Tuesday, October 8, 2024
முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் !

காஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் !

“சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தங்களை பாதுகாப்பு படையினர் எங்கே மோப்பம் பிடித்து விடுவார்களோ என படுகாயமடைந்த இளைஞர்கள் அஞ்சுகின்றனர்”

-

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இருந்தும் அப்பகுதிகளில் இன்றும் இயல்பு வாழ்க்கையை திரும்பவிடாமல், இந்திய இராணுவம் காஷ்மீர் மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய நாள் முதல் இன்று வரை இளைஞர்கள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பெல்லட் குண்டுகளாலும், கண்ணீர் புகைக் குண்டுகளாலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் போராடும் மக்களை கைது செய்தும் வருகிறது காஷ்மீர் போலீசு.

இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை (ஆகஸ்டு 30) அன்று நடைபெற்ற இராணுவத் தாக்குதலில் மட்டும் கொத்துக்கொத்தாக இளைஞர்கள் படுகாயமடைந்தனர் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் ஒவ்வொரு நோயாளியும் ஜம்மு-காஷ்மீர் போலீசாரால் மிகப் பெரிய வலைப்பிண்ணலின் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர். அப்படி மீறிச் சென்றால், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படுவோமோ என அஞ்சி காயமடைந்த இளைஞர்கள் யாரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர்.

pellet
உடலில் பாய்ந்த பெல்லட் குண்டுகளை அகற்றி தாங்களாகவே மருத்துவம் பார்த்துக் கொள்ளும் இளைஞர்கள். ( படம் – நன்றி : த வயர் )

மேலும், பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளைஞர்களே சிகிச்சையும் அளித்து வருகின்றனர். “பெல்லட் குண்டுகளை அகற்றுவதில் இளைஞர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்” என்கிறார் சிறுகடை வியாபாரி மும்தாஸ்.

மும்தாசின் மருமகனான பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனான அரிஃப் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) – பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டுள்ள அவர், தனது வீட்டு முற்றத்தில் அமர்ந்துக் கொண்டு குண்டுகள் துளைத்த தனது காலில் மருந்தினை தடவிக் கொண்டிருந்தார். “இந்த மருந்து காயமடைந்த எனது திசுக்களை மென்மையாக்குகின்றன. நல்லவேளையாக பெல்லட் குண்டுகள் எனது கண்களைத் துளைக்கவில்லை” என்று பெருமூச்சு விடுகிறார் அரிஃப். இவரை போல் பல இளைஞர்கள் தங்களது காயங்களை தாங்களே சரி செய்து கொள்கிறார்கள் என்கிறார் அவர்.

படிக்க:
வாயில் மண்ணை திணித்து … மின்சாரம் பாய்ச்சி … காஷ்மீர் கொடூரங்கள் !
♦ காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்

“சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் தங்களை பாதுகாப்பு படையினர் எங்கே மோப்பம் பிடித்து விடுவார்களோ என படுகாயமடைந்த இளைஞர்கள் அஞ்சுகின்றனர்” என்கின்றனர் உள்ளூர் மக்கள். மேலும், “மருத்துவமனைக்கு வருவோர் ஒவ்வொருவரையும் கண்காணிக்க அங்கு சில ஆட்களையும் நியமித்துள்ளது ஜம்மு காஷ்மீர் போலீசு”.

கூலித் தொழிலாளியும் இரு குழந்தைகளுக்கு தந்தையுமான நஷீபுக்கு வயது 32. இவர் கடந்த வெள்ளி அன்று இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்தார். அவர், “நான் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டேன். காயமடைந்த எனது உடலில் இருந்து இரத்தம் இடைவிடாமல் அதிகமாக வெளியேறியது” என்ற நஷீபுக்கு மார்பு, வயிற்றுப் பகுதி, தோள் பட்டை, நெற்றி, கை – கால்கள் மற்றும் வலது காது ஆகிய பகுதிகளில் எண்ணற்ற பெல்லட் குண்டுகள் துளைத்திருந்தன.

“எனக்கு நன்கு தெரியும், நான் வெளியில் சென்றால் நிச்சயமாக கைது செய்யப்படுவேன். இதனால், நான் மருத்துவமனைக்குச் செல்லக் கூடாது என்றே முடிவு செய்திருந்தேன்” என்றிருந்த நஷீபை, அவருடைய நண்பர்கள்தான் தங்களது உயிரை பணயம் வைத்து, துணை மருத்துவர் ஒருவரை அழைத்து வந்து அவருக்கு சிகிச்சையளித்துள்ளனர்.

“துணை மருத்துவர் எனது உடலில் இருந்து 20க்கும் மேற்பட்ட பெல்லட் குண்டுகளை அகற்றினார். மேலும் பல குண்டுகள் ஆழமாகச் சென்றுள்ளது. அதனை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம் எனத் துணை மருத்துவர் தெரிவித்தார்” என்கிறார் நஷீப்.

Kashmir Graffiti in Anchar Kashmir
காஷ்மீர் இளைஞர்களின் ஆசாதி முழக்கம் சுவரெங்கும் முழங்குகிறது.

அஞ்சார் (Anchar) என்னும் பகுதிக்கு பக்கத்து நகரம் அனைத்தும் பாதுகாப்புப் படையினரால் சூறையாடப்பட்டுள்ளன. கண்ணீர் புகைக் குண்டுகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, சிதைக்கப்பட்ட சன்னலின் மேல், அப்பகுதி மக்கள் தார்பாய், தகரம், ஓடு மற்றும் போர்வைகளைப் போர்த்தியுள்ளனர். தெருக்கள் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன செங்கற்கள். எஞ்சிய மதில் சுவற்றில் “ஆசாதி, காஷ்மீரை காப்போம்” போன்ற முழக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதிக்குள் பாதுகாப்புப் படையினர் உள்ளே நுழையவிடாமல் தடுக்கும் பொருட்டு இரும்பு கம்பிகள், தகரங்கள், மரப் பலகைகளைக் கொண்டு சாலையை மறித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

“காஷ்மீரின் நிலைமைகளையும் இங்கு நிலவும் நெருக்கடியைப் பற்றியும் நாங்கள் வெளிநாட்டு ஊடகத்திற்கு பேட்டியளித்தோம். அன்றிலிருந்து இராணுவப் படைகள் தங்களது தாக்குதலை மேலும் கொடூரமாக முடுக்கிவிட்டனர்” என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

படிக்க:
காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !
♦ காஷ்மீர் வெளிமாநில தொழிலாளர்கள் முதல் பீகார் குழந்தைத் தொழிலாளர்கள் வரை !

அப்போதிருந்து, 25,000 மக்கள் தொகையைக் கொண்ட அப்பகுதி, பெண்கள், முதியவர்களுடன் இணைந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. பொதுமக்களுக்கு உறுதுணையாக போராட்டத்தில் நிற்கும் இளைஞர்கள், “அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பது மக்களின் உரிமை” என்கின்றனர்.

“இன்று அவர்கள் (புது தில்லி) எங்கள் அடையாளத்தை பறித்திருக்கிறார்கள்நாளை அவர்கள் எங்கள் நிலத்திற்காக வரலாம்இது அமைதியாக உட்கார வேண்டிய நேரம் அல்லஎன்று முகமூடி அணிந்திருந்த ஒரு இளைஞர் தெரிவித்தார்.

Road Block by Locals in kashmir
மக்கள் ஆங்காங்கே ஏற்படுத்தியிருக்கும் தடுப்பரண்கள்.

அந்தி சாயும் நேரமானதும், இளைஞர்கள் தங்களது பகுதிக்குள் பாதுகாப்புப் படையினர் யாரும் உள்ளே நுழையவிடாமல் தடுக்க முக்கிய சாலை சந்திப்புகளில் கண்விழித்து காவல் காத்து வருகின்றனர். “கடந்த வாரத்தில் மட்டும் 4 சந்தர்ப்பங்களில் எங்கள் பகுதிகளில் நுழைய முற்பட்ட பாதுகாப்புப் படையினரை தடுத்து விரட்டிவிட்டோம். நாங்கள் அந்த இரவுகளில் ஒரு பொட்டும் உறங்கவில்லை. நிலைமை எப்படி மாறும் என யாராலும் கணிக்க முடியாது” என்கிறார் தார் மொஹல்லா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

“ஆகஸ்டு 9 அன்று நடந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மூவரை போலீசார் கைது செய்ததில் இருந்து நாங்கள் யாரும் வெளியில் செல்வதில்லை” என்கிறார் அந்த இளைஞர்.

உள்ளூர் மக்கள்மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், வீசப்பட்டு, காற்றோடு காற்றாக கலந்த கண்ணீர் புகைக்குண்டின் வீரியம் இன்னும் குறைந்தபாடில்லை. இதனால் சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் உடல்நிலை பெரிதும் பாதிப்படைந்துள்ளது என்கின்றனர்.

Teargas Shell Kashmir
குவிந்து கிடக்கும் கண்ணீர் புகை குண்டு, மிளகு குண்டுகள் மற்றும் மூச்சை அடைக்கச் செய்யும் பாவா குண்டுகளின் குப்பிகள்.

“கடந்த வெள்ளி அன்று, உள்ளூர் மக்கள் மீது வீசப்பட்ட வெடிமருந்துகளின் அளவினை நான் காட்டுகின்றேன்” என்றார் மற்றொரு இளைஞர். அவர் உள்ளூர் மசூதி ஒன்றின் அருகில் மலைபோல் குவிந்து கிடந்த கண்ணீர் குண்டுகளின் குப்பிகள் சுட்டிக்காட்டி “இதோ பாருங்கள்.. கண்ணீர் புகைக் குண்டு, மிளகு புகைக் குண்டு (Pepper spray), மிளகாய் எறிகுண்டு (Chilli grenade), பாவா (PAVA) என அழைக்கப்படும் மூச்சைத் திணறச் செய்யும் குண்டுகளின் குப்பிகள். இதுபோன்ற குவியலை பல இடங்களில் நீங்கள் பார்க்கக்கூடும்” என்றார் அந்த இளைஞர்.

மேலும் அப்பகுதி மக்கள் கூறும்போது,

“இங்கு வாழ்வதற்கே பெரிதும் சிரமமாக இருக்கிறது. நாம் வெளியில் செல்லுவது மிக ஆபத்தானது என நமக்குத் தெரியும். நாம் எடுத்து வைக்கும் ஒரு சிறிய தவறான நடவடிக்கைக்காக அவர்கள் (படைகள்) காத்திருக்கிறார்கள். இந்தப் போர் எங்கள் சகிப்புத்தன்மையின் உச்சம்” என்கின்றனர்.


நன்றி : தி வயர்
தமிழாக்கம் : ஷர்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க