கோவை, கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், எளிய மக்களுக்குச் சேவை புரியவும் பல்வேறு தளங்களில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் ஆனைகட்டியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 24.06.2019 அன்று மாலை பள்ளியிலிருந்து தமது மகளை அழைத்து வருவதற்காக ரமேஷின் மனைவி ஷோபனா இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

மகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது, ஆனைகட்டி மலைப்பகுதியில் நீண்ட நாட்களாக மக்கள் எதிர்ப்புக்கும் இடையே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையின் அருகில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஒருவன் மோதியதில், தூக்கியெறியப்பட்டு சம்பவ இடத்திலேயே ஷோபனா மரணமடைந்தார்.

மனைவியின் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் ரமேஷ்.

அவரது மகள் கை, கால், முகம் என கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் கிடந்தார். தகவல் கேட்டு அங்கு விரைந்த மருத்துவர் ரமேஷ், தனது அன்பு மகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அங்கு கூடியிருந்த மக்களின் துணையோடி அனுப்பினார்.

அதன் பின்னர், தனது மனைவியின் உடலோடு சாலையில் அமர்ந்து அப்பகுதி மக்களுடன் இணைந்து டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி இரவு வரை போராட்டம் நடத்தினார். தனது மகளை சமூகம் பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டு வீதீயில் அமர்ந்து சமூகத்திற்கான போராட்டத்தைத் தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசு அதிகாரிகளும், அரசு அலுவலர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அச்சாலையில் உள்ள  டாஸ்மாக் கடை விரைவில் நிரந்தரமாக மூடப்படும் என்று உறுதியளித்த பின்னரே மனைவியின் உடலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல அனுமதித்தார். மறுநாள் விடிகாலை 3:30 மணிக்கு தனது மகள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் அவரைக் காணச் சென்றார்.

மருத்துவர் ரமேஷ் இயற்கை ஆர்வலர்களிடையே பிரபலமானவர். இயற்கை சார்ந்த பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பவர். அவரது போராட்டங்களில் உறுதுணையாக இருந்தவர் அவரது மனைவி. எந்த ஒரு போராட்டமென்றாலும் தன்னோடு கை கோர்த்து நின்ற தனது மனைவியின் உடலையே இன்று சமூகப் போராட்டத்திற்கான ஆயுதமாக மாற்றியுள்ளார். அதன் மூலம் தனது மனைவி மீதும் இச்சமூகத்தின் மீதும் தாம் கொண்ட காதலுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

படிக்க:
மூடு டாஸ்மாக்கை : கொட்டும் மழையில் குமரி காட்டுவிளை மக்கள் போராட்டம்
♦ மதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு !

தமிழகத்தில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் குடிபோதையில்தான் ஏற்படுகின்றன. ஆனால் நீதிமன்றங்களோ தலைகவசம் அணியாததால் விபத்துகள் ஏறபடுவதாகவும், அதனால் தலைகவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சட்டத்தைக் கடுமையாக்கி உத்தரவிடுகின்றன. இதனை வைத்துக் கொண்டு போலீசும் வாகன சோதனையின் பெயரால் கொலை, கொள்ளை என கல்லா கட்டுகிறது.

அன்பு மனைவியின் மரணத்திலும் பிரச்சினையின் ஊற்றுக் கண்ணுக்கு எதிராகப் போராடியிருக்கிறார் மருத்துவர் ரமேஷ். ஆளும்வர்க்கங்கள் மற்றும் அதிகாரவர்க்கங்களின் தடித்தோலுக்கு இது உரைக்கப் போவதில்லை. ஆனால் மருத்துவர் ரமேஷின் போராட்ட உணர்வை நாம் வரித்துக் கொள்ள வேண்டாமா ?

சூர்யா , உடுமலை

3 மறுமொழிகள்

    • நந்தினியின் கைது குறித்து வினவும் பேசியிருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தும்…!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க