மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து, 2020-ம் ஆண்டில் ஜனவரி – 08-ம் தேதியன்று, ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ள அனைத்து துறை தொழிலாளர்களது வேலை நிறுத்தத்தில், தொழில் மற்றும் துறைவாரியான, பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் புதுச்சேரியில் கடந்த டிசம்பர் – 28 அன்று திருபுவனை தொழிற்பேட்டை – மதகடிப்பட்டு பகுதியில் உள்ள ஆனந்த செல்லம்மாள் திருமண மண்டபத்தில் அரங்கக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஏற்கெனவே மோடி தலைமையிலான ஆறு ஆண்டு கால ஆட்சியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்துக் கட்டுவது, நீம், FTE திட்டங்களால் தொழிற்சங்க உரிமை, பணி நிரந்தர உரிமைகள் பறிக்கப்படுவது என தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைகளும், பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, வறுமை, பொதுத்துறைகள் ஒழிப்பு என பரந்துபட்ட மக்களின் வாழ்வுரிமைகளைப் பறித்து வருகிறது மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

மறுபுறம், தகவல் பெறும் உரிமைச் சட்டம், ஊபா ஆள்தூக்கிச் சட்டம், ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை ஜனநாயக விரோதமான முறையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியும் வருகிறது. இந்த நிலையில் தற்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான நாடு தழுவிய அளவில் நடந்து வரும் போராட்டங்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கின்றன.

இன்றைய நிலையில் அப்படிப்பட்ட போராட்டங்களை வலுப்படுத்துவதும், இப்போராட்டங்களை, ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கான அரசியல் போராட்டமாக முன்னெடுக்க வேண்டியதும், நம்மைப் போன்ற சமூக ஜனநாயக இயக்கங்கள், தொழிற்சங்கங்களின் கடமையாகும் என்ற அடிப்படையில் பிற தொழிற்சங்கங்களை ஒருங்கிணைப்பது என்ற அடிப்படையில் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.சி.சி.டி.யூ. ஆகிய சங்க முன்னணியாளர்களின் பங்கேற்புடன் இந்த அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கக்கூட்டத்தில், பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கமான ரானே பிரேக் லைனிங் எம்ப்ளாயீஸ் யூனியன் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர். தினேஷ் பொன்னையா, சிஐடியூ சங்கத்தின் புதுச்சேரி பிரதேச பொருளாளர் தோழர். பிரபுராஜ் மற்றும் ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவரும், சேதுராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பாளருமான தோழர் மோதிலால் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநில செயலாளர் தோழர். மகேந்திரன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.

தோழர் சரவணன் தனது தலைமையுரையில் மோடி கும்பல், மாட்டுக்கறி பிரச்சினை முதல் குடியுரிமைச் சட்டத் திருத்தம் வரையில் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ செயல்திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய வெறி, தேசபக்தி என மக்களை மடைமாற்றி கார்ப்பரேட்டுக்களுக்கான பொருளாதார திட்டங்களையும்  செயல்படுத்தி வருகிறது. இது அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் பாதித்துள்ளது. இவற்றை முறியடிக்க தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.

ஏஐடியூசி மாவட்டத் தலைவர் தோழர் தினேஷ் பொன்னையா, நமது முயற்சியை வாழ்த்தியதோடு, நீம், FTE போன்ற திட்டங்களை விளக்கிப் பேசியும், நிதிமூலதனத்தை கார்ப்பரேட்டுக்கள் சூறையாடுவதற்கு தேர்ந்தெடுத்துள்ள வடிவமே பாசிசம். அந்தப் பாசிசத்தை ஒழித்து மக்களைப் பாதுகாப்பதற்கு இடதுசாரிகளைத் தவிர மாற்று இல்லை என்பதை விளக்கிப் பேசினார்.

சிஐடியூ புதுவை பிரதேச பொருளாளர் பிரபுராஜ், ஜனவரி-8 வேலைநிறுத்தம் தொடர்பான புஜதொமு-வின் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் எனக் கூறியதுடன், இன்றைய நிலையில் தொழிலாளி வர்க்கம், அரசியல் மனமாச்சரியங்களைக் கடந்து ஒன்று சேர வேண்டும் என்பதையும், மோடி கொண்டுவரும் பல்வேறு ஒடுக்குமுறைகளைப் பேசி விளக்கினார். தொழிலாளி வர்க்கத்தையும், மக்களையும் காப்பாற்ற இடதுசாரிகள் தவிர யாரும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

ஏஐசிசிடியூ தலைவர் தோழர் மோதிலால், தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்தால் சாதிக்க முடியும் என்பதை சேதுராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு மூலமாக செய்த போராட்ட அனுபவங்களைக் கூறி நம்பிக்கை ஊட்டினார். தொழிலாளர்கள் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் தொழிற்சங்கத்தின் கடமைகள் பற்றியும் விமர்சன, சுயவிமர்சன ரீதியாக விளக்கிப் பேசி, ஜனவரி 8, வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது நம் அனைவரது கடமையாகும் என்றார்.

படிக்க :
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !

இறுதியாகப் பேசிய புஜதொமு புதுச்சேரி மாநில செயலாளர் மகேந்திரன், நமது அழைப்பை ஏற்று வந்த தொழிற்சங்கத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஜனவரி-8 வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடத்த வேண்டிய கடமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு என்பதை வலியுறுத்தும் விதமாக, மோடியின் பல்வேறு திட்டங்களை விளக்கியும், தொழிலாளர் மீதான சட்டத் திருத்தம் பற்றியும் அதன் ஒடுக்குமுறைகளையும் விளக்கிப் பேசினார். இந்தப் போராட்டத்திற்குப் பிறகும், கூட்டமைப்பை உருவாக்கும் வகையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் உரையை நிறைவு செய்தார்.

ஜனவரி 8, 2020 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டிய அவசியத்தை, தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்த்தும் வகையிலும், பல்வேறு மாற்றுக்கட்சி தொழிற்சங்கங்கள் கலந்து  கொண்டது  நம்பிக்கையூட்டுவதாக அமைந்திருந்தது.


தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு : 95977 89801.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க