)

“அந்த இரு நபர்களை கைது செய்ய எங்கள் வீட்டில் யாரும் தடையாக இல்லை என்று பலமுறை போலீசாரிடம் கூறியபோதும், எதையும் காது கொடுத்துக் கேட்காமல் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கண்மூடித்தனமாக உடைத்தனர்” என்கிறார் கத்தூனின் இளைய மருமகள் இக்தரா.

“நான்கு சுவற்றுக்குள்ளும் எங்களுக்குப் பாதுகாப்பில்லை” என்பதுதான் லக்னோ மக்கள் பலரின் உளக் குமுறல்.

போராட்டக்காரர்களை தாக்கிய உ.பி போலீசார் மீது பலர் பொதுநல வழக்கும் தொடுத்துள்ளனர். 1,100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தும், 5,558 பேரை தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகவும் அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை கூறுகிறது. மேலும், போராட்டத்தின்போது உ.பி -யில் மட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.

ரசியா கத்தூனின் பேரக் குழந்தை. (நன்றி – படம் : தி பிரிண்ட்)

என்னை கைது செய்யவில்லை; எனது உடைமையை சேதப்படுத்தியதன் நோக்கம் என்ன?

தவுலத்கஞ்ச் பகுதியில் நடந்த சம்பவத்தன்றே லக்னோ, உசைனாபாத்தில் உள்ள ஷீபா அலியின் வீட்டிற்குள்ளும் புகுந்த போலீஸ், அவரது கணவர் இம்தியாஸ் அலி (42), சகோதரர் இம்ரான் (45), 15 வயது மகன் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளது.

போலீசு அச்சுறுத்தலால் தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் ஷீபா. (நன்றி – படம் : தி பிரிண்ட்)

என் கணவர், மகன், சகோதரரை கைது செய்துவிட்டார்கள். இனி நான் தனி ஆளாக என்ன செய்ய முடியும்? என்று கவலையோடு கூறிய ஷீபா, போலீசார் மீண்டும் தனது வீட்டின் கதவைத் தட்டுவார்களோ என்ற பயத்தில், தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்.

வீட்டினுள் புகுந்து ஆண்களைக் கைது செய்வது மட்டுமல்லாமல்; வீட்டைச் சேதப்படுத்துவதோடு உடைமைகள் அனைத்தையும் சூறையாடி வருகிறது போலீசு.

நஜ்மா பேகம். (நன்றி – படம் : தி பிரிண்ட்)

தவுலத்கஞ்ச் பகுதியில் பல வருடங்களாக சிறுவர்களுக்கு அரபு மொழி கற்றுக்கொடுத்து வருகிறார் 65 வயதான நஜ்மா பேகம். “என் கண் முன்னே போலீசார் எனது காரை உடைத்தார்கள்; அதைப் பார்த்தும் தடுக்க முடியாதவளாய் நின்றிருந்தேன்” என்று கண்ணீரில் கலந்த பேகத்தின் வார்த்தைகள் மேலும் உதிர்ந்தது. “போலீசார் எங்கள் வீட்டில் இருந்து யாரையும் கைது செய்யவில்லை; ஏன் வீட்டினுள் கூட நுழையவில்லை. அப்படியிருக்கையில், ஏன் எனது காரை உடைத்தார்கள்? அதன் நோக்கம் என்ன? என்று இப்பொழுதுகூட என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை” என்கிறார்.

வீடுகள் சூறையாடப்படுவது குறித்து உ.பி போலீஸ், ‘விசாரணை நடத்தி வருகிறது’ என்றும், “போலீசார் என்ன செய்தாலும் அது கல்லடிக்கு பதிலடியாகத்தான் இருந்திருக்கும்; நாங்கள் விசாரிக்கிறோம்” என்கிறார் மேற்கு லக்னோ கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் விகாஸ் சந்திர திரிபாதி.

படிக்க :
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராட்டம் துவங்கிய நாள் முதல் இதுவரை, லக்னோவில் மட்டும் 250 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், போலீசால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், முகமது வகீல்(32) உயிரிழந்துள்ளார்.

போலீசாரின் எச்சரிக்கை போஸ்டர்

லக்னோவை சுற்றி பல இடங்களில் ‘எச்சரிக்கை’ என்று போலீசாரால் வைக்கப்பட்ட போஸ்டரில், பல ஆண்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

எச்சரிக்கை போஸ்டர் :பொதுமக்கள் சொத்துக்களை சூறையாடிய போலீசாரின் படங்கள் எந்த போஸ்டரில் வரும் ? (நன்றி – படம் : தி பிரிண்ட்)

‘‘எச்சரிக்கை போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஆண்கள் அனைவரும் கலகக்காரர்கள் என்பதற்கு என்ன சான்று? அமைதியாக போராடியவர்கள் மட்டுமின்றி, போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுடைய புகைப்படங்களும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இந்த எச்சரிக்கை போஸ்டர் மூலம் பலரின் வாழ்க்கை கேள்விக் குறியாக மாறும்” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத 23 வயது இளம்பெண்.

மேலும், “பொதுச் சொத்துக்களைச் சூறையாடிய போலீசாரின் புகைப்படங்கள் எந்த போஸ்டரிலும் இடம்பெறவில்லையே, அது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் மற்றொரு பெண்.


– ஷர்மி
செய்தி ஆதாரம் : தி பிரிண்ட்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க