போக்குவரத்தை அதிகரிக்க விட்டுவிட்டு ஹெல்மெட் போடுவதால் மட்டும் சாலை விபத்துகள் குறையுமா ?

அருண் கார்த்திக்
அருண் கார்த்திக்
மது கருத்தியல் (ideology) என்ன என்பதே நமது சிந்தனையை முடிவு செய்கிறது. நாம் எந்த பிரச்சினையைப் பற்றி யோசித்தாலும், நமது யோசனையை நமது கருத்தியல் மட்டுமே வழி நடத்துகிறது. அதில் இருந்து தப்பிக்கவே முடியாது!

எடுத்துக்காட்டாக, சமீபத்தில் சாலை விபத்துகளை குறைப்பது சம்பந்தமாக நீதி மன்றங்களும் அரசாங்கமும் நிறைய விசயங்களை சொல்லி வருகிறார்கள்; நிறைய புதிய விதிமுறைகளை கொண்டுவருகிறார்கள். இவர்கள் சொல்லும் அனைத்து விதிமுறைகளின் பின்னும் விபத்துகள் நடப்பதற்கு ஒரே காரணம் வாகன ஓட்டிகள் மட்டும்தான் என்பது போன்ற ஒரு தோற்றம் உண்டுபண்ணப்படுகிறது. மறந்தும் கூட விபத்து நடப்பதில் அரசின் பங்கும் உள்ளது என்பதை சொல்லிவிட மாட்டார்கள்.

ஒழுங்கான சாலைகளும் போதுமான பேருந்துகளும், போக்குவரத்தில் பேருந்துகளுக்கு முதலிடமும் – இவை போன்ற சில விஷயங்களைச் செய்தாலே தனியார் போக்குவரத்தை மிகவும் குறைத்துவிட முடியும், விபத்துகளும் தானாகக் குறையும். ஆனால், ஆளும் வர்க்கம் இதை பற்றி எல்லாம் பேசாது, அதிகரிக்கும் வாகனங்களை கட்டுப்படுத்தாமல் ஹெல்மெட் அணிந்தால் மட்டும் விபத்துகள் குறைந்துவிடும் என்று நம்மை நம்பச்சொல்கிறது! நாமும் நம்புகிறோம்!

HELMETSஇது இவ்வாறு என்றால், நமது அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் இருக்கும் பிரச்சினைகளை அதிகப்படுத்துவதற்காகவே எடுப்பது போல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அதிகம் வருமான வரி கட்டுபவர்களுக்கு டோல் கேட்களில் முன்னுரிமை என்ற செய்தியை நாம் பார்த்திருப்போம். சக மனிதர்களை அடிப்படையில் சமமாக பார்க்க முடியாத ஒருவரால் மட்டுமே இது போல் ஒரு திட்டத்தை யோசிக்க முடியும்.

நியாயமாக என்ன விதி இருக்க வேண்டும்? டோல் கேட்களில் பேருந்துகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்றுதான் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 4 பேர் செல்லும் காருக்கு முன்னுரிமை, ஆனால் எப்படியும் 50 பேருக்கு மேல் ஏற்றி செல்லும் பேருந்துக்கு முன் உரிமை இல்லை! இது என்ன லாஜிக்? அதிகம் வரி கட்டுபவர் காரில் பொதுவாக 4 பேர் செல்ல மாட்டார்கள் என்பது வேறு விஷயம்.

நமது சமுதாயத்தில் ஒரு சில விஷயங்களை நாம் மாற்றவே முடியாது என்று ஏற்றுக்கொண்டு விட்டோம். மாற்ற முடியாதது என்பது கூட இல்லை, இவை மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணமே பல விஷயங்களை பற்றி நமக்கு வருவது இல்லை. எடுத்துக்காட்டாக கல்வி. உயர்நிலையை விட்டுவிடுவோம், மழலையர் கல்விக்கு ஏன் குழந்தைகள் வெகு தொலைவுக்கு செல்ல வேண்டும்? அனைத்து குழந்தைகளும் அவரவர் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் மட்டுமே படிக்க வேண்டும் என்று மாற்ற முடியாதா? இந்த ஒரு மாற்றம் எத்தனை சமூகப் பிரச்சினைகளை சரி செய்யும்.

படிக்க :
ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !
♦ முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை

அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தரமான கல்வி என்பது மட்டுமல்ல, அனைத்து ஜாதி குழந்தைகளுக்கும் ஒரே கல்வி என்பது மட்டும் கூட இல்லை, இந்த நடவடிக்கை போக்குவரத்து பிரச்சினையையும் சரி செய்யும். போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்கள் எது என்று பார்த்தால், பள்ளி கல்லூரிகள் துவக்கம், முடியும் நேரங்களாகவே இருக்கும். ஏனென்றால், நமது குழந்தைகள் நிறைய பயணம் செய்து கல்வி கற்கிறார்கள். வீட்டருகில் உள்ள பள்ளி என்ற விதிமுறை வந்து விட்டால், நமது குழந்தைகள் பயணம் செய்யும் தூரம் குறையும், போக்குவரத்து குறையும், பள்ளி மாணவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் உள்ளே விட மாட்டோம் என்று சொல்ல தேவையும் இருக்காது, ஏனென்றால் மாணவர்களுக்கு வாகனங்களில் பயணம் செய்யும் தேவையே இருக்காது.

இதே போல்தான் மருத்துவமும். அனைவருக்கும் வீட்டுக்கு அருகிலேயே சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்றும், ஆரம்ப சிகிச்சைக்கு வீட்டருகில் உள்ள சுகாதார மையத்தைதான் நாட வேண்டும் என்று விதிமுறையும் வந்துவிட்டால், அனைவருக்கும் ஒரு தரத்தில், நல்ல தரத்தில் மருத்துவம் என்பது மட்டுமல்லாமல், நோயாளிகள் தேவையில்லாமல் பயணம் செய்வதும், பணம் செலவு செய்வதும் குறையும். போக்குவரத்து என்பது மட்டும் அல்ல, இதன் விளைவுகள் இன்னும் அதிகம்.

Schools

வீட்டருகில் உள்ள பள்ளி மட்டுமே, வீட்டருகில் உள்ள சுகாதார மையம் மட்டுமே என்று ஆகிவிட்டால், உள்ளூர் மக்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களும் தேவை இல்லாமல் பயணம் செய்து நேரத்தை வீணடித்து, போக்குவரத்தை அதிகரித்து, சுற்றுசூழலை மாசுபடுத்த மாட்டார்கள்.
ஆக, இது போன்ற சாதாரண நடவடிக்கைகளே நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பிரச்சினைகளை தீர்க்கும். சாதாரண நடவடிக்கை என்று சொல்லக் காரணம், இது ஒன்றும் நியூட்டன் சூத்திரம் இல்லை, அனைவருக்கும் புரியக்கூடிய விஷயம் தான்.

இவை இவ்வாறு இருக்க, நமது ஆளும் வர்க்கம் என்ன செய்கிறது, நேர் எதிர் திசையில் நம்மை நடத்தி செல்கிறது. ஊரக பள்ளிகளை மூடுகிறது, ஆயிரக்கணக்கானோர் பயிலக்கூடிய கல்வி நிறுவனங்களை அமைப்பதாக சொல்கிறது, அந்த நிறுவனங்களுக்கு நெடுந்தூரம் பயணம் செய்து வருபவர்களிடம் ஹெல்மெட் அணிய சொல்லி பின்பு சொல்லும், ஆரம்ப சுகாதார நிலையங்களை திட்டமிட்டு வலுவிழக்க செய்கிறது, பல்லாயிரம் பேர் சிகிச்சை பெறக்கூடிய எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளை கட்டப்போவதாக சொல்கிறது, அந்த மருத்துவமனைகளுக்கும் மக்கள் நெடுந்தூரம் பயணம் செய்துதான் செல்ல வேண்டும்.

அத்தனையும் செய்து போக்குவரத்தை அதிகப்படுத்திவிட்டு சுற்றுசூழல் மாசுபடுவதை குறைக்க எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி உபயோகப்படுத்துமாறு நம்மிடம் சொல்கிறது. ஒரு வேற்றுகிரகவாசி வந்து பார்த்தால் நம்மை கடைந்தெடுத்த முட்டாள்கள் என்று நினைப்பான்! ஆனால் நாம் அவ்வாறு நினைக்க மாட்டோம்!
காரணம், வேறு என்ன, கருத்தியல், ideology தான்!

படிக்க :
சாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா ?
♦ குடி கெடுக்கும் எடப்பாடி ! பெருகும் டாஸ்மாக் !

நீங்கள் பொதுவான ஒருவரிடம் வீட்டருகில் பள்ளி அல்லது வீட்டருகில் மருத்துவம் என்பதை சொல்லிப்பாருங்கள், நீங்கள் எதோ ஆடை இல்லாமல் அம்மணமாக ரோட்டில் நடக்கச் சொல்வதை போல உங்களை பார்ப்பார்கள். இந்த தீர்வுகள் அவர்களுக்கு கற்பனை (fantasy) போலத் தெரியும். அதுதான் கருத்தியல் நமது சிந்தனை மீது வைத்திருக்கும் பிடி!

இந்த கட்டமைப்பில் இருக்கும் தர்க்கங்களை வைத்து யோசித்தால் நம்மால் இந்த பிரச்சினைகளில் இருந்து விலகிச் செல்ல முடியாது!

விபத்துகளுக்கு தீர்வு ஹெல்மெட் மட்டுமே என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருப்போம்!

நாம் நம்பும்வரை நீதிமன்றங்களும் அரசுகளும் இந்த கட்டமைப்புக்குள்ளேயே தீர்வுகளைத் தேடும், அல்லது பிரச்சனைகளின் வீரியத்தை அதிகரிக்கும், பள்ளிகளை மூடி அதிகரிப்பதை போல. ஒரு விதத்தில் கட்டமைப்புக்குள் தீர்வு தேடுவதுதான் ஆளும்வர்க்கத்திற்கு பயனுள்ளதும் கூட. மக்கள் அதிகம் பயணம் செய்தால்தான் அதிக ரோடுகள் தேவைப்படும், அதிக வாகனங்கள் தேவைப்படும், இவை சம்மந்தமான தொழில்களும் அதிகரிக்கும், கூடவே அவர்கள் லாபமும் அதிகரிக்கும். வீட்டருகில் பள்ளி என்பன போன்ற திட்டங்கள் ஒரு விதத்தில் ஆளும் வர்கத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குவது ஆகும்!

நமக்கு சொல்லப்படும் தீர்வு உண்மையிலேயே தீர்வுதானா என்பதை எல்லாம் புரிந்துகொள்ள இந்த கட்டமைப்பு பற்றிய புரிதல் அவசியம்! அப்பொழுதுதான் சாலை விபத்துகளுக்கு ஹெல்மெட் தீர்வு அல்ல, சமூக மாற்றம்தான் தீர்வு என்று புரிந்துகொள்ள முடியும்!

ஹெல்மெட் கி ஜெய்!

அருண் கார்த்திக்

1 மறுமொழி

  1. வீட்டு அருகில் பள்ளிக்கூடங்கள் திறந்து தனியார் பள்ளி கூடங்களை அகற்றினால் போதும் அதுமட்டும் அல்ல டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் மது அருந்தி விட்டு எத்தனையோ வாகன விபத்து வருது அப்படி என்றால் டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் இது அரசுக்கு தெரியாது அவர்களுக்கு தேவை பணம் எந்த வழியில் வந்தாலும் பராவாயில்லை அரசை தான் கண்டிக்கனும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க