டந்த வாரத்தில் உலகம் முழுமைக்கும் நடந்த தொழிலாளர் தொடர்பான விசயங்களின் தொகுப்பு இங்கே…

♠ ♠ ♠ 

ஜம்மு காஷ்மீர் : பதட்டம் தொடர்வதால் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேற்றம் !

த்திய அரசின் 370-வது பிரிவை நீக்கும் முடிவால், கடந்த 27 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறது ஜம்மு காஷ்மீர். தகவல் தொடர்புகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக காஷ்மீரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கென சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

Jammu Kashmirஅல் ஜசீரா வெளியிட்ட செய்தி அங்கிருக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிப்பதோடு, பயத்தோடு வாழ்வதாக சொல்கிறது. தினக்கூலிகளாக உள்ள தொழிலாளர்களை வெளியேற்ற எந்தவித நோட்டீசும் வழங்கப்படவில்லை. வெளிமாநிலங்களிலிருந்து வந்திருக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறைகள் எதுவும் நிகழவில்லை.

காஷ்மீரிகளிடமும் வெளிமாநிலங்களிலிருந்து வந்திருக்கும் தொழிலாளர்களிடமும் பரஸ்பர பதட்டம் நிலவுகிறது. 370 பிரிவு நீக்கப்பட்டதற்கு பின், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் இங்கே நிலம் வாங்கக்கூடும் என்பதே பதட்டத்தின் பின்னால் உள்ள காரணம்.

இந்த நிலையில் ஊர் திரும்பிக்கொண்டிருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை ஹிந்துஸ்தான் டைம்ஸ் பதிவு செய்துள்ளது. சி.என்.பி.சி டிவி18 வெளியிட்ட செய்தி காஷ்மீரில் உள்ள தொழிலாளர்களில் 80% பேர் வெளியாட்கள்தான் என்கிறது. கட்டுப்பாடுகளால் முடங்கிப் போயுள்ள வளர்ச்சிப் பணிகள், கட்டடப் பணிகள், குறைந்துள்ள வர்த்தகம் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

♠ ♠ ♠ 

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஆந்திராவில் ஆஷா பணியாளர்கள் போராட்டம் :

ந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் விஜயவாடாவில் உள்ள லெனின் மையத்தில் பெருந்திரளான போராட்டம் நடந்தினர். சிபிஐடி தொழிற்சங்கம் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தது.

Jagan-Mohan-Reddy“தேர்தலுக்கு முன்பு பாத யாத்திரையின்போது, எங்களுடைய சம்பளத்தை ரூ. 3 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தித் தருவதாக ஜெகன் வாக்குறுதி அளித்திருந்தார். முதலமைச்சராக பதவியேற்றபின், சம்பள உயர்வை அறிவித்தார். ஆனாலும் எங்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படவில்லை” என தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பி. மணி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த நான்கு மாதங்களாக மதிப்பூதியமும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் கிட்டத்தட்ட 45 ஆயிரம் ஆஷா தொழிலாளர்கள் உள்ளனர்.

முதன்மையான சுகாதார பணியாளர்களாக இந்தியாவின் கிராமங்கள் முழுமைக்கும் அரசின் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருப்பவர்கள் ஆஷா பணியாளர்கள். ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரியும் தொடர்ச்சியாக ஊதியம் வழங்கக் கோரியும் தங்களை நிரந்தர அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கக் கோரியும் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பல மாநிலங்களில் அவர்கள் ஊழியர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. குறிப்பிட்ட பணிகளைக் கொடுத்து அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படுவது நடைமுறையாக உள்ளது. அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் ‘பராமரிப்பு தொழிலாளர்கள்’ அல்லது ‘திட்ட தொழிலாளர்கள்’ என அவர்கள் தரம் குறைத்து அழைக்கப்பட்டு குறைந்த ஊதியத்துக்கு பணியாற்ற வைக்கப்படுகிறார்கள்.

படிக்க:
இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன ?
♦ காஷ்மீரியத் செய்தி இணையதள ஆசிரியர் எங்கே ?

♠ ♠ ♠ 

பிகார், ஜார்க்கண்டில் மைக்கா சுரங்கங்களில் பணியாற்ற 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியை கைவிடுகிறார்கள் !

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights – NCPCR) வெளியிட்ட புள்ளி விவரத்தில் ஆறு வயது முதல் 14 வயது வரையான 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியை கைவிட்டு பீகார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள மைக்கா சுரங்கங்களில் பணியாற்றுவதாக தெரிய வந்துள்ளது.

“மைக்கா சுரங்கப் பகுதிகளில் உள்ள சில பிரிவு குழந்தைகள் தங்களுடைய வாய்ப்புகளை நழுவவிட்டுள்ளனர். தங்களுடைய குடும்ப வருமானத்துக்கு உதவ அவர்கள் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என அறிக்கை கூறுகிறது. மேலும், இந்த குழந்தைகள் வளர்ச்சி சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் எனவும் அவற்றின் உரிமைகள் மீறப்பட வாய்ப்பிருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

Mica-miningபீகார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள மைக்கா சுரங்கங்கள் உள்ள பகுதிகளான கொடெர்மா, கிரித், ராஜாவ்லி பகுதிகளில் இந்த ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

“கொடெர்மாவில் 93 சதவீதமும் நவடாவில் 92 சதவீதமும் கிரித்தின் 86 சதவீதமும் சிறார்கள் பணி தொடர்பான முறையான பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை” என அறிக்கை சொல்கிறது. இளம் சிறார்களுக்கும் பெண்களுக்கும் பணி சார்ந்த தொழிற்கல்வி படிப்புகளை வழங்க வேண்டும் எனவும் அறிக்கை பரிந்துரைக்கிறது.

இந்தப் பகுதியில் வாழும் குடும்பங்களுக்கு மைக்கா துண்டுகளை சேகரிப்பதே முதன்மையான வாழ்வாதாரமாக உள்ளது. தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதைக் காட்டிலும் மைக்கா துண்டுகளை சேகரிப்பதும் அவற்றை விற்பதையும் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

♠ ♠ ♠ 

காஸியாபாத்தில் கழிவுநீரை சுத்திகரித்தபோது ஐந்து தொழிலாளர்கள் மரணம் !

காஸியாபாத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த துப்புரவு தொழிலாளர்கள் ஐவர் நச்சு வாயு தாக்கி இறந்துள்ளனர். தனியார் ஒப்பந்தக்காரர்கள் சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த ஐவருக்கும், போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவில்லை என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த அனைவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள்.

“ஒரு மணியளவில் முதலில் ஒருவர் சாக்கடைக்குள் இறங்கியிருக்கிறார். அவர் வெளியே வராத நிலையில் நால்வர் ஒருவர் பின் ஒருவராக உள்ளே இறங்கியிருக்கின்றனர். ஐவரும் வெளிவரவில்லை. அதன்பின் ஒருவர் உள்ள இறங்கியபோது, ஐவரும் மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது” என இந்தியா டுடே செய்தி கூறுகிறது.

இந்தச் சம்பவம் ஊடகங்களில் பெரும் செய்தியான பின், உ.பி. முதலமைச்சர் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சத்தை நிவாரணமாக அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்த விபத்துக்குக் காரணமான ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விசாரணை நடந்துவருவதாகவும் அரசு தரப்பில் கூறியுள்ளனர்.

2019-ம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் குறைந்தது 50 பேர் கழிவுநீர் சுத்திகரிப்பின் போது இறந்துள்ளதாக National Commission for Safai Karamcharis தெரிவித்துள்ளது. உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுவது 2013-ம் ஆண்டு முதலே தடை செய்யப்பட்டிருந்தாலும் 2013 முதல் 2018 வரை இந்தப் பணியில் ஈடுபடும் மரணங்கள் மூன்று மடங்காக அதிகரித்திருப்பதாக ‘தி வயர்’ இணையதளம் மேற்கொண்ட ஆர்.டி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

படிக்க:
தலித்துகளின் உயிர்ப் பலி கேட்கும் சுவச்சு பாரத் !
♦ தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !

♠ ♠ ♠ 

போர்த்தளவாட தொழிற்சாலை பணியாளர்கள் வேலை நிறுத்ததை திரும்பப் பெற்றனர்:

41 பாதுகாப்பு உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றும் 82 ஆயிரத்துக்கும் அதிகமான பொது பணியாளர்கள் ஆகஸ்டு 20-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய இருந்ததை திரும்பப் பெற்றுக் கொண்டனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு வாக்குறுதி அளித்ததை அடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு உற்பத்தி தனியார்மயமாக்கப்படும் நிலையில் தங்களுடைய உரிமைகள் பறிபோகும் என தொழிலாளர்கள் கவலையுற்றிருக்கிறார்கள்.

♠ ♠ ♠ 

விரிவுபடுத்தப்பட்ட தொழிலாளர் திட்டத்தை வெளியிட்டார் பெர்னி சாண்டர்ஸ் :

“பெர்னி சாண்டர்ஸ் அமெரிக்க தொழிலாளர் சட்டத்தை அடிப்படையில் மாற்றியமைக்க விரும்புகிறார். தொழிலாளர்களின் உரிமைகளை விரிவுபடுத்துவதற்கும் ஒழுங்குபடுத்தி, வேலைநிறுத்தம் செய்வதற்கும் துறைசார்ந்து பேரம் பேசுவதற்கும் ஒரு புதிய அமைப்பை நிறுவுவதன் மூலமும் அதை செய்ய நினைக்கிறார்” என ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

Berniesandersஊதியம், சிறப்பு பயன்கள், பணிச் சூழல் ஆகியவற்றில் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ‘பணியிடத்தில் ஜனநாயக திட்டம்’ என்ற பெயரில் தனது இணையதளத்தில் பெர்னி சாண்டர்ஸ் அந்தத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

“நாங்கள் தொழிற்சங்க இயக்கத்தை புத்துயிர் பெறச் செய்யாவிட்டால், இந்த நாட்டின் நடுத்தர வர்க்கம் வளர வாய்ப்பில்லை. மில்லியன்கணக்கான தொழிலாளர்களுக்கு விரும்பியதைச் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும், அவர்கள் தொழிற்சங்கங்களில் சேர அனுமதிக்கப்பட வேண்டும்” என பெர்னி ஒரு நேர்க்காணலில் தெரிவித்துள்ளார்.

– அனிதா

தொழிலாளர் தொடர்பான மேலதிக செய்திகளை வாசிக்க :
♦ The Life of Labour: Migrant Workers in Kashmir Leave, 5 Die in Ghaziabad Sewer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க