நாடு முழுவதுமுள்ள தொழிலாளர் நிலைமை, அவர்களது வாழ்க்கை மற்றும் போராட்டங்களைக் குறித்து ஒரு பருந்துப் பார்வையில் தொகுத்துள்ளது தி வயர் இணையதளம். அக்கட்டுரையில் இருந்து சில துளிகள் :

கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள தமிழ்நாடு.

குறைந்துபோன மழைப்பொழிவும் வறண்டு வரும் நீராதாரங்களும் மற்றுமொரு கடினமான ஆண்டை தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளவிருப்பதற்கு கட்டியம் கூறுகின்றன. பெரும் அணைக்கட்டுகளில் நீரின் அளவு குறைந்திருப்பதாலும், மற்ற நீராதாரங்களான குளங்கள் ஏரிகள் உள்ளிட்டவை வறண்டு போயிருப்பதாலும் குறுவை சாகுபடியைக் கைவிட விவசாயிகளை நிர்பந்தித்துள்ளது.

பருவ மழை பொய்த்துப் போனதைக் காரணம் காட்டி மாநில அரசு கை கழுவ முயல்கிறது; ஆனால், விவசாயிகளும் செயல்பாட்டாளர்களும் மாநில அரசின் கொள்கைகளும் நீர் மேலாண்மையைக் கைவிட்டதும், ஆறுகளையும் குளங்களையும் காக்கத் தவறியதும்தான் இப்பிரச்சினைக்குக் காரணம் என்கின்றனர்.

தில்லி அரசாங்கம் பெண்களுக்கு இலவச போக்குவரத்தையும் தலைமைச் செயலகத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

தனது லிபரல் கொள்கைகளின் வரிசையில் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, தலைமைச் செயலகத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய குழந்தைகள் நலன் மற்றும் பெண்களுக்கான அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் தில்லியின் துணை முதல்வர்.

தனது கடிதத்தில் பணியாளர்களின் வேலை மற்றும் சொந்த வாழ்க்கைக்கு இடையிலான சமன்பாட்டை உறுதி செய்வது குறிப்பிட்ட நிறுவனத்தின் கடமை என்பதை குறிப்பிட்டுள்ளார். தில்லி தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் குழந்தைகள் காப்பகம் அவர்களுக்குப் பெரிதும் பயன்தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொதுப் போக்குவரத்தில் பெண்கள் இலவசமாக பயணிக்க வகை செய்யும் விதமாகத் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. பெண்கள் எந்த நேரமும் எங்கும் பாதுகாப்பாக பயணிப்பதை இத்திட்டம் உறுதி செய்யும் என அக்கட்சி கூறுகின்றது. இத்திட்டத்தின்படி தில்லி மெட்ரோ இரயில் மற்றும் தில்லி அரசுக்குச் சொந்தமான பேருந்துக் கழகம் ஆகிவற்றில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பதால் இது தொடர்பாக பெரும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இன்னொருபுறம், தில்லியின் பொதுப் பேருந்துகள் அனைத்தும் சி.என்.ஜி எரிவாயுவில் செயல்படுபவை என்பதும், அவை பெருமளவு விரிவாக்கம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேறுகாலச் சலுகைகளை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விரிவுபடுத்துகின்றது அருணாச்சலப் பிரதேச அரசாங்கம்.

இரண்டாவது முறையாக முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள பெமா கந்து அரசாங்கம், பேறுகால சலுகைகளை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதுவரை நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்பட்டு வந்தது.

பேறுகாலச் சலுகைகளின்படி, ஒப்பந்தத் தொழிலாளர்கள் 180 நாட்கள் ஊதியமில்லா விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும். மேலும் 60 நாட்கள் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக விடுப்பெடுத்துக் கொள்ளவும் முடியும். இந்த நடவடிக்கையின் விளைவாக 20 ஆயிரம் பணியாளர்கள் பயன்பெறுவர் என அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

படிக்க:
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் புகார் !
♦ மனைவியின் பிரிவிலும் மக்களுக்காக நின்ற மருத்துவர் ரமேஷ் !

ஆந்திராவின் ஆஷா ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

இந்தியா முழுவதுமுள்ள ஆஷா (சுகாதாரப் பணியாளர்கள்) ஊழியர்கள் சம்பள உயர்வுக்காகப் போராடி வருகின்றனர். மிகக் கடுமையான வேலையாக இருந்தாலும், அவர்களது சம்பளம் குறைவு என்பதோடு அவர்கள் முழுநேர ஊழியர்களாகவும் கருதப்படுவதில்லை. எனினும், புதிதாக ஆந்திராவில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு ஆஷா ஊழியர்களின் சம்பளத்தை மூவாயிரத்தில் இருந்து பத்தாயிரமாக உயர்த்தியுள்ளது.

தேசிய ஊரக சுகாதார திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆஷா ஊழியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். நாடெங்கும் உள்ள ஆஷா ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி போராடியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அவர்களது மதிப்பூதியத்தை சொற்ப அளவில் அதிகரித்திருந்தது மத்திய அரசு. தற்போது ஆந்திர அரசு எடுத்திருக்கும் முடிவு பிற மாநிலங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

ஆலையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்; இரண்டு தொழிலாளிகள் படுகாயமுற்றனர்.

தெலுங்கானாவில் உள்ள ரெஜினிஸ் வெடி மருந்துக் கம்பெனியில் நடந்து விபத்தில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். டெட்டனேட்டர் ஒன்று தவறுதலாக தூண்டப்பட்டதால் நடந்த இவ்விபத்தில் மேலும் இரண்டு தொழிலாளிகள் படுகாயமுற்றனர். இறந்த தொழிலாளி சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் தலைவிரித்து ஆடுவதாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களே அறிவிக்கின்றன.

மிகக் கடுமையாக விவாதிக்கப்பட்ட தேசிய மாதிரி சர்வே அமைப்பு நடத்திய தொழிலாளர்கள் குறித்த ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் வேலைவாய்ப்பின்மையை கணக்கிட புதிய முறைமையை மத்திய அரசு புகுத்தியுள்ளது. இப்புதிய முறையின்படி பார்த்தாலும் தேசிய அளவில் 6.1 சதவீத அளவு வேலைவாய்ப்பின்மை நிலவுவதாக தெரிய வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவுகள் புதிய முறையின்படி அளவிடப்பட்டது என்பதால் முந்தைய ஆண்டுகளின் தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 -ம் ஆண்டு அக்டோபர் மாதமே தயாராகிவிட்ட ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளிடாமல் வைத்திருந்தது. இதன் காரணமாகவே அரசு உயரதிகாரிகளுக்கும் புள்ளியியல் நிபுணர்களுக்கும் இடையே ஒரு முறுகல் நிலை தோன்றியிருந்தது. அந்த அறிக்கையின் முக்கியமான பகுதிகள் அப்போதே ஊடகங்களில் கசிந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களில் வெளியான அறிக்கையின் விவரங்கள் சரிபார்க்கப்படாதவை என அப்போது மத்திய அரசு சொன்னது. எனினும், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஊடகங்களில் வெளியான அதே அறிக்கை அதிகாரப்பூர்வமானதாக வெளியிடப்பட்டுள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ளதா இல்லையா என்பதைக் கடந்து நமது பொருளாதாரம் ஒரு பெரும் நெருக்கடியில் உள்ளது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் அருகி வரும் வேலையிடங்களே இதை உணர்த்துகின்றன.

பி.எம்.ஜே ஆய்வின்படி இந்தியாவில் நபர்வாரியான மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் 10,000 பேருக்கு 22.8 பேர் அளவில் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால் நாம் இலங்கை தாய்லாந்து உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளை விட பட்டியலில் பின் தங்கியுள்ளோம். உலக சுகாதார நிறுவனம் தற்போது அபாயகரமான அளவில் மருத்துவர்கள் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியாவை வைத்துள்ளது.

விலைக் குறைப்பிற்குப் பின் 5000 ஊழியர்களின் வேலையைப் பறித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுமார் 5,000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களே பணி நீக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். இதில் சுமார் 500 – 600 பேர் நிரந்தரத் தொழிலாளர்கள். ரிலையன்ஸ் ஜியோ பணி நீக்கம் குறித்த செய்தியை மறுத்துள்ளதோடு தாங்களே மிக அதிக பணி நியமனங்களைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனினும், குறைந்த லாபத்தில் இயங்கி வருவதால் பணி நீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் கட்டுரை தெரிவிக்கின்றது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டது மற்றும் அதிரடி விலைக்குறைப்பின் காரணமாக செல்பேசி சந்தையின் பெரும் பகுதியை அந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எனினும், அதன் நிர்வாகச் செலவுகளை உடனடியாக கட்டுப்படுத்தியாக வேண்டும் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். நிர்வாகச் செலவுகளை குறைப்பதற்கு தனது பணியாளர்களின் வேலைகளைப் பறித்துள்ளது அந்நிறுவனம். இத்தனைக்கும் அதன் நிர்வாகச் செலவுகளில் தொழிலாளர்களின் ஊதியத்தின் அளவு வெறும் 5 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியாரமயமாக்கலும் தொழிலாளர் சட்டங்களைச் சீர்திருத்துவதும்தான் மோடி 2.0 அரசின் முக்கிய திட்டம்

மத்திய அரசின் சிந்தனைக் குழாமாகச் செயல்படும் நிதி ஆயோக்கின் துணை சேர்மன் இந்த அரசின் முதல் 100 நாட்களில் ஏராளமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்ற முடியாத தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களை இம்முறை நிறைவேற்ற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதே போல் தனியார்மயமாக்களைத் துரிதப்படுத்தவும், 46 பொதுத்துறை நிறுவனங்களை மூடவும் அரசு முன்னுரிமை வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்விரு நடவடிக்கைகளுமே பாரதிய ஜனதாவுக்கு ஓட்டளித்து வெற்றிபெறச் செய்த தொழிலாளர்களுக்கே உவப்பானதாக இருக்கப்போவதில்லை. மேலும் பரவலான வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடி நாட்டைக் கவ்விப் பிடித்திருக்கும் இந்நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கி விடும்.

படிக்க:
100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !
♦ “ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !

முன்னறிவிப்பின்றி ஊதியத்தை மாற்றம் செய்வதை எதிர்த்து ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள் ஊதியப் பிரச்சினைக்காக போராடி வருகின்றனர். கொச்சின், முஷீராபாத் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஊழியர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஸ்விக்கி நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்குகள் கடந்த காலங்களில் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வந்துள்ளன. திடீரென்று ஊதியம் குறைக்கப்பட்டதை அடுத்து கொச்சினைச் சேர்ந்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை கடந்த மே மாதம் 28 தேதி துவங்கி நடத்தி வந்தனர்.

நிர்வாகத்தின் தரப்பிலிருந்து இறங்கி வந்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், நிர்வாகத்தினர் ஒரு வாரத்திற்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை துவங்கவிருப்பதாக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

முதலில் 4 கிலோ மீட்டர்களுக்குள் உணவு சப்ளை செய்ய 25 ரூபாயும் கூடுதல் கிலோ மீட்டர் ஒவ்வொன்றுக்கும் 5 ரூபாயுமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதை எந்த அறிவிப்பும் இன்றி 5 கிலோ மீட்டர்களுக்கு 25 ரூபாய் என மாற்றியது ஸ்விக்கி. அதே போல் காத்திருப்புக்கான கட்டணத்தையும் நீக்கியது ஸ்விக்கி நிறுவனம். இப்புதிய ஊதியம் கடந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து எந்த அறிவிப்புமின்றி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர்களும் கடந்த சில மாதங்களுக்கு முன் இதே போன்ற ஊதிய பிரச்சினைகளை ஒட்டி திடீர் வேலை நிறுத்தம் ஒன்றிற்கு திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்கியன்

மேலும் வாசிக்க :

♦ The Life of Labour: Job Cut at Reliance Jio, Bonanza for ASHA Workers in Andhra

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க