சிலியின் வசந்தம் !

சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையின் கட்டணத்தைக் கடந்த அக்டோபரில் 30 பெசோக்கள் (2.70 ரூபாய்) உயர்த்துவதாக அறிவித்தது, அந்நாட்டு அரசு. ஏற்கெனவே தமது மாதாந்திர வருமானத்தில் 13 முதல் 28 சதவீதத்தைப் போக்குவரத்துக்காக மட்டுமே செலவிட்டு வரும் குறைந்த வருமானமுள்ள நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் தலையில் பேரிடியாய் இறங்கியது இந்தக் கட்டண உயர்வு.

இக்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட அன்றே ரயில்களிலும் பேருந்துகளிலும் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்து, கட்டணக் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர் மாணவர்கள். “புறக்கணி! கட்டணத்தைச் செலுத்த மறு! இது போராட்டத்தின் இன்னொரு வடிவமே!” என்ற அவர்களது முழக்கம் வெகுவிரைவாகப் பல்லாயிரக்கணக்கான மக்களையும் பற்றிக் கொண்டது.

கட்டணம் செலுத்த மறுத்து ரயில் நிலையங்களை முற்றுகையிட்ட மாணவர்களைக் கடுமையாகத் தாக்கியது போலீசு. எதிர்த்தாக்குதலில் ஈடுபட்ட மக்களும், மாணவர்களும் மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்துகள், பெரும் ஷாப்பிங் மால்களை அடித்து நொறுக்கித் தீக்கிரையாக்கினர். “எப்போதும் மகிழ்ச்சியைக் காணாத தலைமுறையை”ச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும், கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாகத் தமது மக்களின் வாழ்க்கையைச் சூறையாடி வந்த புதிய பொருளாதாரக் கொள்கையின் அடையாளங்களாக விளங்கியவை, அநியாயச் சுரண்டலில் ஈடுபட்டவை என எவற்றையெல்லாம் வெறுத்தார்களோ, அவற்றை எல்லாம் தாக்கினார்கள். குறிப்பாக, ஏழைகளும், அடித்தட்டு நடுத்தர மக்களும் குவிந்து வசிக்கும் புறநகர்ப் பகுதிகளில் தாக்குதல் உச்சக்கட்டத்தை அடைந்தது.

“அவர்கள் உங்களது குரலுக்குச் செவிசாய்க்காத போது, எல்லா இடங்களிலும் மலம் கழித்து வைப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரேவழி என்ற வகையில்தான் மெட்ரோவுக்கு எதிராக மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தினர். ஆள்பவர்கள் வார்த்தைகளுக்குக் காது கொடுக்க மாட்டார்கள்” என்று போராட்டத்தின் நியாயத்தை மிகச்சரியாக எடுத்துரைக்கிறார் 70 வயது மூதாட்டி அமேலியா ரிவேரா.

அடுத்து வந்த நாட்களில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, குறைவான ஊதியம் மற்றும் ஓய்வூதியம், கல்வி உரிமை இல்லாமை, மோசமான பொது சுகாதார அமைப்பு, தனியார்மயமாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் மற்றும் அதீத சமத்துவமின்மை ஆகியவற்றால் விரக்தியடைந்த சிலி மக்கள், தமது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.  பல்லாயிரக்கணக்கில் திரண்டு ஊர்வலங்கள் நடத்துவதும் கோரிக்கைகளை முழங்குவதும் நாடெங்கும் தினசரி நிகழ்வுகளாக மாறின.

போராட்டங்கள் தீவிரமடைந்தவுடன், “நாடும் மிகவும் சக்தி வாய்ந்த, மன்னிக்க முடியாத எதிரியுடனான போரை எதிர்கொண்டுள்ளது” எனச் சாடிய வலதுசாரி அதிபர் பினேரா, நாடு முழுவதும் அவசரநிலையை அறிவித்தார். 20,000 இராணுவப் படையினரை தெருக்களில் இறக்கிவிட்டுச் சொந்த மக்களுக்கு எதிராக உள்நாட்டுப் போரைத் தொடுத்தார்.

போராட்டத்தை, “வரலாறு காணாத வன்முறை” என்றும், போராடும் மக்களை ”எதிரிகள்”, “கிரிமினல்கள்” என்றும் இழிவுபடுத்திய ஆட்சியாளர்கள், அமைதியான முறையில் ஊர்வலம் சென்ற, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களைக்கூட வெறிகொண்டு தாக்கினர். இதுவரையிலும் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட பெல்லட் குண்டு தாக்குதலில் 270-க்கும் மேற்பட்டோர் பார்வையிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் குடிநீரும் உணவும் இல்லாமலும், பெற்றோரைச் சந்திக்க முடியாமலும் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். தடுப்புக் காவலில் அடைக்கப்பட்ட பெண்களைக் கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கியும், பாலியல் வன்முறைகளை ஏவியும் கொடூரமான சித்திரவதைகளை ஏவி வருகின்றன அரசுப் படைகள்.

இவ்வளவு அடக்குமுறைகளை எதிர்கொண்ட நிலையிலும் தமது உறுதியைத் தளரவிடாத மக்கள், அக்டோபர் 25-அன்று, சிலியின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 12 இலட்சம் பேர் கொண்ட மாபெரும் பேரணியையும், ஆர்ப்பாட்டத்தையும் சாண்டியாகோவில் நடத்திக் காட்டினர். நாளுக்கு நாள் மக்களின் உறுதியும், போராட்டமும் அதிகரித்துக் கொண்டே செல்வதைக் கண்டு நிலைகுலைந்த அதிபர் பினேரா அவசர நிலையைத் திரும்பப் பெற்றார். மெட்ரோ கட்டண உயர்வை நிறுத்தி வைத்ததுடன், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, அரசின் ஓய்வூதியம் அதிகரிப்பு மற்றும் மின்சாரக் கட்டணத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட சலுகைகளையும் அறிவித்தார்.

ஆனால், போராடும் மக்கள் இந்தச் சில்லறை சலுகைகளையும் வார்த்தை ஜாலங்களையும் நிராகரித்து விட்டனர். “இது 30 பெசோக்கள் அல்ல, இது 30 ஆண்டுகள்” “அதிபரே பதவி விலகு” “புதியதோர் அரசியலமைப்பு தேவை” என அரசியல் முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. கட்டண உயர்வுக்கு எதிராக எழுந்த போராட்டம் சமூக, அரசியல் மாற்றத்தை நோக்கி நகர்ந்தது.

படிக்க:
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

“நான் மாற்றத்தை விரும்புகிறேன், அதுவும் இப்போதே செய்ய விரும்புகிறேன். வாழ்க்கைச் செலவு உயர்ந்து கொண்டே செல்கிறது, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்காக எங்களது உழைப்பும் சேமிப்பும் கொள்ளையிடப்படுகிறது. ஆயுதப் படைகளும், பாதிரியார்களும், அரசியல்வாதிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் சலுகைகளை அனுபவிக்கிறார்கள். அதை மாற்றவதற்கு நீங்கள் அரசியலமைப்பை மாற்ற வேண்டும” என மக்களின் குரலை எதிரொலிக்கிறார் 60 வயது பள்ளியாசிரியர் ஜூவான் ஏஞ்செல்.

சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா.

வேறு வழியின்றி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஒப்புக் கொண்ட பினேரா, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடக்குமென்று அறிவித்திருக்கிறார். “இப்போதுள்ள அரசியல்வாதிகள், நாடாளுமன்றம் உள்ளிட்ட எவையும் தேவையில்லை, எங்களது பிரதிநிதிகளே, மக்களுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய புதிய அரசியலப்பை எழுத வேண்டும்” என்கின்றனர் மக்கள்.

“என் பாட்டி சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடினார்; என் அம்மா தன் காலத்தில் போராடினார்; இது, ஆறு வயது சிறுமியின் தாயான என்னுடைய போராட்டத் தருணம். நாங்கள் நீண்டகால மாற்றங்களை விரும்புகிறோம். அது எனது மகள் தனது இருபதாவது வயதில் மகிழ்ச்சியோடு இருக்க உதவும் என நம்புகிறேன்” என்கிறார் ஒப்பனைக் கலைஞர் மெலிஸ்ஸா மெடினா. ஆம், சிலி தனது எதிர்காலத்திற்காகப் போராடுகிறது.

எங்கு அடித்தால் எதிரிக்கு வலிக்குமோ அங்கு அடித்து, எப்படிச் சொன்னால் கேட்பார்களோ அப்படிச் சொல்லியிருப்பதன் மூலம் எதிரியைப் பணிய வைத்திருக்கிறார்கள் சிலியின் உழைக்கும் மக்கள். தனியார்மயம்-தாராளமயத்துக்கும், அதனைப் பாதுகாக்கும் பாசிச அடக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டங்களின் வழிகாட்டியாய்த் திகழ்கிறது “சிலியின் வசந்தம்”.

தமிழ்ச்சுடர்

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

1 மறுமொழி

  1. அதே போன்ற ஒரு போராட்டச் சூழல். இதோ, மத்திய அரசு ரயில் கட்டண உயர்வை அறிவிக்க இருக்கிறது. அஞ்சாது போராடுவோம். போராட்டமின்றி வாழ்வு இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க