காந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு பகுதி – 1

து வரையிலும் இந்தியர்கள், இந்திய சமூக, பொருளாதார வாழ்க்கையின் புனரமைப்பு பற்றிப் பேசும் போது, தனிநபர்வாதமா கூட்டுவாதமா, முதலாளித்துவமா, சோசலிசமா, பழமைவாதமா முற்போக்குவாதமா என்ற தன்மையில் பேசி வருகிறார்கள். ஆனால் சமீப காலத்தில்தான் இந்திய வானில் ஒரு புதிய ‘வாதம்’ தோன்றியுள்ளது, அது காந்தியவாதம் (காந்தியம்) எனப்படுகிறது. சமீப காலத்தில் காந்தியாரே காந்தியம் என்ற ஒன்று இல்லை என மறுத்திருப்பது உண்மைதான். இந்த மறுப்பு காந்தியார் அழகுறச் சூடிக் கொள்ளும் அந்த வழக்கமான தன்னடக்கத்தைக் குறிப்பதாகுமே தவிர வேறல்ல. காந்தியம் என்ற ஒன்றே இல்லை என மெய்ப்பித்து விடாது. காந்தியாரிடமிருந்து எவ்வித எதிர்ப்புக் குரலும் இல்லாமல் காந்தியம் என்ற பெயருடன் அநேக நூல்கள் வந்து விட்டன. இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் அது ஏற்கெனவே சிலரது உள்ளத்தை ஈர்த்திருக்கிறது. மார்ச்சியத்திற்கு ஒரு மாற்றாக அதனை முன்னிறுத்தத் தயங்குவதில்லை, என்னும் அளவுக்கு சிலர் அதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

காந்தியத்தைப் பின்பற்றுகிறவர்கள் இதுவரை இந்த நூலில் எழுதப்பட்டிருப்பதையெல்லாம் படிக்க நேரிட்டால் பின்வரும் கேள்விகளைக் கேட்கக் கூடும்; தீண்டாத மக்கள் காந்தியாரிடமிருந்து என்ன எதிர்ப்பாத்தார்களோ அதை அவர் செய்யாமல் போயிருக்கலாம்; ஆனால் காந்தியம் தீண்டாத மக்களுக்கு வருங்காலம் குறித்து எவ்வித நம்பிக்கையும் ஏற்படுத்தவில்லையா? தீண்டாத மக்களின் நலனுக்காக காந்தியார் குறுகிய கால அடிப்படையிலும் மெல்ல மெல்லவும் விட்டு விட்டும் எடுத்த முயற்சிகளை மட்டுமே நான் நினைவில் வைத்திருப்பதாகவும், அவரால் வகுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளின் உள்ளியல் நீளத்தை நான் மறந்து விட்டதாகவும் காந்தியத்தைப் பின்பற்றுவோர் குற்றஞ்சாட்டலாம். சில நேரம் இப்படி நேரிடுவதுண்டு என்பதை நான் ஏற்றுக் கொள்ளத் தயார்; நீண்ட கோட்பாட்டை வகுத்துரைப்பவர் குறுகிய அடி மட்டுமே எடுத்து வைக்கிறார்; என்றாவது ஒரு நாள் அந்தக் கோட்பாடு அதற்கே உரிய இயக்க ஆற்றலைக் கொண்டு நீண்ட அடி எடுத்து வைக்கும் படிச் செய்து, ஒரு நேரத்தில் விடப்பட்ட அனைவரையும் அரவணைத்துச் செல்ல வழிகோலும் என்ற நம்பிக்கையில் அந்தக் குறுகிய அடிக்காக அவரை மன்னித்து விடலாம்.

காந்தியம் அதனளவில் மிகவும் சுவாரசியமான ஆய்வுப் பொருளாகும். ஆனால் காந்தியாரைப் பரிசீலித்தப் பிறகு காந்தியத்தைப் பரிசீலிப்பது சலிப்பூட்டும் பணியாக இருந்தே தீரும்; காந்தியாரும் தீண்டாத மக்களும் என்பதைப் பரிசீலினையிலிருந்து விட்டு விட வேண்டும் என்பதுதான் என் முதற் கருத்தாக இருந்தது. அதே போது, நான் இந்த ஆய்வுப் பொருளைப் பரிசீலிக்காமல் விடுவதன் விளைவு பெரிதும் வருத்தத்திற்குரியதாக இருக்கக் கூடும் என்ற உண்மையை என்னால் அலட்சியம் செய்ய முடியவில்லை, ஏனென்றால், காந்தியாரை நான் அம்பலபடுத்தியுள்ள போதிலும் காந்தியத்தைப் பரிசீலிக்காமல் விட்டு விட்டால் காந்தியவாதிகள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். காந்தியார் இது வரை தீண்டாத மக்களின் பிரச்சினையை தீர்க்கத் தவறி விட்டார் என்றால், தீண்டத்தகாதவர் இப்போதும் கூட காந்தியத்தில் விமோசனம் காண்பர் என்று அவர்கள் தொடர்ந்து போதனை செய்து வரக் கூடும். நான் இத்தகைய பிரசாரத்துக்கு இடமளிக்க விரும்பவில்லை என்பதால்தான் தொடக்கத்தில் எனக்கிருந்த தயக்கத்தை உதறிவிட்டு, காந்தியம் பற்றிய பரிசீலனையில் இறங்குகிறேன்.

II

காந்தியம் என்பது என்ன? அது எதைக் குறிக்கிறது? பொருளாதாரச் சிக்கல் தொடர்பாக அதன் போதனைகள் என்ன? சமூகச் சிக்கல் தொடர்பாக அதன் போதனைகள் என்ன?

எடுத்த எடுப்பிலேயே ஒன்றைச் சொல்லிவிட வேண்டும்; காந்தியவாதிகள் சிலர் காந்தியம் பற்றி முற்றிலும் கற்பனையான ஒரு கருத்துருவத்தை இட்டுக் கட்டியிருக்கிறார்கள். இந்தக் கருத்துருவத்தின் படி, காந்தியம் என்பது கிராமத்துக்குத் திரும்பிச் செல்வதையும் கிராமத்தைத் தன்னிறைவாக்குவதையும் குறிக்கிறது. இது காந்தியத்தை வெறும் வட்டாரவாதம் தொடர்பான ஒன்றாக்கி விடுகிறது. காந்தியமானது வட்டாரவாதத்தைப் போல் சாமானியனமானதோ, அறியாத்தனமானதோ அல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன், வட்டாரவாதத்தை விடவும் மிகப் பெரிய உள்ளடக்கம் கொண்டது காந்தியம், வட்டாரவாதம் அதில் ஓர் அற்பச் சிறு பகுதிதான். அதற்கென்று ஒரு சமூகத் தத்துவம் உள்ளது; அதற்கென்று ஒரு பொருளாதாரத் தத்துவம் உள்ளது. காந்தியத்தின் பொருளாதார, சமூகத் தத்துவத்தைக் கணக்கில் கொள்ளாமல் விட்டுவிடுவது வேண்டுமென்றே காந்தியம் பற்றி ஒரு தவறான படத்தைக் காட்டுவதாகும். காந்தியம் பற்றிய உண்மையான படத்தை காட்டுவதுதான் முதல் முக்கியத் தேவை,

தனது ஆசிரமத்தில், தாழ்த்தப்பட்டோர்களுடன் உரையாடும் காந்தி.

முதலில் சமூகச் சிக்கல் தொடர்பான காந்தியாரின் போதனைகளை எடுத்துக் கொள்வோம். சாதி அமைப்பு தொடர்பான காந்தியாரின் கருத்துக்கள் இந்தியாவில் சாதி அமைப்புதான் முக்கிய சமூகச் சிக்கலாக இருந்து வருகிறது 1921-22இல் நவஜீவன் என்னும் குஜராத்தி ஏட்டில் அவரால் முழு அளவில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. இந்தக் கட்டுரை1 குஜராத்தி மொழியில் எழுதப் பட்டியிருக்கிறது. அவருடைய கருத்துகளை அவருடைய சொற்களிலேயே முடிந்தவரை மிக நெருக்கமாய் சொல்கிறார்; ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கீழே தருகிறேன். காந்தியார் சொல்லுகிறார்:

“1. இந்து சமுதாயம் சாதி அமைப்பை அடித்தளமாகக் கொண்டிருப்பதால்தான் அதனால் தாக்குப் பிடித்து நிற்க முடிந்துள்ளது என்றுநான் நம்புகிறேன்”

“2. சுயராச்சியத்தின் வித்துக்களை சாதி அமைப்பில்தான் காண வேண்டும். வெவ்வேறு சாதிகள் இராணுவப் படையின் வெவ்வேறு பிரிவுகளைப் போன்றவை. ஒவ்வொரு பிரிவும் முழுமையின் நன்மைக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.”

“3. சாதி அமைப்பைத் தோற்றுவிக்க முடிந்த ஒரு சமுதாயம் ஈடற்ற அமைப்புத் திறனைப் பெற்றிருப்பதாகச் சொல்ல வேண்டும்.”

படிக்க:
யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!

“4. சாதி என்பது ஆரம்பக்கல்வியைப் பரப்புவதற்கு ஆயத்த நிலைச் சாதனங்களைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு சாதியும் அந்தச் சாதிக் குழந்தைகளின் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியும். சாதிக்கு ஓர் அரசில் அடிப்படை உள்ளது. அது ஒரு பிரதிநிதித்துவ அமைப்பிற்கான தேர்தல் தொகுதியாக இயங்க முடியும். சாதியானது ஒரே சாதியைச் சேர்ந்தவர்களிடையே ஏற்படும் பூசல்களைத் தீர்த்து வைப்பதற்கு நீதிபதிகளாகச் செயல்படுவதற்குரிய ஆட்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீதித் துறைக்குரிய பணிகளையும் ஆற்ற முடியும். சாதிகளைக் கொண்டு ஒவ்வொரு சாதியும் ஒரு பட்டாளத்தைக் கட்ட வேண்டும் என்று கோருவதன் மூலம் சாதிகளை வைத்து ஒரு பாதுகாப்புப் படையைக் கட்டுவது எளிது.”

“5. தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கு, வெவ்வேறு சாதியினர் சேர்ந்து உண்ணுவதோ, கலந்து மணம் புரிவதோ அவசியமில்லை என நம்புகிறேன். சேர்ந்து உண்ணுவது நட்புறவைத் தோற்றுவிக்கிறது என்பது அனுபவத்திற்கு மாறானது. இது உண்மை என்றால் ஐரோப்பாவில் போரே மூண்டிருக்காது.. உணவு உண்பது இயற்கைக் கடன் கழிப்பது போல் அருவருப்பானதொரு செயல். ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், இயற்கைக் கடன் கழித்த பிறகு நமக்கு அமைதி கிடைக்கிறது, உணவு சாப்பிட்ட பிறகோ சங்கடம் ஏற்படுகிறது. இயற்கைக் கடன் கழிக்கும் செயலைத் தனிமையில் செய்வது போலவே உணவு சாப்பிடுவதும் தனிமையில்தான் செய்யப்பட்டாக வேண்டும்.

கூட்டமொன்றில் உரையாற்றும் அம்பேத்கர்.

“6. இந்தியாவில் சகோதரர்களின் குழந்தைகளுக்கிடையே திருமணம் செய்து வைப்பதில்லை. அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்பதால் ஒருவரை ஒருவர் நேசிக்காமல் போய் விடுகிறார்களா? வைணவர்களிடையே பல பெண்கள் குடும்பத்தவர்களோடு சேர்ந்து சாப்பிட மாட்டார்கள், ஒரு பொதுவான தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கவும் மாட்டார்கள் என்னும் அளவுக்கு வைதீகமாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பு எதுவுமில்லையா? சாதி அமைப்பானது வெவ்வேறு சாதிகளிடையே சேர்ந்து உண்ணுவதையோ கலந்து மணம் புரிவதையோ அனுமதிப்பதில்லை என்பதால் அந்த அமைப்பை மோசமானது என்று கூறி விட முடியாது.

“7. சாதி என்பது கட்டுப்பாட்டுக்கு மறு பெயராகும். அது இன்ப நுகர்ச்சிக்கு வரம்பு விதிக்கிறது. ஒருவர் இன்ப நுகர்ச்சிக்கானச் சாதி வரம்புகளைக் கடப்பதை சாதி அனுமதிப்பதில்லை. சேர்ந்து உண்ணுவதற்கும் கலந்து மணம் புரிவதற்குமான தடை போன்ற சாதிக் கட்டுப்பாடுகளின் பொருள் இதுதான்.

“8. சாதி அமைப்பை அழித்து விட்டு மேற்கு ஐரோப்பிய சமூக அமைப்பை ஏற்றுக் கொள்வது என்பதன் பொருள், இந்துக்கள் சாதி அமைப்பின் ஆன்மாவாகிய பரம்பரைத் தொழில் கோட்பாட்டைக் கைவிட்டாக வேண்டும் என்பதாகும். பரம்பரைக் கோட்பாடு ஒரு சாசுவதக் கோட்பாடாகும். அதை மாற்றுவதென்பது ஒழுங்கின்மையை உண்டு பண்ணுவதாகும். ஒருவரை எனது வாழ்நாள் முழுவதும் பிராமணர் என்று அழைக்க முடியா விட்டால் பிராமணரால் ஒரு பயனும் இல்லை. ஒவ்வொரு நாளும் பிராமணர் சூத்திரராகவும் சூத்திரர் பிராமணராகவும் மாற்றப்படுவதாயிருந்தால் குழப்பம் ஏற்படும்.

“9. சாதி அமைப்பு சமுதாயத்தின் இயற்கை ஒழுங்காகும். இந்தியாவில் அதற்கு மதச் சாயம் பூசப்பட்டுள்ளது. ஏனைய நாடுகள் சாதி அமைப்பின் பயன்பாட்டைப் புரிந்து கொள்ளாததால் அங்கு அது இறுக்கமற்ற நிலையில் தான் இருந்து வந்தது; ஆகவே இந்தியா சாதி அமைப்பிலிருந்து அடைந்துள்ள அதே நன்மையை அந்த நாடுகள் அடையவில்லை.

“இவை என் கருத்துகளாய் இருப்பதால் சாதி அமைப்பை அழிக்கப் புறப்பட்டிருப்பவர்கள் அனைவருக்கும் நான் எதிரானவன்.”

1922இல் காந்தியார் சாதி அமைப்பிற்கு வக்காலத்து வாங்கினார். அந்த ஆய்வைத் தொடர்ந்து கொண்டு செல்லுகையில், 1925ஆம் ஆண்டு காந்தியார் சாதி அமைப்பை சற்றே விமர்சனக் கண் கொண்டு பார்ப்பதைக் காண முடிகிறது. 1925 பிப்ரவரி 3ஆம் நாள் காந்தியார் கூறியது இதுதான்:

“சாதியானது கட்டுப்பாட்டைக் குறிக்கிறது என்பதால் நான் சாதிக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் இப்போது சாதியானது கட்டுப்பாட்டைக் குறிக்கவில்லை, தடை சுவர்களைத்தான் குறிக்கிறது. கட்டுப்பாடு என்பது பெருமைக்குரியது, சுதந்திரம் பெறுவதற்கு உதவக் கூடியது. ஆனால் தடைச்சுவர் என்பது சங்கிலியைப் போன்றது. அது கட்டிப் போடுகிறது. இன்றுள்ள நிலையில் சாதிகளில் போற்றத்தக்கது எதுவுமில்லை. அவை சாத்திரங்களின் கோட்பாடுகளுக்கு மாறானவை. சாதிகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை; கலப்புத் திருமணத்துக்கு தடை உள்ளது. இது முன்னேற்றத்திற்குரிய நிலைமை அல்ல, வீழ்ச்சிக்குரிய நிலவரமே ஆகும்.”

இதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதத்தில் காந்தியார் சொன்னார்:

“மிகச் சிறந்த பரிகாரம் சிறு சாதிகள் ஒன்றாய்ச் சேர்ந்து பெரிய சாதியாகி விட வேண்டும் என்பதே. இப்படி நான்கு பெரிய சாதிகள் இருக்க வேண்டும்; இவ்விதம் நாம் பழைய நால்வர்ண அமைப்பை மீண்டும் உருவாக்கி விடலாம்.”

சுருங்கச் சொல்லின், 1925 இல் காந்தியார் வர்ண சிரம அமைப்பை ஆதரிப்பவராகி விட்டார்.

புராதன இந்தியாவில் நிலவி வந்த பழைய வர்ண அமைப்பு சமுதாயத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்து வைத்திருந்தது:
1) பார்ப்பனர்கள்; அவர்களின் வேலை கல்வி கற்பது;
2) சத்திரியர்கள்; இவர்களின் வேலை போர்த் தொழில்;
3) வைசியர்கள்; இவர்களின் வேலை வர்த்தகம்;
4) சூத்திரர்கள், இவர்களின் வேலை ஏனைய வகுப்புகளுக்குத் தொண்டூழியம் செய்தல்.

காந்தியாரின் வர்ண அமைப்பும், வைதிக இந்துக்களின் பழைய வர்ண அமைப்பும் ஒன்றுதானா? காந்தியார் தனது வர்ண அமைப்பைப் பின்வரும் சொற்களில் விளக்கினார் 2:

“1. வர்ணமாகப் பிரித்திருப்பது பிறப்பின் அடிப்படையிலானது என நான் நம்புகிறேன்.

“2. சூத்திரர் கல்வி கற்பதற்கோ தாக்குதல் – தற்காப்பு தொடர்பான இராணுவக் கலையைக் கற்பதற்கோ தடை போடும் படியான எதுவும் வர்ண அமைப்பில் இல்லை. மாறாக, பிறருக்குத் தொண்டூழியம் செய்ய ஒரு சத்திரியருக்கும் கூட உரிமை உண்டு. வர்ண அமைப்பில் அவருக்கு எவ்விதத் தடையுமில்லை . சூத்திரர் கல்வி கற்பதைப் பிழைப்பு தேடும் வழி ஆக்கி விடக் கூடாது என்றுதான் வர்ண அமைப்பு கட்டளையிடுகிறது. சத்திரியரும் தொண்டூழியம் செய்வதைப் பிழைப்பு தேடும் வழி ஆக்கி விடக்கூடாது.

சமுதாயத்திற்கு அவசியமான இழிவான தொழில்களைச் செய்து வந்தவர்களைச் சண்டாளர்கள் என்று அழைத்தது

(இதே போல் ஒரு பிராமணன் போர்க்கலை அல்லது வாணிகம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவற்றைப் பிழைப்புத் தேடும் வழி ஆக்கிவிடக் கூடாது. வைசியன் கல்வி கற்கலாம் அல்லது போர்த்தொழில் பயிலலாம். ஆனால் அவற்றைப் பிழைப்பு தேடும் வழி ஆக்கிவிடக் கூடாது.)

“3. வர்ண அமைப்பு பிழைப்பு தேடும் வழியோடு தொடர்புடையது. ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவர் ஏனைய வர்ணங்களைச் சேர்ந்தவர்கள் தமது தனித் தேர்ச்சிக்குரியதாய்க் கொண்டிருக்கும் அறிவையோ, விஞ்ஞானம் -கலையையோ ஈட்டிக் கொள்வதால் எவ்விதத் தீமையுமில்லை. ஆனால் பிழைப்பு தேடும் வழியைப் பொறுத்த வரை, அவர் தம் வர்ணத்தின் தொழிலைத்தான் செய்தாக வேண்டும்; அதாவது அவருடைய மூதாதையர்களின் பரம்பரைத் தொழிலைத்தான் அவரும் செய்தாக வேண்டும்.

“4. வர்ண அமைப்பின் குறிக்கோள் போட்டா போட்டியையும் வர்க்கப் போராட்டத்தையும் வர்க்கப் போரையும் தடுப்பதாகும். நான்வர்ண அமைப்பில் நம்பிக்கை வைத்திருப்பது ஏனென்றால் அது ஆட்களின் கடமைகளையும் தொழில்களையும் நிர்ணயம் செய்து விடுகிறது.

“5. வர்ணம் என்பது ஒருவர் பிறப்பதற்கு முன்பே அவரது தொழில் நிர்ணயிக்கப்படுவதைக் குறிக்கின்றது.

“6. வர்ண அமைப்பில் தமது தொழிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் யாருக்கும் இல்லை. பரம்பரைதான் அவரது தொழிலை அவருக்காக நிர்ணயித்துக் கொடுக்கிறது”

படிக்க:
வரலாறு : பிர்லாவின் கரம்தான் காந்தியின் ஊடக அறம் !
காந்தியம் = அம்பானியம்!

பொருளாதார வாழ்க்கைத் துறைக்குத் திரும்புகையில் காந்தியார் இரு இலட்சியங்களை ஆதரிக்கிறார்:

இவற்றில் ஒன்று இயந்திர சாதனங்களை எதிர்ப்பதாகும். 1921இலேயே காந்தியார் இயந்திர சாதனங்களின் பால் தமக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தினார். 1921 ஜனவரி 19ஆம் தேதிய யங் இண்டியா ஏட்டில் எழுதுகையில் காந்தியார் சொன்னார்:

”முன்னேற்றத்தின் கடிகார முள்ளை நான் பின்னுக்கு இழுக்க விரும்புகிறேனா? ஆலைகளுக்கு பதில் கைநூற்பையும் கைநெசவையும் கொண்டு வர விரும்புகிறேனா? இருப்புப் பாதைகளுக்குப் பதில் நாட்டு வண்டிகளைப் பயன்படுத்தலாம் என்று நான் விரும்புகிறேனா? இயந்திர சாதனங்களை எல்லாம் அடியோடு அழித்து விட விரும்புகிறேனா? இந்தக் கேள்விகளைப் பத்திரிகையாளர் சிலரும் பொது வாழ்வில் இருக்கும் சிலரும் கேட்டிருக்கிறார்கள். எனது பதில் இதுதான்: இயந்திர சாதனங்கள் மறைந்து போகுமானால் அதற்காக நான் கண்ணீர் விட மாட்டேன். அதனை ஒரு கொடிய நிகழ்ச்சியாகக் கருதவும் மாட்டேன்.

தொடரும்
காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.

அடிக்குறிப்புகள்:
1காந்தி சிட்சன் தொடரின் இரண்டாம் பாகத்தில் எண் 18 ஆக மீண்டும் அது அச்சிடப்பட்டுள்ளது.
2 இப்பொருள் குறித்து காந்தியார் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து எடுகோள்கள் தரப்படுகின்றன. இந்தக் கட்டுரை வர்ண வியவஸ்தா என்ற நூலில் தரப்பட்டுள்ளது இந்நூலில் மூலமொழியாகிய குஜராத்தியிலேயே காந்தியாரின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

புத்தகக் குறிப்பு:

  • காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
    – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
  • மகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்
  • பக்கம்: 461 + 30
  • முதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998
  • வெளியீடு,
    தலித் சாகித்ய அகாதமி,
    சென்னை – 600 073.

3 மறுமொழிகள்

  1. ஆரம்பமே அருவருப்பு ஏற்படுகிறது – காந்தியின் மேல்

  2. //இந்தியாவில் சகோதரர்களின் குழந்தைகளுக்கிடையே திருமணம் செய்து வைப்பதில்லை. அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்பதால் ஒருவரை ஒருவர் நேசிக்காமல் போய் விடுகிறார்களா? வைணவர்களிடையே பல பெண்கள் குடும்பத்தவர்களோடு சேர்ந்து சாப்பிட மாட்டார்கள், ஒரு பொதுவான தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கவும் மாட்டார்கள் என்னும் அளவுக்கு வைதீகமாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பு எதுவுமில்லையா? சாதி அமைப்பானது வெவ்வேறு சாதிகளிடையே சேர்ந்து உண்ணுவதையோ கலந்து மணம் புரிவதையோ அனுமதிப்பதில்லை என்பதால் அந்த அமைப்பை மோசமானது என்று கூறி விட முடியாது.//

    ஆழமாக பார்த்தல் காந்தி சரியாக தானே கூறி இருக்கிறார்… ஒரு சாதியில் இருப்பவர் மற்ற சாதி பெண்ணை ஏன் தன சகோதரியாக நினைக்க கூடாது …

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க