மதுரையில் நடைபெற்ற மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் 16-ம் ஆண்டுவிழா கருத்தரங்கம் !

க்கள் உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை, 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் 22.12.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடைபெற்றது.

“அயோத்தி-காஷ்மீர்-சபரிமலை-தேசிய குடிமக்கள் பதிவேடு ! – பறிக்கப்படும் மனித உரிமைகள் தகர்க்கப்படும் அரசியல் சட்டம் !” என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளைத் தலைவர் பேராசிரியர் அ. சீநிவாசன் இன்றைய அரசியல் சூழலில் கருத்தரங்கின் அவசியம் குறித்து தலைமை உரையில் பேசினார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் தனது உரையில்,

“மதச் சார்பின்மை, நாடாளுமன்ற ஜனநாயகம் போன்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறுகளை மாற்றுகிற வகையில் எந்த ஒரு சட்ட திருத்தத்தையும் எந்த அரசும் மேற்கொள்ள முடியாது. மாறாக, மோடி – அமித் ஷா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளுக்கு எதிரானது. இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமையை மறுக்கும் இச்சட்டம் மதச்சார்பின்மைக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது” என எடுத்துரைத்தார்.

“ஆவணங்கள் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டிய பாபர் மசூதி தொடர்பான உரிமையியல் வழக்கில், பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அரசியல் சட்ட விரோதமானது” என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்

“மாநில ஆளுநர்தான் மாநில அரசு என்றும், மாநில சட்ட மன்றம்தான் அரசியல் நிர்ணய சபை என்றும் சட்ட திருத்தம் செய்து காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த 370 சிறப்பு உரிமையை மோடி அரசு பறித்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளை மீறிய செயல் மற்றும் நம்பிக்கைத் துரோகம்” என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

“தீண்டாமை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது; தீண்டாமை ஒரு குற்றம்; தீண்டாமையை எந்த வடிவத்திலும் கடைபிடிக்கக் கூடாது என்கிறது இந்திய அரசியல் சட்டம். சபரி மலையில் பெண்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும்  சங்பரிவாரங்கள் மாதவிடாயை தீட்டு என்கிறது. தீட்டு என்பது தீண்டாமைக் குற்றம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால்தான் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவாரங்கள் தீர்ப்பை மிகக்கடுமையாக எதிர்க்கின்றன. அரசியல் சட்டத்தால் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள தனிமனித மாண்பு என்பது பெண்கள் விசயத்தில் சிதைக்கப்படுகிறது.

பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் சங்பரிவாங்கள் சபரி மலைத் தீர்பை ஏற்க மறுக்கிறது” என்பதை அம்பலப்படுத்தினார்..

படிக்க:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! நேரலை | Live Streaming
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியர்கள் நாங்கள் எதிர்க்கிறோம் ! – வழக்கறிஞர் பாலன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.ஆளூர் ஷாநவாஸ் தனது உரையில்,

“முத்தலாக் தடைச் சட்டம் , காஷ்மீர் சட்டத் திருத்தம் மற்றும் பாபர் மசூதிப் பிரச்சினைகளைப் போல் அல்லாமல் குடிமக்கள் திருத்தச் சட்டம் கொண்டு வந்த பிறகு இன்று நாடே பற்றி எரிகிறது. மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைளுக்கு எதிராக எப்பொழுதும் தமிழ்நாடுதான் பொங்கி எழும். ஆனால் இன்று நாடே பொங்கி எழுகிறது. ஏன்?

திரு.ஆளூர் ஷாநவாஸ்

அண்டை நாடுகளிலிருந்து குடியேறிவர்களால் ஆபத்து, இதை முறைப்படுத்துவதற்குத்தான் குடிமக்கள் திருத்தச் சட்டம் என்கிறது மோடி அரசு.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேச நாடுகளிலிருந்து வந்துள்ள இந்துக்கள், கிருஸ்தவர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள், சீக்கியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது எத்தகைய குற்ற வழக்குகள் இருந்தாலும், அவர்களை குடி மக்களாக ஏற்றுக் கொள்வார்களாம். ஆனால் எந்த வழக்கும் இல்லை என்றாலும் இஸ்லாமியர்களையும் இலங்கைத் தமிழர்களையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். இது என்ன நீதி? இது இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் எதிராக பாகுபாடு பார்ப்பது ஆகாதா?

ரோஹிங்கியா முஸ்லீம்கள் மியான்மர் அரசுக்கு எதிராகப் போராடக் கூடியவர்கள். அவர்களை எப்படி இந்தியாவில் ஏற்க முடியும் எனக் கேள்வி எழுப்பும் மோடி அரசு, தனிநாடு கேட்டு சீனாவுக்கு எதிராகப் போராடும் திபெத்தியர்களை எப்படி தழுவிக் கொள்கிறது?

அண்டை நாடுகளிலிருந்து வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மையினரைப் பாதுகாக்கவே இச்சட்டத் திருத்தம் என்கின்றது பா.ஜ.க அரசு. தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் கிடையாது என கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ள நிலையில், இலங்கைக்குச் சென்றாலும் உரிமைகள் கிடைக்காது என்ற சூழலில் மூன்று தலைமுறைகளாக தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கிடையாது என்கிறார் மோடி. இலங்கை அண்டை நாடு இல்லையா? பெரும்பான்மை பொளத்த மதத்தால் சிறுபான்மை ஈழத் தமிழர்கள் வஞ்சிக்கப்படவில்லையா? ஏன் இந்தப் பாகுபாடு?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு இராமர் கோவில் கட்டுவதற்கான தயாரிப்பு வேலைகள் கடந்த 25 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்ததே. எந்த தையரியத்தில் பெரும் பொருட்செலவு செய்து அவ்வேலைகளை மேற்கொண்டனர்? இடிக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்த வாஜ்பாய் அரசு அதற்கான பணிகள் எதையும் ஏன் மேற்கொள்ளவில்லை? தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று அவர்களுக்குத் தெரியும். அதுதான் அயோத்தியில் நடந்தது.

மோடி அரசு சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. மாறாக இட ஒதுக்கீடு உள்ளிட்ட கொள்கைகளில் பெரும்பான்மை இந்துக்களுக்கும் எதிரானது. எனவே, சிறுபான்மையினர், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் பெரும்பான்மை இந்துக்களிடம் போய் இந்த உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் நாம் அப்பணியை செய்வதில்லை. மாறாக அவர்கள் விலை போகும் சிறுபான்மையினர் சிலரை சேர்த்துக் கொண்டு மொத்த சிறுபான்மையினரும் அவர்களுக்கு அதரவாக திரண்டு இருப்பதாக பொய் சொல்லுகின்றனர்.

எனவே, பாதிப்பை எதிர் நோக்கி இருக்கும் பெரும்பான்மை இந்துக்களுடன் இணைந்து போராடினால்தான் ஆர்.எஸ்.எஸ்-மோடி கும்பலை வீழ்த்த முடியும்” என வலியுறுத்தினார்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள் !
♦ ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா !

இறுதியாக தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு தனது உரையில்,

தோழர் தியாகு

“காஷ்மீரில் 370-ஐ  முடக்கிய பிறகு, கடந்த 120 நாட்களாக 75 லட்சம் மக்கள், முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆசாதி (விடுதலை) என்ற ஒரே முழக்கத்தை அனைத்து மக்களும் முன்வைத்து அஞ்சாத தீரத்துடன் போராடி வருகின்றனர். இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குக்கூட அவர்கள் அனுமதிக்கப்படாத கொடூரமான சூழல் நிலவுகிறது. ஆனால் மோடி-அமித் ஷா மற்றும் அவர்களது அதிகார வர்க்கம் காஷ்மீரில் அமைதி நிலவுவதாக பச்சையாகப் பொய் சொல்கின்றனர். தங்களுக்கு விடுதலை வேண்டும் என்று கோருகின்ற அவர்கள் இந்தியாவிடமிருந்து விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் அவர்கள் முன்வைக்கக் கூடாது ?”என்று கேள்வி எழுப்பினார்.

“பாபர் மசூதிக்குள் ராமன் பொம்மையை வைத்தது, இந்துக்களின் வழிபாட்டுக்கு மசூதியைத் திறந்து விட்டது, 1992 டிசம்பர் 6-ல் மசூதியை இடித்தது என அனைத்துமே சட்ட விரோதம் என ஒரு பக்கம் சொல்லிவிட்டு இடித்தவனுக்கே 2.77 ஏக்கர் நிலத்தை கொடையாகக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இது என்ன நீதி?

எனக்கு பிறப்புச் சான்றிதழ் கிடையாது. அது போல வாகனம் ஓட்டத் தெரியாத பலருக்கு ஓட்டுநர் உரிமம் இருக்காது. கிராமங்களில் உள்ளவர்களுக்கு படிப்புச் சான்றிதழ் இருக்காது. சிலருக்கு ஆதார் இருக்காது. இந்தியக் குடிமகன் என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும். தவறினால் அண்ணன்-தம்பியைப் பிரிப்பார்கள். கணவன்-மனைவியைப் பிரிப்பார்கள். மகன்-தந்தையைப் பிரிப்பார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் (CAA) தொடர்ந்து வரப்போகும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) மூலம் இதுதான் நடக்கும். எந்த உரிமையும் சலுகையும் உங்களுக்குக் கிடைக்காது. மொத்தத்தில் பலர் நாடற்றவர்களாக (stateless) ஆக்கப்படுவார்கள்.

குடியுரிமை பற்றி இந்திய அரசியல் சட்டம் பேசுகிறது. மாநில உரிமைகள் குறித்து நாகாலாந்தோடு மோடி ஒப்பந்தம் போடுகிறார். ஈழ மக்கள் யார்? தமிழர்கள்தானே. எங்கே அகதிகளாக இருக்கிறார்கள்? தமிழகத்தில்தானே? எனவே குடியுரிமை குறித்து மாநில அரசு முடிவெடுக்க உரிமை இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கும் குடியுரிமை இல்லை என்ற நிலையே இருக்கக்கூடாது. இரட்டைக் குடியுரிமையாவது வழங்க வேண்டும்” என தனது உரையில் தோழர் தியாகு கோரினார்.

இறுதியாக மாவட்டச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணி ராஜ் நன்றி கூறினார். ஞாயிற்றுக் கிழமை, அதுவும் காலை நேரத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டாலும் சுமார் ஐநூறு பேர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை,
தொடர்புக்கு : 73393 26807.