பெருநகர சென்னை மாநகராட்சி குப்பைக் கொட்டும் திடக்கழிவு மேலாண்மைத்துறை அலுவலகம். அதன் முன்பு நூற்றுக்கணக்கான கழிவுநீர் அகற்றும் ஊர்திகள் நிறுத்தப்பட்டு, அதன் உரிமையாளர்களும் – ஓட்டுநர்களும் போராடி வருகின்றனர்.

கடந்த 3-ம் தேதி தொடங்கியது காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம். இது குறித்து போராட்டத்தில் இருந்த ஊர்தி  உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூறியது…

“துரைப்பாக்கம் – பெருங்குடி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பதிவு செய்திருக்கக்கூடிய வண்டிங்க மொத்தம் 375. இந்த வண்டிங்க அனைத்தும்  திருவான்மியூர் – கேளம்பாக்கம், கானத்தூர் – ஈ.சி.ஆர் சாலை, தாம்பரம், குரோம்பேட்டை  செம்பாக்கம் – துரைப்பாக்கம் என்று இந்த சுற்றுவட்டாரத்தில இருக்க அனைத்து வீடுகள், கடைகள், ஓட்டல், திருமண மண்டபம், தங்கும் விடுதி, என எல்லா இடத்திலும் இருக்கக்கூடிய கழிவுநீரை கொண்டு வந்து இந்த சுத்திகரிப்பு நிலையத்துல கொட்டுவோம். இதுல என்ன பிரச்சனைன்னா, 30.11.2018 முன்னாடி வரைக்கும் நாங்க கொண்டு வரும் லோடுக்கு 100 ரூபாய் வாங்கினாங்க. இப்போ 250 ரூபாயா உயர்த்தி இருக்காங்க.

ஒரு நாளைக்கு 5 லோடு ஏத்திகிட்டு வருவோம். மேடவாக்கத்துல இருந்து கொண்டு வர 1200 ரூபா. பள்ளிக்கரணை – 1000 ரூபா. குரோம்பேட்டை, தாம்பரம் 1300, துரைப்பாக்கம் 550, சோழிங்கநல்லூர் 650 என்று தூரத்துக்கு ஏத்தமாதிரி கட்டணம் வாங்குறோம். ஈ.சி.ஆர். லைன்ல இருந்து வர வண்டிக்கு அதிகமா வாங்குறோம். காரணம் டோல்கேட்ல தினமும் 350 ரூபா கட்ட வேண்டி இருக்கு. லோக்கல்ல ஓடுற வண்டிக்கு டோல்கேட் பிரச்சனை இல்லை.

இந்த ஐந்து நடைக்கு காலைல 5 மணிக்கு வண்டிய எடுப்போம். இன்னும் சொல்லப்போனா 3 மணிக்கும் எடுப்போம். அது போற இடத்த பொறுத்து. சந்து பொந்தா இருக்கும். டிராபிக் இல்லாத இடமா எல்லாத்தையும் கணக்கு பண்ணுவோம். அதுக்கு ஏத்த நேரமா வண்டிய எடுப்போம். எதுவா இருந்தாலும் காலைல 8 மணிக்குள்ள வண்டிய கழிவுநீர் கொட்ற எடத்துக்கு கொண்டு வந்திடனும். இல்லனா டிராபிக், செம பிரச்சனையாயிடும்.

அதுக்கப்புறம் 11 மணி வரைக்கும் சிட்டிகுள்ள வண்டி ஓட்ட கூடாது. அப்படி மீறி வந்துட்டா போலிஸ்காரங்க புடிச்சி 1500 ரூபா ஃபைன் போட்ருவாங்க. அப்புறம் பதினோரு மணிக்கு வண்டிய எடுப்போம். லோக்கல்ல ஓடுற வண்டியும் அப்பதான் எடுப்பாங்க. அதிலருந்து, சாயங்காலம் 4 மணி வரைக்கும் வண்டி ஓடிகிட்டே இருக்கும். நாலு மணியிலருந்து எட்டு மணி வரைக்கும் வண்டி ஓடக்கூடாது. அதுக்காவே மதிய சாப்பாட சாப்பிடாம தவிர்த்துட்டு வண்டி ஓட்டுவோம். நைட்டு எட்டு மணியிலருந்து பதினோரு மணி வரைக்கும் ஓட்டிட்டு தூங்கவே ஒன்னு ஆகிடும். இதனால தூக்கம் சுத்தமா இருக்காது. அதனால் இந்த டைமிங் முறைய ரத்து பண்ணனும். அதுக்குத்தான் இந்த போராட்டம்.

ஒரு நாளைக்கு எப்படி பார்த்தாலும் 5  நடை ஓட்டினா தோராயமா 5000 ரூபா கிடைக்குது. அதுபோதாதா?

இப்படித்தான் எல்லோரும் நெனக்கிறாங்க. இந்த செப்டிக் டேங்க் உறிஞ்சிர மோட்டார் ஆயில் மோட்டார் அதுக்கு ஒரு நாளைக்கு 700 ரூபா டீசல் போட்டாகனும்.  டோல்கேட் 350, டிரைவர் சம்பளம் 900, கிளினருக்கு 700, கழிவு கொட்டுற இடத்துல 500 ரூபா. ஆக மொத்தம் 3150 ரூபா செலவாகிடும். இடையில போலிசு பிடிச்சா ஃபைன் தனி. இது லாங் வண்டி ஓட்டுறவங்களுக்கு.

மைதீன் அப்துல் காதர், ஓட்டுநர்.

லோக்கல் வண்டி ஓட்டுறவங்களுக்கு மினிமம் 600 ரூபா. ஐந்து நடை 3000 ரூபா. டோல்கேட் தவிர்த்து மற்ற அனைத்து செலவும் ஆகும்.. டிரைவர் – கிளினர் கூலி கொஞ்சம் குறையும்.  கணக்கு போட்டு பாருங்க. இந்த நெலமையில ஒரு லோடுக்கு 250 ரூபா உயர்த்தியிருக்காங்க. அதைக் கட்டினா என்ன மிஞ்சும் சொல்லுங்க?

இந்த வண்டிக்கு அடிக்கடி கிளட்ச் பிளேட் போயிடும். அதுக்கு செலவு 5000. செல்ஃப் மோட்டார் போயிடும் 4500 ரூபா. அடிக்கடி ஆன் பண்ணி ஆஃப் பண்றதால பேட்டரியும் சீக்கிரம் வீணாகிடும். அதுக்கு 6000 ரூபா. ரொம்ப முக்கியமா கட்டு பிளேட். இந்த வண்டிக்கு அதுதான் முக்கியம். அது போயிடுச்சினா சரி பார்க்க 10,000 செலவு ஆகும். இதை எல்லாம் எப்படி ஈடு கட்ட முடியும்?

ஆயில் மோட்டார், பம்ப் இத பராமரிப்பு பண்ணவே வருஷத்துக்கு 12,000 ஆகுங்க. அதுபோக வழக்கமா செய்யிற செலவு எஃப்.சி. 5000; இன்சூரன்ஸ் 39,000;  ஆர்.டி.ஓ ஃபீஸ் 2500; எலக்ட்ரிக்கல் வேலை 3000; டாக்ஸ் 14,000; பெயிண்ட் 15,000.  இந்த செலவெல்லாம் போக கையில ஒரு காசும் மிஞ்சாது. இத்தனைக்கும் எங்க புள்ளைங்கள பெரும்பாலும் கவர்மெண்ட் ஸ்கூல்லதான் படிக்க வக்கிறோம். இதுதான் கழிவுநீர் வண்டியோட இன்னைக்கு இருக்க நிலை’’ என்கிறார்கள் உரிமையாளர்கள்.

மணிகண்டன், கிளீனர்.

இந்த கழிவுநீர் ஊர்தியின் ஓட்டுநர்கள், கிளீனர்கள் கூறும்போது, “நாங்க எல்லாரும் படிக்காதவங்க. பத்து வருஷத்துக்கு மேல இந்த தொழில்ல இருக்கோம். இந்த தொழில்ல இருக்கவங்க யாரும் பெரும்பாலும் இந்த ஊர் கிடையாது. எல்லோரும் வெளியூர்காரங்கதான்.  எங்கள்ல ஒரு சிலருதான் குடும்பத்தோட இங்க இருக்காங்க. மத்தவங்க எல்லாம் சொந்த ஊர்லயே பொண்டாட்டி புள்ளங்கள விட்டுட்டு இங்க வந்து இந்த வேலை செய்யிறோம்.

நாங்க இந்த  வேலை செய்யிறோம்னு மனைவி, மக்களுக்குத் தெரியும். மத்த யாருக்கும் தெரியாது. வெளில சொல்லக்கூடிய தொழிலா செய்யிறோம். அதனால்தான் வீடுகூட வாடகைக்கு எடுக்க முடியல. யாரும் குடுக்க மாட்டாங்க.

நாங்க எல்லோரும் வண்டியிலயே படுத்துக்குவோம். வண்டிதான் வீடு. இன்னொரு பெரிய பிரச்சினை இந்த வண்டிய குடியிருப்புல நிறுத்த முடியாது. கொஞ்சம் ஒதுக்கு புறமாதான் நிறுத்தனும். அதனால் பொருட்கள் திருடு போயிடுது. வாங்குற சம்பளத்தையும் வண்டியிலதான் வச்சிப்போம். அதையும் பத்திரமா பாத்துக்கனும். சிலர் மட்டும் தொழில மாத்தி சொல்லி ரூம் எடுத்து இரண்டு, மூணு பேரா தங்கி இருக்காங்க.

நாங்க ஒரு வீட்டுக்கு செப்டிக் டேங்க் கிளீன் போனோம்னா அந்த வீட்டுக்காரங்களோட நடவடிக்கையே எங்கள அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கும். முதல்ல மூஞ்சில கர்சிப்ப கட்டிகிட்டு, கதவு, ஜன்னல் எல்லாத்தையும் சாத்திக்கிட்டு உள்ள போயிடுவாங்க. எல்லாம் முடிஞ்ச பிறகு வந்து எட்டிப் பார்த்துட்டு, ம்… சரி சரி.. கெளம்புங்கன்னு நம்மள தொரத்துறதுலயே குறியா இருப்பாங்க.

படிக்க:
பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா? மறுக்கிறதா?
சாதீ – முகிலனின் ஓவியங்கள் !

ஒருசிலர் இன்னா பண்ணுவாங்கன்னா, குழாய்ல இருக்க தண்ணிய புடிச்சி அப்படியே டேங்கை எல்லாம் கிளீன் பண்ணுங்கன்னு உள்ள இருந்தே சொல்லுவாங்க. அதெல்லாம் செய்ய முடியாதுன்னு சொன்னா உடனே ஓனர்கிட்ட போட்டு கொடுத்துவாங்க. இன்னா ஆள் வச்சிருக்க, ஒழுங்காவே வேலை செய்யிரதில்லன்னு சொல்லுவாங்க. ஓனரு இன்னா பண்ணுவாரு. அடுத்த முறை ஆர்டர் குடுக்கமாட்டங்கன்னு சரிங்க கேக்குறேன்னு சொல்லிட்டு அமைதியா வந்துடுவாரு.

டேங்கை கிளீன் பண்ணிட்டு டீ செலவு கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தோம்னா. “எதுக்கு நிக்குற, அதான் மொத்தமா வாங்கனிங்கல்ல, உங்க ஓனரு சம்பளம் தர்லயான்னு” மூஞ்சில அடிச்ச மாதிரி கேட்பாங்க.

நாங்க என்ன எங்களுக்காகவா இந்த வேலை செய்யிறோம். உங்க சேஃப்டிக்கு உங்க ‘பீ’ய எங்க கையாள அள்ளுறோம். நாங்க வர்லன்னா உங்க நெலம என்னாகும்னு கொஞ்சமாவது நெனச்சி பாருங்க. நாங்க என்ன தினமுமா உங்ககிட்ட வந்து நிக்குறோம். மூனு மாசத்துக்கு ஒரு முற செலவு பண்றீங்க. அதுக்கு ஒரு பத்து ரூபா கொடுத்து டீ சாப்பிடுங்கன்னு சொல்ல முடியாதா?

கேஸ் சிலிண்டர் எடுத்துட்டு போறவங்களுக்குக் கூட 10 ரூபா தராங்க. ஆனா எங்கள மூஞ்சால அடிச்ச மாதிரி ஒதுக்குறாங்க.  இதெல்லாம்கூட பரவாயில்லங்க.

தண்ணி கொடுக்க மாட்டாங்க. எங்களுக்கு தண்ணி கேட்கவே அவமானமா இருக்கும். நாங்க போற 99% பேர் வீட்டுல எங்களுக்கு கொடுக்கிறது குழாய் தண்ணிதான். கேன் தண்ணி 1% வீட்ல இருந்துதான் வரும்.  மனசாட்சியே இருக்காது. நம்ம கண்ணு முன்னாடியே குழாய் தண்ணிய புடிச்சி கொடுப்பாங்க. அதுவும் எதுல? எதாவது ஜெக்குல. அப்படி இல்லனா வாட்டர் கேன்ல. அந்த கேனைக் கூட திரும்ப வாங்க மாட்டாங்க.

இதனால நாங்க, எங்க வாட்டர் கேன் கொடுத்து தண்ணி கொடுங்கன்னு கேட்டா, அந்தக் கேனை கையால வாங்க மாட்டாங்க, நாமளே புடிச்சிருக்கனும். அவங்க தண்ணிய  கேன்ல படாம மேல இருந்து ஊத்துவாங்க. இதையெல்லாம் பார்த்து பார்த்து எங்களுக்கே சீ…ன்னு போயிடுச்சி. இப்ப எல்லாம் எந்த வீட்டுக்கு போனாலும் தண்ணியே கேக்குறதில்ல.  ரெண்டு ரூபா கொடுத்து வாட்டர் பாக்கெட் வாங்கி குடிச்சிடுவோம்.

படிக்க:
காந்தியம் சாதியத்தின் மீதான சவுக்கடி | மஞ்சள் நாடகம்
சமபந்தி அரசியல் – நூல் அறிமுகம் : எச்சிலைக்குள்ளும் இருக்குதடா சாதி

அப்பார்ட்மெண்ட்ல குடியிருக்கவங்க. ஐ.டி. கம்பனியில வேல செய்யிரவங்க, இவங்கதான் ரொம்ப மோசமா நடந்துப்பாங்க. அந்த வீட்டுல இருக்க வாட்ச்மேன் கூட மதிக்க மாட்டாரு.

சும்மா சொல்லக்கூடாது, ஒரு சில வீட்டுக்காரங்க இருக்காங்க. அவங்க சில்வர் தம்ளர்ல டீ போட்டு கொடுப்பாங்க. அதை வாங்குறதுக்கு எங்களுக்குத்தான் கொஞ்சம் கூச்சமா இருக்கும். ஆனா அவங்க, வற்புறுத்தி கொடுப்பாங்க. அவங்க எல்லாம்  யாருன்னு பார்த்திங்ன்னா. நம்மள மாதிரி கஷ்டபட்ட முன்னேறி வந்தவங்களா இருப்பாங்க.

அப்புறம் குழந்தைங்களுக்கு வாங்கின சாக்லேட், மிக்சர் கொடுப்பாங்க. கிருஸ்துமஸ், தீபாவளிக்கு 100 ரூபா கொடுப்பாங்க.  பொதுவா நாங்க இதெல்லாம் யார்கிட்டயும் எதிர்பாக்குறதில்ல சார்.  எங்களை ஒரு மனுசனா மதிச்சாலே போதும். வேற எதுவும் தர தேவல!

ஒரு தெருவுக்குள்ள போறோம்னா பத்து பைக்கு ரோட்டுலயே நிறுத்தி வச்சிருப்பாங்க. அந்த வண்டிய எடுக்க மாட்டாங்க. நாம போயிட்டு தள்ளி வச்சா, உள்ளயிருந்து ஓடியாந்து, “நீ… எதுக்குடா கைய வச்ச”ன்னு அடிப்பானுங்க. எங்க கை பட்ட இடத்துல தண்ணிய ஊத்தி கழுவானுங்க. அதே மாதிரி ஒரு சில வீட்டுல நாங்க நின்ன இடத்துல தடம் தெரியாம தண்ணி ஊத்தி கழுவாங்க.  அப்ப எங்களுக்கு ரொம்ப அசிங்கமா இருக்கும். அப்படியே பார்த்துட்டே வந்துடுவோம். இது வீட்டுல நடக்குறது.

இப்ப ரோட்டுக்கு வருவோம். எங்க வண்டிய பார்த்தாலே சைக்கிள்ல போறவன்கூட வேகமாதான் போறான். உள்ள இருக்க நாங்களும் மனுசங்கதான்னு நெனக்கவே மாட்றாங்க. அதை எல்லாம் பாக்கும்போது எங்களால அதை தாங்கவே முடியாது. அதனாலயே வண்டிய வேகமா ஓட்டுவோம். அப்பதான் போலீஸ்காரன் புடிப்பான். இத சொல்லவே வேணாம் சார். சுத்த…..மா மதிக்க மாட்டான்.  அவங்க எங்கள கூப்பிடுறதே.. இப்படித்தான் இருக்கும்.. டே….ங்கோத்தா…. அடிங்…..ங்கொம்மாள……. பாடு…… இப்படித்தான் வாயில வருமே…. டே….நாயே… 100 ரூபா கொடுத்துட்டு போடா….ன்னு கேட்பாங்க. எதுவும் பேச முடியாது. இதெல்லாம் யாரு தட்டிக் கேக்குறது?

இதனாலதான் சார், சொந்தகாரன், பந்தகாரன்னு.. எங்க – யார பாக்க போனாலும், என்ன வேலை செய்யிரன்னு கேட்டா யாரும் உண்மையான வேலைய சொல்ல மாட்டாங்க. டிராவல்ஸ் டிரைவர், பஸ் டிரைவர், ஸ்கூல் வண்டி ஓட்டுறோம்னு சொல்லிடுவாங்க. மத்த மனுசங்கள போல எங்களால இயல்பா இருக்க முடியாது.

இந்த வேலையால வரக்கூடிய நோயப்பத்தி சொல்லனுமே, சம்பு ஓப்பன் பண்ணினதும் ஒரு கேஸ் வரும். அது உள்ள போனதும் மாரை அடைக்கிற மாதிரி இருக்கும். இது தொடர்ச்சியா இருக்கதால அட்டாக் வருது. மூச்சித் திணறல், சொரி சிரங்கு, அடிக்கடி வரும். எல்லார் கையில கால்லயும் பாக்கலாம். சிரங்கு வந்துச்சினா சீக்கிரம் ஆறாது. ஸ்கின் பிராபளம் தான் அதிகம். அதே மாதிரி கொசுக்கடி. அதனால வர காய்ய்ச்சல்,  இது எல்லாம் இந்த வேலை செய்யக்கூடியவங்களை பாதிக்கும். முகமே மாறிடும். அந்தளவுக்கு பாதிப்பு இருக்கு.

அப்புறம் ஏன் இந்த வேலைய செய்யனும்?

இந்த வேலை செஞ்சிட்டு வேற வேலைக்கு போக முடியாது. அப்படி போனா இதுக்கு  முன்னாடி எங்க வேலை பார்த்தன்னு கேக்குறாங்க. செப்டிக் டேங்க் வண்டி ஓட்டினேன்னு சொன்னா. மூஞ்சத் திருப்பிக்குவாங்க. யோசிச்சி சொல்றேன்னு சொல்லி அனுப்பிடுவாங்க. அதனால இதுலயே கெடக்க வேண்டியதா இருக்கு.

உங்க போராட்டத்தால எதாவது முன்னேற்றம் இருக்கா?

ஒன்னும் கிடையாது. இதுவரைக்கும் யாரும் வந்து பேசல.  இங்க இருக்க அதிகாரிகிட்ட கேட்டா இன்னா சொல்றாங்ன்னா, “நீங்க கட்டணத்தை உயர்த்திக்கோங்கன்னு” சொல்றாங்க. அது எப்படி சார் முடியும்…? இப்ப ஐ.டி கம்பனி, கவர்மெண்ட்ல வேலை செய்யிரவங்கள கேட்டா கொடுப்பாங்க. ஆனா நம்ம மாதிரி சாதாரண ஜனங்க எப்படி கொடுப்பாங்க? எல்லோரும் 15,000 சம்பளம் வாங்குறவங்க. வீடு வாடகை, கரண்ட் பில்னு எல்லா செலவும் இருக்கும்போது நாங்களும் உயர்த்தினோம்னா ஜனங்க கஷ்டப்படுவாங்க, சார்.

சரி, இப்ப என்ன நெலமை?

எல்லார் வீட்ல இருந்தும் கால் பண்ணிட்டே இருக்காங்க. யாரும் போனை எடுக்கல, ஓ.எம்.ஆர் முழுக்க ஒரே ஓட்டல்தான். அங்க நிறைய வேலை இருக்கும். இப்ப எங்க போராட்டத்தால பாதிக்கப்பட்டிருக்கு. கிராமம்னா வெளில – கொல்லக்கி போகலாம். இவ்ளோ பெரிய நகரத்துல ஒரு ஆப்பிள் வெட்டுறதா இருந்தா கூட நீங்க தண்ணிய பயன்படுத்தனும்.

படிக்க:
வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை
வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!

எல்லாத்துக்கும் தண்ணி. அந்த தண்ணி எல்லாம் செப்டிக் டேங்குக்குதான் போகும். அது நிரம்பி பக்கத்துக்கு வீட்டுக்கு போகும்போது சண்டை வருதுன்னு சொல்லி கால் பண்ணி கூட்டிட்டே இருக்காங்க. இப்ப நாங்க இல்லாத குறைய உணர்ந்திருப்பாங்க.

வினவு களச் செய்தியாளர் அரசாங்கம் வீட்டுக்கு வீடு டிரைனேஜ் கனக்சன் கொடுத்திருக்கனும். அதுவும் கொடுக்கல. இனிமே கொடுக்கனும்னா ஐந்து வருஷத்துக்கு மேல ஆகும். பல கோடி செலவாகும். அதை இந்த கவர்ன்மெண்ட் செய்யாது. வீட்டுக்காரங்க எங்ககிட்ட பேசுறதை விட அரசாங்கத்துகிட்ட பேசினாதான் முடிவு கிடைக்கும்! அதுவரைக்கும் போராட்டம் நடக்கும்” என்கிறார்கள் உறுதியாக!

– முகில்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க