ரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இடைவேளை நேரம். எனக்குள் ஒரு பதற்றம் உருவாகியிருந்தது. எந்த தவறும் இழைக்காத, தன் காதலை கூட வெளிப்படுத்தாத, ஒரு பெண்ணால் ‘காதலிக்கப்பட்ட’ குற்றத்துக்காக அடித்து நொறுக்கப்படும் பரியேறும் பெருமாள், முகத்தில் ஒண்ணுக்கு அடித்து அவமானப்படுத்தப்படுகிறான்.

அவமானம் என்ற சொல் அந்த காட்சி ஏற்படுத்திய தாக்கத்தை போதுமான அளவுக்கு விளக்கவில்லை. அது எண்ணிப் பார்க்க முடியாத அமைதியின்மையை, கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது.

இடைவேளைக்குப் பிறகான படம் தொடங்கியது. தன்னை இழிவு செய்தோரை நாயகன் ஏதாவது செய்வான் என எதிர்பார்த்தேன்; செய்ய வேண்டும் என விரும்பினேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. அவன் மீது அடுத்தடுத்த அவமானங்கள்; தாக்குதல்கள். கொலை முயற்சி வரை செல்கிறது. அப்போதும் அவன் எதுவும் செய்யவில்லை.

‘ஊர் நண்பர்கள், கல்லூரி வட்டம் எல்லாம் இருக்கிறதே… இவன் ஏன் சகித்துக் கொண்டு போகிறான்?’ என என் மனம் படபடத்தது. ‘இது என்ன யதார்த்தமா? சினிமாதானே… அதிலாவது எதிர்த்து அடித்தால் என்ன?’ என நினைத்தேன். பரியன் அப்போதும் சகித்துக் கொண்டு போனான்.

கல்லூரி வளாகத்துக்குள் அவனுடைய தந்தையின் வேட்டியை உருவி ஓட விடுகின்றனர். பார்ப்போர் எவரையும் சாட்டையால் அடிக்கும் காட்சி இது. இதற்கு முன் தன் சுயமரியாதைக்கு நேர்ந்த அவமானத்தை பொறுத்துக் கொண்ட பரியன், தன் தந்தைக்கு நேர்ந்த இழிவு பொறுக்காது இம்முறை கத்தியை எடுக்கிறான். ‘உன் அப்பாவுக்கு இப்படி நடக்குறது ஒண்ணும் புதுசு இல்லையே’ என அவனுடைய தாய் அமைதிப்படுத்துகிறாள். ‘குடியானவங்களை எதிர்த்துக்கிட்டு ஊருக்குள்ள இருக்க முடியுமா? அனுசரிச்சுப் போப்பா’ என்ற கிராமத்து தலித் அம்மாவின் குரலாய் அது வெளிப்படுகிறது.

இறுதிக் காட்சியில் அவன் மீது நிகழ்த்தப்படும் கொலைமுயற்சியை முறியடிக்கிறான். அவனும் எதிர்த்தரப்பும் இரண்டு தேநீர் குவளைகளுடன் அமர்கிறார்கள். ‘காலம் மாறும்’ என்கிறது எதிர்த்தரப்பு. ‘நீங்க அடக்குற வரைக்கும் எதுவும் மாறாது’ என்கிறான் பரியன். இருவரும் அவரவர் மனநிலையுடன் எதிர்காலத்தை நோக்கி நடந்து செல்கின்றனர். மேசையில் இருக்கும் இரண்டு தேநீர் குவளைகளுக்கு மத்தியில், சமாதானத்தின் வெள்ளைக்கொடியாய், ஒரு வெண்ணிற மலர் அசைந்தாடியபடி கிடக்கிறது.

படம் பார்க்கும் போது அதுவும் யதார்த்தத்தை அழுத்தமாகவும், கலை நயத்தோடும் கூறும் ஒரு படைப்பில் நாம் விலகி நின்று பார்ப்பது சிரமம். அப்படி நான் ஒன்றிய பட அனுபவத்தையும், பின்னர் அசை போட்டு வந்த கருத்துக்களையும் இணைத்து யோசிக்கிறேன்.

படத்தின் முதல் பாதியில் எனக்குள் எழுந்திருந்த கொந்தளிப்பும், கோபமும் படம் முடியும் போது இல்லை. அப்போது இருந்த மனநிலை அவநம்பிக்கை மட்டுமே. ‘இதுதான் ஊர். இப்படித்தான் இருக்கிறது சூழல். இதற்குள் உன்னால் எதுவும் செய்ய முடியாது. எப்படியாவது படித்து ஏதேனும் செய்து ஊரை விட்டு கிளம்பு’ என்ற ஒருவிதமான அவலம் கலந்த எண்ணமே எஞ்சியிருந்தது.

இயக்குனர் மாரி செல்வராஜ், தன்னுடைய பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் உருவாக்க விரும்பிய கலை – அனுபவம் – கண்ணோட்டம் வேறொன்றாகக் கூட இருக்கலாம். ஆனால் எனக்கு மட்டுமல்ல… நான் உரையாடிய பல நண்பர்களுக்கும் மேற்கண்ட அவல – தன்னிரக்க மனநிலையைதான் படம் ஏற்படுத்துகிறது.

ஒரு திரைப்படம் இத்தகைய அவ நம்பிக்கையை உருவாக்கலாமா? அல்லது இதை வெறும் அவநம்பிக்கை என்று உணர்வது தவறா?

பொதுவில் ஹீரோ அனைத்து வில்லன்களையும் அடித்து நொறுக்கி நீதியை நிலை நாட்டும் கதை அனுபவத்திலேயே நாம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். அத்துடன் கொஞ்சம் முற்போக்கு அரசியலும் அறிமுகமாகும் போது என்ன தோன்றும்? ஒரு தலித் இளைஞன் தன் மீது கணந்தோறும் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு இவ்வாறுதான் எதிர்வினையாற்ற வேண்டுமா? ‘காலம் மாறும்’ என எதிர்த்தரப்பு வாய்விட்டு சொல்வதற்கே இத்தனை இழிவுகள் சுமக்க வேண்டுமாயின், உண்மையாகவே காலம் மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? இப்படிப் பல கேள்விகள்.

அதேநேரம் இந்த திரைப்படத்தின் சித்தரிப்பு ஒரு சமூக யதார்த்தம் இல்லையா என்ற கேள்வியும் இணைந்தே எழுகிறது. இந்தப் படமும் கூட பெருமளவு தனது பேசுபொருளில் யதார்த்த வாழ்விற்கு நாணயமாகவே பயணிக்கிறது.

ஒரு தலித் இளைஞன் தன் மீது நிகழ்த்தப்படும் சாதிய வன்கொடுமைகளை அந்த இடத்திலேயே எதிர்த்துக் கேட்பதற்குரிய சமூக சூழல் இங்கு இல்லை என்பது ஓர் உண்மை. அல்லது அப்படிக் கேட்க முடியுமாயின் அந்த சமூகச் சூழலில் இத்தகைய சாதிய வன்கொடுமைகள் பெரிய அளவுக்கு இருக்க வாய்ப்பில்லை.

இப்பூமியில் பிறந்த அந்தக் கணத்தில் இருந்தே சாதியின் விதவிதமான, நுணுக்கமான இழிவுகளை, அவமானங்களை, ஆதிக்கக் கூறுகளை சுமக்குமாறே ஒரு தலித் சமூகக் கட்டுப்பாடுகளால் வளர்க்கப்படுகிறான். அது சமூக இயங்கியலின் பிரிக்கவியலாத ஒரு பகுதியாக, செயலில், உணவில், பேச்சில், உடையில், கல்வியில், பண்பாட்டில் ஒட்டியிருக்கிறது. ஆகவே சகித்துக் கொள்வதும், பொறுத்துக் கொள்வதும் அவனுடைய சுய உணர்ச்சியின் தேர்வு இல்லை. புற உலக யதார்த்தத்தின் நிர்ப்பந்தம். இன்னொரு விதமாகச் சொன்னால் இத்தகைய அடிமை உலகிற்கு வெளியே ஒரு ஜனநாயக வெளிக்கு அறிமுகமாகும் போதுதான் அவன் தன் நிலையை உணர்ந்து கொதிக்கிறான். இதைத்தான் மாரி செல்வராஜின் திரைப்படமும் சித்தரிக்கிறது.

சட்டக் கல்லூரி எனும் ஜனநாயக வெளியில் பரியனின் சுயம் முட்டி மோதி பல்வேறு அளவுகளில் பரிணமிக்கிறது. இதுவரையிலான தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் தலித் Vs தலித் அல்லாதோர் என்பதையே முழு நீள கதைக் களமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்கள் மிக சொற்பம். அதையே ஒரு தலித்தின் பார்வையில் வெளிப்படுத்தும் படங்கள் இன்னும் அரிது. அந்த வகையில் பரியேறும் பெருமாள் சாதிய சமூகத்தின் யதார்த்தத்தை நெருக்கமாக காட்சிப் படுத்துகிறது. அந்த அனுபவப் பார்வை அனைத்து மக்களிடமும் சங்கமிக்கும் போதுதான் பல்வேறு பிரச்சினைகளே என்னவென்று புரியும்.

அதேநேரம் இதைத்  தமிழகம் தழுவிய தலித் வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றம் எனவும் கருத முடியாது. தன்னை சாதிவெறியோடு சிலர் தாக்கியதை கதாநாயகன் சொல்லும்போது, ‘எவம்ல உன்னை அடிச்சது… உன் காலேஜ்ல நம்ம பயக இருப்பாம்ல… அவனுங்களை கூட்டிட்டுப் போ… அவன் வரலன்னா நான் ஊர்லேர்ந்து அழைச்சுட்டு வர்றேன்’ என கோபம் கொப்பளிக்க ஓர் புளியங்குளம் இளைஞர் சொல்கிறார். கொங்கு மண்டலத்தில் இப்படி ஓர் அருந்தியர் இளைஞர் சொல்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. திருச்சி, தஞ்சையில் ஒரு பறையர் இளைஞரை இப்படி கல்லூரியில் அடித்து, அவர் ஆள் சேர்த்துக் கொண்டு திருப்பித் தாக்கிவிட முடியாது.

ஆனால் தென் தமிழக நிலைமை இதிலிருந்து வேறுபட்டிருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் மக்கள், தென் தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத பிரிவினராகவே நடத்தப்படுகின்றனர் என்ற போதிலும், எதிர்த்து நின்று திருப்பித் தாக்கும் வலிமையை அவர்கள் கடந்த கால நிகழ்வுகளினூடே பெற்றுள்ளனர்.

கொஞ்சம் நிலவுடைமை விவசாயத்தாலும், பெரும் எண்ணிக்கையில் நகரங்களுக்குச் சென்று பொருளீட்டிய முன்னேற்றத்தாலும், சில பல பகுதிகளில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்வதாலும் இந்த திருப்பித் தாக்கும் சக்தியை பெற்றிருக்கின்றனர். 1990-களின் மத்தியில் கொடியங்குளத்தில் துவங்கி நடந்த தென் மாவட்ட ‘கலவரங்களு’க்குப் பிறகு அவர்களுடைய சமூக வாழ்வின் தன்மை மாறியிருக்கிறது என்றும் சொல்லலாம்.

தனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பை, தான் நம்பும் அரசியலை பேசுவதற்காக மாரி செல்வராஜ் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் சாதிய உள்ளடக்கம் கொண்ட கதைகளை கையாளும் போது ஊரைவிட்டு தள்ளி வைப்பதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது என்றாலும் கூட, உறுதியாக இப்படி ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர். அத்தகைய உறுதியைக் கொடுப்பதற்கு இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பாளராகவும் கிடைத்திருக்கிறார்.

ஆனால், ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு ஏன் எதிர்ப்புகள் வரவில்லை? திரைப்படங்களில் தங்கள் சாதிப் பெயர் வெளிப்பட்டாலே துள்ளிக் குதிக்கும் சாதி வெறியர்களை நாம் காண்கிறோம். வசனத்தில் ஒரு சொல் இடம் பெற்றாலே கடும் எதிர்ப்புகள் எழும். இந்த திரைப்படம் நேரடியாக சாதியைக் கையாள்கிறது; தலித்கள் எப்படி அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்று சித்தரிக்கிறது. படத்தில் வரும் ஆதிக்க சாதித் தரப்பு தென் மாவட்ட தேவர்கள் என்பதை குறியீடுகளால் உணர்த்துகிறது. எனினும் எந்த சிறு எதிர்ப்பும் எழாதது ஏன்? மேலும் தேவர் மகன் 2, சண்டியர் படங்களுக்காக ‘வீறு’ கொண்டு எழுந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் இப்படத்தினை எதிர்க்கவில்லை.

தாங்கள் தலித்துக்களே இல்லை என்று பா.ஜ.க-வுடன் பயணிக்கும் அவரது ஆதரவாளர்கள் இப்படத்தில் சித்தரிக்கப்படும் கொடூரமான காட்சிகளால் தமது சாதியினர் இழிவுபடுத்தப்படுவதாகவும், தங்கள் சாதி அப்படிப்பட்டது இல்லை, தாங்கள் ஆண்ட பரம்பரை என்றும் மற்ற தலித்துக்கள் மீதான சாதிய கொடூரங்கள் தங்களுக்கு பொருந்தாது என்றும் எவரும் எதிர்க்கவில்லை. இருப்பினும் இதை விட முக்கியமானது ஆதிக்க சாதி பக்கமிருந்து எதிர்ப்பு வரவில்லை. ஏன்?

தேவர்கள் என்று இல்லை… பொதுவாக ஓர் ஆதிக்க சாதி விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டால், இதர ஆதிக்கத் தரப்பும் ஓரணியில் இணைந்து கொள்ளும். தருமபுரி இளவரசன் – திவ்யா பிரச்னையின் போது, ராமதாஸ் உடன் கவுண்டர் சங்கங்களும், தேவர் அமைப்புகளும் கை கோர்த்துக் கொண்டன. அடக்கும் தரப்பு என்ற அடிப்படையில் இந்த இணைவு நடக்கிறது. அப்படி, பரியேறும் பெருமாள் விசயத்தில் எந்த ஆதிக்க சாதியினரும் எதிர்க்குரல் எழுப்பவில்லை என்பது மட்டுமல்ல… கணிசமானோர் ஆதரிக்கவும் செய்கின்றனர்.

அப்படியானால் இயக்குனர் மாரி செல்வராஜும், தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தும் இப்படத்தின் மூலம் நிகழ்த்த விரும்பிய உரையாடல் வெற்றியடைந்திருக்கிறதா ?

‘கலையின் வழியே அரசியல் கருத்துக்களை வீச்சுடன் பரப்ப முடியும். சமூக மாற்றத்தில் கலையின் பங்கு அரசியல் இயக்கங்களை விட முதன்மையானது’ என இயக்குனர் பா.ரஞ்சித் பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறார். இந்தப் படமும் சாதிய சமூகத்தை ஒரு கணம் அழுத்தமாக சிந்திக்க வைப்பதால் இது வெற்றி என்றே அவரும், மாரி செல்வராஜும் நினைக்க கூடும். இப்படத்திற்கு வந்த பாராட்டுக்களும் (ஆதிக்க சாதியில் பிறந்தோரின் பாராட்டுக்கள்) அவர்களை அப்படி நினைக்க வைக்கும்.

சாதி வெறியில் திளைத்திருக்கும் வெறியர்களை கலையால் ஓர் அங்குலம் கூட அசைக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க, அத்தகைய சாதிவெறி இல்லாமலும், அதேநேரம் சாதிய அடையாளம் தரும் மரபுவழி ஆதாயங்களை துறக்க முடியாமலும் இருக்கும் மவுனப் பெரும்பான்மையின் உள்ளத்தை இப்படம் அசைத்திருக்குமா? 

இல்லை. எதிர்க்கப்பட வேண்டிய அளவுக்கு ‘பரியேறும் பெருமாள்’ எந்த சேதாரத்தையும் அம்மக்களிடம் ஏற்படுத்தி விடவில்லை. அவர்களுடைய சாதி ஆதிக்கம் அளித்திருக்கும் வாழ்க்கையின் சின்னஞ்சிறு செங்கல்லை கூட இது அசைக்கவில்லை. ஊருக்கு நடுவில் நின்று ‘இவன் என்னை ஒடுக்குகிறான், இழிவு செய்கிறான்’ என்று பரியன் கத்துவதால் ஒடுக்கும் தரப்பை சேர்ந்தவன் அவமானம் அடைந்து, குற்றவுணர்வு கொண்டு திருந்துவான் என நாம் எதிர்பார்க்கலாம். அல்லது கொடுரமான சாதிவெறியின் உள்ளத்தை ஒரு கணம் உலுக்கலாம் என்று எதிர்பார்ப்பதும் தவறில்லை.

ஆனால் அரிவாளால் சாதி பேசாமல், சாதி தரும் பொருளாயாத வசதியால் அமைதியாக சாதி பெருமிதத்தை பேசும் மக்களின் உளவியல் கோட்டையை இந்தப் படம் தொட்டுப் பார்க்கவில்லை. சாதி வெறியர்களைப் பொறுத்தவரை ‘நாம் அன்றாடம் செய்வதை இந்தப் படத்தின் திரையில் காட்டுகிறார்கள். இதைப் பார்த்து இன்னும் கொஞ்சம் அச்சம் ஏற்பட்டால் நல்லதுதான்’ என்றே நினைப்பார்கள்.

சாதி வெறியற்ற ‘அமைதியான’ சாதி ஆதிக்க மக்களோ “எதற்கு காதல், கலப்பு மணம் என்று பிரச்சினை? இப்போதைக்கு அவரவர் சாதியில் மணம் முடிப்போம். ஏதோ காலம் மாறி இந்தப் பிரச்சினை மாறினால் மாறட்டும்” என்று ஏற்கெனவே அவர்கள் வைத்திருக்கும் சிந்தனையை இப்படம் ஊக்குவிக்கிறது. படத்தின் வழியாகவும் இதை பார்க்கலாம்.

கோபமிருந்தாலும் சில இடங்களில் முதிர்ச்சி தரும் பணிவுடன் ஆதிக்கசாதி வெறியர்களிடம் மண்டியிடுகிறான் பரியேறும் பெருமாள். குட்டக் குட்ட குனியும் பரியன், தன் மீது இரக்கத்தை கோரும்  பலவீனமான தாழ்வுணர்ச்சியை படம் நெடுக வெளிப்படுத்துகிறான். தன் மீதான வலிகளையும் அவமானங்களையும் சகித்துக் கொண்டு மனதுக்குள்ளேயே குமைவதால் எதிர்த்தரப்புக்கு என்ன இழப்பு? எவ்வளவு அடித்தாலும் தாங்கும் தலித் மக்களை ஆதிக்க சாதி மனம் விரும்பவே செய்யும். அடித்து கை வலிக்கும் தருணத்தில் சற்றே பச்சாதாபம் கொள்ளும். பரியன் மீது நாயகியின் அப்பா கொள்ளும் பரிவு இத்தகையதே. அந்தப் பரிவைத்தான் அரிவாள் தூக்காத சாதிய சமூகமும் வெளிப்படுத்துகிறது.

கதாநாயகி குடும்பத்தின் சாதிப் பெருமைக்கு சின்னஞ்சிறு பங்கம் கூட ஏற்படாத வண்ணம் கதாநாயகனின் நடத்தை இருப்பதால்தான், ‘வாயேன் டீ சாப்பிடலாம்’ என அழைக்கிறார் அந்த தந்தை. தாங்கள் நடத்திய சாதிக் கொடுமைகளை தன் மகளிடம் சொல்லாமல் இருந்ததற்காக ‘தேங்க்ஸ்’ சொல்லும் அவர், கூப்பிட்டு வைத்து முகத்தில் ஒண்ணுக்கு அடித்ததற்காக ஒரு ‘சாரி’ கூட சொல்லவில்லை. சமூகத்தில் இன்னும் அந்த அளவுக்கு இணக்கம் ஏற்பட்டுவிடவில்லை என்பதால் இதை இயக்குநர் தெரிந்தே செய்த தவறாகவும் கொள்ள முடியாது. ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு குவளை தேநீர் அருந்தி சாதியொழிப்புப் பற்றி உரையாடினால் அது எப்படி இருக்கும்? அதிகபட்சம், ‘நீங்களா பார்த்து சாதி வெறியை விட்டுருங்க சார்’ என பரியன் வேண்டுகோள் வைக்கலாம். அதைத் தாண்டி வேறு என்ன செய்ய முடியும்?

இறுதிக்காட்சிக்கு முந்திய காட்சியில், உடைக்கப்பட்ட கார் கண்ணாடி வழியே, நாயகியின் அப்பாவை நோக்கி பரியன் காறி உமிழ்கிறான். அது எதிர்ப்பின் வடிவமாக அல்ல… கையறு நிலையில் மண்ணை வாரித் தூற்றுவதைப் போல்தான் பார்வையாளர் மனதில் தங்குகிறது. மொத்தத்தில் ஒரு தலித் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று ஓர் ஆதிக்க சாதி மனம் விரும்புகிறதோ, அதை திரையில் நிகழ்த்திக் காட்டுகிறது இந்தப் படம். ஆகவே இதை எதிர்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு எழவில்லை.

“…மேலும் குறிப்பாக யாருடைய மனதையும் புண்படுத்தாமல், ஒரு கீறல் கூட விழாமல் இப்படத்தை எடுத்ததற்காக வாழ்த்துகள்…” என்று இயக்குநர் பாரதிராஜா இப்படத்தையும் இயக்குநர் மாரி செல்வராஜையும் ‘மனதாரா’ பாராட்டியிருக்கிறார். ஆம். இப்படம் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை!

அப்படியானால் பரியன் என்ன செய்திருக்க வேண்டும்? எதிர்த்து அடித்திருக்க வேண்டுமா?

‘திமிறி எழு, திருப்பி அடி’ என்று இங்கே தலித் இயக்கங்கள் 1990-களில் முன்வைத்த முழக்கம் இப்போது துடிப்புடன் இல்லை. அப்போது அவர்கள் தமது பகுதிகளில் மட்டும் பேசினார்கள். தேர்தலை புறக்கணித்திருந்தார்கள். பின்னர் தேர்தல் அரசியலில் சங்கமித்த பிறகு ஆதிக்க சாதியோடு பெரிய அளவுக்கு முரண்படாமல் இருந்தால்தான் ஆளும் வர்க்க அரசியலில் நீடிக்க முடியும் என்பதை பட்டுணர்ந்தார்கள். இன்று திருமாவளவனை ஆதரிக்கும் ‘பிற சமூக’ சமூகவலைத்தள முற்போக்காளர்களும் கூட அவரை ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் கொஞ்சம் விட்டுக்கொடுத்து ஏற்க வேண்டும் என்பதாக மன்றாடுகிறார்களே தவிர அதை ஆணையிடும் நிலையில் இல்லை.

அரசியல், சமூக, பொருளாதார கட்டுமானங்களால் மக்களின் மனங்களில் ஆழப் பதிந்துள்ள சாதியை வெறுமனே மனித மூளைகளில் பதிந்துள்ள தவறான கருத்தாகவே மேற்கண்ட பார்வை கருதுகிறது. ஆகவே கருத்து மாற்றமும், அதற்கான பிரச்சாரமும், இணைந்த செயல்பாடுகளுமே பொருத்தமான வடிவங்கள் என்பதால், ‘திருப்பித்தாக்கு’ என்பதை சமூக யதார்த்தத்தை மீறிய கற்பனை எதிர்பார்ப்பாக விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல… ரஞ்சித் போன்றவர்களும் கருதுகிறார்கள். இது சாதி ஆதிக்க சமூக யதார்த்தத்தின் விளைவா இல்லை அந்த யதார்த்தத்தை தவறாக புரிந்து கொண்ட அரசியலின் விளைவா?

பரியேறும் பெருமாள் சாதிவெறியை எதிர்த்து ஏன் சாகசங்கள் செய்யவில்லை என்பல்ல நமது விமர்சனம். ஆனால் கற்பனையில் கூட நடக்காதென தோற்றமளிக்கும் சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் பாதை எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதையே இந்த விமர்சனம் படத்தினூடாக முன் வைக்கிறது.

மாரி செல்வராஜ் சித்தரித்துள்ள பரியன் கதாபாத்திரம், இழிவுகளை சுமந்து கொண்டு, எப்பாடுபட்டாவது படிப்பின் துணையுடன் முன் செல்ல எத்தனிக்கிறது. இதுவும் கூட ஒரு யதார்த்தம்தான். அதாவது தமது வறிய பொருளாதார நிலையை படிப்பு – வேலை வாய்ப்புகளால் உயர்த்திக் கொள்வதன் மூலம் சாதிய இழிவுகளை மெல்ல மெல்ல குறைக்கவோ மறுக்கவோ முடியும் என்ற மனநிலை அது. சாதி அமைப்பின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் தலித் இளைஞர்கள், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு எப்படியாவது கல்வியின் கரம் பற்றி தப்பிக்க முயல்கின்றனர். அப்படி சாதிக் கொடுமையை சகித்துக் கொண்டு படித்து முன்னேறுவது சாத்தியமா என்றால் சாத்தியம்தான், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் வரும் அந்த சட்டக் கல்லூரி முதல்வரைப் போல.

அவர் ஒரு காலத்தில் செருப்பு தைப்பவரின் மகன். அவரே சொல்வதைப் போல, ‘பன்னி மாதிரி என்னை தொரத்தி தொரத்தி அடிப்பானுவ.. ஒரு கட்டத்துல சுதாரிச்சேன். எது முக்கியம்னு தெரிஞ்சுக்கிட்டு பேய் மாதிரி படிச்சேன். அன்னைக்கு என்னை அடிச்சு தொரத்துவனவன்லாம் இன்னைக்கு அய்யா, சாமின்னு சலாம் போடுறான்’ என்கிறார். ஆனால், அவர் பெற்ற கல்வியின் அறிவால், தன் மாணவனுக்கு நேரும் வன்கொடுமையை அவரால் தடுக்க முடியவில்லை. ‘ரூம்ல தூக்கு மாட்டிக்கிட்டு சாவறதை விட அடிதடில செத்தா பரவாயில்ல’ என்றுதான் கையறு நிலையுடன் சொல்ல முடிகிறது. இந்த கையறு நிலையை  வெளிப்படுத்த அவருக்கு கல்வி எதற்கு?

ஆகவேதான் சமூக பொருளாதார விடுதலை என்பது வெறும் படிப்பு – வேலைகளால் வந்து விடுவதில்லை. அது அரசியல் விடுதலை எனும் போராட்டங்களோடு இணைக்கப்படாத வரை பெரிய பயனில்லை. ஏனெனில் இந்தியாவில் வர்க்கமும் சாதியும் ஒன்று என்பதற்கு ஆகப் பொருத்தமான உதாரணங்களில் தலித்துக்கள் முதன்மையானவர்கள்.

தலித்துக்கள் மட்டுமல்ல சூத்திர சாதிகளில் உள்ள கணிசமான மக்களும் வறிய நிலையில்தான் இருக்கிறார்கள். இந்த சாதிகளில் 5 அல்லது 10 சதவீதம் பேர் படித்து ஆளானாலும் மீதிப் பேரின் விடுதலை எப்படி என்பதே நம் கேள்வி. பரியேறும் பெருமாள் திரைப்படமும் அப்துல்கலாம், எம்.எஸ்.உதயமூர்த்தி, நீயா நானா கோபிநாத் போன்ற டெம்ப்ளேட்டுகளின் தனி மனித முன்னேற்றத்தைப் பரிந்துரைக்கிறது.

உண்மையில், “அடிச்சுகிட்டு செத்தா பரவாயில்ல, அவன (ஆதிக்க சாதி) அடக்க முடியல, இவன (பரியன்) மட்டும் அடங்கிப் போகச் சொல்லணுமா” என்று கல்லூரி முதல்வர் சொல்லும் போது திரையரங்கில் கைத்தட்டல் பறக்கிறது. சொல்வது ‘கல்வியால் முன்னேறிய பிரின்சிபல்’ என்பதால் அல்ல. அதுதான் யதார்த்தம் என்பதால். ஒருவேளை, இதே வசனத்தை பரியனின் அப்பா பேசியிருந்தால் (சொல்ல வாய்ப்பில்லை என்றாலும்) கை தட்டல் இன்னும் கூடுதலாக கிடைத்திருக்கக் கூடும்.

படத்தின் கதையோட்டத்தோடு முரண்பட்டாலும் இதுவும் தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம்தான்.இதன்படி படைப்பில் தோன்றும் இயக்குநர், தயாரிப்பாளரின் இந்தப் பார்வைப் பழுதிற்கு இந்த சேம் சைடு கோலை உதாரணமாக சொல்லலாம்.

*****

‘ஏன் எல்லாவற்றையும் பொருத்துக் கொண்டேன்?’ என்ற கேள்விக்கு பரியன் பாத்திரம் நேரடியாக பதில் சொல்கிறது. இறுதிக் காட்சிக்கு முந்தைய சண்டையில், உடைந்த கார் கண்ணாடியின் வழியே நாயகியின் அப்பாவை நோக்கி பரியன் பேசும்போது, ‘நீங்கள் எனக்கு இழைத்த சாதிய இழிவுகளை உங்கள் மகளிடம் சொல்லியிருந்தால் அவள் உங்களை அப்பா என்று அழைத்திருக்க மாட்டாள். கேவலமாக மதித்திருப்பாள். முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு தானும் தூக்கில் தொங்கியிருப்பாள். அதனால்தான் எல்லாவற்றையும் பொருத்துக் கொண்டேன்’ என்று சொல்லி விட்டு, ‘உன் சாதிப் பெருமை நான் போட்ட பிச்சை’ என்கிறான் நாயகன். அதாவது ‘நான் சாதி இழிவை ஏற்றுக் கொள்வதால்தான் நீ சாதிப் பெருமிதத்துடன் இருக்க முடிகிறது’. இதை ‘காதலி’க்காக செய்யப்படும் தியாகமென்று மட்டும் குறுக்கி விட முடியாது

இத்தகைய சிவாஜி கணேசன் சென்டிமெண்ட் பார்வை மூலம் ஆதிக்க சாதி மன அமைப்பில் வாழ்வோரை என்ன செய்ய முடியும்? என்ன உரையாடல் நடத்த முடியும்? “எதற்கு பிரச்சினை, தனித்தனியாக அவரவர் வேலையை பாருங்கள், காலம் மாறும்” என்று அனைவரும் வழமையான உலகத்திற்கு திரும்புவதைத் தவிர இப்படம் வேறு புதிய மருந்து எதையம் தரவில்லை. இந்தப் பழுதான கண்ணோட்டம் மாரி செல்வராஜுடையது மட்டுமன்று… பலர் இதை ஒத்த கருத்துக்களை சொல்கின்றனர்.

‘ஊருக்கு வெளியே சேரி இருப்பதால், நீங்கள் எங்களை ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று பொருள் இல்லை. சேரிதான் ஊர். ஊரை நாங்கள் ஒதுக்கி வைத்திருக்கிறோம்’ என்று சிலர் சொல்வதுண்டு. ஆண்ட சாதி பெருமிதம் பேசும் மனநிலையின் அப்பாவித்தனமான எதிர் விளைவு இது. ஊர் பொதுக்கோயிலில் தலித்களை விடுவதில்லை என்றால், அந்த கோயிலில் சமமான வழிபாட்டு உரிமையை பெற போராட வேண்டும். மாறாக அர்ஜுன் சம்பத் கும்பல் பரிந்துரைப்பதைப் போல, தலித்கள்  தனியே கோயில் கட்டிக்கொள்வது இதற்கு தீர்வு அல்ல. அப்படி கோயில் கட்டிக் கொள்வதால் அந்த சமூக தீண்டாமை முடிவுக்கு வருவதும் இல்லை.

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ‘பெண்கள் மட்டும் செல்லும் வகையில் சில குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கித் தரலாம்’ என்று ஒருவர் சொன்னார். லிபரல் தன்மையுள்ள இந்த கருத்து, சம அளவுக்கு தீண்டாமையை அங்கீகரிக்கிறது. ‘ஜல்லிக்கட்டில் ஆதிக்க சாதியினர் மட்டுமே காளையைப் பிடிக்க முடியும் என்றால், தலித்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஒரு தனி ஜல்லிக்கட்டு நடத்துவோம்’ என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது சிலர் பேசினார்கள்.

இவை அனைத்துமே சமத்துவத்தை கோரும் சாதி ஒழிப்புக்கு பதில், தனித்தனியாக சாதிகள் தமது ஏற்றத்தாழ்வான படிநிலையோடு வாழ்வதற்கு வழி கோலுகின்றன. எனவே, ‘உன் சாதிப்பெருமை நான் போட்ட பிச்சை’ என்பது இழிவையே, கம்பீரமாக முன்வைக்கும் மோசமான ஓர் அடிமையின் மனநிலை. ‘அதுதான் யதார்த்தம்’ என்றால் சாதி ஆதிக்கமும் கூட யதார்த்தம்தான் என நாம் கடந்து போய்விடலாமா?

இதன்படி, ‘அம்பானி கோடீஸ்வரனாக இருப்பது நான் போட்ட பிச்சை’ என ஒரு தொழிலாளி பெருமிதம் அடைய வேண்டும். ‘ஆணாதிக்கம் நாங்கள் போட்ட பிச்சை’ என்று பெண்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்.

வேறு என்ன செய்திருக்க முடியும்? மாரி செல்வராஜ் எடுக்காத படத்துக்கு நாம் விமர்சனம் எழுத முடியாது. ஆனால் அவர் எடுத்துள்ள படத்திலேயே, அவர் கையாண்டுள்ள கதையிலேயே சமத்துவத்திற்காக போராடச் சாத்தியமுள்ள களம் இருக்கிறது. பரியனின் நண்பனாக வரும் ஆனந்த் என்ற பாத்திரம், படத்தில் வெறும் காமெடியனாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஒரே ஒரு காட்சியில், ‘நான் சாதி பார்த்தா உன்னிடம் பழகுகிறேன்?’ என்று கேட்கிறார். உண்மையில் அது ஒரு நம்பிக்கையான குரல். ஆனந்த் பொய் சொல்லவில்லை. தமிழக கல்லூரிகளில் பல ஆனந்த்துகளை நாம் பார்க்க முடியும். அவர்கள் சாதி ஒழிப்பு அரசியல் பேசுவோராக இருப்பதில்லை என்றாலும், மாற்றத்தை விரும்பும் செயல்துடிப்பு மிக்க அந்த வயதுதான், ஆயிரம் கால ஆதிக்க உணர்வை மீறிச் செல்லும் உத்வேகத்தையும் அளிக்கிறது. மேலும், உழைக்கும் வர்க்கம் என்ற அளவில் எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுடன் ஓர் ஐக்கியத்தை உருவாக்கிக் கொள்வது ஒப்பீட்டளவில் எளிது. இதற்கான சாத்தியம் கதையின் உள்ளடக்கத்திலேயே இருந்தும் கூட இயக்குனர் அதை நிராகரிக்கிறார்.

ஆனந்தின் தந்தை கவுன்சிலர், அவரது அரசியல் செல்வாக்கால் சட்டக் கல்லூரியில் சீட் வாங்குகிறார், பட்டத்தையும் முடித்து விடுவார் என்ற சித்தரிப்புகளையெல்லாம் செய்த இயக்குநர், பரியன் எனும் இளைஞனின் போராட்டத்தில் ஏன் ஆனந்துகளை சேர்க்கவில்லை? சொல்லப் போனால் இந்தப் படமே பரியனின் பிரச்சினையை பரியனின் பார்வையில் அல்லாது ஆனந்தின் பார்வையில் சொல்லியிருக்கலாமோ என்று கூடத் தோன்றுகிறது. தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலப் பிரச்சினையால் பொறுமை இழக்கும் பிரச்சினையும் பரியனுக்கு மட்டுமே உரியதல்ல. அதில் ஆனந்துகள் அனைவரும் வருகிறார்கள்.

தொடந்து கொலை செய்யும் அந்த முதியவர் பாத்திரம், பரியனின் புகைப்படத்தைப் பார்த்து, ‘இந்தப் பையன் நல்லவனாச்சேப்பா.. நான் வேணும்னா பேசிப் பார்க்கட்டுமா?’ என்று கேட்கிறார். அது ஓர் முக்கியமான இடம். சாதிவெறி பிடித்த ஒரு கொடூர கொலைகாரன் என்ற போதிலும், அடியாழத்தில் புதைந்துள்ள வர்க்க உணர்வில் இருந்து பிறக்கும் அந்த குரலை பின் தொடரும் வண்ணம் படத்தில் கதையோ காட்சிகளோ இடம் பெறவில்லை. அதற்கு இயக்குனர் அனுமதிக்கவில்லை.

‘சாதி ஒழிப்பை சேரியில் பேசாதீர்கள். ஊரில் போய் பேசுங்கள்’ என்று பா.ரஞ்சித் பல மேடைகளில் பேசுகிறார். அதன்படி பார்த்தாலும் இந்தப்படம் அப்படிப் பேசவில்லை. அல்லது ரஞ்சித் சொல்லும் பொருள், ஊரில் சென்று ‘இனியாவது திருந்துங்கடா’ என்று கேட்பதாக இருக்கிறது. நாம் சொல்வது, இனியாவது நாம் சேராவிட்டால் முன்னேற்றமில்லை என்பதே.

ஆதிக்க சாதி வெறியின் கொடூரத்தையும் அதனால் அல்லலுறும் ஒரு தலித் இளைஞனின் அவலத்தை மட்டுமே இப்படம் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. ஆனால் ஆதிக்க சாதியின் ஏழைகளையும், ஏழ்மையிலிருந்து விடுபடுவதற்காக போராடும் தலித் மக்களையும் இணைக்கும் யதார்த்தத்தை இப்படம் கடந்து போகிறது.

விடுதலைக்கு வழி காட்டும் இந்த யதார்த்தம் நம் கண்ணுக்கு சட்டெனத் தெரிந்து விடாது. தெரிய விரும்புவோர் வர்க்க அரசியலோடு களத்தில் பயணிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை.

– வழுதி

28 மறுமொழிகள்

  1. பரியேறும் பெருமாள் : ஒருவித முற்போக்கு மயக்கத்தை தந்தது.ஆனால் உங்கள் விமர்சனம் அந்த மயக்கத்தை தெளிவிக்கிறது….
    இவ்வளவு நீண்ட தாமதத்தை தவிர்க்கலாம்.

  2. இந்த படம் போராட்ட உணர்வை தூண்டவில்லை என்றால் வேறு எந்த படமும் தூண்ட இயலாது . நேரடியாக சாதி ஆதிக்க சாதியை தாக்குவது போல படம் எடுத்திருக்க சொல்கிறீர்கள் ஆனால் படித்து முன்னேற சொல்வதன் மூலம் ஓட்டு கட்சிகளின் வலையில் விழுந்து மாய்ந்து விடாதீர்கள் என சொல்கிறது இந்த படம். உன் முன்னேற்றத்தை நோக்கி செல் என சொல்கிறது .

    • நேரடியாக சாதி ஆதிக்கத்தை தாக்கி படம் எடுக்கச் சொல்லி விமர்சனத்தில் இல்லை. பரியனின் நண்பனான ஆனந்த் போன்ற, ஒடுக்கும் தரப்பின் சமத்துவக் கரங்களைப் பற்றிக்கொள்ள வேண்டும்; அவர்களையும் இந்த சாதியொழிப்பு போராட்டத்தின் பங்காளிகளாய் இழுத்து வர வேண்டும் என்கிறது. ஒருவேளை, கதையில், பரியனின் நண்பரான ஆனந்த் முதன்மையான பாத்திரமாக இடம்பெற்றிருந்தால், ஆதிக்க சாதி தரப்பால் அவர் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டிருப்பார்? கல்லூரியில் செயல்படும் மாணவர் சங்கங்களில் சாதியை மறுக்கும் மேலும் சிலரை பரியன் இணைத்துக்கொண்டிருந்தால், அது நேர்மறையான சமத்துவப் போராட்டத்தை நோக்கி செலுத்தாதா?

      மேலும், சூழலின் பரிணாமத்தை துண்டித்துவிட்டு தான் மட்டும் படித்து முன்னேறுவது நடைமுறை சாத்தியமற்றது. கல்வி என்பது சமூக பொறுப்பை வழங்க வேண்டும். தான் உண்டு, தன் படிப்பு உண்டு, தன் முன்னேற்றம் உண்டு என்ற சுயநல எண்ணத்தை வழங்கக்கூடாது. உங்கள் விமர்சனத்தில் ‘ஓட்டுக் கட்சிகளின் வலை’யில் விழுந்துவிட வேண்டாம் என படம் சொல்வதாக குறிப்பிடுகிறீர்கள். அப்படியானால், அவர் ஓட்டரசியலை நிராகரிக்கும் இடதுசாரி அமைப்புகளையோ வேறு எந்த அமைப்புகளையோ பரிந்துரைக்கவில்லை. எல்லாவற்றில் இருந்தும் கண்ணை மூடிக்கொண்டு; அல்லது தன் மீதான இழிவுகளை சகித்துக்கொண்டு படித்து முன்னேறச் சொல்கிறார். தலித் விடுதலைக்கான வழி இதுதானா?

  3. They urinated on him… but he kept it as a secret and hide it from everyone… he did nothing against that…. as a normal human being no one will do that….
    Anyone at that situation will react… whether the director is showing the reality or else he wants everyone (other pariyans in the country) to keep their mouth shut????

    If i was there instead of pariyan i will slap her father in front that heroine…
    He hid everything from the heroine even his love and showed mercy to her father…
    Is pariyan a jesus christ???

    ஆதிக்க சாதி பெண்ணை விரும்பிய பரியன் தன் காதலை கூட அந்த பெண்ணிடம் வெளிப்படுத்த முடியாத அவலம் (?)….

    சமுக அவலத்தை அழகாக சித்தரித்த படம் சமுக மாற்றத்திற்கு பிரயோஜனமற்று போயிற்று…

  4. நான் எண்ணியதை வழுதி சரியாக வெளிப்படுத்தியதாகவே கருதுகிறேன். திப்பு மற்றும் revolutionary doctorம் என் கருத்தோடு
    இணைகின்றனர். கோவன்.

  5. வினவு படிக்கும் முன் …
    சமூக எதார்த்தத்தை படம் விளக்கியுள்ளது.சமூகம் இப்படத்தைப் பார்த்தாவது குற்றவுணர்வுக்குள்ளாகும்.

    வினவு படித்த பின்…
    வர்க்க விடுதலையை படம் கடந்து சென்று, கையறு நிலையை சமூகத்திற்கு எடுத்துக் காட்டி சில முற்போக்காளர்களிடம் கைதட்டல் வாங்கியுள்ளது.

  6. “எப்பொழுதெல்லாம் நீங்கள் மேல்தட்டு வகுப்பினரை அணுகி சமத்துவத்தை வலியுறுத்துகிறீர்களோ அப்போதுதான் இந்த மோதல் தொடங்குகிறது. அவர்களுக்கு கோபத்தை விளைவிப்பது ஒரே ஒரு காரணம்தான் அதுவும் சமத்துவத்தை கோரும் உங்கள் குணமே, அதுவே அவர்களின் மதிப்பை காயப்படுத்துகிறது”.
    – ஜாதி ஒழிப்பு ( Annihilation of Caste) டாக்டர் அம்பேத்கர்.

    ஆகவே ஆதிக்கச் சாதியினரின் திமிரை (மதிப்பை) அடக்காமல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமத்துவம் சாத்தியமல்ல.

    ஆனால் பரியேறும் பெறுமாள் ஆதிக்கசாதி திமிரை எங்கும் காயப்படுத்தவில்லை. மாறாக உயர்சாதி திணவைத் தீர்த்துக்கொள்ளும் திணவுக்கல்லாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சித்தரிக்கிறது.எனவே சாதிய கும்பலுக்கும் இப்படம் தித்திக்கிறது.

    • தித்திக்கிறதா ?? அடப்பாவிகளா எந்த ஆதிக்கசாதிகாரன்கிட்ட போய் கேட்டீங்கப்பு. படம் ரிலீசாகி 60 நாளாகிடுச்சி நீங்க கிராமத்துக்கு போக வேணாம் யூடியூப் இருக்குல்ல யூடியூப் அதுல போய் படம் ரிலீசானதிலிருந்தூ அடுத்த பத்து நாளைக்கு வந்த அத்தனை பப்ளிக் ரிவியூவையும் எடுத்து பாருங்க அதுல 80% ஆதிக்க சாதி மக்கள் தான் என்னா கருத்து சொல்றாங்கன்னு போய் பாருங்க.

      அவதூறு பன்னாதிங்கடே

  7. அவன் அவன் சாதி சரித்திரத்த அவன் அவன் மூஞ்சிக்கு நேரா சொல்றதே சரியா இருக்கும். உதாரணத்திற்க்கு, வேளாளர்களுக்கு எந்த பட்டமும் இருந்ததில்லை. கோவையில் குடியேறியபோது பறையர்களின் பட்டத்தை பயன்படுத்தி பறையனார் என்று சொல்லி வந்தனர். வெள்ளாள பறையனார் என்று பல கல்வெட்டுக்களில் காணலாம். அப்போ பறையன் ஆண்ட பரம்பறை. அப்புறமா கால ஓட்டத்துல பறையர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள். வேட்டுவன் கொலை தொழில் செய்ததால் அவர்களுக்கு காமிண்டன் அல்லது சண்டாளன் என்ற பெயர் கிடைத்தது. அதுவே மருவி கவுண்டனானது. போக போக இதுவே மரியாதைக்குறிய பெயரானது. ஒவ்வொரு ஆட்சியிலும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் ஆண்ட சாதியாகவும், எதிர்த்தவர்கள் அடிமை சாதிகளாகவும் இருப்பது வழக்கம். வெள்ளையர்களுக்கு சேவகம் செய்ததில் முதல் இடம் பிராமணனுக்கும், இரண்டாம் இடம் வெள்ளாளனுக்கும் கிடைத்தது. வெள்ளாட்டி கலாச்சாரம் அப்பொழுதுதான் உருவானது. அதாவது வெள்ளையர்கள் வெள்ளாட்டிகளிடம் அடிமையாக இருந்தனர். ( மேலே சொல்ல விரும்பவில்லை. தேடி படிக்கவும் ). அந்த “சேவையின்” மூலமாக நிலங்களும் சொத்துக்களும், கூடவே கவுண்டன் பட்டமும் வெள்ளையனிடம் இருந்தே கிடைத்தது. 1900ம் கணக்கெடுப்புக்கு முன்பு வெள்ளாளனுக்கு கவுண்டன் பட்டம் இருந்ததாக எந்த சான்றும் இல்லை. அது தெரிந்தே போலி பட்டையங்களை தயாரிக்க முயன்று அசிங்கப்பட்டார்கள். பல இல்லாத வீரர்களையும் தயாரித்தார்கள். உதாரணம் தீரன் சின்னமலை. இன்னும் நிறைய இருக்கிறது. இது போன்ற அவர்களது உண்மை சரித்திரத்தை சொல்லி, ” பொத்திக்கிட்டு இரு ” என்று சொன்னால்தான் எதுவும் மாறும். எங்களையும் மதிங்கன்னு சொன்னா ஒரு மயிறும் மாறாது.

    • நீங்கள் சொன்ன வரலாறை முற்றிலும் அறிய எந்த புத்தகத்தை படிக்கவேண்டும்?

  8. திருமூலர் வாக்குப்படி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதன் படி, தமிழர்கள் அல்ல, இந்தியர்கள் அல்ல , உலக மக்கள் அனைவரும் சமமானவர்களே, எல்லோரும் ஒருதாய் வயிற்றில் பிள்ளைகளே, அதையேதான் குரானும், உலக மக்கள் அனைவரும் ஒருதாய் வயிற்றி பிள்ளை என்று சான்றளிக்கிறது, இந்தியாவில் உள்ள சாதிகள் பல அவர்களின் தொழில்களை வைத்து உருவானதே தவிர, இதில் ஏற்றத்தாழ்வு இல்லை, உயர்ஜாதினரும் கீழ்ஜாதியினரும் ஒன்றுபோல் மலத்தையும் மூத்திரத்தையும் சுமக்கிறார்கள், இதில் என்ன பெருமை முடி வேண்டி கிடக்கிறது என்று தெரியவில்லை. இஸ்லாத்தை யார் பின்பற்றினாலும் இந்த ஜாதி கொடுமையில் இருந்து விடுபடலாம்.

  9. படம் பார்த்து வியந்தேன். விமர்சனம் படித்து வெட்கப்பட்டேன். வினவின் கண் கொண்டு பார்க்க முடியுமா என்று தெரியவில்லை முயற்சிக்கிறேன்.

  10. பரியேறும் பெருமாள் படம் சரியான பாதையிலேயே செல்கிறது.. வினவு குழு எதிர்பார்ப்பது போல, வெறுமனே ஆதிக்க சாதியினரை திருப்பி அடிப்பதாலோ அல்லது அவர்களை அவமானப்படுத்துவதாலோ பழிக்கு பழி தீர்ப்பதாலோ எந்த தீர்வும் கிடைக்காது. அப்படி செய்வதால் சாதிய பிரச்சனை மேலும் இறுக்கம் அடையுமே தவிர தீர்வு கிடைக்காது. இவ்வாறு செய்வதால் அதிகம் பாதிப்பு தலித் மக்களுக்கு தான் ஏற்படும். ஆகவே, சாதிய சிக்கல்களுக்கு ஒரே தீர்வு, ஆதிக்க சாதி மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஒன்று மட்டுமே. அவர்களே வேதனை பட்டு, இதனை ஆண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துன்பம் இழைத்து விட்டோம் என்று உணர்ந்து மனமுவந்து மாறினால் மட்டும் தான் நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.

    • rebecca mary அவர்கள் வழக்கம்போல வினாவுக்கு எதிரான கருத்துக்களை (அவதூறு) பதிவிட்டுள்ளார்.காந்தி அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் மக்களை நோக்கி மட்டுமே ‘அகிம்சையயை’ இம்சையாக போதித்தார், அதுபோல உள்ளது இவரது மறுமொழி.மேலும் வினவினர் இந்த கட்டுரையில் ஆதிக்க சாதியினரை பழிவாங்குவது மட்டுமே செய்ய வேண்டும் என்பது போல மறுமொழி யில் rebecca mary சித்தரிக்கிறார்.

      rebecca mary அவர்களே தயவுசெய்து மீண்டும் மீண்டும் வினவின் இந்த கட்டுரையை படியுங்கள்…பரியேரும் பெருமாள் படத்தை ஏற்கனவே பார்த்திருந்தாலும் மீண்டும் பாருங்கள்… பிறகு முடிந்தால் சிந்திக்க முயற்சி செய்யுங்கள் 👍

      • அவர் எங்கங்க வினவுக்கு எதிராக பேசினார் ?
        உண்மையை சொன்னால் உடனே அவர் வினவுக்கெதிராக பேசுகிறார் என்று கிளம்புகிறீர்களே ? உண்மையை கூறும் அவரை நோக்கி நீங்கள் தான் அவதூறு செய்கிறீர்கள்.

        சமூகப்பிரச்சினைகளை பேசினால் ஆண்டி இண்டியன்னு பக்தாள் சொல்ற மாதிரி இல்ல இருக்கு நீங்க சொல்றது ?

        முரளியோட முட்டு மொரட்டு முட்டால்ல இருக்கு !!

    • இவர் சரியாக சொல்லியிருக்கிறார் இந்த எளிமையான விசயத்தை கூட இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே ஸோ சேட்..!

  11. ஏன் பரியனை குட்ட குட்ட குனிந்து கொண்டே ஓட வைக்த்திருக்கிறார்கள் என்று நானும் நினைத்தேன். பதிவில் பலவற்றை உணர்ந்துகொள்ள முடிந்தது. வினவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த நல்ல பதிவு.

  12. In reality there is no problem in life- with normal PARAYAN,KAVUNDAN,VANNIYAN etc….
    Only problem with Porukki Parayan,Porukki Kavundan and Porukki Vanniyan/
    This cinema stands as CINEMA only in its normal business(commercial) features nothing more

  13. இந்த விமர்சனம் படத்தின் அரசியல் மீதான விமர்சனம்.

    தென் மாவட்டங்களில் இதுதான் நிதர்சனம், தேவேந்திர குல வேளாளர்களின் பொருளாதார நிலைமை, ஜனநாயக வெளியில் சாதிய ஒடுக்குமுறை சந்திக்கும் யதார்த்தம், அதை ஆதிக்க சாதியினர் எதிர்கொள்ளும் திமிர், ஒரு ஒடுக்கப்பட்ட சாதி பையன் திருப்பி அடிக்க முடியாத நிலைமை என்று அனைத்தையும் அங்கீகரிக்கிறது.

    இல்லாத ஒன்றை காட்டி விட்டதாக படத்தின் மீது குற்றச் சாட்டு இல்லை. இல்லாத ஒன்றை காட்டவில்லை என்பது விமர்சனம்.

    ரஞ்சித், மாரி செல்வராஜ் முன் வைக்கும் அரசியல் அம்பேத்கரின் அரசியல்.

    “இனியாவது திருந்துங்கடா” என்று பரியனின் பார்வையில் இருந்து சொல்வதுதான் கதை. அதை ஆதிக்க சாதியினரிடம் சொல்வதுதான் இந்தப் படத்தின் மையம். ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் இளைஞனையும், சாதியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற போராட்டத்தில் இருக்கும் கம்யூனிஸ்டையும் நோக்கி சொல்லப்படும் செய்தி இல்லை.

    மாரி செல்வராஜ் இதை தெளிவாக சொல்கிறார். “சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுபவர்களோ, சாதி வெறியர்களோ என்னுடைய இலக்கு இல்லை. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு மௌன சாட்சியங்களாக இருக்கும் ஆதிக்க சாதியினருடன்தான் இந்தப் படம் பேசுகிறது.” தனக்கு பல ஆதிக்க சாதியினரிடமிருந்து அவமானத்துடனும், சுய விமர்சனத்தோடும் தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அவர் சொல்கிறார். மாறாக, அப்படி யாரையுமே அசைக்கவில்லை என்று சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறதா?

    பரியனை ஒரு மனிதனாக, ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களை விட சிறந்த மனிதனாக, படிப்பாளியாக, உடல் பலம் நிறைந்தவனாக, அன்பு நிறைந்தவனாக, பெருமிதம் நிறைந்தவனாக காட்டியிருக்கிறது. இது சாதிய பெருமிதம் நிரம்பியவர்களின் மனதை அசைத்துப் பார்க்கிறது.

    ஆனால், “ஆணாதிக்கம் நாங்கள் போட்ட பிச்சை”, “அம்பானியின் செல்வம் நாங்கள் போட்ட பிச்சை”, “சபரி மலையில் பெண்களுக்கு தனி நாட்கள் ஒதுக்கலாம்” ஆகியவற்றுடன் பரியேறும் பெருமாள் வைக்கும் இந்த மெசேஜை சமப்படுத்துவதும். “இழிவையே கம்பீரமாக முன்வைக்கும் ஒரு அடிமையின் மோசமான ஓர் மனநிலை” என்று சித்தரிப்பதும் ஏமாற்று வேலை.

    ஒரு திவ்யாவும், கௌசல்யாவும் இந்தப் படத்தை எப்படி பார்ப்பார்கள். ஜோதி மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு ஏன் பரியனை பிடிக்கிறது. அதை இந்தப் படம் ஆதிக்க சாதி அமைதியான மக்களுக்கு விளக்குகிறது. “நீங்களும் மாறுங்கடா, சாதி மசிரை தூக்கி எறிந்து விட்டு பரியன் போன்ற மனிதர்களாக மாறுங்கடா” என்று அறைகூவல் விடுக்கிறது.

    “ரூமுக்குள்ள தூக்கு போட்டுகிட்டு சாகிறதுக்கு பதிலா வெளியில போயி அடிச்சிட்டு சாகட்டுமே” என்று இந்த அரசியலுக்கு எதிராக சேம் சைட் கோல் போடுவதாக சொல்கிறீர்கள். அந்த பேராசிரியர், “போ, நீயும் என்ன மாதிரி வரணும், அதுக்கு உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்” என்று அனுப்பி விட்டு மேலே சொன்ன வசனத்தை பேசுகிறார். “நீ போய் அடித்துக் கொண்டு சாகு” என்று அனுப்பவில்லை.

    மாரி செல்வராஜின் அரசியலுக்கு பதில் சொல்ல வேண்டுமானால், கோட்பாட்டு ரீதியாக “வர்க்க அரசியலோடு களத்தில் பயணிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை”, “ஆதிக்க சாதிகளின் ஏழைகளையும், ஏழ்மையிலிருந்து விடுபடுவதற்காக போராடும் தலித் மக்களையும் இணைக்கும் யதார்த்தம்”, “இனியாவது நாம் சேராவிட்டால் முன்னேற்றமில்லை”, “இந்தியாவில் வர்க்கமும் சாதியும் ஒன்று என்பதற்கு ஆகப் பொருத்தமான உதாரணங்களில் தலித்துகள் முதன்மையானவர்கள்” என்று பேசுவது மட்டும் நிச்சயமாக போதாது. ஆதிக்க சாதி உழைக்கும் மக்கள், தாழ்த்தப்பட்ட சாதி மேட்டுக்குடி மக்கள், ஆதிக்க சாதி வெறியர்கள், ஒடுக்கப்பட்ட சாதி பிழைப்புவாதிகள் என்று அரசியலை பேசிப் பேசி என்ன ஆகப் போகிறது?

    அது தொடர்பான நடைமுறையை பேச வேண்டும். இன்ன போராட்டத்தில் இன்ன வழியில் சாதி ஒழிப்பு அமலாகியிருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும்.

    “நீங்கள் பேன்டும் சட்டையும் போட்டுக் கொண்டு இணையத்தில் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கும் போது, சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ள முடியும் போது நல்ல உடை உடுத்தினால் கூட, நல்ல வீடு கட்டினால் கூட, அடிப்படை உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கூட அடித்துத் துவைக்கப்படுகிறோம்.”

    “அம்பேத்கர் காட்டிய வழியில்தான் நாங்கள் தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது. திருப்பி அடி, அடங்க மறு என்ற அரசியல்தான் எங்களை நடமாட வைத்திருக்கிறது.”

    “சாதியை ஒழிப்பதற்கான வர்க்க அரசியல் மலட்டு கோட்பாடாக அறைகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் பகுதியாக சாதி எதிர்ப்புப் போராட்டங்கள், சாதி ஒழிப்புப் போராட்டங்கள் களத்தில் நடைபெறவில்லை என்ற நிலையில் கோட்பாட்டு வசனங்களால் என்ன பலன்?”

  14. “அம்பேத்கர் காட்டிய வழியில்தான் நாங்கள் தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது. திருப்பி அடி, அடங்க மறு என்ற அரசியல்தான் எங்களை நடமாட வைத்திருக்கிறது.”

    இந்த படம் நீங்கள் சொல்வது போல எதையும் சொல்லவில்லை என்று ஆரம்பத்தில் நீங்களே சொல்கிறீர்கள். பிரின்சிபாலும் சொல்லவில்லை. ஆனால் அடங்க மறு, திருப்பி அடி என்பது தான் நடமாட வைத்திருக்கிறது என்று ஏன் மாற்றிப் பேச வேண்டும்? எங்கே இதை அமல்படுத்தி இருக்கிறீர்கள்? தலித்துகளும், பிற உழைக்கும் மக்களும் இணைய வேண்டும். மார்க்சியமும் வேண்டும் என்று சொல்லும் இராவணன் ( ஆசாத்) போன்றவர்கள் தான் நம்பிக்கை கீற்றாய் தெரிகிறார்கள். ரஞ்சித்தும், மாரி செல்வராஜும் அல்ல…

    • வசந்தன் மையமான புள்ளியை விட்டு சைடு விவரத்துக்குள் செல்கிறீர்கள். (விமர்சனத்தில் கூட கூப்பிட்டு வைத்து முகத்தில் ஒண்ணுக்கு அடித்ததற்காக ஒரு ‘சாரி’ கூட சொல்லவில்லை என்கிறார்கள். இறுதிக் காட்சியில் அவர் “சாரிப்பா” சொல்கிறார். தன் மகள் பரியன் மீது வைத்திருக்கும் காதலை அங்கீகரிக்கிறார் – ஏற்றுக் கொள்ளவில்லை. இது எல்லாம் பிரச்சனை இல்லை. பிரச்சனை அரசியல் பற்றிய விவாதம்.)

      இருந்தாலும் பரவாயில்லை.

      “அடங்க மறு அத்து மீறு” என்ற அரசியலை படம் முன் நிறுத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் படம் நடைமுறையில் இருக்கும் அந்த அரசியலை அழுத்தமாக காட்டியிருக்கிறது. அதை பரியன் நிராகரிக்கிறான்.

      ராகிங் செய்யப்பட்டதைப் பற்றி, அடிக்கப்பட்டதைப் பற்றி பேசும் போது, ராஜா தாத்தா பற்றி சொல்லும் போது என்று “அடங்க மறு, அத்து மீறு” என்ற அரசியலின் அடிப்படையில் அணி திரண்டு நிற்கும் தலித்திய இளைஞர் அமைப்பை காட்டியிருக்கிறார், இயக்குனர். படத்தில் ஆங்காங்கே டியூப் லைட்டால் அடித்து சண்டை போடும் காட்சிகளில் அந்த மோதலை காட்டுகிறார். எனவே, அந்த அரசியலே இல்லை என்று பொருள் இல்லை. ஓரிரு பத்தாண்டுகள் அந்த அரசியல் நடைமுறையில் இல்லாமல் பரியன் சட்டக் கல்லூரிக்கு படிக்க வருவது கூட சாத்தியமாகாமல் போயிருக்கலாம் என்று கூட ஒரு விமர்சகர் எழுதியிருந்தார்.

      மேலும், பரியன் தனிநபர் வாதத்தில் ஊறித் திளைப்பவனில்லை. மாணவர் உதவித் தொகை வழங்கக் கோரி SFI மாணவர் போராட்டத்தில் தனது நண்பியுடன் கலந்து கொள்கிறான். ஜூலை 23 தாமிரபரணி மாஞ்சோலை தியாகிகளின் நினைவாக தலித்திய அமைப்பு நண்பர்களுடன் இணைந்து போஸ்டர் ஒட்டுகிறான். ஆனந்த், ஜான், ஸ்டாலின் இணைந்து புதிய மாணவர்களை வரவேற்று போஸ்டர் ஒட்டி ராகிங் செய்கிறான். ஏன் தான் அடிக்கப்பட்டதை “அடங்க மறு, அத்து மீறு” குரூப்பிடம் முறையிடக் கூடச் செய்கிறான். கடைசி நிமிடத்தில் மனம் மாறி வகுப்புக்கு போய் விடுகிறான்.

      அதுதான் அவனது அரசியல்.

      இந்த “அடங்க மறு, அத்து மீறு” அரசியல் படம் முழுவதும் காட்டப்படும் ஆணவக் கொலைகளை எதுவும் செய்யவில்லை. ஏன் “ஆதிக்க சாதியில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினரும்” அவற்றை எதிர்த்து, அவற்றை தடுத்து நிறுத்த எதுவும் செய்யவில்லை. பரியனும் அப்படி ஆற்றில் பிணமாக, அல்லது கயிற்றில் தொங்குவதாக, பேருந்தில் விழுந்து இறந்ததாக முடிக்கப்படுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருந்தன.

      இந்நிலையில் தனது தோழியின் நட்புக்காகவும், எதிராளிகளின் அவலத்தை கருத்தில் கொண்டும் தனக்கு இழைக்கப்படும் தனிப்பட்ட அவமானத்தை தனிப்பட்ட முறையில் எதிர்கொள்வதாக முடிவு செய்கிறான்.

      இது ஒரு பரியனின் தனிப்பட்ட பிரச்சனை இல்லை. நூற்றுக் கணக்கான இளம் பெண்களின், இளைஞர்களின் வாழ்க்கைப் போராட்டம் என்பது உண்மைதான். ஆனால், இதற்கு “அடங்க மறு, அத்து மீறு” அரசியலும் சரி, “வர்க்க அரசியலும்” சரி எந்த ஒரு தீர்வையும் தந்து விடவில்லை. ஒரு அரசியல் ரீதியான தீர்வு பரியன் முன் இல்லை என்பதும் உண்மை.

      ஏன், தருமபுரியில் இளவரசன் கொல்லப்பட்டது ஒட்டு மொத்த சமூகத்தின் முன்பு நிகழ் படமாக சில மாதங்கள் ஓடியது. 2012 நவம்பர் 7 அன்று நத்தம் காலனி வீடுகள் தாக்கி உடைக்கப்பட்டதில் தொடங்கி, உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு ஆஜர் ஆன வழக்கு, நீதிமன்ற இழுத்தடிப்பு என்று ஒவ்வொரு நாளாக 2013 ஜூலை 4-ம் தேதி அன்று அவன் மரணத்தை நோக்கித் தள்ளியது இந்த சாதிய சமூகம். அந்த ஆதிக்க சாதியில் இருந்த உழைக்கும் மக்கள் யாரும் திவ்யா – இளவரசனுக்கு நடந்ததை தடுக்கவோ, அதை எதிர்த்து போராடவோ களத்தில் இறங்கவில்லை. இளவரசன் தண்டாவளத்தில் கொல்லப்பட்டு கிடந்த போதும் கைகோர்த்து போராட்டத்தில் இறங்காமல் கடந்துதான் போனார்கள்.

      இது பிரச்சனை.

  15. ஜோக்கர் படம் முடியும் போது விரக்தியை ஏற்படுத்தும். அதையே இப்படமும் செய்கிறது.
    முற்போக்கு என்றும், ஒரு விரல் புரட்சி என்றும் சொல்லும் எல்லாரும், இந்த சமூகக் கட்டமைப்பை, அரச கட்டமைப்பை பாதுகாக்கும் வேலயையே செய்கிறார்கள்…
    இதுவரை இப்படியான படங்கள் கூட வராமல் போனதன் விளைவே இந்த மயக்கம்..

    • இது “அரச கட்டமைப்பை பாதுகாக்கும் வேலை” என்றும், “இதுவரை இப்படியான படங்கள் கூட வராமல் போனதன் விளைவே இந்த மயக்கம்” என்று பெரிய முடிவுகளை சொல்கிறீர்கள்.

      அரச கட்டமைப்பு என்று உண்மையில் புரிந்து கொள்ள சிக்கலான கோட்பாடுதான். விஷயம் என்னவென்றால், லெனினின் “அரசும் புரட்சியும்” படித்து, எங்கெல்சின் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” படித்து கற்றுக் கொண்ட அரச கட்டமைப்பை தூக்கி எறிவது, பாதுகாப்பது என்பதையெல்லாம் பேசுவது நடைமுறையில் எத்தகைய அரசியலாக வெளிப்பட்டிருக்கிறது என்பதுதான் கேள்வி. இங்கு பிரச்சனை அரச கட்டமைப்பு பற்றியது மட்டும் இல்லை, இந்திய அரச கட்டமைப்புக்கு அடித்தளமாக இருக்கும் சாதிய கட்டமைப்பு பற்றியது.

      வர்க்கப் போராட்டத்தின் மூலம் சாதியை அழித்தொழித்தது பற்றிய (அல்லது அழித்தொழிக்க முடியாத), அல்லது அதை நோக்கி எவ்வளவு தூரம் அடி வைத்திருக்கிறோம் என்ற 100 ஆண்டு வரலாற்றை பேச மறுக்கிறீர்கள் என்பதுதான் பிரச்சனை.

      இப்போதைக்கு சாதியை எதிர்த்த போராட்டத்தில் பரியனின் அரசியல்தான் நடைமுறையில் அமலில் உள்ளது. “வர்க்கத்தையும் சாதியையும் இணைக்கும்” அரசியல் ஏட்டுச் சுரைக்காயாக உள்ளது. பரியனின் அரசியலில் செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் சட்டக் கல்லூரி முதல்வராக வருகிறார். திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி என்று சில நூறு பேராவது படித்து பேசும் உரிமையையும், இணையத்தில் எழுதும் வசதியையும் பெறும் நிலைக்காவது வருகிறார்கள். புரட்சிகர அரசியலில் இணைந்து கொள்வதற்குக் கூட பரியனின் அரசியலை பின்பற்றி படித்து நகரங்களுக்கு வந்து சேர வேண்டியிருக்கிறது. ஆம் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான உழைக்கும் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் விடுதலை அடைந்து விடவில்லைதான். ஆனால், நீங்கள் சொல்லும் அரசியலில் அது கூட நடக்கவில்லை. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவை என்று சொல்லுங்கள்.

      2,500 ஆண்டுகளாக மோனநிலையில் இருந்த இந்திய கிராம சமூகம் என்று மார்க்ஸ் சொல்கிறார். அந்த மோனநிலையை முதலாளித்துவ வளர்ச்சி கூட உடைத்து விடக் கூடாது என்று இந்துத்துவ சக்திகள் தீவிரமாக சாதிய கட்டமைப்பை காப்பாற்ற வேலை செய்கின்றன. அதற்கு எதிரான சாதியை உடைப்பதற்கான புரட்சிகர அரசியல் என்ன? அதிகாரத்தை கைப்பற்றி நிலத்தை பிரித்துக் கொடுப்பது என்பது பதில் இல்லை.

      “புரட்சி செய்வதற்கு உழைப்பாளர்களை ஒன்று திரட்ட வேண்டும், ஆனால் உழைப்பாளர்கள் சமத்துவ உணர்வுடன் ஒன்று சேர்வதற்கு சாதிய கட்டமைப்பு தடையாக உள்ளது. எனவே, சாதியை அழித்தொழிக்கும் இயக்கம் இல்லாமல் உங்களால் உழைப்பாளர்களை அணி திரட்ட முடியாது. புரட்சியே செய்ய முடியாது” என்ற அம்பேத்கரின் வாதத்துக்கு என்ன பதில்?

      நடைமுறையில் மக்கள் திரள் போராட்டங்களில் மக்கள் சாதிய வேறுபாடுகளை மறந்து அணி திரள்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அது எவ்வளவு காலம் நீடிக்கிறது, அல்லது இது போன ஆணவக் கொலைகளுக்கு எதிரான, தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து துவைக்கப்படுவதற்கு எதிரான ஆதிக்க சாதி உழைக்கும் மக்களின் போராட்டமாக நீட்சி பெறுகிறதா? இல்லை என்பதே விடை.

  16. வசந்தன்:அரச கட்டமைப்பை பாதுகாக்கும் வேலயையே செய்கிறார்கள்…
    இதுவரை இப்படியான படங்கள் கூட வராமல் போனதன் விளைவே இந்த மயக்கம்..//
    சரியான கருத்து …

  17. படம் பார்க்க வாய்ப்பில்லை…வினவின் விமசர்னமே படம் பார்த்த திருப்தியை தருகிறது…. தூத்துக்குடி மாவட்டங்களில் பட்டியல் மக்கள்..ஆண் நாயை வளர்க்க கூடாது என்று ஆதிக்க சாதி வெறியர்களின் எழுதப்படாத உத்தரவு ஒன்று உண்டு..அந்த இன்னும் அமலில் இரப்பதாகவே கருதுகிறேன்.. அதற்கு உதாரணம் கருப்பி என எண்ணுகிறேன்…. கருப்பி என்ற பெயர்ஆண் பாலை குறிக்கிறதா? பெண் பாலை குறிக்கிறதா? என்று தெரியவில்லை….

    • படத்தில் கருப்பி என்பது ஒரு collective-ஐ குறிக்கிறது. ஆண், பெண், ஒடுக்கப்படும் உழைக்கும் சாதி மக்கள் அனைவரையும் குறிக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க