Thursday, May 30, 2024
முகப்புசமூகம்சாதி – மதம்வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை

வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை

-

06-scavenging-1கையால் மலத்தை அள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை ஒழித்துக்கட்டக் கோரும் போராட்டங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், மைய அரசு தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்டதைப் போல, கடந்த செப்டம்பர் மாதத்தில் இதற்காகப் புதிய சட்டமொன்றை – கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான சட்டம் – நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது. ஐ.டி. கம்பெனிகள், இணையதளம், முகநூல், மால்கள், காபி ஷாப், பங்குச் சந்தை, செவ்வாய் கோளை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் “மங்கள்யான்” விண்கலம் எனப் பளபளப்பாகக் காட்டப்படும் இந்தியாவின் இருண்ட, இழிந்த பக்கம்தான் கையால் மலம் அள்ளும் தொழில். இந்தத் தொழில் இந்தியாவின் ஏதோவொரு பின்தங்கிய மாநிலத்தின், பின்தங்கிய குக்கிராமத்தில் நடைபெறலாம் என யாராவது நினைத்துக் கொண்டால், அதைவிட அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.

கையால் மலம் அள்ளும் இழிதொழில் பின்தங்கிய பீகாரில் மட்டுமின்றி, வளர்ச்சிக்கே வழிகாட்டும் மாநிலமாகப் பீற்றிக் கொள்ளப்படும் குஜராத்திலும் இன்றளவும் நடந்து வருகிறது. தலைநகர் டெல்லி, குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் 256 மாவட்டங்களிலும் காணப்படுகிறது. உள்ளூராட்சி நிர்வாகம் தொடங்கி ரெயில்வே துறை, பாதுகாப்புத் துறை என மைய அரசின் பல்வேறு பிரிவுகளிலும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, “நாடெங்கிலும் 7,50,000 குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாக”க் குறிப்பிடுகிறது. “இந்தப் புள்ளிவிவரம் ரெயில்வே துறையில் வேலை செய்துவரும் மலம் அள்ளும் தொழிலாளர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தயாரிக்கப்படவில்லை” எனக் குற்றஞ்சுமத்தும் அரசுசாரா அமைப்புகள், அத்தொழிலாளர்களையும் சேர்த்தால், நாடெங்கும் ஏறத்தாழ 13 இலட்சம் குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாகக் கூறுகின்றன.

சுகாதாரப் பணி என அலங்காரமாகச் சோல்லப்படும் மலத்தை அள்ளுவதும், சாக்கடையைச் சுத்தம் செய்வதும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயே அடித்தட்டில் இருக்கும் அருந்ததியர், ஆதி ஆந்திரா, வால்மீகி உள்ளிட்ட சில பிரிவு மக்களின் மீது திணிக்கப்பட்டுக் கடைபிடிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால், அதற்குள் இறங்கி அடைப்பை நீக்கும் ‘பொறுப்பை’த் தாழ்த்தப்பட்ட ஆண்கள் மீது சுமத்தியிருக்கும் இந்தியச் சாதி சமூக அமைப்பு, மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்வதைத் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது சுமத்தியிருக்கிறது.

06-scavenging-6தெருவில் சாக்கடைத் தண்ணீர் வழிந்தோடினால், அதில் கால்படாமல் லாவகமாகத் தாண்டிச் செல்லுகிறோம். வீட்டிற்குள் குழந்தைகள் மலம் போய் விட்டால், அதைத் தூக்கிப் போடுவதற்குக் கூட அருவெறுப்பு அடைகிறோம். அப்படியிருக்கையில் நம்மைப் போன்ற சகமனிதன் மலமும் கழிவு நீரும் பொங்கி வழியும் சாக்கடைக்குள் இறங்குவதையும், யாருடைய மலத்தையோ கையால் வழித்துக் கூடைக்குள் போட்டுக் கொண்டு அதைத் தலை மேல் வைத்து எடுத்துச் செல்வதையும் கண்டு அதிர்ந்திருக்கிறோமா? இந்தத் தொழிலை சாதிக் கட்டுப்பாடு-கட்டாயத்தின் கீழ் செய்துவரும் அந்தத் தாழ்த்தப்பட்டோரின் மனோநிலையை அறிந்து வைத்திருக்கிறோமா?

“என்னுடைய உடம்பின் ஒவ்வொரு அங்கமும் நாறுகிறது; பலமுறை குளித்த பிறகும் நாறுகிறது. என்னால் சோற்றில் கை வைக்க முடியவில்லை; எனக்கு வேறு எந்த வேலையாவது கொடுங்கள். தயவு செய்து இந்த நரகத்திலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கள்” என்கிறார், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மலம் அள்ளும் தொழிலாளி சரசுவதி. அவர் மலத்தை அள்ளிக் கொண்டு வரும்பொழுது ஆதிக்கசாதியைச் சேர்ந்த இளைஞர்கள், “இன்று நீ நடிகை கார்தீனா கைஃப் போல இருக்கிறா” எனக் கேலி பேசுவார்கள். “அதைக் கேட்டும் கேட்காதது போல நான் நடந்து செல்வேன்” என்று அன்றாடம் தனது மனது படும் வலியை விவரிக்கிறார், சரசுவதி.

இந்தியாவைக் காக்க வந்திருக்கும் ரட்சகனாக நம்முன் நிறுத்தப்படும் மோடி, “வால்மீகி சாதியினர் மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்வதை ஆன்மப் பரிசோதனையாகச் செய்து வருகின்றனர்” எனச் சாதித் திமிரோடு நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார். நம்முள் பலர் இந்தளவிற்கு வெளிப்படையாகக் கேவலமாக நடந்து கொள்வதில்லை என்றாலும், அவர்கள் நம்மை நெருங்கிவிடாதபடி தள்ளித்தான் வைத்திருக்கிறோம். அவர்களின் நிலை குறித்து அக்கறையற்று, சோரணையற்று நடந்து வருகிறோம்.

***

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் (துப்புரவு தொழிலாளர் இயக்கம்) எனும் அமைப்பு கையால் மலம் அள்ளும் தொழிலை முற்றிலுமாகத் தடை செயக் கோரும் போராட்டங்களை 1980-களின் தொடக்கத்தில் எடுத்தது. இப்போராட்டங்கள் தொடங்கி 13 ஆண்டுகள் கழித்து, 1993-இல்தான் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது, மைய அரசு. இச்சட்டத்தைப் பற்றி ஒரே வரியில் சொன்னால், பாம்பும் சாகக் கூடாது, தடியும் நோகக் கூடாது என்பதுதான் மைய அரசின் நோக்கமாக இருந்தது.

பாதாளச் சாக்கடை
தமிழகத்தில் கடந்த 30 மாதங்களில், பாதாளச் சாக்கடைக்குள் இறங்கிய பொழுது விஷவாயு தாக்கி இறந்து போன தொழிலாளர்களின் எண்ணிக்கை முப்பதைத் தொட்டு விட்டது.

கையால் மலம் அள்ளுபவரைப் பணிக்கு அமர்த்துபவருக்கு ஒரு வருடம் வரை சிறைத் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என இச்சட்டம் பூச்சாண்டி காட்டினாலும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தவொரு துறையும் பொறுப்பாக்கப்படவில்லை. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறியதாக எந்தவொரு அதிகாரி மீதும் குற்றஞ்சுமத்தவும் முடியாது; தண்டிக்கவும் முடியாது. இப்படிப்பட்ட பல்வேறு ஓட்டைகளுடன் இச்சட்டம் கொண்டு வரப்பட்டதால், பெரும்பாலான மாநிலங்களும், மைய அரசின் ரயில்வே துறை, பாதுகாப்புத் துறையும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. இத்தகைய மோசடித்தனங்களின் விளைவாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உலர் கழிப்பறைகள் இருந்து வருவது தடை செயப்படவுமில்லை; கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியதாக ஒருவர் கூடத் தண்டிக்கப்படவுமில்லை.

இச்சட்டம் அதன் இயல்பிலேயே அக்கறையற்றும் அலட்சியமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியும், அச்சட்டத்தைத் திருத்தம் செய்யக் கோரியும் துப்புரவு தொழிலாளர் இயக்கத்தின் தலைவர் பெசவாடா வில்சன் உச்சநீதி மன்றத்தில் 2003-ஆம் ஆண்டில் பொதுநல வழக்குத் தொடுத்தார். மைய அரசு கடந்த பத்தாண்டுகளாக வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கியே வழக்கை இழுத்தடித்தேயொழிய, சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய முன்வரவில்லை.

இதனிடையே சென்னையைச் சேர்ந்த “பாடம்” பத்திரிகையின் ஆசிரியர் நாராயணன், கையால் மலம் அள்ளும் தொழிலை உடனடியாகத் தடை செயக் கோரி 2005-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் கையால் மலம் அள்ளுவதைத் தமிழகத்தில் தடை விதித்துத் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி மன்றம், “1993-ஆம் ஆண்டு சட்டத்தில் உடனடியாகத் திருத்தங்களைச் செய வேண்டும்; தவறினால், பிரதம மந்திரி அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும்” என எச்சரித்தது. இதே போல குஜராத் உயர்நீதி மன்றமும் மைய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்துத் தீர்ப்பளித்தது.

இப்பிரச்சினையில் அடுத்தடுத்து வழக்குகளையும், நீதிமன்றக் கண்டனங்களையும் சந்தித்த மைய அரசு, இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தோடும், துப்புரவுப் பணிகள் தனியார் மயமாக்கப்பட்டிருப்பதன் பின்னணியிலிருந்தும் புதிய சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. பழைய கள்ளு புதிய மொந்தை என்பதைத் தாண்டி இப்புதிய சட்டமும் இந்த இழிந்த தொழிலை ஒழிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு, அதனை மலினமான வழிகளில் நவீனப்படுத்தி, 21-ஆம் நூற்றாண்டிலும் தொடருவதை உத்தரவாதப்படுத்துகிறது.

ரயில்வே துப்புரவு தொழிலாளர்
ரயில்வே துறையில் நவீனமான கருவிகளைப் பயன்படுத்திக் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுவதாகத் துணிந்து பொய் சொல்கிறது மைய அரசு.

உலர் கழிவறையை நவீனப்படுத்தி விட்டால் அது பூஜை அறையாகி விடுமா? ஆனால், அரசோ கையால் மலம் அள்ளும் தொழிலாளியிடம் ஒரு கருவியைக் கொடுப்பதன் மூலம் அத்தொழிலின் இழிவைத் துடைத்துப் போட்டு விட்டதாகச் சாதிக்க முயலுகிறது. துப்புரவுப் பணிகளை காண்டிராக்டு எடுத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தமது தொழிலாளர்களுக்கு ஒரு கையுறையையும், கோட்டு ஒன்றையும் மாட்டி விடத் தவறுவதில்லை. அது போல சட்டமும் கையுறையைப் போட்டுக் கொண்டு மலத்தை அள்ளும் யோசனையை முன் வைக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கு அரிசன் என்ற நாமகரணம் சூட்டி காந்தி ஏய்த்ததற்கும் இதற்கும் எந்த வேறுபாடு கிடையாது. இந்தப் பாதுகாப்பு கவசத்தை மாட்டிக் கொண்டு உலர் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளியைக் கையால் மலம் அள்ளும் தொழிலாளியாக வரையறுக்க முடியாது எனக் கூறுகிறது, இப்புதிய சட்டம்.

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்திவரும் மிகப் பெரிய குற்றவாளி மைய அரசின் ரெயில்வே துறைதான். ஆனால், அத்துறை இந்த வேலையை அயல்பணி ஒப்படைப்பின் மூலம் காண்டிராக்டு தொழிலாளர்களைக் கொண்டு நடத்தி வருவதால், எத்துணைத் துப்புரவுத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்ற விவரத்தைத் திரட்டுவது கூடக் கடினமாகி விட்டது என்கிறார், துப்புரவு தொழிலாளர் இயக்கத்தின் தலைவர் பெசவாடா வில்சன். இதற்கேற்ப புதிய சட்டமும் ரெயில்வே துறையில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் பல்வேறு நவீன சாதனங்களைக் கொண்டு கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதால் அவர்களைக் கையால் மலம் அள்ளுபவர்களாகக் கருத முடியாது எனச் சாதிக்கிறது.

விஷவாயு
திருச்சி நகரில் பாதாளச் சாக்கடைக்குள் விஷவாயு தாக்கி இறந்து போன ராஜூ, பாஸ்கர் என்ற இரு தொழிலாளர்களின் சடலங்கள். (கோப்புப் படம்)

ரயில் பெட்டிகளில் உள்ள கழிப்பறைகளை நவீனமான உயிரிக் கழிப்பறைகளாக (Bio-toilets) மாற்றுவதற்கு எந்தக் காலக்கெடுவும் சட்டத்தில் நிர்ணயிக்கப்படவில்லை. அதனை ரெயில்வே துறை முடிவு செய்து கொள்ளலாம் எனப் பொறுப்பைக் குற்றவாளியிடமே ஒப்படைக்கிறது. அனைத்திற்கும் மேலாக, மைய அரசு விரும்பினால் இச்சட்டத்தைக் குறிப்பிட்ட பகுதியிலோ துறையிலோ நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கலாம் என்ற விதியைச் செருகி, இந்த இழிதொழிலை ஒழிக்கும் நோக்கமெல்லாம் தனக்குக் கிடையாது எனப் பறைசாற்றி விட்டது.

செப்டிக் டாங்குகளுக்குள்ளும், பாதாளச் சாக்கடைகளுக்குள்ளும் இறங்கி அடைப்புகளை நீக்குவதென்பது கையால் மலம் அள்ளுவதை விட அருவெறுக்கத்தக்கது, அபாயகரமானது. தற்சமயம் பாதாளச் சாக்கடை அடைப்புகளைச் சுத்தம் செய்வதற்கு இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டுதான் தொழிலாளர்கள் அதற்குள் இறங்குகிறார்கள். குழிக்குள் மீத்தேன் வாயு உள்ளதா எனப் பரிசோதிப்பதற்கு தீக்குச்சியைக் கொளுத்திப் பார்ப்பதைத் தாண்டி, வேறெந்த விதமான நவீன முறைகளும் கையாளப்படுவதில்லை. பல இடங்களில் இந்தத் தீக்குச்சி கொளுத்தும் சோதனைகூட நடைபெறுவதில்லை. அதிகார வர்க்கத்தையும் இந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் காண்டிராக்டர்களையும் கேட்டால், இவர்களுக்குச் சாராயம்தான் ஒரே பாதுகாப்புக் கவசம் என எகத்தளமாகப் பதில் அளிக்கிறார்கள்.

பாதாளச் சாக்கடைக்குள் இறங்கும் தொழிலாளர்கள் ஒன்று விஷவாயுவிற்குப் பலியாகும் அபாயத்தைச் சந்திக்கிறார்கள்; அல்லது நல்வாய்ப்பாக உயிர் பிழைத்திருக்கும் தொழிலாளர்களோ பல்வேறு சுவாசக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், வயிற்றுப் புற்று நோயால் தாக்கப்பட்டுச் சிறுகச்சிறுக இறக்கிறார்கள். புதிய சட்டமோ அபாயகரமான இந்தத் தொழிலை இயந்திரமயமாக்குவது பற்றியோ, தற்சமயம் அத்தொழிலில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பது பற்றியோ, அவர்களுக்குத் தொடர் மருத்துவ உதவிகள், நிவாரண உதவிகள் வழங்குவது பற்றியோ பேச மறுக்கிறது. மாறாக, சட்டத்தால் வரையறுக்கப்படும் பாதுகாப்புச் சாதனங்களை வழங்க வேண்டும் என மொட்டையான விதியை மட்டும் முன்வைக்கிறது.

கண்டன ஆர்ப்பாட்டம்
கையால் மலம் அள்ளும் இழிவை முற்றிலுமாகத் தடை செய்யக் கோரி, “மலக்கூடையைக் கொளுத்துவோம்” என்ற முழக்கத்தின் கீழ் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

கடந்த முப்பது மாதங்களில் தமிழகத்தில் மட்டும் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கும் பொழுது விஷவாயு தாக்கி இறந்து போன தொழிலாளர்களின் எண்ணிக்கை முப்பதைத் தொட்டுள்ளது. இத்தொழிலாளர்களுள் பெரும்பாலோர் எந்த விதமான பயிற்சியும் அளிக்கப்படாத ஒப்பந்தத் தொழிலாளர்கள். அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்கு, ஒப்பந்த நிறுவனங்களின் இலாபவெறிக்குப் பலியான இத்தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, இதற்காக எந்தவொரு அதிகாரியும் ஒப்பந்ததாரரும் தண்டிக்கப்படவில்லை என்பதும் கண்கூடு. தனியார்மயம் துப்புரவுப் பணியில் எந்தவொரு நவீனமயத்தையும் கொண்டு வரவில்லை என்பதோடு, அப்பணியாளர்களைப் பலிகிடாக்களை விடக் கேவலமான நிலைக்குத் தள்ளி விட்டுள்ளது என்பதே உண்மை.

சாவுக்குத் தப்படிக்க மறுக்கும் தாழ்த்தப்பட்டோரை, செத்த மாடுகளை அகற்றும் இழிதொழிலைச் செய்ய மறுக்கும் தாழ்த்தப்பட்டோரைத் தாக்குவது, கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்ற அச்சுறுத்தல்கள் மூலம் அவர்களை அந்த இழிதொழில்களைச் செய்ய வைக்க ஆதிக்க சாதி வெறியர்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். மைய அரசோ கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிக்கக் கோரும் தாழ்த்தப்பட்டோரை விடுவிப்பதற்குப் பதிலாக, நளினமான, நுண்ணியமான வழிகளில் அந்தத் தொழிலைத் தொடரும்படி நிர்பந்திக்கிறது. தீண்டாமையைப் பச்சையாகக் கடைப்பிடிப்பதற்கும், நளினமாக, நுண்ணியமான வழிகளில் கடைப்பிடிப்பதற்கும் இடையில் ஏதாவது வேறுபாடு இருக்க முடியுமா? கையுறையும், நவீன கருவிகளும் அந்தத் தொழிலாளர்களின் மனவலியை மட்டுமல்ல, அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சமூக இழிவையும் நீக்கி விடாது.

– திப்பு
______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

 1. OMG! I cant even see the picture,feeling vomiting. Can understand how she feels..

  I am living in western country, don’t know how these people manage these things!
  Does anyone know how westerners are tackling these age old problem?
  What are we doing different?

 2. இதற்குப் பிறகும் ,”செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமைதான் நமது செல்வம்” என்று எப்படிச் சொல்ல?.

 3. ஆனா எனக்கு ஒரு விஷயம் புரியல. அப்புறம் ஏன் நம் மக்கள் இந்த வேலையெல்லாம் செய்றாங்க. விரும்பி செய்யலன்னாலும் வேறு வாய்ப்புகளே இல்லையா? ஏன் ஒரு வரம்புக்குள்ள சிக்கி இதுதான் நம்ம வாழ்க்கைனு உழல்றாங்கனு ஒன்னும் புரியல. கையால் மலம் அள்ற, சாக்கடைக்குள்ள இறங்கி தூர் வாறுர மக்கள் எல்ல்லாரும் வேற வேலைகள் பக்கம் கவனத்த திருப்பினாத்தான் அரசாங்கத்து கவனம் இந்தப் பக்கம் திரும்பும்.

  • //இந்த வேலையெல்லாம் செய்றாங்க. விரும்பி செய்யலன்னாலும் வேறு வாய்ப்புகளே இல்லையா?//

   வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. தனியார் நிறுவனைங்களில் வேறு பணிக்காக சேர்த்த பின்னர் அந்த நபரின் சாதி தெரியவரும்போது அவமானப்படுதப்பட்டு வேலையை விட்டு நிறுத்தப்படுகிறார். படிப்பறிவு இல்லாதவர்கள் என்றால் கழிவறை சுத்தபடுத்தும் வேலை தான் தருகிறார்கள். பொதுமக்களின் சாதிய மனநிலை மாறவேண்டும்.

 4. இந்தக் கட்டுரையை படங்களுடன் ஆங்கிலம், இந்தி மற்றும் அந்தந்த மாநில மொழியாக்கத்துடன் வெள்ளையும், சொள்ளையுமாக இந்திய ஜனநாயகத்தின் பிரதிநிதிகளாக உலாவரும் நாடாமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மத்திய,மாநில மந்திரிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்தாக அனுப்பி வைக்கவேண்டும்..

  செப்டிக் டாங்குடன், தண்ணீர்க் குழாய், மின் விளக்கு உள்ள ஒரு கழிப்பறையைக் கட்டுவதற்கான செலவு ரூ.50,000க்குள் அடங்கும்.. குறைந்தது 10 கழிப்பறைகள் வசதி கொண்ட ஒரு கட்டமைப்புக்கு என்னதான் அதிகமாக கணக்கிட்டாலும் சராசரியாக ரூ.10 அல்லது 15 லட்சத்துக்குள் செலவாகலாம்.. ஒவ்வொரு ஊரிலும், பேருந்து-ரயில் நிலையங்களிலும், அதிக மக்கள் நடமாடும் நகரங்களில் 500 மீட்டர் இடைவெளியிலும் கட்டுவது ஒரு பெரிய செலவே இல்லை.. இதை சுதந்திரமாகி 65 ஆண்டுகளாகியும் செய்ய முயலாத மத்திய மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும், ரயில்வே போன்ற போக்குவரத்து அமைப்புகளும் கொண்ட ஒரு ஜனநாயக நாடு, வல்லரசு ஆகப் போவதாகக் கூறுவது கொடுமை..

 5. This is sad and pathetic. I don’t agree with everything vinavu writes. But I somehow feel very guilty to read some posts here. I hate this society. This is really pathetic condition of our own countrymen. I am not able to think anything now. Feeling very bad.

 6. கையால் மலம் அள்ளும் இந்த இழி தொழிலை ஒழிக்க துப்பில்லாத இந்திய அரசு !

  இது தான் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஆயிரம் கோடி செலவுல ராக்கெட் விடுது. மலம் என்பதை குறிக்கும் கொச்சையான ஒற்றை எழுத்தாலான் சொல்லை பொது இடத்தில் வாயால் உச்சரிப்பதற்கு கூட நாம் தயங்குகிறோம். ஆனால் அதைக்கையால் அள்ளுவதை நிரந்தர தொழிலாக செய்ய குறிப்பிட்ட சமூகத்தை கட்டாயப்படுத்துகிறோம்.

  என்ன ஒரு தரங்கெட்ட நாடு !

  இது பற்றி ஞாநி முன்பே ‘ ஓ பக்கங்களில்’ எழுதியிருக்கிறார் .
  அந்த கட்டுரையுடன் இந்து இதழில் வெளியான ஒரு கார்டூனையும் வெளியிட்டிருந்தார்.
  தேசிய கொடியில் அசோக சக்கரத்துக்கு பதிலாக குப்பை தட்டும் , விளக்கமாறும் உள்ளது போல் வரையப்பட்ட கார்டூன்.

  மானங்கெட்ட நமது மத்திய அரசு இந்த விசயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வரை ‘அந்த’ புதிய தேசிய கொடியையே நம் நாட்டின் பெருமையை பறை சாற்றும் தேசிய சின்னமாக நாம் பயன்படுத்துவோம்.

  என்னை கேட்டால் அந்த கொடியில் அசோக சக்கரத்துக்கு பதிலாக மனித மலத்தையே வரைந்து புதிய தேசியக்கொடியை வடிவமைப்பது இன்னும் சாலச்சிறந்தது.

  இந்த கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தெரிந்த நண்பர்கள் அது போன்ற ஒரு
  ‘ தேசிய சின்னத்தை’ உருவாக்கி கொடுத்தால் சத்யமேவ ஜெயதே………ஜெய்கிந்த்………………வண்டே மாட்ரம் ……………….. வரிசையில் அதையும் எனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து எனது தேசப்பற்றை கொப்பளித்துக் கொள்வேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க