ஸ்ரீநகர் மத்திய சிறைச்சாலை வாயிலை இமைக்காமல் பார்த்தபடியே இருக்கிறார் முக்லி பேகம். காவலர் தரும் தகவலுக்காக காத்திருக்கிறார் அவர்.

“காலையிலிருந்து நான் எங்கேயும் நகரவில்லை. என்னுடைய எண்ணை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் அழைக்கலாம்” என்கிற பேகத்தின் காத்திருப்பாளர் எண் 46.

கடந்த இரண்டு வாரங்களில் மூன்று முறை முயற்சித்தும் சிறையில் உள்ள தன்னுடைய மகன் முகமது ரஃபி சோபியை காண அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த 69 வயது பெண்ணுக்கு இப்போதுதான் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

“அவனைப் பார்க்க நான் உயிரை விட்டுக்கொண்டிருக்கிறேன், அவன் முகத்தை ஒரு முறை தொட்டுப்பார்க்க வேண்டும்” என்கிறார் மெல்லிய குரலில் அவர். “காவலர்கள் அவனை சித்ரவதை செய்திருப்பார்களோ என கவலையாக உள்ளது”.

Kashmir jail ஆகஸ்டு 21-ம் தேதி நள்ளிரவில் ஜம்மு & காஷ்மீர் போலீசால் 39 வயதான சோபி கைது செய்யப்பட்டார். இரண்டு நாட்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தபின், மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டதாக சொல்கிறார் பேகம்.

“அவன் எந்த குற்றமும் செய்யவில்லை. அவன் அப்பாவி என்பதை அல்லா அறிவார்” என பேகம் தொடர்ந்து கூறியபடியே இருந்தார். “பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்ததாக போலீசு தேடிக்கொண்டிருந்த உறவுக்காரர் ஒருவர் கிடைக்கவில்லை என்பதால் இவனை கைது செய்து கொண்டுவந்துவிட்டார்கள்.” என்கிறார் அவர்.

கட்டட வேலை பார்த்து வந்த சோபிக்கு திருமணமாகி நான்கு வயதில் ஒரு பெண்ணும் எட்டு மாதமான ஒரு மகனும் உள்ளனர். அவருடைய உறவுக்கார சிறுவன் 11 வகுப்பு படிக்கிறார். இவர்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து 10 கி.மீ. தள்ளியிருக்கும் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார் அவன்.

ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் அந்த சிறுவன், இவர்களுடைய வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறான்.

“அவன் எங்கள் வீட்டை விட்டு போன பிறகு, அவனைப் பற்றி எந்த செய்தியும் இல்லை” என்கிற பேகம், “ஒரு நபருக்கு பதிலாக இன்னொரு நபரை எப்படி கைது செய்யலாம்? மற்ற அனைத்து இடங்களிலும் இப்படித்தான் அனைத்து கைதுகளும் நடந்தனவையா?” என கேட்கிறார்.

படிக்க:
கேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்
♦ காஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் !

ஆகஸ்டு 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, பாதுகாப்புப் படையினர் 3,500-க்கும் அதிகமானவர்களை கைது செய்துள்ளனர். சமீப ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் நடந்த ஒடுக்குமுறையாக ஆகஸ்டுக்கு பிறகான ஒடுக்குமுறை அரங்கேற்றப்பட்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர்கள், கிளர்ச்சியாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லெறிவதில் ஈடுபட்ட இளைஞர்களை மட்டும் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதாக போலீசு கூறுகிறது. இந்தச் சட்டத்தின்படி விசாரணை இல்லாமல் ஒரு நபரை ஆறுமாதங்கள் சிறையில் வைத்திருக்க முடியும்.

Mugli-Begum
சிறைச்சாலை வாயிலை இமைக்காமல் பார்த்தபடியே இருக்கிறார் முக்லி பேகம்.

அரசாங்கத்தின் கைது குறித்து சர்வதேச அளவில் விமர்சனங்கள் வந்தபோதும், அது தனது நடவடிக்கைகளை நிறுத்துவதாக இல்லை. கைதானவர்களை காஷ்மீருக்கு வெளியே ஆக்ரா, டெல்லி, உ.பி. உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சிறைக்கும் அது அனுப்பியது.

அதுபோல, தன்னுடைய மகனையும் வேறு சிறைக்கு அனுப்பியிருக்கலாம் என பயம் கொள்கிறார் பேகம்.

“என் மகனைப் போலவே தவறாக கைது செய்யப்பட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களின் மகனை சில நாட்கள் இந்த சிறையில் வைத்திருந்துவிட்டு, வேறு சிறைக்கு மாற்றிவிட்டார்கள்” என்கிறார் அவர். காஷ்மீர் ஊடகங்களும்கூட பலர் காஷ்மீருக்கு வெளியே உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தபோதும், அதுகுறித்து அதிகாரிகள் பேச மறுக்கின்றனர்.

“என்னுடைய சகோதரன் உடைந்து போயிருக்கிறான்”

ஆகஸ்டு 5-ம் தேதிக்குப் பிறகு கைதான தங்களுடைய உறவினரைப் பார்ப்பதற்காக உயர் பாதுகாப்பில் இருக்கும் சிறைச்சாலை முன் பெற்றோரும் உறவினர்களும் வரிசையில் நிற்கிறார்கள். காலை 10 மணிக்கு தொடங்கும் சந்திப்பு நேரம் 2 மணியளவில் முடிந்துவிடுகிறது.

சிறைக் கைதிகளைப் பார்க்க தொடர்புடையவர்களின் உறவினர்கள் ஆதார் அட்டையை கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 17-ம் தேதி கைதான தனது சகோதரர் சாகித் மன்சூரைக் காண தனது தங்கையுடன் வந்திருக்கிறார் இக்ரா.

ஸ்ரீநகரின் கன்யார் பகுதியைச் சேர்ந்த 19 வயதான மன்சூர், பள்ளியிலிருந்து இடை நின்றவர். கார் சர்வீஸ் செண்டரில் பணியாற்றிக்கொண்டிருந்ததாகவும் இக்ரா கூறுகிறார். நள்ளிரவு ரோந்தின்போது கல்லெறிந்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டதாக கூறுகிறார் அவர்.

படிக்க:
பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !
♦ காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் !

மூன்றாவது முறையாக மன்சூரை சந்திப்பதாக அவர்கள் கூறினர், “கடந்த முறை அப்பாவுடன் பேசும் போது, அவன் உடைந்து போய் அழுதிருக்கிறான். தன்னை இங்கிருந்து அழைத்துச் செல்லும்படி கெஞ்சியிருக்கிறான். வழக்கறிஞர்கள் இப்போது எதுவும் தங்களால் செய்ய முடியாது என சொல்லிவிட்டார்கள். பிணைக்கு மனு செய்வதற்குக்கூட இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்” என்கிறார் தன் குழந்தையை சுமந்துகொண்டிருக்கும் இக்ரா.

“வேலைகள் பறிபோய்விட்டன”

கதிதர்வாசா பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை அருகே மூன்று கடைகள் திறந்திருக்கின்றன. தங்கள் உறவினர்களைப் பார்க்க வருபவர்கள் அங்கே உணவுகளை வாங்கிச் செல்கின்றனர். இன்னமும் காஷ்மீரின் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இக்பால் அகமது தெலியும் அவருடைய குடும்பமும் ஆனந்த்நாக்கின் தூரு சாகாபாத்திலிருந்து அதிகாலை 5 மணிக்கு கிளம்பி, சிறையில் இருக்கும் 12-ம் வகுப்பு மாணவரான முதாசிர் அகமத்-ஐ காண ஸ்ரீநகருக்கு வந்துள்ளனர்.

srinagar-jail
சிறைக்குள் அடைபட்டு கிடக்கும் உறவினரை பார்க்கச் செல்லும் குடும்பத்தினர்.

அகமதை காண இரண்டு சகோதரர்களும் அவருடை தந்தையும் சிறைக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களுக்காக சிறையின் வெளிப்பகுதியில் காத்திருந்தார் தெலி.

“என்னுடைய சகோதரன் ஆகஸ்டு 2-ம் தேதி கைது செய்யப்பட்டான். ஆகஸ்டு 14-ம் தேதிதான் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தில் அவன் கைது செய்யப்பட்டிருப்பது தெரியும்” என்கிறார் தெலி.

அரசாங்கத்துக்கு எதிராக போராட வருமாறு தனது கிராமத்தினரை திரட்டியதே அகமதுவின் கைதுக்குக் காரணமாக போலீசு கூறியுள்ளது. ஆனால், அவருடைய குடும்பம் இதை மறுத்து வருகிறது.

நள்ளிரவு ரோந்தின்போதுதான் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். “அந்த இரவில் நான்கு சிறுவர்கள் அந்தப் பகுதியிலிருந்து கைதான நிலையில், மூவர் விடுவிக்கப்பட்டனர். என்னுடைய சகோதரன் மட்டும்தான் இங்கே மாற்றப்பட்டான்”என்கிறார் தெலி.

நவம்பரில் வரவிருக்கும் 12-ம் வகுப்பு தேர்வுக்கு படிக்க முடியாத நிலையில் அகமத் இருப்பதாக அவருடைய குடும்பம் கவலை கொள்கிறது.

“அவன் பத்தாம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அவனுக்கு மருத்துவம் படிக்க விருப்பம். இந்தக் கைது அவனுடைய கனவை களைத்துவிட்டது. இப்போது இங்கிருந்து வெளிமாநில சிறைக்கு மாற்றப்படக்கூடாது என்பதற்காக வேண்டிக் கொள்கிறோம்” என்கிறது அவருடைய குடும்பம்.

கடந்த 36 நாட்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிற விவரத்தை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் சொல்ல மறுத்து வருகிறது. இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து பேசியுள்ள ஜம்மு காஷ்மீர் போலீசு கூடுதல் இயக்குனர் முனீர் கான், இளைஞர்களுக்கு போதிய ஆலோசனை அளித்த பிறகு விடுவிக்கப்படுவதாக கூறினார்.

ஆனால், கல்லெறிவதிலும் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் ஈடுபடும் இளைஞர்கள் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வெளியூர் சிறைக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காஷ்மீரை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிவிட்ட மோடி – அமித் ஷாவின் அரசாங்கம், அங்குள்ள இளைஞர்களின் கனவுகளை நசுக்கி தூக்கி எறிந்துகொண்டுள்ளது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இதைச் செய்யும் எனப் பார்க்கத் தானே போகிறோம் !


கட்டுரையாளர் : Mudasir Ahmad
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: தி வயர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க