சாலைகளில் விபத்துகள் நடக்க பேனர்களோ குண்டு குழிகளோ காரணம் அல்ல, நமது சக வாகன ஓட்டிகள் தான் காரணம்! சொல்வது ‘உயிர்’ அமைப்பு!

கோவையில் ஏதோ ஆளும் கட்சி விழா அல்லது அரசு விழா நடக்கும் போல் தெரிகிறது. கோவையின் ஒரு பிரதான சாலையான அவிநாசி சாலையில் கிட்ட தட்ட 2 கிமீ தூரத்துக்கு சாலையின் கால்வாசி இடத்தை மறைத்து ஆளும் கட்சி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு இதே கோவையில் இதே அ.தி.மு.க.வின் பேனர் இருந்ததால் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு இளைஞர் விபத்தில் சிக்கி கொல்லப்பட்டார். அந்த விபத்து நடந்ததும் இதே அவிநாசி ரோட்டில் தான், இப்போது பேனர்கள் வைக்கப்பட்டிருக்கும் அதே இடத்தில் தான்.

அந்த விபத்துக்கு பிறகு கட் அவுட் மற்றும் பேனர் வைப்பது கடும் விவாதத்துக்கு உள்ளானது. அப்போது தான் சென்னை உயர் நீதி மன்றம் போக்குவரத்தை பாதிக்கும் வண்ணம் சாலைகளில் பேனர்கள் வைக்க கூடாது என்று தடை போட்டது. ஒரு வருடத்துக்குள் அரசே அந்த உத்தரவை காற்றில் பறக்க விடுகிறது.

இரு சக்கர வாகனங்களில் செல்கிற கை குழந்தை கூட ஹெல்மெட் போட வேண்டும் என்று திரும்ப திரும்ப உத்தரவு போடும் நீதி மன்றம் இந்த மாதிரி அரசு தெரிந்தே செய்யும் தவறுகளை கண்டுகொள்வது போல் தெரியவில்லை. எவ்வித அவமதிப்பும் இல்லை!

கோவை நகரத்துக்குள் இருக்கும் சாலைகளில் எந்த வித பராமரிப்பும் நடப்பது போல் தெரியவில்லை. ஒரு கிமீ தொலைவுக்கு சாலையின் பரப்பளவு எவ்வளவு, அதில் தார் இருக்கும் பரப்பளவு எவ்வளவு என்று அளவிட்டு கணக்கிட்டால் சாலையில் எத்தனை சதவீதம் தார் உள்ளது என்று தெரிந்துவிடும். என் கணிப்புப்படி ஒரு சில சாலைகளில் 60 சதவீதம் தான் தார் இருக்கும்.

பேனர் வைப்பதையோ சாலைகள் பராமரிப்பு இல்லாமல் குண்டு குழிகளில் இறங்கி இரு சக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி மக்கள் கொல்லப்படுவதையோ எல்லாம் நீதி மன்றங்கள் கேட்பது இல்லை. இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லக் கூடாது! ஹெல்மெட் அணியாமல் செல்லலாம் என்று நான் கூறுவதாக எண்ண வேண்டாம்! நீதிமன்றங்கள் யாரிடம் கடுமையாகவும் யாரிடம் நீக்கு போக்காகவும் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்!

கோர்டாவது beepஆவது என்று எச்சை ராஜா சொல்வதில் தவறு இருக்கிறதா என்று எண்ண தோன்றுகிறது!.

இந்த பேனரை ஒட்டி இன்னொரு முக்கியமான செய்தியும் உள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி பார்த்தேன். கோவையில் உள்ள பெரு முதலாளிகள் சிலர் இணைந்து ‘உயிர்’ என்ற அமைப்பை துவங்கி உள்ளனர். இந்த அமைப்பின் நோக்கம் கோவையில் வாகன விபத்துகள் நடப்பதை தடுப்பது.

நல்ல எண்ணம் தான்! சரி, எப்படி தடுப்பார்கள்? போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பிடித்து தண்டிப்பதன் மூலம் விபத்துகள் குறையுமாம்!

இந்த ‘உயிர்’ அமைப்பு இரு வேலைகளை செய்ய உள்ளது. முதலில் கோவையின் முக்கிய சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளனர். அதற்க்கு ‘உயிர்’ அமைப்பு சில லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இந்த கேமராக்கள் மூலம் கண்காணித்து போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை காவல் துறை தண்டிக்கப் போகிறது. இரண்டாவது, ‘உயிர்’ அமைப்பு ஒரு செயலியையும் (app) வெளியிட உள்ளது. அந்த செயலியை உபயோகப்படுத்தி போக்குவரத்து விதி மீறல்களை பொதுமக்கள் காவல்துறைக்கு தெரிவிக்கலாம். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்குமாம்!

ஆளும் கட்சி ரோடுகளை மறைத்து பேனர்கள் வைப்பதையோ அல்லது ரோடுகள் குண்டு குழிகளுக்கு நடுவில் இருப்பதையோ இந்த செயலியை வைத்து புகார் தெரிவிக்க முடியுமா என்று தெரியவில்லை. நம்மை போன்ற சக மனிதர்களை, சக குடிமக்களை, நம்மை போன்று குண்டு குழிகளில் விழுந்துவிடுவோமோ என்று மரண பயத்தில் வேறு வழியின்றி வண்டி ஓட்டுபவர்களை தான் இந்த செயலி மூலம் காவல்துறையிடம் பிடித்து தர முடியும்.

நமது மக்கள் சாலைவிதிகளை முழுமையாக மதிக்கிறார்களா என்று கேட்டால், இல்லை என்று தான் நானும் கூறுவேன். அதற்காக, ‘மேலை நாடுகளில் எல்லாம் இப்படி இல்லை, நம்ம இந்தியர்கள் தான் ரூல்ஸை மதிக்கறதே இல்லை’ என்ற காரணத்தை நான் சுத்தமாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். மனிதர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்வதற்கு காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணிகளை மாற்றினால் தான் மனிதர்கள் நடந்துகொள்வதை மாற்ற முடியும். இல்லையென்றால் நாம் நோயை குணப்படுத்தாமல் நோய்க்கான அறிகுறிகளையே குணப்படுத்த முயற்சி செத்துக்கொண்டிருப்போம்!

ரோடுகள் சரிவர பராமரிக்கப் படாததாலும், அரசே தெரிந்தே விதிகளை மீறுவதாலும் சாலைகளில் போக்குவரத்து ஒழுங்காக இருப்பது இல்லை, போக்குவரத்து நெரிசல்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன. வாழ்க்கையில் வேலை மற்றும் தொழிலில் இருக்கும் நேர நெருக்கடி காரணமாக நமது மக்களும் இந்த ஒழுங்கு படுத்தப்படாத போக்குவரத்தை சமாளிக்க விதிகளை மீறுகின்றனர்.

எனவே, விபத்துகளை தடுக்க முதலில் போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட வேண்டும். தனி மனித விதி மீறல்களும் தண்டிக்கப்பட வேண்டும்தான் ஆனால், முதலில் செய்ய வேண்டியது ரோடுகளின் பராமரிப்பு.

இந்த செயலி பற்றி கேள்விபட்ட பொழுது நல்ல முயற்சி என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் இதில் ஒரு நுட்பமான அரசியல் உள்ளது என்று பின்பு தான் புரிந்தது. போக்குவரத்து நெரிசல் குறித்தும் விபத்துகள் குறித்தும் நாம் அனைவருக்கும் கோபம் உள்ளது. சில சமயங்களில் அது வெளிப்படவும் செயகிறது. இந்த கோபத்தை நாம் எங்கு செலுத்துகிறோம் என்பது முக்கியம். அதைப் பொறுத்து தான் விளைவுகளும் அமையும். இந்த ‘உயிர்’ அமைப்பின் செயலி நமக்கு ஒரு செய்தியை சொல்லாமல் சொல்கிறது. ‘போக்குவரத்து நெரிசலுக்கும் விபத்துகளுக்கும் காரணம் நமது சக வாகன ஓட்டிகள் தான்’ என்கிற செய்தி தான் சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. அதனால் தான் அந்த செயலி நமது சக பயணிகளின் விதி மீறல்களை காவல்துறையிடம் போட்டுக் கொடுக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

இந்த ‘உயிர்’ அமைப்பு அரசின் விதி மீறல்கள் பற்றியோ, சாலைகள் பராமரிக்கப்படாதது பற்றியோ, பேருந்துகளில் பயணிகள் படியில் தொங்கி செல்வது பற்றியோ ஒரு நாளும் மூச்சு கூட விடாது. வேலை அவசரத்தில் ஓடும் இரு சக்கர வாகன ஓட்டி தான் ‘உயிர்’ அமைப்புக்கு வில்லன். நாம் அனைவருக்கும் வசதியான வில்லனும் அவனே!

இவ்வாறு நமது கோபத்தை மடைதிருப்புவதன் மூலம் நம் கோபம் அரசு மீதோ, நீதி மன்றங்கள் மீதோ, அதிகார வர்க்கம் மீதோ, சுருக்கமாக இந்த அமைப்பின் மீது திரும்பாமல் பார்த்துக்கொள்ளும் வேலையை ‘உயிர்’ அமைப்புகள் தெளிவாக செய்கின்றன.

இது போன்ற அமைப்புகள் ஒரே ஒரு நபர் காரில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி மறந்தும் பேசிவிட மாட்டார்கள்! கேட்டால், அது சட்டப்படி குற்றம் இல்லை என்று சொல்வார்கள்! கேள்வி கேட்டால் அது அவர்களையே கேள்வி கேட்பதாக ஆகி விடும்!

படிக்க:
அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா ? அம்பேத்கர்
மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்

இந்த செய்திகள் அனைத்தும் போக இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவலும் உள்ளது. இந்த ‘உயிர்’ அமைப்பின் செயலியை வெளியிடப்போவது யார் தெரியுமா? பிடல் காஸ்ட்ரோ தான்! புரியவில்லையா? அட, நமது எடப்பாடி சாமி தான். ஞாயிறு அன்று கோவையில் அந்த செயலியை வெளியிட உள்ளார். அவர் வருகைக்காக தான் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

மொத்த செய்தியையும் தொகுத்து பாருங்கள். சாலைவிபத்துகள் நடக்காமல் தடுக்க நம்மை போன்ற சக வாகன ஓட்டிகளை காவல்துறையிடம் பிடித்து தர வேண்டும், அப்படி பிடித்து தர ஒரு செயலி, அதை வெளியிட ரோடுகளை எந்த வித பராமரிப்பும் செய்யாத முதல்வர் வருகிறார், அவர் வருகைக்கு விபத்துகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் சாலைகளை மறைத்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன!

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களாட்சி! ஆங்கிலத்தில் “Irony just died a thousand deaths” என்று சொல்வார்கள்.

அருண்கார்த்திக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க