மாத ஊதியம் தராததால் பசியில் செந்தில் என்ற தூய்மைப் பணியாளர் மரணமடைந்துள்ளார். இதனை கண்டித்து மே 16 அன்று அம்பத்தூர் ஏழாவது மண்டல அலுவலகத்தின் முன்பு 700-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பத்தூரில் வசித்து வரும் தூய்மைப் பணியாளரான செந்தில், எட்டு ஆண்டுகளாக பாடி பெருநகரம் 90-வது வார்டில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் உணவில்லாமல் பசியின் காரணமாக, மே 16 அன்று மரணமடைந்தார். காரணம், இவருக்கு வழங்க வேண்டிய மாத ஊதியமானது வழங்கப்படவில்லை.
1700-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாதமாக ஊதியம் வழங்கபடவில்லை. இது தூய்மைப் பணியாளர்களின் வாழ்நிலையை கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அம்பத்தூர் மண்டல அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது மட்டுமில்லாமல், தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.18,410 வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அவர்களுக்கு வெறும் ரூ.12,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தங்களுக்கு நிர்ணயித்து ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தூய்மைப் பாணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அம்பத்தூர் மண்டல அலுவலக அதிகாரியான ராஜேஸ்வரி இவர்களின் எந்தவித கோரிக்கைகளையும் ஏற்கவில்லை.
இவ்வாறு தூய்மைப் பணியாளர்கள் அரசாலும், அரசு அதிகாரிகளாளும் தொடர்ந்து வஞ்சிக்கபடுகிறார்கள்.
இன்று சென்னை மாநகரையே அழகு படுத்திக் கொண்டிருக்கும் இந்த உழைக்கும் கரங்களுக்கு கொடுக்கப்படும் பரிசு மரணம் மட்டுமே. இவர்களை நகரங்களிலிருந்து வெளியேற்றும் விடியல் அரசின் விடியல் ஆட்சிதான் இது. ஆம், இது விடியல் ஆட்சிதான் நமக்கு அல்ல; கார்ப்பரேடுகளுக்கும் காவிகளுக்கும்.
“தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால், ஜெகத்தினை அழித்திடுவோம்!” என்றார் பாரதி. இன்று உணவில்லாமல் இவர் ஒருவர் மட்டுமல்ல பல மக்கள் மடிந்துக் கொண்டுதான் இருகிறார்கள். இந்த இழப்பை நாம் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது. இவர்களின் கரங்களை உயர்த்த, இவர்களோடு இணைந்து நாம் போராடுவோம்.
தேன்மொழி