காந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு (பகுதி – 6)

IV

துதான் காந்தியம். காந்தியம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டு விட்ட நிலையில், காந்தியம் நாட்டின் சட்டமாகுமானால், அதில் தீண்டாத மக்களின் கதி என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு அதிகமாய் மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டியதில்லை. இந்துக்களிலேயே மிகக் கீழான இந்துவின் கதியோடு ஒப்பிடுகையில் தீண்டாத மக்களின் கதி எப்படி இருக்கும்? காந்திய சமூக அமைப்பு உருவாகுமானால் தீண்டாத மக்களின் கதி என்னவாக இருக்கும் என்பதைக் காட்டுவதற்கு சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாகி விட்டது. மிகக் கீழான இந்துவும் தீண்டாத மக்களும் பரம்பரைச் சொத்தில்லாத ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்கிற அளவில் தீண்டாத மக்களின் நிலை எந்த விதத்திலும் மேம்பட்டிருக்க முடியாது. ஏதாவது வேறுபாடு உண்டு என்றால் தீண்டாத மக்களின் நிலைதான் மோசமாக இருக்கும் என்பதை எளிதில் கூறிவிடலாம்.

ஏனென்றால் இந்தியாவில் சாதி இந்துக்களிலேயே மிகக் கீழான நிலையில் இருப்பவரும் கூட – ஏன், பழங்குடியாகவும் மலைவாசியாகவும் இருப்பவரும் கூட – கல்வியிலும் பொருளாதாரத்திலும் தீண்டாத மக்களைக் காட்டிலும் அவ்வளவாக மேம்பட்டிருக்கவில்லை என்றாலும் அவர்களை விட உயர்ந்தவராகவே இருக்கிறார். அவர் தீண்டாத மக்களைக் காட்டிலும் தம்மை உயர்ந்தவராகக் கருதிக் கொள்கிறார் என்பதல்ல. அவர் தீண்டாத மக்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று கொண்டாடும் உரிமையை இந்து சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது. ஆகவே தீண்டாத மக்கள் இப்போதிருப்பது போலவே தொடர்ந்து படுமோசமான நிலையில் இருந்து வருவார்; அதாவது அவர் செழுமைக் காலத்தில் கடைசியாக வேலைக்கு அமர்த்தப்படுவார்; மந்த காலத்தில் முதலில் வெளியே தள்ளப்படுவார்.

தீண்டாத மக்களை இந்தக் கதியிலிருந்து விடுவிப்பதற்கு காந்தியம் என்ன செய்கிறது? காந்தியம் தீண்டாமையை ஒழிப்பதாகச் சொல்லிக் கொள்கிறது. அதுதான் காந்தியத்தின் மாபெரும் சிறப்பு என்று போற்றப்படுகிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இந்தச் சிறப்புக்கு என்ன பொருள்? காந்தியத்தில் ஒரு மிகப் பெரும் கூறாகக் கருதப்படும் இந்தத் தீண்டாமை எதிர்ப்பின் மதிப்பை கணிக்க வேண்டுமானால், தீண்டாமை ஒழிப்புக்கான காந்தியாரது வேலைத்திட்டத்தின் வீச்சினை முழுமையாக புரிந்துக் கொள்வது அவசியமாகும். இந்துக்கள் தீண்டாத மக்களை தொடுவது பற்றி கவலைப்படமாட்டார்கள் என்பதற்கு மேல் அதற்கு வேறு ஏதாவது பொருள் உண்டா? தீண்டாத மக்கள் கல்வி பெறுவதற்கான உரிமை மீது சுமத்தப்பட்டிருக்கும் தடையை அகற்றுவது என்பது அதன் பொருளா? இந்த இரு கேள்விகளையும் தனித்தனியாக எடுத்துக் கொள்வது நன்று.

பிர்லா மாளிகையில் காந்தி

முதல் கேள்வியிலிருந்து தொடங்குவோம். இந்துவாக ஒருவர் தீண்டாத மக்களைத் தொட்ட பிறகு குளிக்கக் கூடாது என்று காந்தியார் கூறவில்லை. தீட்டு கழித்து தூய்மைப்படுத்தும் செயல் என்ற முறையில் இந்த தீட்டுக் கழித்தலுக்கு காந்தியார் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், தீண்டாத மக்களைத் தொடுவதன் மூலம் தீண்டாமை எப்படி ஒழிந்து விடும் என்பதைப் புரிந்துக் கொள்வது கடினமாய் உள்ளது. தீண்டாமை என்பது தொடுவதால் தீட்டுப்படுவது, தீட்டைக் கழிப்பதற்காகக் குளிப்பது என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. இந்துக்களுடன் சமூக வழியில் ஒன்று கலப்பதை அது குறிக்குமா? தீண்டாமை ஒழிப்பு என்பது இந்துக்களும் தீண்டாத மக்களும் சேர்ந்து உண்பதையோ கலந்து மணம் புரிவதையோ குறிக்காது என்று காந்தியார் மிகவும் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

காந்தியாரின் தீண்டாமை எதிர்ப்பு என்பதன் பொருள் தீண்டாத மக்கள் அதி சூத்திரர்கள் என்று வகைப்படுத்தப்படுவதற்குப் பதில் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தப்படுவார்கள் என்பதே. (12) இதற்கு மேல் காந்தியத்தில் ஒன்றுமில்லை. பழைய சூத்திரர்கள் புதிய சூத்திரர்களைத் தங்கள் அரவணைப்பில் ஏற்றுக் கொள்வார்களா என்ற பிரச்சனையை காந்தியார் பரிசீலிக்கவில்லை. அவர்கள் இப்படி ஏற்றுக் கொள்ளாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு என்பதே அர்த்தமற்ற கருத்தாகிறது; ஏனென்றால் அப்போதும் தீண்டாத மக்கள் ஒரு தனிப் பிரிவாகவே இருப்பார்கள். அனேகமாக காந்தியாருக்கும் தெரிந்திருக்கும். தீண்டாமை ஒழிப்பு என்பது தீண்டாத மக்களை சூத்திரர்கள் தன்வயமாக்கிக் கொள்ளும் நிலையை தோற்றுவிக்காது. அதனால்தான் காந்தியார் தீண்டாத மக்களுக்கு மாறுபட்ட புதிய பெயர் ஒன்றை கொடுத்திருப்பதாக தோன்றுகிறது. இந்தப் பெயர் உண்மையில் அனேகமாய் நடக்கப்போவதை முன்கூட்டியே எதிர்பார்த்து பதிவு செய்வதாக உள்ளது. தீண்டாத மக்களை அரிசனங்கள் என்று அழைப்பதன் மூலம் காந்தியார் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கிறார். தீண்டாத மக்களை சூத்திரர்கள் தன்வயமாக்கிக் கொள்ள முடியாத காரியம் என்பதை தெளிவாக்குகிறார். மேலும் தான் கொடுக்கிற புதிய பெயரைக் கொண்டு இந்த தன்வயமாக்கலை எதிர்த்து செயல் புரிந்து அதனை முடியாத காரியமாக்கிறார்.

படிக்க:
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி

இரண்டாவது கேள்வியைப் பொறுத்தவரை தீண்டாத மக்கள் கல்வி பெறுவதற்கான உரிமை மீது சாத்திரங்கள் விதித்த பழைய தடையை அகற்றுவதற்கும் அவர்கள் அறிவும் கல்வியும் பெறுவதை அனுமதிப்பதற்கும் காந்தியம் அணியமாய் இருப்பது மெய்தான். காந்தியத்தில் தீண்டாத மக்கள் சட்டம் பயிலலாம். மருத்துவம் பயிலலாம்; பொறியியல் பயிலலாம் அல்லது அவர்கள் விரும்பக்கூடிய எதை வேண்டுமானாலும் பயிலலாம். அந்த அளவில் நல்லது. ஆனால் தீண்டாத மக்கள் தங்களது அறிவையும் கல்வியையும் பயன்படுத்திக் கொள்கிற உரிமை இருக்குமா? அவர்கள் தங்கள் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற உரிமை இருக்குமா? அவர்கள் வழக்கறிஞர், மருத்துவர் அல்லது பொறியாளர் தொழிலை மேற்கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காந்தியம் அளிக்கிற திட்டவட்டமான பதில் இல்லை என்பதே. (1)

தீண்டாத மக்கள் தங்கள் பரம்பரை தொழில்களைச் செய்து வர வேண்டும் அந்த தொழில்கள் தூய்மைக் கேடானவை என்பது இதற்கு விடை ஆகாதாம். பரம்பரைத் தொழிலாவதற்கு முன்னதாக விரும்பித் தேர்வு செய்ததாக இல்லாமல் கட்டாயத்தின் விளைவாக இருந்தது என்பதும் முக்கியமல்லவாம். காந்தியத்தின் வாதம் என்னவென்றால் தவறான முறையில் தீர்வு செய்யப்பட்டிருந்தாலும் கூட ஒரு முறை தீர்வு செய்யப்பட்டு விட்டால் என்றென்றைக்கும் தீர்வு செய்யப்பட்டதாகும் என்பதே. காந்தியத்தின் தீண்டாத மக்கள் என்றென்றைக்கும் தோட்டிகளாவே இருக்க வேண்டும் தீண்டாத மக்கள் வைதிகமான தீண்டாமை அமைப்பை இதைவிடவும் மேலெனக் கருதுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்து சாத்திரங்களால் தீண்டாத மக்கள் மீது சுமத்தப்பட்ட கட்டாய அறியாமை தோட்டி வேலை செய்வதை சகித்துக் கொள்ள கூடியதாக்கிற்று.

ஆனால், படித்த தீண்டாத மக்களைத் தோட்டி வேலை செய்யும்படி கட்டாயப்படுத்துகிற காந்தியம் கொடியதென்று தயங்காமல் சொல்லாம். காந்தியத்தின் கவர்ச்சிக் கூறு என்பது உண்மையில் படு மோசமான சாபக்கேடாகும். காந்தியத்தின் தீண்டாமை எதிர்ப்புத் திட்டத்தின் சிறப்பு என்பது கானல் நீரே. அத்திட்டத்தில் சாரம் ஒன்றுமில்லை.

V

தீண்டாத மக்கள் தங்களின் இறுதி விடுதலைக்கே வழி திறந்து விடக் கூடியது என்று ஏற்றுக் கொள்ளும் வகையில் காந்தியத்தில் வேறு என்னதான் இருக்கிறது. தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் என்னும் இந்த மாயையை விலக்கி விட்டுப் பார்த்தால் காந்தியம் என்பது தீவிரமான வைதிக இந்து மதத்தின் புராதனப் பெயராகிய சனாதனக் கொள்கையின் மறுவடிவமே தவிர வேறல்ல. வைதிக இந்து மதத்தில் இல்லாத எது காந்தியத்தில் இருக்கிறது, இந்து மதத்தில் சாதி உண்டு, காந்தியத்திலும் சாதி உண்டு. இந்து மதம் பரம்பரைத் தொழில் என்னும் விதியில் நம்பிக்கை வைத்துள்ளது. காந்தியமும் அதில் நம்பிக்கை வைத்துள்ளது. இந்து மதம் பசு வழிபாட்டை கட்டளையாக பிறப்பிக்கிறது. காந்தியமும் அதையே செய்கிறது. இந்து மதம் கர்மாவின் விதியை இந்த உலகில் மனிதனின் நிலைமை என்ன என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது என்ற விதியைத் தூக்கிப் பிடிக்கிறது; காந்தியமும் அதையே செய்கிறது. இந்து மதம் சாத்திரங்களின் அதிகாரவுரிமையை ஏற்றுக் கொள்கிறது; காந்தியமும் அதை ஏற்றுக் கொள்கிறது. இந்து மதம் கடவுளின் அவதாரங்களில் நம்பிக்கை வைத்துள்ளது, காந்தியமும் அவற்றில் நம்பிக்கை வைத்துள்ளது. இந்து மதம் விக்கிரகங்களில் நம்பிக்கை வைத்துள்ளது, காந்தியமும் அவற்றில் நம்பிக்கை வைத்துள்ளது. (2)

காந்தியம் செய்திருப்பதெல்லாம், இந்து மதத்திற்கு ஒரு தத்துவ ஞான நியாயத்தைக் கண்டுபிடித்திருப்பதும் அதன் சூத்திரங்களை நியாயப்படுத்தவதற்கான ஒரு தத்துவ ஞானத்தை உருவாக்கியிருப்பதே ஆகும். இந்து மதம் என்பது வழுக்கையானது; அதாவது முகத்தளவில் ஒரு கரடுமுரடான கொடிய அமைப்பில் தோற்றத்தைத் தாங்கியிருக்கும் விதித்தொகுப்பே தவிர வேறு அல்ல. காந்தியம் அதன் மேற்பரப்பை வழவழப்பாக்கி, கண்ணியமும் மதிப்புமான தோற்றத்தை அதற்கு வழங்கி, அதனைக் கவர்ச்சிகரமாக்கும் அளவுக்கு மாற்றம் செய்து வனப்பூட்டுகிற தத்துவ கோட்பாட்டை வழங்குகிறது. காந்தியம் இந்து மதத்தின் அம்மணத்தை மூடி மறைக்க வகுத்துரைக்கும் தத்துவ கோட்பாடுதான், என்ன? இந்தத் தத்துவ கோட்பாட்டை சுருக்கமாய்ச் சொல்லி விடலாம். “இந்து மதத்தில் இருப்பதெல்லாம் நல்லது, இந்து மதத்தில் இருப்பதெல்லாம் பொது மக்களின் நன்மைக்கு அவசியமானது என்பதுதான். அந்தத் தத்துவ கோட்பாடை வால்டேர் எழுதிய candide என்ற நூலை அறிந்திருப்பவர்கள் இந்தத் தத்துவ ஞானம் மாஸ்டர் பாஞ்சுலாசின் தத்துவ ஞானம் என்பதை அடையாளம் கண்டு கொள்வார்கள், வால்டேர் அதனை எப்படியெல்லாம் கேலி செய்தார் என்பதை நினைவு பகர்வார்கள். இந்துக்கள் காந்தியத்தின் தத்துவ ஞானம் குறித்து மகிழ்ந்து போயிருப்பதில் வியப்பில்லை. அது அவர்களுக்கு பொருத்தமாகவும் அவர்களின் நலனுக்கு ஏற்றதாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை.

பேராசிரியர் இராதாகிருஷ்ணன்-மனப்பூர்வமாகவோ போலித்தனமாகவோ, நமக்குத் தெரியாது, அது குறித்து ஆராயத் தேவையில்லை-காந்தியாரை ‘பூவுலகக் கடவுள்’ என்று வர்ணிக்குமளவுக்குப் போயிருக்கிறார். இதன் பொருள் என்னவென்று தீண்டாத மக்கள் கருதுகிறார்கள்? அவர்களுக்கு இதன் பொருள் என்னவென்றால்; “காந்தி என்ற பெயருடைய இந்தக் கடவுள் இன்னலுற்றதோர் இனத்துக்கு ஆறுதலளிக்க வந்தார்; அவர் இந்தியாவைப் பார்த்தார், எல்லாம் நன்றாகவே உள்ளது. இந்துக்கள் சாதியின் விதியை நிறைவேற்றினாலே போதும், எல்லாம் நன்றாகவே இருக்கும் என்று கூறி, அதனை மாற்றாமல் விட்டார். இன்னலுற்ற இனத்தைப் பார்த்து அவர் ‘சாதி விதியை நிறைவேற்ற நான் வந்துள்ளேன்’ என்று கூறினார். அதிலிருந்து எள்முனையளவும் தனிவதற்கு இடமளிக்க மாட்டேன் என்றார்”.

காந்தியம் தீண்டாத மக்களுக்கு அளிக்கக் கூடிய நம்பிக்கை என்ன? தீண்டாத மக்களுக்கு இந்து மதம் கொடுமைகளின் கூடாரமே ஆகும். வேதங்களும் ஸ்மிருதிகளும் சாத்திரங்களும் சாதியின் இரும்பு விதியும் இதயமற்ற கர்மா விதியும் பிறப்பின் அடிப்படையில் தகுநிலையைத் தீர்மானிக்கும் அர்த்தமற்ற விதியும் புனிதமானவை, பிழையற்றவை என்பதெல்லாம் உண்மையில் இந்துமதம் தீண்டாத மக்களுக்கு எதிராக உருவாக்கியுள்ள சித்திரவதைக் கருவிகளே ஆகும். தீண்டாத மக்களின் வாழ்க்கையை சிதைத்து அடித்து நொறுக்கி நாசம் செய்துள்ள இதே கருவிகள் காந்தியத்தின் உள்மனத்தில் அப்படியே குறைவின்றி இருக்கக் காணலாம். காந்தியம் ஒரு சொர்க்கம் என்றும், இந்து மதத்தைப் போல் அது கொடுமைகளின் கூடாரம் அல்ல என்றும் தீண்டாத மக்களால் எப்படிச் சொல்ல முடியும்? தீண்டாத மக்களின் ஒரே எதிர்வினை, மிகவும் இயற்கையான எதிர்வினை காந்தியத்தை விட்டு ஓடிப் போவதாகவே இருக்கும்.

நான் கூறியிருப்பது பழைய வகைப்பட்ட காந்தியத்துக்கே பொருந்தும் என்று காந்தியவாதிகள் சொல்லக் கூடும். ஒரு புதிய காந்தியம், சாதியில்லாத காந்தியம் இருக்கிறதாம். சாதி ஒரு காலவழு என்று காந்தியார் சமீபத்தில் கூறியிருப்பது கருதியே இவர்கள் இப்படிச் சொல்வார்கள். (4) காந்தியாரின் இந்த அறிவிப்பு இயல்பாகவே சீர்திருத்தவாதிகளுக்கு மகிழ்ச்சியளித்தது. காந்தியாரைப் போன்ற ஒருவர் இந்துக்கள் மீது இவ்வளவு பயங்கரமான செல்வாக்கு படைத்த ஒருவர் ஒரு சமூகப் பிற்போக்காளராக மிகத் தீய பங்கு வகித்த பிறகு, சாதியமைப்புக்காகப் பரிந்து போராடுகிறவராக இருந்த பிறகு, நல்லதற்கும் கெட்டதற்கு மிடையே எந்த வேறுபாடும் காட்டாத வாதங்களைக் கொண்டு சிந்தனைத் திறனற்ற இந்துக்களை மயக்கி முட்டாளாக்கிய பிறகு, இப்படி மாறுபட்ட கருத்து வெளியிடக் கண்டு யார்தான் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்? ஆனால் இது உண்மையிலேயே குதூகலத்துக் குரியதுதானா? இது காந்தியத்தின் தன்மையை மாற்றி விடுகிறதா? இதனால் காந்தியம் முன்பிருந்ததைக் காட்டிலும் புதியதும் சிறந்ததுமான ‘இயமாகி’ விடுகிறதா? காந்தியாரின் இந்த கருத்து மாற்றத்தால் கவரப்படுகிறவர்கள் இரண்டு விவரங்களை மறந்து விடுகிறார்கள்.

முதலாவதாக, காந்தியார் கூறியிருப்பதெல்லாம், சாதி ஒரு காலவழு என்பதே. அது ஒரு தீமையென்று அவர் சொல்லவில்லை. அது கூடாத ஒன்று என்றும் அவர் கூறவில்லை. காந்தியார் சாதிக்கு ஆதரவாக இல்லை என்று வேண்டுமானால் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தாம் வருண அமைப்புக்கு எதிரானவர் என்று காந்தியார் கூறவில்லை. காந்தியாரின் வருண அமைப்புதான் என்ன? அது சாதி அமைப்புக்கான ஒரு புதிய பெயர்தான், சாதியமைப்பின் படுமோசமான கூறுகள் அனைத்தையும் தொடர்ந்து தன்னகத்தே வைத்துக் கொண்டிருப்பதுதான்.

காந்தியாரின் அறிவிப்பு காந்தியத்தில் எவ்வித அடிப்படை மாற்றத்தையும் குறிப்பதாகச் சொல்ல முடியாது. அது காந்தியத்தைத் தீண்டாத மக்களுக்கு ஏற்புடைய தாக்க முடியாது. இப்போதும் தீண்டாத மக்கள் இப்படிச் சொல்வதற்கு நியாயமான காரணம் இருக்கும்; “அட கடவுளே! காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா?”

முற்றும்.
காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன?
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.

அடிக்குறிப்புகள்:
(1) யங் இந்தியா, 1925 பிப்ரவரி 5.
(2) இப்பொருள் குறித்து காந்தியாரின் கருத்துக்களை அறியம், பார்க்கவும் மேலது பக்கம் 73-17.
(3) 1927 அக்டோபர் 6 தேசிய யங் இந்தியாவில் கந்தியாரின் சமயக் கொள்கைகள் அவராலேயே சுருக்கமாய் எடுத்துரைக்கப்பட்டன.
(4) இந்துஸ்தான் டைம்ஸ், 1945 ஏப்ரல் 15.

முந்தைய பகுதி:
பகுதி – 1: காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்
பகுதி – 2: தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி
பகுதி – 3 : விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதே – காந்தியம்
பகுதி – 4 : சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை
பகுதி – 5 : சூழ்ச்சித் திறனே நின் பெயர்தான் காந்தியமா

புத்தகக் குறிப்பு:

  • காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
    – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
  • மகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்
  • பக்கம்: 461 + 30
  • முதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998
  • வெளியீடு,
    தலித் சாகித்ய அகாதமி,
    சென்னை – 600 073.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க