சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை நெற்குன்றம் பகுதி கரிமேடு. காங்கிரிட் காடுகள் என்றழைக்கப்படும் சென்னை மாநகரத்தின் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்குத் தேவையான செங்கற்களை சப்ளை செய்யும் முதன்மைப் பகுதி.

70 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் சூளை அதிபர்களையும் நான்காம் தலைமுறை வியாபாரிகளையும் உருவாக்கிய இடம். தற்போதைய கட்டுமானங்கள் ஹாலோ பிளாக் கட்டிடங்களுக்கு மாறிவிட்டதாலும், ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குப் பிறகு ரியல் எஸ்டேட் மற்றும் சிறு குறுந் தொழில்கள் நசிந்து போனதால் கட்டுமானப் பணிகள் குறைந்து, வியாபாரத்தில் சுணக்கம் ஏற்பட்டு, மேலும் பொருளாதார தேக்கத்தில் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.

செங்கல் சூளை நேரடி வியாபாரம் படுத்து விட்டதால், தள்ளுவண்டி காய்கறி வியாபாரம் போல், சாலையோரங்களில் செங்கற்களைக் காட்சிப்படுத்துகின்றனர். தேவைப்படுவோர் வாங்கிச் செல்ல, எப்போதும் தயார் நிலையில் செங்கற்களுடன் லாரியில் காத்திருக்கின்றனர். இப்படி வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருந்தத் தொழிலாளர்களில் சங்கர் நம்மிடம் பேசும்போது,

சங்கர்

“இப்போ இருக்குற கோயம்பேடு பஸ் நிலையம், பக்கத்தில் இருக்குற காய்கறி மார்கெட், மெட்ரோ ஸ்டேசன் எல்லாம் செங்கற் சூளைகளாக இருந்த இடங்கள். அப்படியே 20 கி.மீ நீளத்திற்கு திருமழிசை வரை நூற்றுக்கணக்கான சூளைகள் ஆண்டுதோறும் எரிந்து கொண்டிருக்கும். 13 லட்சம் பச்சைக் கற்களை ஒரு சுற்றில் வேகவைத்து வெளித்தள்ளும் பிரம்மாண்டமான சூளைகள் இங்கு பல இருந்தன. இவை காலப்போக்கில் அழிந்துவிட்டன. இப்போது செங்கல் தேவையென்றால் சென்னையை விட்டு 150 கி.மீ தூரம் சென்றால்தான் வாங்க முடியும். இங்கு மிச்சமிருந்த சூளை முதலாளிகளும் ஆந்திர எல்லையோரம் போய்விட்டார்கள்.

குறைந்தது ஒரு சூளைக்கு 15 ஏக்கர் நிலம் தேவை. இந்த இடத்தில் 50 ஏக்கர் பரப்பளவுடைய பெரிய சூளைகளெல்லாம் ஒரு காலத்தில் இருந்தன. நூறு அடி சிமிழ் (புகைப்போக்கி) கொண்ட ஒரு சூளைக்கு 16 கட்டைகள் (அறை) இருக்கும். ஒரு கட்டையில் 80 ஆயிரம் கற்கள் வரை வேகும்.

பல நூறு தொழிலாளர்களைக் கொண்டு பச்சைக் கற்களை அறுத்து வெயிலில் உலர வைத்து சூளையில் வைப்பார்கள். இப்போது ஒரு செங்கலின் விலை ரூ.7.30 லிருந்து 7.80 வரை போகிறது. முக்கால் அடி நீளமும் 4 இன்ஞ் அகலமும் 2 கிலோ எடையும் இருந்தால், அது தரமான செங்கல். அதிலும் பல இரகங்கள் உண்டு. மண் வளத்தைப் பொருத்து செம்பருத்திப் பூ நிறத்தில் சிறந்த கல்லும், உப்பேறிய மண்ணில் வெளுத்துப்போன கல்லும் கிடைக்கும்.

இந்த இடத்தில் ஒன்று முதல் 3 வண்டிகள் வரை வியாபாரம் செய்யும் முதலாளிகள் இருக்கிறார்கள். இங்கு சராசரியாக 40 லாரிகள் வரை தயாராக நிற்கும். ஒரு லாரிக்கு எடை எண்ணிக்கையைப் பொருத்து 3 முதல் 5 தொழிலாளர்கள் வரை தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். 3,000 கற்களை அடுக்கும் லாரியிலிருந்து 12 ஆயிரம் கற்களை அடுக்கும் டிம்பர் வரை இங்கு உண்டு.

படிக்க :
♦ கை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு…! பிச்சை எடுக்க வச்சிடாத..!”
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

லாரி முதலாளிகள் ஒரு கல்லை 6 ரூபாய்க்கு வாங்கி, 7.30க்கு விற்கிறார்கள். சராசரியாக கல்லுக்கு 1லிருந்து 1.50 வரை விற்பார்கள். காரணம், எடுத்து வரும் வண்டிக்கான டீசல் செலவு, வண்டித் தேய்மானம், லேபர் கூலி இப்படி போக முதலாளிக்கு கல்லுக்கு 30 காசு நிற்கும். அதற்கு முன் 50 காசு வரை லாபம் பார்த்தார்கள். இப்போது லாபம் வேண்டாம், வண்டி வாடகை வந்தால் போதும் என்று வந்த விலைக்கே விற்கிறார்கள். அப்படியும் வியாபாரம் இல்லை. ஒரு லாரி கல் ஓட சமயத்தில் 2 நாள்கூட ஆகும். அப்போது மேல் செலவு இரட்டிப்பாகி நஷ்டம் ஏற்படும். இதனால் பல முதலாளிகள் தொழிலை விட்டே போய் விட்டார்கள். இதை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பாடு பெரும் திண்டாட்டமாகி விட்டது.

எப்போதும் தயார் நிலையில் இருக்கும் லாரிகள்.

விற்கும் வரை லாரியிலேயே காத்திருப்போம். அதுவரை கைச்செலவு, சாப்பாட்டுச் செலவுக்கு அட்வான்சாக வாங்குவதால், மொத்தத்தில் கூலி குறைவாகத்தான் கிடைக்கும். சில நேரம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் லாரிக்கு கீழேயே சுருண்டு படுத்துக் கிடப்போம்.

மழைக்காலம் வந்தால் இன்னும் கொடுமை. ஒதுங்கி நிற்க இடம் இருக்காது. டீ குடிக்க காசு இருக்காது. வெடவெடன்னு குளிரு வேற. இப்படித்தான் எங்க பொழப்பு போகுது. நகரத்தில் இருக்கிறோம். ஆனால், நரகத்தில் வாழ்கிறோம்.

***

பெருமாள், லாரி ஓட்டுநர்

பெருமாள், லாரி ஓட்டுநர்

டிரைவர் வேலை, வருமானம், வாழ்க்கைப் பற்றிய நம்முடைய கேள்விக்கு எரிச்சல் அடைந்தார்.

என்ன செய்யிறது கடன் வாங்கி, கடன் வாங்கி காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. போற நிலைமைய பார்த்தா, வாங்குன கடன்காரங்களுக்கு பதில் சொல்லவே முடியல. மானத்துக்குப் பயந்து கடைசியா தூக்கு மாட்டிக்கொள்ள வேண்டியதுதான் என்றார், 35 வயதே நிரம்பிய இளம் தொழிலாளி.

அங்கிருந்த தொழிலாளிகள் பலரும், தங்கள் குழந்தைகளுக்கு கஞ்சிகூட ஊற்ற முடியல, அதுக்கே கடன் வாங்க வேண்டிய நிலைமையை எண்ணி உடைந்துப் போகிறார்கள். ரேசன் அரிசி சோத்தக்கூட நிம்மதியாக சாப்பிட முடியவில்லை என்று நம்மிடம் முறையிடுகிறார்கள்.

***

லாரி பார்கிங் கட்டணம் வசூலிப்பவர்

லாரி பார்கிங் கட்டணம் வசூலிப்பவர்

கட்டுமானப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிற சந்தை மாதிரி. எல்லா பொருட்களையும் லாரியில் வைத்துக் கொண்டு வெயிட் பண்ணுவார்கள். வாடிக்கையாளர்கள் வந்தால் வீட்டிற்கே சென்று சப்ளை செய்வார்கள். 24 மணி நேரமும் இங்கு வந்து பொருட்களை வாங்கலாம்.

கம்பி, எம்சான்ட் மணல், பல இரக செங்கற்கல் மற்றும் அதற்குத் தேவையான லேபர்களும் இங்கு கிடைப்பார்கள். பிளெம்பர், கொத்தனார், எலெக்ட்ரீஷியன், டைல்ஸ் பதிப்பவர் என அனைவரும் இங்கு வந்து காத்திருப்பார்கள். வீட்டிற்குச் சென்றாலும் ஃபோன் பண்ணி கூப்பிட்டால் அடுத்த நிமிடம் வந்து நிற்பார்கள்.

இங்கு வந்து நிற்கும் லாரிகளுக்கான பார்க்கிங் கட்டணம் நாளுக்கு ரூ. 100. முன்பெல்லாம் அதிக நேரம் நிற்காது. எப்போதும் ஓட்டத்தில் இருக்கும். ஒரு நாளைக்கு 3 லோடுகூட அடிப்பார்கள். ஆனால், இப்போது 1 லோடுக்கு 3 நாட்கள் கூட சீந்துவார் இல்லாமல் காத்திருக்கிறார்கள்.

வண்டிக்கான பார்க்கிங் பணம் கூட கொடுக்க முடியாமல் கடன் வைக்கிறார்கள். அவங்க முறையா கொடுத்தாத்தான் எங்களுக்கும் வாழ்க்கை, இல்லேன்னா திண்டாட்டம்தான். பக்கத்தில் கோயம்பேடு காய்மார்கெட் இருப்பதால், அந்த லாரிகளும் இங்கே நிறுத்துவாங்க, ஏதோ சமாளிக்கிறோம். வேலை செய்யிற தொழிலாளிகளையும் கொறை சொல்ல முடியாது, பணம் இருந்தால் டீ, டிபன் என எல்லாம் வாங்கித் தருவார்கள். இப்போது அவர்களே நொந்து போய் கிடக்கிறார்கள், என்ன செய்ய? என்கிறார் சகத் தொழிலாளியாக.

படிக்க :
♦ என் உருவ பொம்மையை எரியுங்கள் ! பாசிச மோடியின் நீலிக் கண்ணீர் | கேலிச்சித்திரம்
♦ மோடியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் ! என்ன செய்யப் போகிறோம் ? PRPC 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! – செய்தி | படங்கள்

***

இரவு பகல் பாராமல், வாடிக்கையாளர் கூப்பிடும் நேரத்திற்கு செல்ல வேண்டுமானால், கிடைக்கும் நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

சென்னை நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள செங்கல், மணல் லாரிகள்.

விழுப்புரம் அருகில் உள்ள கிராமத்திலிருந்து சென்னையில் தங்கி வேலை செய்யும் தொழிலாளி அய்யனார்.

வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகள்..

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க