சென்னை என்றாலே ஞாபகத்திற்கு வருவது, வாகன இறைச்சலும், மக்கள் நெருக்கமும்தான். அந்தச் சுவடே தெரியாமல் இங்கே சில தெருக்கள். ஆம், மேட்டுக்குடி பார்ப்பனர்கள் வசிக்கும் மேற்கு மாம்பலம். ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்கள் சத்தமில்லாமல் நம்மை கடந்து செல்கின்றன. நடைபாதையில் சில கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சாலையின் எதிர்முனையில் “வளையல், பொட்டு, சீப்பு” என்று ஒரு குரல். குரல் வந்த திசையை நோக்கினோம். மிகப்பெரிய ஃபேன்சி ஸ்டோரையே தள்ளுவண்டியில் கோபுரமாக அடுக்கி, தெருவோர மரத்தடியில் நிறுத்தி வைத்திருந்தார் அந்த வியாபாரி.

அவரை நெருங்கினோம். அந்த மாலைப் பொழுதின் மங்கிய ஒளியைப் போல, அவரது முகம் இருள் கவ்வியிருந்தது. கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது, இருந்தாலும் பேசிப் பார்ப்போம்.

“என்ன இது? கிராமப்புறங்களில் புறநகர்ப்பகுதியில் வியாபாரம் செய்தவர்கள் எல்லாம் இங்கு வந்துவிட்டீர்கள்?”

மாலைப்பொழுதைக் கடந்தும், தண்டல் கட்டும் காசுகூட இன்னும் வியாபாரமாகலையே… காத்துக்கொண்டிருக்கும் வியாபாரி.

“ஆமா, அங்கே வியாபாரம் இல்ல, இங்கே வந்தா இங்கேயும் வியாபாரம் கண்ண கட்டுது. இதுல வேற நேத்து மழ. கட போட முடியல. இன்னைக்கு இதுவரைக்கும் பெருசா வியாபாரம் இல்ல. முழு பொழுதும் போயிருச்சு. இனி வந்தவரைக்கும் தள்ளிட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான்” என்றார்.

தூரத்திலிருந்து மாமி ஒருவர் வேகவேகமாக நடந்து வந்தார். “ஆயில் பெயிண்ட்ல மெட்டல் வளையல் சொன்னேனே எடுத்து வந்தீயா? கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, கொளுன்னு ஊரெல்லாம் ஒரே விசேசம். பரபரன்னு ஓடணும். எங்கே அந்த வளையல காட்டு” என்றார்.

படிக்க:
காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !
♦ கேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்

“இது ஸ்பெஷல் வளையல் வெல அதிகம், வழக்கமா கொறைக்கிறமாதிரி இதயும் கொறைக்காதிங்க மாமி” என்று பல வண்ணங்களில் வளையல்களைக் காட்டினார். அதைத் திருப்பித் திருப்பி பல தடவை பார்த்துப் பொறுக்கி கனிசமானவற்றை எடுத்துக்கொண்டு, “சொல்லிக்கொடு” என்றார்.

“அம்மா… ஒன்றரை டஜன் எடுத்திருக்கீங்க. நல்லது எல்லாத்தயும் பொருக்கிட்டீங்க. 250 ரூபாய் கொடுங்க, கொறைக்காதீங்க… குறைவாத்தான் சொல்லியிருக்கேன்” என்றார்.

“ஊகூம்… 100 ரூபாதான், இல்லாட்டி நீயே வச்சிக்கோ” என்றார்.

அவர் 200 என்று கெஞ்ச, கடைசியா 160 ரூபாய்க்குப் பேசி, அதிலும் பத்து ரூபாய் சில்லறை இல்லையென்று கூறி 150ஐ கொடுத்துவிட்டு எடுத்த வளையலோடு நடையைக் கட்டினார் மாமி.

250 ரூபா விக்க வேண்டியது. 200-வது கொடுங்க என்று கெஞ்சினேன். கடைசியா 160க்கு பேசி முடித்து, அதிலும் பத்து ரூபாய் சில்லறை இல்லையென்று 150ஐ திணித்துச் சென்றார் அந்த மாமி.

வண்டிக்காரர் சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் நம்மைப் பார்த்தார். நாம் பதிலுக்கு அவரைப் பார்த்தோம். “இதுதான் என் பொழப்பு, பாத்தீங்க இல்ல” என்றார் சோகமாக.

“கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்ப வேண்டியதுதானே, விலை குறைவா கொடுத்தால் திரும்பவும் அதுமாதிரிதானே கேட்பார்கள்” என்றோம்.

படிக்க:
கிருஷ்ணரும் சில பிய்ந்துபோன செருப்புகளும் !
♦ அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி

“வெறுங்கையோட போனா, தண்டல்காரனுக்கு யார் பதில் சொல்றது. நேத்தே மழையில வியாபாரம் இல்ல, பணம் கொடுக்கல. இன்னைக்கும் இல்லேன்னா கெட்ட கெட்ட வார்த்தையால திட்டுவான். ஒடம்பே கூசிடும். நாம என்ன பஜார்லயா கடை போட்டு வியாபாரம் பண்றோம்? இன்னைக்கு இல்லேன்னா நாளைக்கு வித்துக்கலாமுன்னு நெனக்க முடியுமா?” என்றார்.

“உங்களுக்கு சொந்த ஊர் எது? இங்கே எப்படி வந்தீங்க” என்றதும், கசப்பும் வெறுப்பும் கலந்த கடந்த காலத்தை, விருப்பமின்றி நினைவுகூர்ந்தார்.

“செங்கல்பட்டுக்கு அடுத்த மதுராந்தகம் சொந்த ஊரு. அங்கிருந்து இங்கே வந்து பல வேலைகள் செஞ்சேன். எந்த வேலயும் செட்டாகல. கடைசியில இதுல காலத்த ஓட்டுறேன். இரண்டு ரூபாயிலேருந்து 60 ரூபா வரைக்கும் பல ஐட்டங்களா வாங்கிப் போட்டிருக்கேன். முன்னெல்லாம் சரக்குக்கு பத்தாயிரம் ரூபா வச்சா வெல்லம். தள்ள முடியாதளவு வண்டி நெறஞ்சிரும். இப்போ முப்பதாயிரம் வச்சாலும் பத்தல. வண்டி காலியா தெரியுது. வண்டி காலியா இருந்தா பக்கத்துல யாரும் வரமாட்டாங்க. பாக்க வந்தாத்தானே என்ன வச்சிருக்கேன்னு விசாரிப்பாங்க, பிறகு ஏதாவது வாங்குவாங்க.

நூற்றுக்கணக்கானப் பொருட்கள். இவ்வளவையும் வாங்கிப் போட்டால்தான், பார்க்கவாவது வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள்.

சரக்கு ஒன்னும் பெருசா இல்லீங்க. கொழந்தைங்க விளையாட்டு ஐட்டம், வீட்டுப் பொம்பளைங்களுக்குத் தேவையான குளியல், கிச்சன், மேக்கப் பொருட்கள், அப்புறம் டப்பி, ஜக்கு, கத்தி, ஸ்பூன், பேண்டு, பொட்டுன்னு பலத பாத்து பாத்து வாங்கிப் போட்டாத்தான் ஏதாவது விக்கும்.

ஒரு நாளைக்கு 3000 ரூபா வித்தாத்தான் 700, 800 கிடைக்கும். எங்கே விக்குது! விக்கிறதே எழுநுறு என்னுறுதான், அதுல எங்கே நிக்கும். எங்கே வியாபாரம் ஆகும், எங்கே ஈ ஓட்டுமுன்னு சொல்ல முடியல. அந்த ரகசியம் தெரிஞ்சா ஏன் ரோடு ரோடா அலையப்போறேன். இந்த அலைச்சல்கூட கடைசி வரைக்கும் முடியாது. எங்க முதுகும் காலும் வலுவா இருக்குற வரைக்கும்தான் ஓட முடியும். எப்ப ஒடம்பு சொல்ற பேச்சு கேக்க முடியாம ஒக்காந்துருவோமுன்னு பயமா இருக்குது. ஒழைக்கும்போதே நம்ம பொழப்பு நாய் பொழப்பு. இதுவும் முடியலன்னா என்ன பண்றது.

ரோட்ல நிழலப் பாத்து வண்டி நிறுத்துனா கூட, இங்கே நிறுத்தாதே, வாசலத் தாண்டி தூரமா போன்னு சொல்லி தொரத்துறாங்க. வசதி இருந்தா கடைய போட்டு உக்கார மாட்டேனா” என்று முணகிக் கொண்டே நகர்ந்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

யோத்தியா மண்டபம் அருகில் தள்ளுவண்டியில் பொம்மை கடை போட்டிருந்த முருகனிடம் பேச்சு கொடுத்தோம்.

“திண்டிவனம் பக்கத்துல மரக்கானம்தான் சொந்த ஊரு. எனக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. சவுக்கு போட்டு பெரிய நட்டம். இப்பல்லாம் விவசாயம் செஞ்சு கட்டுப்படியாகமாட்டேங்குது. அதனால சிட்டி பக்கம் வந்துட்டேன். இந்தக் கடை மூலம், வீட்டு வாடகை, பசங்க படிப்பு, செலவுன்னு ஏதோ ஓடுது.

முருகன்

காலையில 8 மணிக்கு வண்டியில சரக்கப் போட்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன்னா இரவு 8 மணிக்குத்தான் வீடு திரும்புவேன். நாள் முழுக்க வண்டிய வெயிட்டு கொடுத்துத் தள்ளித் தள்ளி கால் நரம்பு சுத்திகிட்டு வின்னு வின்னுன்னு வலிக்குது. என்ன செய்யிறது; வீட்டுல பசங்கள பாக்கணும்… இப்படியே காலம் ஓடுது” என்று சொல்லிக்கொண்டே பொம்மையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனையும் அவனது தந்தையையும் நோக்கி நகர்ந்தார், முருகன்.

ஆசைப்பட்ட பொம்மை விலை அதிகம் என்பதால், கிடைத்ததை தனதாக்கிக்கொண்டு மகிழும் சிறுவன்.

***

கிராமங்களிலிருந்து துரத்தப்பட்ட இந்த விவசாயிகள் நகரங்களில் நடைபாதை வியாபாரிகளாகவோ, தள்ளுவண்டிகளைக் கொண்டோ பிழைப்பை நகர்த்த வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பொழுதையும் ஒரு போராட்டமாகவே கழிக்கிறார்கள். பொதுவாக கிராமங்களை நினைவுகூரும்போது, பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளுக்கும் அல்லியும் தாமரையும் பூத்துக்குலுங்கும் குளங்களுக்கும் அழைத்துச் செல்வார்கள் நமது தமிழ்க் கவிகள்.

ஆனால், இந்த நடைபாதை வியாபாரிகளுக்கோ, கடந்த காலம் மிகக் கசப்பாக இருக்கிறது. அதை நினைவுகூர்ந்து சொல்லவரும் ஒன்றிரண்டு வார்த்தைகள்கூட தொண்டைக்குழிக்குள்ளேயே மரணித்துப் போகிறது. அவர்களது கிராமத்து வாழ்க்கையைப் போலவே, நகர்ப்புறத்து நிகழ்காலமும் எதிர்காலமும் இருண்டே காணப்படுகிறது.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க