Thursday, September 28, 2023
முகப்புகட்சிகள்காங்கிரஸ்யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்

யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்

-

காந்தியை பற்றி பாடப்புத்தகங்களிலும் பொதுவிலும் ஆளும்வர்க்க அடிபொடிகளால் சொல்லப்படும் கருத்துக்கள் தான் பொதுவெளியிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. காந்தி உண்ணாவிரதமிருந்தார், ராட்டை சுற்றினார் என்று மாணவர்களுக்கு, அஹிம்சை போதித்தார், சத்யாகிரகம் செய்தார், உண்ணாவிரதம் இருந்தார் என்றெல்லாம் வகுப்பெடுக்கப்படுகின்றது.

உண்ணாவிரதமிருந்தார் தான் ஆனால் யாருடைய நலனுக்காக? காந்தி போராடினாரா? போராட்டத்தை காட்டிக்கொடுத்தாரா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை பறிப்பதற்காக அம்பேத்கரை எதிர்த்து ஏன் உண்ணாவிரதமிருந்தார்? சாதி பற்றிய காந்தியின் கருத்து என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியது அவசியம்.

காந்தி பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் உண்மையானதா? என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தலைவர்களின் எழுத்திலும் பேச்சிலும் பார்க்கலாம். குறிப்பாக பார்பன இந்துமதத்தின் சாதிமுறைக்கு எதிராக இறுதிவரை போராடிய பெரியார், அம்பேத்கரின் எழுத்துக்களில் இருந்து தெரிந்து கொள்வதற்கு ஏராளமிருக்கின்றன.

காந்தி யாருக்கான தலைவர்?

பிரிட்டிஷாரை எதிர்த்த காந்தியின் போராட்ட நோக்கத்தை அம்பலப்படுத்துகிறார் பெரியார். ராஜாக்கள், ஜமீன்தார்கள், முதலாளிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் போராட்டத்தை கட்டியமைத்தவர் தான் காந்தி. பொதுவுடைமை கொள்கை செல்வாக்கு பெறாமல் இருப்பதற்காக காந்தியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய தேவை ஆங்கில அரசுக்கும், இந்திய முதலாளிகளுக்கும், ஜமீன்தார்களுக்கும், பார்ப்பன ஆதிக்க சாதிகளுக்கும் இருந்தது. அந்த புரவலர்களின் உதவியால் காந்தி மக்களை கட்டி போட்டதையும் முக்கியமாக அவரே இதை ஒப்புக்கொண்டதையும் அம்பலப்படுத்துகிறார் பெரியார்.

Periyarஇதோ காந்தி பற்றி பெரியாரின் சில கருத்துக்கள்:

“கடைசியாக என்ன நடந்தது? என்பதை சற்று சிந்திப்போம். முதல் மூச்சு (உப்பு) சத்தியாக்கிரகமானது பம்பாய் மில் முதலாளிகளினுடைய பண உதவியாலும், பார்ப்பனர்களுடைய பத்திரிகையின் உதவியாலும், பிரசார உதவியாலும் பதினாயிரக்கணக்கான மக்களை ஜெயிலுக்கு அனுப்ப முடிந்தும், கடைசியாக எதை எதிர்த்து சத்தியாக்கிரகம் துடங்கப்பட்டதோ அதிலேயே (சைமன் கமிஷனின் வட்டமேஜை மகாநாட்டிலேயே) தானாகவே போய் கலந்து கொள்ளுகிறது என்கின்ற நிபந்தனையின் மீது ராஜியாகியே எல்லோரும் ஜெயிலில் இருந்து வெளிவரவேண்டியதாயிற்று.

அதாவது “சட்ட மறுப்பை நிறுத்திக் கொள்ளுகிறேன், ராஜாக்களும் மகாராஜாக்களும் ஜமீன்தாரர்களும், முதலாளிமார்களுமாய் 100க்கு 90 பேர் கூடிப்பேசி இந்தியாவின் அரசியல் சுதந்திரங்களைத் தீர்மானிக்கப்போகும் வட்ட மேஜை மகாநாட்டில் நானும் கலந்து கொள்ளுகிறேன், அதுவும் அவர்களுடைய நிலைமைக்கு அதாவது அந்த ராஜாக்கள், மகாராஜாக்கள், ஜமீன்தாரர்கள் முதலாளிமார்களுடைய இன்றைய நிலைமைக்கு எவ்வித குறைவும் ஏற்படாதபடி தீர்மானிக்கப்போகும் கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறேன்” என்பதாக ஒப்புக்கொண்டு “ராஜாஜி” பேசித்தான் ஜெயிலில் இருந்து விடுதலை யாக வேண்டியிருந்தது.

……புதிய சீர்திருத்தம் என்பது அதன்பாட்டுக்கு தானாகவே சைமன் கமிஷன் தீர்மானித்தபடி அல்லது ஒரு வழியில் சற்று அதிகமானால் மற்றொரு வழியில் சற்று குறைந்து ஏதோ ஒரு வழியில் அரசாங்கத்தாருக்கும் முதலாளிமார்களுக்கும் சுதேச ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், பெரிய உத்தியோ கஸ்தர்கள், பார்ப்பனர்கள் ஆகியவர்களுக்கும் எவ்வித மாறுதலும் குறைவும் இல்லாமலும் அவர்களுக்கு என்றென்றைக்கும் எவ்வித குறையும் மாறுதலும் ஏற்பட முடியா மலும் ஒரு சீர்திருத்தம் வரப்போகின்றது – வந்தாய் விட்டது என்பது உறுதி.

இந்த சீர்திருத்தமானது பெரிதும் பணக்காரக் கூட்டமும், சோம்பேறிக் கூட்டமுமே நடத்திவைக்கத் தகுந்த மாதிரிக்கு இப்பொழுதிருந்தே பிரசாரங்கள் நடந்தும் வருகின்றன. ஆகவே ஏதோ ஒரு வழியில் அந்த வேலை முடிந்து விட்டது. இனி இந்த நிலையில் அரசியல் மூலம் ஏழைகளுக்கு ஏதாவது ஒரு சிறு பலனாவது உண்டாகும் என்று சொல்வதற்கில்லை.

இப்படி யெல்லாம் முடிந்ததற்கு ஏதாவது ஒரு இரகசியம் இருந்துதான் ஆகவேண்டும்.அந்த ரகசியம் என்ன?என்பதுதான் இந்த தலையங்கத்தின் கருத்து.

இவ்விதக் கிளர்ச்சிகளையெல்லாம் காங்கிரசின் பேரால் காந்தியவர்கள் சென்ற இரண்டு வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த காலத்திலேயே இதை (இந்த சட்ட மறுப்பு உப்பு சத்தியாக்கிரகம்) எதற்காக ஆரம்பிக்கின்றேன் தெரியுமா? என்று சர்க்காருக்கும் மற்றும் முதலாளிமாருக்கும், உயர்ந்த ஜாதியாராகிய சோம்பேறிக் கூட்டங்களுக்கும் தெரியும்படியாக, ஒரு விளம்பரம் வெளிப்படுத்தி இருக்கிறார். அவ்விளம்பரம் என்ன என்று ஞாபகப் படுத்திப் பார்த்தால் இதன் இரகசியம் இன்னதென்று விளங்கிவிடும்.அதென்னவென்றால்,

நான் இன்று இந்தக்கிளர்ச்சி (உப்பு சத்தியாக்கிரகம்) ஆரம்பிக்கா விட்டால் இந்தியாவில் பொது உடமைக் கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். ஆகையால் (அதை அடக்கவும் மக்கள் கவனத்தை அதில் செல்லவிடாதபடி வேறு பக்கத்தில் திருப்பவும்) இதை (உப்பு சத்தியாக்கிரகத்தை) ஆரம்பிக்கின்றேன்என்று சொல்லியிருக்கிறார்.

அன்றியும் இவ்வித கிளர்ச்சிகளால் சர்க்காருக்கு ஏதாவது கெடுதி ஏற்பட்டதா அல்லது அவர்களின் நிலைமைக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா என்று பார்த்தால் யாதொரு குறைவும் ஏற்பட்டுவிடவில்லை. அதுபோலவே தோழர் காந்திக்கும் ஏதாவது கெடுதியோ குறைவோ ஏற்பட்டதா என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறிதுமில்லை. அதற்கு பதிலாக காந்திக்கு உலகப் பிரசித்தமான பெரிய பேர் ஏற்பட்டு விட்டது. உலகத்திலுள்ள பாதிரிகளும் செல்வவான்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் புகழ்ந்த வண்ணமாகவே இருக்கிறார்கள். காந்தியவர்கள் சிறைப்பட்டதிலாவது அவருக்கு ஏதேனும் கெடுதி ஏற்பட்டதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. சிறையில் அவருக்கு ராஜபோகத்தில் குறைவில்லை.

அவருடைய உபதேசத்தைக் கேட்க ஜெயில் வாசற்படியில் எப்போதும் ஆயிரக்கணக்கான பேரும் அவருடைய தரிசனையைப் பார்க்க எப்போதும் பதினாயிரக்கணக்கான பேரும் நின்ற வண்ணமாய் இருந்ததோடு இருக்கிறதோடு இந்தியாவிலுள்ள முதலாளித்தன்மை கொண்ட பத்திரிகைகள் எல்லாம் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் அரைவாசிப் பாகத்துக்கு மேலாகவே காந்தியின் புகழும், அவரது திருவிளையாடல்களும், அவரது உபதேசங்களுமாகவே நிரப்பப்படுகின்றன. அவரது அத்தியந்த சிஷ்யர் களுக்கும் யாதொரு குறைவுமில்லை. சென்ற விடமெல்லாம் சிறப்புடனே பதினாயிரக் கணக்கான கூட்ட மத்தியில் வரவேற்று உபதேசம் கேட்கப் படுவதாகவேயிருக்கின்றன. காந்தி அவர்களது குடும்பத்துக்கும் யாதொரு குறைவும் இல்லை. அவர்களுக்கும் அது போலவே நடைபெறுகின்றன.

ஆனால் போலீசார் கைத்தடியால் அடிபட்டு உதைபட்டு அறைபட்டு மயங்கிக் கிடந்தவர்களுக்கும், காயப்பட்டவர்களுக்கும், சிறையில் சென்று கஷ்டப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது? என்று பாருங்கள். ஜெயிலிலும் பணக்காரனுக்கும் சோம்பேறிகளுக்கும் ஏ.பி. வகுப்புகளும் பாடுபடுகின்ற கூட்டத்திற்கு சி. வகுப்புமாய்த்தான் இருந்தது. (இதற்காக தோழர் காந்தி ஒரு நேரம் பட்டினி இருந்திருப்பாரானால் ஜெயிலிலும் இந்தக்கொடுமை இருந்திருக்க முடியுமா? அதுவேறு சங்கதி) ஆகவே ஒரு அறிவாளி நடுநிலைமையாளி இந்த சுமார் 2 வருஷ காலமாக இந்தியாவில் நடைபெற்ற காந்தி திருவிளையாடல்களை நன்றாய் கூர்ந்து கவனித்து இருப்பானே யானால் தோழர் காந்தி பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு என்று சொல்லப்படும் முதலாளி ஆதிக்கத்திற்கு ஒரு ஒற்றராக கவர்ன்மெண்டாருடைய ஒரு இரகசிய அனுகூலியாக இருந்து வந்தவர் என்றும் ஏழை மக்கள் சரீரத்தால் பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு துரோகியாய் இருந்து வந்திருக்கிறார் என்றும் சொல்ல வேண்டுமே ஒழிய வேறு ஏதாவது சொல்லமுடியுமா? என்று கேட்கின்றோம்.

பணக்காரனும் சோம்பேறியும் காந்தியை புகழ்கின்றான். வெளிநாட்டுப் பாதிரியும் பணக்காரனும் ஆதிக்கத்தில் இருப்பவனும் காந்தியைப் புகழ்கின்றான். சர்க்காரும் அவருக்கு மரியாதை காட்டுவதுடன் அவருக்கு இன்னமும் அதிக செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட வேண்டிய தந்திரங்களை யெல்லாம் பாமர ஜனங்களுக்கு தெரியாமல் படிக்கு செய்து கொண்டும் வருகின்றன.

இவைகளைப் பார்த்தால் எந்த மூடனுக்கும் இதில் ஏதோ இரகசியமிருக்க வேண்டும் என்று புலப்பட்டு விடும்.

Gandhiஏனெனில், நாளைய தினம் தோழர் காந்தியவர்கள் “இந்த சர்க்காரோடு நான் ஒத்துழைக்க வேண்டியவனாகி விட்டேன். ஏனெனில் சட்டசபைகள் மூலம் அனேக காரியங்கள் ஆக வேண்டியிருக்கின்றது. ஆதலால் ஒத்துழையுங்கள் இல்லா விட்டால் பொது உடமைக்காரரும் சமதர்மக்காரரும் சட்ட சபையைக் கைப்பற்றி தேசத்தை – மனித சமூகத்தை பாழாக்கி விடுவார்கள்.” என்று (மதராஸ் காங்கிரசுக்காரர் “ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க சட்ட சபைக்கு போய் மந்திரிகளை ஆதரிக்க வேண்டியிருந்தது” என்று சொன்னது போல்) சொல்லுவாரேயானால் (சொல்லப் போகிறார்) அப்போது ஜனங்கள்பாமர ஜனங்கள் யாதொரு முணு முணுப்பும் இல்லாமல் உடனே கீழ்படிவ தற்குத் தகுந்த அளவு காந்திக்கு எவ்வளவு செல்வாக்கும் பெருமையும் வேண்டுமோ அவ்வளவும் ஏற்படுத்த வேண்டியது இன்று சர்க்கார் கடமையாய் இருந்து வருகின்றது.

இவ்வளவோடு நிற்கவில்லை காந்தியின் புண்ணிய கைங்கரியம். மற்றும் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாகிய உழைப்பாளிகளான தீண்டாத வகுப்பார் என்பவர்கள் எப்படியோ முன்னுக்கு வருவதான ஒரு வழியை அடைந்தவுடன் அவர்களையும் என்றென்றும் உழைப்பாளிகளாகவே ஊராருக்காக கஷ்டப்படும் மக்களாகவே இருக்கும்படியான மாதிரிக்கு அவர்களை ஹரிஜனங்கள் என்னும் பேரால் ஒரு நிரந்தர ஜாதியாராக்கி வைக்கவேண்டிய ஏற்பாடுகளும் நடக்கின்றன. அதைப்பற்றி தோழர் அம்பெத்காரின் அறிக்கையும்-காந்தியாரின் மறுமொழியும் தமிழ்நாடு பத்திரிகையின் தலையங்கமும் ஆகிய சுருக்கங்களை மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். அதைப்பார்த்தால் ஒரு அளவுக்கு விளங்கும்.

காந்தியாரின் சுயராஜ்ஜியக் கொள்கைகளில் முக்கியமானது வருணாச் சிரமதர்மமும், ஜாதிமுறையும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதாகும். ‘காந்தியின் வருணாச்சிரம கொள்கைக்கு வேறு அருத்தம்’ என்று சிலர் சொல்லுவதானாலும் அந்த வேறு அர்த்தம் இன்னது என்பதை காந்தியாரே பல தடவை சொல்லியிருக்கிறார் அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு வருணம் பிறவியில் உண்டு என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் முறையே அறிவு பலம் வியாபாரம் சரரத்தினால் உழைப்பு ஆகியவைகளிலேயே ஈடுபடவேண்டியவர்கள் என்றும் சொல்லுகிறார். ஜாதி முறைக்கும் காந்தியார் கூறும் தத்துவார்த்தமானது தொழில்களுக்காக ஜாதிமுறை ஏற்பட்டதென்றும் அந்த ஜாதி முறையும் பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அந்தந்த ஜாதியானுக்கு ஒரு பிறவித் தொழில் உண்டென்றும் அந்தந்தத் தொழிலையே-அவனவன் ஜாதிக்கு ஏற்ற தொழிலையே அவனவன் செய்து தீர வேண்டும் என்றும் சொல்லுகின்றார்.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் “இந்தமாதிரியான வருணாச்சிரம மர்ம முறையையும், ஜாதி முறையையும் நிலைநிறுத்தவே சுயராஜ்ஜியத்திற்கு பாடுபடுகிறேன்” என்றும் கூறுகிறார். இந்த முறையில் காந்தியாரால் யாருக்கு லாபம் யாருக்கு சுகம் என்பதையும் யாருக்கு நஷ்டம், யாருக்கு கஷ்டம் என்பதையும் வாசகர்களையே சிந்தித்துப் பார்த்து முடிவு செய்துகொள்ளும்படி விட்டுவிடுகின்றோம். ஆகையால் காந்தியாரின் அரசியல் கிளர்ச்சியின் ரகசியமும் தீண்டாமை விலக்கு கிளர்ச்சியின் ரகிசியமும் இப்போதாவது மக்களுக்கு வெளியிட்டதா இல்லையா என்று கேட்கிறோம். தலையங்கம் நீண்டுவிட்டதால் வருணாச் சிரமத்தைப்பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.

குடி அரசு – தலையங்கம் ரகசியம் வெளிப்பட்டதா- 19.02.1933

காந்தியின் இரட்டை நாக்கு பற்றி

ஆளும வர்க்க நலனை காப்பாற்றி வந்த காந்தி ஆளும் வர்க்க நலனில் எந்த துரும்பு விழுவதையும் அனுமதிக்கவில்லை.இதற்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசுவது போல பேசி அதை  ஆளும் வர்க்க நலனுக்கு திருப்பிவிட்டார். இதை பெரியார் அவருக்கே உரிய பாணியில் நேரு பற்றிய ஒரு சம்பவம் மூலம் அம்பலபடுத்துகிறார்.

நேரு ஒரு லண்டன் நிருபருக்கு அளித்த பேட்டியில்  பொதுவுடைமை கொள்கையை தான் ஆதரிப்பதாகவும் ஆனால் இப்போது ஜனங்கள் எல்லோரும் பொதுவுடைமை எனக் கருதும் கொள்கையை தான் ஆதரிக்கவில்லை என்றும் அத்தகைய பொதுவுடைமை கட்சியை தான் சேர்ந்தவன் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்ததை சுட்டி காட்டி பின்வருமாறு எழுதுகிறார் தந்தை பெரியார்.

நேரு, காந்தி, பட்டேல்
நேரு, காந்தி, பட்டேல்

“இது உண்மையானால் தோழர் ஜவஹர்லாலுக்கு இந்த குணம் காந்தியாரின் சகவாசத்தால் ஏற்பட்ட குணம் என்று தான் சொல்ல வேண்டும். தோழர் காந்தியார் தான் இரு கூட்டத்தாடையும் நல்ல பிள்ளையாவதற்கு இவ்வித தந்திர மொழிகள் கூறி இரு கட்சியாரையும் ஏமாற்றி பெருமை அடைவதை அனுசரித்து வருகிறார். உதாரணமாக

“வர்ணாசிரம தர்மம் வேண்டும் அனால் எனது வர்ணாசிரமம் வேறு” என்பார்,

“ராம ராஜ்யத்க்காக நான் பாடுபடுகிறேன் ஆனால் எனது ராமன் வேறு” என்பார்

“ஜாதி பாகுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் ஜாதி என்பதற்கு எனது கருத்து வேறு”  என்பார்,

“ராஜாக்கள்,ஜமீன்தார்கள் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஏழைகளுக்காக இருக்கவேண்டும்” என்பார்,

“பிரிட்டிஷாருக்கு இந்திய அரசியலில் சில பாதுகாப்புகள் இருக்க வேண்டு. ஆனால் அது இந்தியாவின் நன்மைக்காக இருக்க வேண்டும்” என்பார்,

“ஏழைகள்,  தொழிலாளர்கள் ஷேமமாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பெட்டியில் பணம் இருக்க கூடாது”  என்பார்,

“தீண்டாமை ஒழிய வேண்டும் .ஆனால் தீண்டப்படாதவரகள் சூத்திரர்களுக்கு சமானமாய் கருதப்படவேண்டு” என்பார்,

தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலுக்குள் சமஉரிமை இருக்க வேண்டும். ஆனால் கோவிலுக்குள் சூத்திரர்கள் இருக்கும் இடத்தில் தான் அவர்கள் இருக்க வேண்டு” என்பார்

இந்தப்படி எந்த விசயமானாலும் “ஆனால்” போட்டு திருப்பிவிடுவது அவரது சாமர்த்தியம் என்பதை தோழர் காந்தியாரை ஒரு மனிதர் என்று கருதியிருக்கும் யாவரும் அறிவார்கள்.

– ஜவர்லாலும் பொதுஉடைமையும், புரட்சி – தலையங்கம் –    17.12.1933

 நாங்கள்  தேசபக்தர்கள் ஆனால் பன்னாட்டு முதலாளிகளுக்கு நாட்டை விற்பது தான் ஒரே வழி, வேலைவாய்ப்பை பெருக்குவோம் ஆனால் அடிமையாக வேலை செய்யவேண்டும் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவோம்  என்றூ இன்று பல வகைகளில்  காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகள் காந்தியின் வாரிசுகளாக மக்களை தாக்கி கொண்டிருக்கிறார்கள்.

காந்தியின் சமகாலத்திலேயே கூட காந்தி ஜெயந்தியை கொண்டாடியிருக்கிறார்கள். அதை குறித்தும் பெரியர் எழுதியிருக்கிறார். காந்தியின் பார்ப்பனிய வர்ணாசிரம் ஆதரவு கருத்துகளை தொகுத்து கூறிவிட்டு, சுயமரியாதை உள்ள எவனும் காந்தி ஜெயந்தி கொண்டாட மாட்டான் என்கிறார் பெரியார்.

காந்தி ஜெயந்தி பற்றி பெரியார்

“கிருஷ்ண ஜெயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜெயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு அநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன.

……அன்றியும் மனித சமூகத்திய இயற்கை சக்திகளையெல்லாம் பாழாக்கி இயற்கையான வழிகளையெல்லாம் அடைத்துச் செல்வவான்களையும், சூட்சிக்காரர்களையும் (பார்ப்பனர்களையும்) சுவாதீனப்படுத்திக் கொண்டு காரியத்துக்கு உதவாத வழிகளில் மக்களைத் திருப்பி மனித சமூகத்தைப் பாழாக்கி வைத்த பெருமையை என்றென்றும் கொண்டாடுவதற்கு அறிகுறியாய் காந்தி ஜெயந்தி வருஷா வருஷம் கொண்டாடுவதென்றால் இதன் அக்கிரமத்திற்கு எப்படித்தான் பரிகாரம் செய்வது என்பது நமக்கு விளங்க வில்லை.

தோழர் காந்தியாருக்கு இன்று ஜெயந்தி கொண்டாடுவதற்கு வேண்டிய யோக்கியதை வந்ததற்குக் காரணம் (இவரால் இதுவரை மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படவில்லை என்றாலும்) பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் இருந்து வந்த காரணமே ஜெயந்தி கொண்டாடும் யோக்கியதையை சம்பாதித்து கொடுத்து விட்டது. நமது நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கும் அபார சூழ்ச்சித் தன்மைக்கும் அற்புத புரட்டுத் தன்மைக்கும் இந்த காந்தி ஜெயந்தி ஒரு பெரும் உதாரணமாகும். இன்று ஜெயந்தி கொண்டாடத்தக்க “பெரியோர்கள்” எல்லாம் இந்த யோக்கியதை அடைந்தவர்கள் தான் என்பதும் விளக்க இது ஒரு உதாரணமாகும்.

கம்ப ராமாயணத்தில் ஆரம்பத்தில் கம்பன் பார்ப்பனர்களுக்குச் சொன்ன காப்பு விருத்தத்தின்படியே தோழர் காந்தியாரும் பார்ப்பனர்களை உயர்த்தி அவர்களுக்கு அடி பணிந்து வந்ததாலேயே இன்று காந்தி ஜெயந்தி நடந்து வருகிறது. அதாவது,

“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்,
நிலை பெறுத்தலும் நீங்கலு நீங்கிலா,
அலகிலா விளையாட்டுடையா ரவர்,
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”

என்ற பாட்டுப்பாடியே தூணைத் துரும்பாக்கவும், துரும்பைத் தூணாக்கவும் உள்ள பார்ப்பன சக்தியில் இன்று எவ்வளவோ காரியங்கள் அஸ்திவாரம் சிறிதுகூட இல்லாமல் நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த காந்தி ஜெயந்தி.

…….தவிர, தோழர் காந்தியாருக்கு ஜெயந்தி கொண்டாடும் விஷயத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு கடுகளவு புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ இருந்திருக்குமானால் பார்ப்பனரல்லாதார் இதில் கலந்து கொள்ளமுடியுமா? என்பதை வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்க வேண்டும். ஜாதி பாகுபாடு (வருணாச்சிரமம்) விஷயத்தில் தோழர் காந்தியவர்கள் பார்ப்பனரல்லா தாருக்கு நிரந்தர இழிவை உண்டாக்கி இருக்கும் விஷயமும், ஹரிஜன இயக்கம் என்னும் பேரால் செய்துவரும் சூட்சியும் பார்ப்பனரல்லாத மக்கள் தெரியாது என்று சொல்லிவிடமுடியாது. வருணாச்சிரம தர்மத்தை ஆதரிப்பதினாலும் உறுதிப்படுத்துவதினாலும் பார்ப்பனரல்லாதார் நிலை என்னவா கின்றது?

800px-Gandhi_spinning-EDஅன்றியும் “ஹரிஜன முன்னேற்ற” விஷயத்தில் காந்தியார் தனது வாக்கு மூலத்தில் குறித்தது என்னவென்றால்,

கோவில், குளம், கிணறு, பள்ளிக்கூடம் முதலியவைகளில் பிராமணரல்லாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள சலுகைகள் அனைத்தும் தீண்டப் படாத வர்களுக்கு ஏற்படவேண்டும்”.

இதுவரை தீண்டப்படாதவர்களாகக் கருதப்படுபவர்கள் இனி சூத்திரராகக் கருதப்படுவார்கள்

தீண்டாமை ஒழிந்தபின் பிராமணர்களுக்கும் தீண்டாதவர்களுக்கும் எப்படிப்பட்ட சம்மந்தம் எப்படிஇருக்குமென்றால் பிராமணர்களுக்கும், பிராமணரல்லாதார்களுக்கும் இருந்துவரும் சம்மந்தம் போலிருப்பார்கள்”.

வருணாச்சிரமதர்மத்தை மதத்தின் தத்துவக் கொள்கைகளுக்கு ஏற்றபடி சீர்திருத்தம் செய்யப்படவேண்டும்

என்று சொல்லியிருக்கிறார்.

இது “ஜெயபாரதி” என்னும் பத்திரிகையின் காந்தி ஜெயந்தி மலர் 9-ம் பக்கத்தில் காந்தியாரின் வாழ்க்கைச் சம்பவ நிகழ்ச்சி என்ற தலைப்பின் கீழ் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

இதைப்பற்றி முன்பு ஒருதடவை எழுதியும் இருக்கிறோம். பார்ப்பனரல்லாத தேசீயவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இரண்டொருவர்கள் இடமும் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்தும் இருக்கிறோம். ஆனால் அவர்கள் தேசம் பெரியதேயொழிய தேசத்தில் தன்னுடைய நிலைமை எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் போலவே காட்டிக் கொண்டார்கள்.

மானத்தை விற்று மனிதத் தன்மையை இழந்து வாழ்ந்து தீரவேண்டிய அளவு சோம்பேறிகளும், கோழைகளுமானவர்களுக்குத் “தேசம் பெரிது” என்கின்ற சாக்கு ஒரு உற்ற தோழனாய் இருந்து வருகின்றது, வந்தும் இருக்கிறது என்று கருதிக்கொண்டு அந்த சம்பாஷணையை நிறுத்திக் கொண்டோம்.

ஆகவே இப்படிப்பட்ட நிலையில் பார்ப்பனரல்லாதவர்களை நிரந்தரமாய் வைக்கப்பாடுபட்ட ஒரு மகானின்ஜெயந்திக்குப் பார்ப்பனரல்லாதார் கூடியிருந்து கொண்டாடுவதென்றால் இதற்கு என்னபேர் வைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. விஷயம் இவ்வளவோடு முடியவில்லை. ஏனென்றால் காந்தி ஜெயந்தியை விட மானமற்றதும், இழிவானதும் மடமை யானதுமான ஒரு காரியமாகிய தீபாவளி என்னும் ஒரு பண்டிகையையும் நாளை கொண்டாடப்போகும் சுயமரியாதை அற்ற தன்மை, காந்தி ஜெயந்திக்கு ஒரு உதாரணமாகும்.”

குடியரசு – தலையங்கம் – 15.10.1933

திரு.காந்தியின் உண்மை தோற்றம் – தொழிலாளிகளை எச்சரிக்க்கும் பெரியார்

கிராமவாசிகள் செருப்புத் தைக்க வேண்டுமாம்! ஆடு, மாடுகள் மேய்க்க வேண்டுமாம்! இராட்டினத்தில் நூல் நூற்க வேண்டுமாம்! கைத்தறியில் நெசவு நெய்ய வேண்டுமாம்! ஆனால் பம்பாய்வாசிகள் கோடீஸ்வரர்களாகி, அதற்கு தகுந்த போகபோக்கியங்களை அனுபவிக்க வேண்டுமாம்! இதுதான் சுயராஜ்ஜியத்திட்டமாம்! ஆகவே இந்தப்படியான மனோபாவங் கொண்ட திரு. காந்தியைப் “பாரத நவஜவான்” உண்மை வீரர்கள் “காந்தி ஒழிக!” “காந்தீயம் ஒழிக!!” “காங்கிரஸ் ஒழிக!!!” என்று சொன்னதிலென்ன தப்பிதமிருக்கின்றது?

காந்திக்கு வேண்டுமானால், காந்தீயமென்பதில் நம்பிக்கையிருக்கலாம். ஆனால், நமக்கு இப்படிப் பட்ட காந்தீயம், ஒழிய வேண்டுமா? வேண்டாமா? ஒழியாமல் சமதர்மம் ஏற்படுமா? என்று கேட்கின்றோம். “திரு. காந்தி, இந்தியாவை வெள்ளைக்கார ஆட்சிக்கு முன்னிருந்த பழைய அதாவது ஆதிகாலத்து இந்தியாவுக்குக் கொண்டு போகப் பார்க்கின்றார்”என்று திருவாளர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள் சொன்னதிலென்ன தப்பிதமிருக்கின்றது? என்று கேட்கின்றோம்.

“ருசியப் பொதுவுடைமைக்காரர்கள்” “இந்திய கிராம வாசிகளுக்கும், தொழிலாளிகளுக்கும், திரு. காந்தி அவர்கள் ஒரு பெரிய துரோகி” என்றும், “காங்கிரஸ், தொழிலாளிகளுக்கும், பாமர மக்களுக்கு மேற்பட வேண்டிய முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டை” என்றும் சொன்னதிலென்ன தப்பிதமிருக்கின்றதென்று கேட்பதுடன் நாமிதுவரை சொல்லி வந்த விஷயங்களிலெந்த வெழுத்துக் குற்றமானதென்றும் கேட்கின்றோம்.

…………மதத்தில் பார்ப்பனன் – பறையனென்கின்ற இருபாகுபாடுகளும் ஒழிவதற்கு இருவருடைய கூட்டமுமொழிந்தாக வேண்டுமென்று எப்படி விரும்புகின்றோமோ, அப்படியேதான் சமூக வாழ்வு என்பதிலும், முதலாளி – தொழிலாளியென்பதாகிய பாகுபாடுமடியோடொழிவதற்கு இரு பெயரையுடைய இரு கூட்டமுமொழிந்தாக வேண்டு மென்கிறோம். ஏனென்றால் முதலாளி – தொழிலாளி என்கின்ற பதமே, வைசிய – சூத்திர என்று சொல்லப்படும் வருணாச்சிரம தர்மக் கொள்கைக்கு ஏற்படுத்தப் பட்டதேயாகும்.

வைசியன்- சூத்திரனென்பது வடமொழிப் பதங்கள். அதாவது சமஸ்கிருத வார்த்தைகள். முதலாளி – தொழிலாளியென்பது தென் மொழி பதங்கள். அதாவது தமிழ் வார்த்தைகள். ஆகவே இவ்விரண்டிலும், பாஷை வித்தியாச மென்பது மாத்திரம் தவிர கருத்து வித்தியாசமென்பது சிறிது மில்லையென்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

சூத்திரனென்றால், சரீரத்தில் வேலை செய்பவன் – முதல் மூன்று பேருக்கும் தொண்டு செய்பவன் – அடிமை யென்பவைகளே, அதையுண்டாக்கியவர்களின் வியாக்கியானமாகும். அதுபோலவே தொழிலாளியென்றாலும். சரீரத்தில் வேலை செய்பவன் – மற்றவர்கள் அவசியத்திற்கும், வாழ்க்கையின் தேவைக்குமே வேலை செய்யும் வேலையாள் – தொண்டன் யென்பவைகளேயாகும்.

அவனுக்கும் உணவுமட்டுந்தானளிக்க வேண்டும். இவனுக்கும், ஜீவனத்திற்குப் போதுமான அளவுதான் ஏதாவது கொடுக்க வேண்டும். ஆகவே, இந்தப் பாகுபாடுகளை சனாதன மகாநாட்டிலும், ஆரியதரும பரிபாலன மகாநாட்டிலும், பிராமண மகாநாட்டிலும், பேசும்போது “மனு தர்மம்” “வருணாச்சிரமபாதுகாப்பு” ஆகிவிடுகின்றது. இவைகளை விட்டு காங்கிரஸ் மகாநாட்டிலும், அரசியல் மகாநாட்டிலும் பேசும்போது “சுயராஜியம்”, “முதலாளி – தொழிலாளித்தன்மை பாதுகாப்பு” ஆகிவிடுகின்றது. ஆகவே இரண்டு மகாநாடுகளிலும், ஒரே கருத்தின் மீதுதான், ஒரே மனப்பான்மை யுள்ள மக்களால் தான் பேசப்பட்டும், தீர்மானிக்கப்பட்டும் வருணாச் சிரமதர்மம் வெற்றி பெற்று வருகின்றது.

இந்தத் தருமம் வியாபார முறையில் மாத்திரமல்லாமல், விவசாய முறையிலுமிந்தக் கருத்துடனேயே தானிருந்து வருகின்றது. அதாவது, ஜமீன்தாரன் மிராசுதாரன் யென்பவர்களாகின்ற பூமிக்குச் சொந்தக் காரர்களும், விவசாயத்தொழில் செய்யும் கூலியும், அதாவது பண்ணையும்- பண்ணையாளுமாகிய இரண்டு பிரிவுகளும் கூட வைசியன்- சூத்திரனென் கின்றப் பதங்களின் – தத்துவத்தின் கருத்தேயாகும். அதனால்தான், வருணாச் சிரம தரும முறையில் பூமியுடையவர்களையும், வைசிய வருணத்திலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றது. அதனாலேயேதான். திரு. காந்தியும், பூமியுடைவர் களையும் அதாவது ஜமீன்தாரர்கள் முறைமையையும் காப்பாற்றப்பாடுபடுகின்றேனென்று அடிக்கடி சொல்லிவருகிறார்.

உதாரணமாக, அதே 12ந் தேதி “சுதேசமித்திரன்” பத்திரிக்கையின் 5-வது பக்கம் 6-வது கலத்தில் “மகாத்மாவும் இனாம்தாரர்களும்” என்கின்ற தலைப்பின் கீழ் தனது கருத்தை விளக்கமாய் தெரிவித்திருக்கின்றார்.

அதாவது, ஜமீன்தாரர்களின் கோஷ்டியொன்று, தங்களுடைய நன்மைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காக திரு. காந்தி அவர்களை, இம்மாதம் 10-ந் தேதி பம்பாயில் கண்டு கேட்ட பொழுது, “ஜமீன்தாரர்க ளுடைய சொத்துரிமைகளுக்குத் தீங்கிழைக்க நான் கனவிலும் கருத வில்லையென்று சொல்லி யிருக்கிறார்.

இதனாலேயேதான் வருணாச்சிரமதருமம், பிறவியிலானாலும் சரி தொழில் முறைமையிலானாலும் சரி, அடியோடு ஒழிக்கப் பட்டாலொழிய சமதர்மமேற்பட முடியாதென உரைக்கின்றோம். ஆனால் திரு. காந்தியவர் களோ இந்த “வருணாச்சிரமமென்பதைத் தொழில் முறையில்தான் நான் சொல்லுகிறேன்” என்பதாகச் சொல்லிவிட்டு, உடனேயே அதற்கடுத்த வாக்கியத்தில் ஆனால் “தொழில் முறையென்பது பரம்பரைக்கிரமமாக இருக்க வேண்டு”மென்று சொல்லி வருகின்றார். இதற்கும் காரணம் சொல்லும் பொழுது இந்தப்படி அதாவது “தொழிலானது, பரம்பரைத்தொழில் முறையைக் கொண்டதாயிருந்தால்தான் உலகம் கிரமமாய் நடைபெற முடியும், தொழிலுமொழுங்காய் நடைபெறு”மென்று சொல்லி வருகிறார்.

ஆகவே, எந்தக் காரணத்தைக் கொண்டானாலும் சரி, எந்த முறை மையிலிருப்பதானாலும் சரி, வருணாச்சிரம தருமமென்பதை அடியோடு ஒழித்தாக வேண்டியதுதான் மக்களின் முக்கியக் கடமையாகும். வருணாச் சிரமமொழிந்த இடந்தான் விடுதலை – சமதர்ம நிலையமாகும்.

ஆதலால், முதலாளி – தொழிலாளி யென்கின்றத் தன்மை எக்காரணத்தைக் கொண்டும், எம்மாதிரியிலுமிருக்க விடக்கூடா தென்றேதான். பொது மக்களுக்கு நாம் யெடுத்துக் சொல்லுகிறோம்.

-குடி அரசு – தலையங்கம் – 21.06.1931

  1. காந்தியின் மறுபக்கம்:
    தென் ஆப்பிரிக்க தமிழர்கள் ரூபாய் 5000 வசூலித்து,பாண்டிச்சேரியில்
    சிரமத்துடன் வாழ்ந்து வந்த வா.வு.சி.யிடம் தரச் சொன்னார்கள்:வா.வு.சி கடிதம் எழுதினார், நேரில் பார்த்தார்….இன்று வரை ( அயோக்கிய) காந்தி பணத்தை வா.வு.சி.க்கு தரவில்லை…இதுதான் “காந்தி” கணக்கோ?

  2. பசியில் எல்லாவற்றை சாப்பிட்டுவிட்டு கடைசியில் போடும் பீடா போன்று இந்திய சுதந்திரத்துக்கு பாடு (?) பட்டார் இவர். அதுக்காக பீடா சாப்பிட்டதால் தான் வயிறு நிரம்பியது (சுதந்திரம் கிடைத்தது) அப்படிங்கிறது ரொம்பவே அதிகம். இவரை விட தலை சிறந்த போராட்டத்தில் உயிர்நீத்த தலைவர்கள் எவ்வளவோ பேர் உள்ளனர். வேறெந்த தலைவர் பக்கமும் மக்கள் திசை திரும்பக்கொடாது என்ற வைராக்கியம் உள்ளவர். (உதா: பகத்சிங் / நேதாஜி / படேல் / திலகர் / தமிழக தலைவர்கள்) இவ்வளவு உண்மையை அறிந்த பிறது இவர் படம் போட்ட ரூபாய் நோட்டை தொடும்போதே உடல் கூசுகிறது.

  3. உண்ணாவிரதம் இருந்தால் முதலாளியும் அரசாங்கமும் பயப்படும் என்று எப்படி ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது என்று எனக்கு ஆரம்பத்தில் இருந்தே காந்தியின் மீது ஒருவிதமான சந்தேகம் இருந்தது . கேப்டன் வடக்கியால் என்பவர் யூத புத்திசாலிகள் தான் என்கின்ற ஒரு தியரியை முன்வைத்து இருந்தார்

    பெரியார் பார்பன ஊடகங்கள் , முதலாளிகள் காரணம் என்கின்ற கருத்தை முன்வைக்கிறார் .
    எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் காந்தி ஒரு சரியான சந்தர்பத்தில் தோன்றி அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து மகான் ஆகிவிட்டார்.

    //“தீண்டாமை ஒழிந்தபின் பிராமணர்களுக்கும் தீண்டாதவர்களுக்கும் எப்படிப்பட்ட சம்மந்தம் எப்படிஇருக்குமென்றால் பிராமணர்களுக்கும், பிராமணரல்லாதார்களுக்கும் இருந்துவரும் சம்மந்தம் போலிருப்பார்கள்”.//

    இவ்வளவு கேவலமான ஆளா!

    நிறைய தகவல்களுடன் மிகவும் சிறப்பான கட்டுரை

  4. பெரியார் எவ்வளவு கூர்மையாக எல்லாவற்றையும் பரிசீலிக்கிறார் என்பதைக் காணும் போது அவர் மேல் உள்ள மதிப்பு மேலிடுகிறது! காந்தியின் இரட்டை நாக்கு தந்திரத்தை விளக்கும் கீழ் காணும் வரிகளின் நுட்பமும் செறிவும் அவரது எழுத்து வன்மைக்கு பெரும் சான்றாக இருக்கின்றது.

    “வர்ணாசிரம தர்மம் வேண்டும் அனால் எனது வர்ணாசிரமம் வேறு” என்பார்,

    “ராம ராஜ்யத்க்காக நான் பாடுபடுகிறேன் ஆனால் எனது ராமன் வேறு” என்பார்

    “ஜாதி பாகுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் ஜாதி என்பதற்கு எனது கருத்து வேறு” என்பார்,

    “ராஜாக்கள்,ஜமீன்தார்கள் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஏழைகளுக்காக இருக்கவேண்டும்” என்பார்,

    “பிரிட்டிஷாருக்கு இந்திய அரசியலில் சில பாதுகாப்புகள் இருக்க வேண்டு. ஆனால் அது இந்தியாவின் நன்மைக்காக இருக்க வேண்டும்” என்பார்,

    “ஏழைகள், தொழிலாளர்கள் ஷேமமாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பெட்டியில் பணம் இருக்க கூடாது” என்பார்,

    “தீண்டாமை ஒழிய வேண்டும் .ஆனால் தீண்டப்படாதவரகள் சூத்திரர்களுக்கு சமானமாய் கருதப்படவேண்டு” என்பார்,

    தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலுக்குள் சமெளரிமை இருக்க வேண்டும். ஆனால் கோவிலுக்குள் சூத்திரர்கள் இருக்கும் இடத்தில் தான் அவர்கள் இருக்க வேண்டு” என்பார்

    இந்தப்படி எந்த விசயமானாலும் “ஆனால்” போட்டு திருப்பிவிடுவது அவரது சாமர்த்தியம் என்பதை தோழர் காந்தியாரை ஒரு மனிதர் என்று கருதியிருக்கும் யாவரும் அறிவார்கள்.

    அய்யா நீங்கள் பெரியார்!!!!

  5. மோகன் தாஸ் கரம்ச்ந்த் காந்தி, அவரே தனது சுய சரிதையில் கூறிக்கொள்வது போல, மிக சராசரி மனிதரே! அப்போது அவரிடம் இருந்த ஒரேநல்ல குணம், அவரது தாயின் மேல் இருந்த பாசம் தான்! த்ந்தையின் மரணத்தின்போது அருகிலிருக்க முடியாததின் குற்ற உணர்வு, அவரின் தாய்ப்பாசத்தை இன்னும் அதிகமாக்கியது! தாயின் சொல்லுக்கு கட்டுபட்டே , லண்டனில் மது, மாது, மாமிசம் விலக்கி படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார்!

    படிப்பு முடிந்து இந்தியா வந்த அவருக்கு ரத்தன் டாடா குழுமத்தில், அவர்களின் குடும்ப வியாபார வழக்கை கவனிக்க தென்னாப்பிரிக்கா சென்றார்! வழக்கு என்னவானதோ, முதன் முறையாகநிற வெறியின் கோர முகத்தை கண்டார்! தில்லையாடி வள்ளியம்மையின் தீரத்தையும், அகிம்சை போராட்டத்தின் வலிமையையும் கண்டார்!

    இந்தியா திரும்பியதும், டாடா, திலகர் தலைமையிலான இந்து மகா சபா, இவரை தன க்கு சாதகமாக பயபன்படுத்தி கொண்டது! அவரின் தென்னாட்டு பயணம், அம்பேத்கர், பெரியார் முதலிய தலைவர்களின் தாக்கம் அவரை பாதிதது உண்மை! ஆனால் மதவாதிகளின் பிடிலிலிருந்து விடுபட்டு சுயமாக செயல்பட அவருக்கு வெகுகாலம் பிடித்தது! தாழ்த்தப்பட்டவர்களையும், இச்லாமியர்களையும் வெறுக்கும், இந்து மத தீவிரவாத கும்பலிடமிருந்து, இந்தியாவை காப்பாற்ற , படித்த பண்டிதநேரு அவர்களால் மட்டுமே முடியும் என்ற கருத்து அவரிடம் வலுவாக வேரூன்றிவிட்டது!

    அவ்ர் நல்ல மனிதரே! அம்பேத்கருடன் பேசி தீர்வு காண முடியாமல், உண்ணாவிரதமிருந்து வென்றார்! கடைசி வரைநாட்டை மத அடிப்படையில் துண்டாட ஒப்புகொள்ள வில்லை! அவரை புறக்கணித்தே, படேல்-நேரு கூட்டணி சுதந்திரத்தை தந்திரமாக பெற்றது!

    அதற்கு பிறகும் கூட அரசியல்நிகழ்வுகளில் ஒதுங்கி இருந்தவர், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக கலவர பகுதிக்கு தனியாக சென்ற தீரர் அவர்! அவர் பல சமயங்களில் சமரச வாதியாக இருந்தார்! ஆனால் அவர் வெளிப்படையானநல்ல மனிதர்-பெரியாரும் அதைமறுக்காமல் இரங்கட்செய்தியின் போது குறிப்பிட்டிருக்கிரார்! எல்லோரும் அவரை பயன்படுத்தி கொண்டனர்; இந்துத்வா அவரை பழிவாங்கியது!

  6. அதனால்தான் பெரியார், காந்தி கொல்லப்பட்டபொது இந்தியாவின் பெயரை காந்தி தேசம் என்ற மாற்ற் வேண்டும் என்பார்

  7. ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் இந்திய தொல்லைகாட்சியில் பேசியிருகிரார்! கொட்செ கூட்டம் கூட காந்தி பிரந்தநாளை கொண்டாட ஆரம்பித்து விட்டனரோ? அல்லது புதிய நரகாசுரன் கதையா?

  8. காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயன் அலன் உருவாக்கிய எஞ்சின்.அதன் ஓட்டுனராக காந்தியை நியமித்தான்.இன்று ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் ஆட்சியில் கூட பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளை பலுகிப் பெருகி இருக்கிறதற்குக் காரணம் இந்த காந்திய பெரும்பான்மை மக்களுக்கு அவர்கள் பெயரால் இழைத்த துரோகம் தான்.அன்றைக்கு காந்தி யாருடைய நலனைக் காக்கப் பாடுபட்டாரோ அவர்கள்தான் இன்று பன்னாட்டு முதலாளிகளின் கூட்டாளிகள்.காந்தியை நம்பி நேர்மையாக வாழ்ந்தவர்கள் எல்லம் ஏமாந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போனார்கள்.காந்தியை உருவாக்கியவர்கள் வாரிசுகள் சுதேசி,விதேசியாக சொகுசாக வாழ்ந்து வருகிறார்கள்.காந்தியின் மதிப்பு டாலருக்கு 60 ரூ என்றவகையில் தாழ்ந்து கிடக்கிறது.இன்னும் வீழும்.காந்தியின் வீழ்ச்சிதான் அவரைப் போற்றும் முதலாளிகளின் வளர்ச்சி.பாட்டளிகளின் வீழ்ச்சியும்கூட.இதைத்தான் பெரியார் அவர்கள் அன்றே தெட்டத் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.காந்தி பிறந்த நாளில் தமிழ் இந்து நடுப்பக்கத்தில் எழுத்து விலைமகன் ஜெமோ ஒருகட்டுரை எழுதி இருக்கிறார்.சாதாரண காந்தி எப்படி மகாத்மா காந்தி ஆனாரென்பதை விளக்கி இருக்கிறார்.காந்தி என்ற தனிமனித நல்லொழுக்க சீலம்தான் அவர் தன்னை தைரியமாக முன்னிறுத்தி சுயவிளம்பரமாக மாற்றி மக்களை அவர் பக்கம் ஈர்த்தது. அப்படித்தான் அவரை மகாத்மாவாக மக்கள் ஏற்றுக்கொண்டனர்.அவரைப் போன்ற ஒழுக்கம் நிறைந்த தலைவர் உலகில் வேறு யாருமே இல்லை என்று எழுதி இருக்கிறார்.அவர் எல்லாம் படித்த மேதை.திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் கூட ஜெமோ மகாபாரதத்தை வெண்முரசு என்ற தொடரில் ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் என்ற வேகத்தில் எழுதி வருவதாகவும் அதைத் தன்னால் தொடர முடியவில்லை என்றும் இருந்தாலும் விடாப்பிடியாகத் தொடருவேன் என்றும் எழுதுகிறார்.இப்படிப் பட்ட ஆகர்ஷபுருஷர் காந்தியின் உண்மையான தன்மை பற்றி பெரியார்,அம்பேத்கர் போன்றோர் பதிவு செய்துள்ளதையெல்லாம் படிக்காமலா இருந்திருப்பார்.இருந்தும் அந்த வரலற்று உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு மகாத்மா என்று கதைவிடுகிறார்.அதை மவுண்ட் ரோடு மகா விஷ்ணு இந்து அமர்க்களமாக வெளியிடுகிறது.மக்கள் இன்று அனுபவித்துவரும் பல்வேறு வசதிகளை மக்களுக்காகவே உருவாக்கியவர்கள் ஒழுக்கமானவர்களா என்று பார்த்துதான் பயன்படுத்த வேண்டும் என்கிறாரா ஜெமோ.அல்லது அயோக்கியர்கள் காந்தியின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்கிறாரா?இன்றைக்கு காந்தியின் பெயரை சொல்பவர்கள் உண்மை அறியாத மக்கள் தவிர அனைவருமே அயோக்கியர்கள்தானே.ஜெமோவுந்தான்.

  9. காந்தியை அன்றே விமரிசித்த பெரியார் நேர்மையாளர்! ஆனால், அன்று அவரை தூக்கிபிடித்து, மகாத்மா ஆக்கி, காரியம் முடிந்ததும் கழுவியதும், இப்போது காந்தி முகமூடிக்காக மகாத்மா என்ற் தலையில் வைத்து கூத்தாடுவது எந்த சக்திகள்? இவர்கள்நெர்மை என்ன? இவர்களால் காந்திக்கு தான் அவமானம்! கடையில் காந்தி படம் போட்ட ரூபாநோட்டுகளை சந்தேகத்துடன் தான் பார்க்கிறார்கள்!

    ‘அய்யா! இது புதுநோட்டு’ என்றேன்! ‘அதனால்தான் பார்க்கிறேன்!’ என்றார் கடைகாரர்!

    ஏற்கெனவே, அஞ்சல் வில்லையில், அவர் படம் போட்டு, ஆத்திரம் தீர கருப்பு மை குத்தியாயிற்று! இனிமேலாவது அவரை விட்டுவிடுங்கள் அய்யா!

    போதாக்குறைக்கு மொடி வேறு, துடப்பத்தை எடுத்து கொண்டு கிளம்பிட்டார்!

    அவருக்கு வேண்டுமானால் வேலையில்லாமல் இருக்கலாம் (எழுதி கொடுத்ததைநன்றாக படிக்கிறார்)!
    அத்ற்காக காந்தியை சந்தி சிரிக்க வைக்காதீர்கள் அய்யா!

    • இது காந்தி தேசமடா … இழிவாக பேசாதே … அழித்து விடுவார்கள் இந்தியர்கள்… வேற்று கிரக வாசிகளா… பதிவை எடு தேசத் தந்தைக்கு மதிப்பை கொடு… ******… மறவாதே நீ மாணிடனாயிரு.

  10. காந்தி வழியில் மதவெறி தலைக்கேறிய உனக்கு பெரியார் வேற்று கிரக வாசியாகத்தான் தெரிவார். அப்புறம்… அது என்ன? உன் பேரு நேத்தா **தானு? முடிஞ்சா மாத்திக்கோ!

  11. ஆனால் இந்த வஞ்சக காந்தி இறந்தபோது பெரியார் காந்தி தேசம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று ஏன் சொன்னார். இது பெரியாரின் தடுமாற்றமா ? தோழர்கள் விளக்க வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க