டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இராணுவ தளபதி பிபின் ராவத், மாணவர்கள் ‘தவறான திசையில்’ வழிநடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “தலைமைத்துவம் என்பது முன்னணியில் நின்று வழிநடத்துவது. தலைமை வகிப்பதில் மிகவும் சிக்கலான விஷயம் என்னவெனில், நீங்கள் முன்னின்று செல்லும் போது, அனைவரும் உங்களை பின் தொடர்வார்கள். இது சாதாரணமானது அல்ல. மிகவும் எளிமையான விஷயம் போல இது தோன்றும்.

இராணுவ தளபதி பிபின் ராவத்

தேவையற்ற வழியில் நடத்தி செல்பவர்கள் தலைவர்கள் அல்ல. வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமைத்துவம் இல்லை. ஏனெனில், ஏராளமான பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களைக் காண்கிறோம். நகரங்களிலும், சிறு நகரங்களிலும் தீ வைப்பு மற்றும் வன்முறைகளைச் செய்ய அவர்கள் ஏராளமான மக்களை வழிநடத்திச் செல்கிறார்கள்… இது தலைமை பண்பு அல்ல,” என்று தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகத்தான் தற்போது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்களும் பொதுமக்களும் போராடி வருகின்றனர். தனது பேச்சில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து என குறிப்பிடாவிட்டாலும் இராணுவ தளபதி, மறைமுகமாக இச்சட்டத்தை எதிர்த்து போராடி வரும் மாணவர்களைத் தான் குறிப்பிடுகிறார்.

இராணுவத்துக்கு தொடர்பில்லாத, அரசியல் உணர்வுப் பூர்வமான விசயம் குறித்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் இராணுவ தலைவராக உள்ள ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார் என்று இச்சம்பவம் குறித்து எழுதியிருக்கிறது டெலிகிராப் இதழ்.

பொது மக்கள் தொடர்பான எந்தவொரு விசயத்திலும் இராணுவம் ஒருபோதும் தலையிடக்கூடாது என முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வலியுறுத்தியிருந்தார். தற்போதிருக்கும் ஆட்சியில் நிர்வாகத் தலைமைக்கும் இராணுவத்துக்குமான உறவு எப்படி மாறிவிட்டது என்பதை ராவத்தின் பேச்சு உணர்த்துவதாக அந்நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது.

நேருவின் தொலைநோக்கு சிந்தனையின் காரணமாக அண்டை நாடுகளைப் போலல்லாமல், எந்தவொரு இராணுவ ஆட்சிக்குழுவும் இதுவரை இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்க துணியவில்லை.

படிக்க :
“என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் !
♦ பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி !

டிசம்பர் 31-ம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிதாக உருவாகப்பட உள்ள பாதுகாப்புத் தளபதி பதவிக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துகொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், தனக்கு தொடர்பில்லாத விசயத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ராவத்.

ராவத்தின் பேச்சு அரசியல் வட்டாரங்களில் கண்டனத்துக்குள்ளான நிலையில், இந்திய இராணுவம் அவருடைய பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளது. ராவத், குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும், எதிர் போராட்டங்கள் குறித்தும் பேசவேயில்லை எனவும் பூசி மொழுகியுள்ளது.

பல முன்னாள் இராணுவ தலைமை பதவிகளில் இருந்தவர்கள், ராவத்தின் பேச்சு முழுமையான அரசியல் கருத்து எனவும் இனியும் அவர் இராணுவத் தளபதியாக தொடரும் தகுதி அவருக்கு இல்லை எனவும் கூறியுள்ளனர்.

ஓய்வு பெற்ற விமானப்படை துணை தலைவர் கபில் கக், “இந்தியாவின் ஆயுதப்படைகள் அரசியலற்றவை. இராணுவ தலைமை எந்தவொரு அரசியல் கருத்தையும் வெளியிடக்கூடாது. குடிமக்கள் ஆயுதப்படைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இராணுவ தலைமை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கடற்படை தலைவர் எல். ராம்தாஸ், “நாங்கள் நாட்டுக்கு சேவை செய்கிறோம். அரசியல்வாதிகளுக்கு அல்ல என்பது தெளிவான விதி. எந்தவொரு அரசியல் கருத்தையும் அவர் தலைவர் பதவியில் இருந்தாலும், கீழ் பதவிகளில் இருந்தாலும் கூறுவது தவறானதாகும். அது முறையானது அல்ல” என்கிறார்.

ஓய்வு பெற்ற ஒரு இராணுவ வீரர் கூறினார்: “ஒரு இராணுவ தலைவர் தனது அரசியல் எஜமானர்களுடன் ஒத்துப்போய் இதுபோன்ற அரசியல் அறிக்கைகளை வெளியிடுவது தகுதியற்றது. இந்தியா இன்னும் ஒரு ஜனநாயக நாடு என்பதையும், ஆயுதப்படைகள் ஒரு ஜனநாயக அமைப்பின் கீழ் செயல்பட வேண்டும் என்பதையும் அவர் மறந்துவிடக் கூடாது. அவர் ஓய்வுக்குப் பின் பதவிக்காக காத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ”

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் கடந்த காலங்களில் எந்தவொரு இந்திய ராணுவத் தலைவரும் இதுபோன்ற அரசியல் கருத்துக்களை வெளியிட்டதில்லை என்கிறார். “இது பாகிஸ்தான் இராணுவத்தில் நடக்கிறது. நாம் இப்போது பாகிஸ்தானை நம் முன்மாதிரியாகக் கொண்டுள்ளோம் என்பது தெரிகிறது. பாரபட்சமான சட்டங்களை இயற்றுவதன் மூலம் நாடு இந்து பாகிஸ்தானாக மாறுவதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்றும் அவர் கூறினார்.

இவை நரேந்திர மோடி அரசாங்கம் ஆயுதப் படைகளை அரசியல்மயமாக்குவதன் ஒரு பகுதியாகும் என்றும், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவும் அரசாங்கமும் பாலகோட் வான்வழித் தாக்குதலை எவ்வாறு அரசியலுக்காகப் பயன்படுத்தினார்கள் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மூத்த வீரர் ஒருவர் “தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரசியலுக்காக இராணுவம் சுரண்டப்படுவதை நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம், அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இராணுவத் தலைவரே அதன் ஒரு பகுதியாகியிருக்கிறார்.” எனக் கூறினார்.

படிக்க :
தேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் !
♦ இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

உத்தரபிரதேச முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜெனரல் பிரகாஷ் சிங் கூறுகிறார்: “ஒரு இராணுவ தலைவரோ அல்லது காவல்துறை தலைவரோ எந்த அரசியல் கருத்தையும் வெளியிடக்கூடாது.”

அதுபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் இராணுவ தளபதியின் அத்துமீறிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, “அவர் இந்திய இராணுவத்தின் தலைவர், எந்த அரசியலிலும் இல்லை. எல்லைகளைப்பாதுகாப்பதே அவருடைய பணி. அரசியல் கருத்துக்களை தெரிவிப்பது அல்ல. போராட்டத்தின் தலைமை குறித்து அவர் விமர்சித்துள்ளார், இது ஆளும் அரசின் பக்கம் அவர் சாய்கிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பாசிச பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பின்னணியில், ஒரு ஜனநாயக நாட்டின் இராணுவத் தலைமை செயல்படுகிறது என்பதையே இந்தச் சம்பவம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.  இது தற்போது நடக்கும் விசயம் மட்டுமல்ல. இதற்கு முந்தைய இராணுவத் தளபதி வி.கே.சிங் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதும் முழுநேர கரசேவகராகி பாஜக இணைந்து மந்திரியாகவும் பதவி பெற்றார். ஸ்பெக்ட்ரம் ஊழல் சமயத்தில் ராணுவம் டில்லியை முற்றுகையிட முயற்சித்து முன்னேறியதாகக் கூறப்பட்ட காலகட்டத்தில் வி.கே சிங் தான் இராணுவத் தளபதி என்பதோடு இதனைப் பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது.

சங்க பரிவாரக் கும்பல் அனைத்து இராணுவம் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களையும் விழுங்கிவிட்டது என்ற உண்மையிலிருந்து நாம் எதிர்கொள்ளப் போகும்  அபாயத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் !


கலைமதி
நன்றி :  டெலிகிராப் இந்தியா. 

1 மறுமொழி

  1. ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு பதக்கம் பிளாஸ்டிக்கில் வாங்கி கொடுத்த நிகழ்வு இவருக்கு தெரியுமா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க