காந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு (பகுதி – 4)

காந்தியத்தின் சமூக இலட்சியம் சாதி அல்லது வர்ணம் ஆகும். இரண்டில் எது என்பதைக் கூறுவது கடினம் என்றாலும், காந்தியத்தின் சமூக இலட்சியம் ஜனநாயம் அல்ல என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. ஏனென்றால் ஒப்பு நோக்கிற்கு சாதியை எடுத்துக் கொண்டாலும் சரி, வர்ணத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, இரண்டுமே அடிப்படையில் ஜனநாயத்திற்கு எதிரானவை. சாதியமைப்புக்கு ஆதரவாக காந்தியம் முன்னிறுத்துகிற வாதம் வலுவானதாகவும் நேர்மையானதாகவும் இருந்திருந்தால் கொஞ்மாவது அர்த்தம் இருந்திருக்கும். ஆனால் சாதியமைப்புக்கு ஆதரவாக அவர் வழக்காடுவது அவர் கிஞ்சிற்றும் அர்த்தமில்லா வாய் வீச்சே தவிர வேறல்ல. சாதிக்கு ஆதரவாகக் காந்தியார் புரியும் வாதங்களைப் பாருங்கள், அவற்றில் ஒவ்வொன்றுமே சிறுபிள்ளைத்தனம் என்று சொல்ல முடியாவிட்டாலும் போலியானது என்பதைக் காணலாம். இந்த அத்தியாத்தில் இதற்கு முன் தொகுத்துரைக்கப்பட்ட அந்த வாதங்களைச் சுருக்கமாக மீண்டும் பார்ப்போம்.

முதல் மூன்று வாதங்கள் பரிதாபத்திற்குரியவை. ஏனைய சமுதாயங்கள் மடிந்தோ மறைந்தோ போய் விட்டன என்றும் அதேபோது இந்து சமுதாயத்தினால் மட்டும் தாக்குப் பிடித்து நிற்க முடிந்துள்ளது என்பதை பாராட்டுக்குரிய செய்தியாகக் கருதுவதில்லை. அது தப்பிப் பிழைத்துள்ளது என்றால் அதற்குச் சாதியல்ல காரணம்; இந்துக்களை வென்ற அயல்நாட்டவர் அவர்களை முழுமொத்தமாய் ஒழித்துக்கட்டுவது அவசியம் என்று கருதாததே காரணம். வெறுமனே பிழைத்திருப்பதில் மாண்பு ஒன்றுமில்லை. பிழைத்து நிற்கிற தளம் என்ன என்பதுதான் முக்கியம். நிபந்தனையற்ற முறையில் சரணடைவதன் மூலம் கூடப் பிழைத்திருக்க முடியும். கோழைத்தனமாகப் பின்வாங்குவதன் மூலமும் பிழைத்திருக்க முடியும். போராடுவதன் மூலமும் பிழைத்திருக்க முடியும். எந்தத் தளத்தில் இந்துக்கள் பிழைத்திருக்கிறார்கள்? அவர்கள் போராடித் தங்கள் பகைவர்களை விரட்டியடித்துப் பிழைத்திருப்பதாகக் கூற முடியுமானால், காந்தியார் சாதி அமைப்புக்கு உரித்தாக்குகிற சிறப்பினை ஏற்றுக் கொள்ளலாம்.

படிக்க:
‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை ! – மின்னூல்
அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

இந்துக்களின் வரலாறு சரணாகதி வரலாறாகவே – கேவலமான சரணாகதியின் வரலாறாகவே – இருந்துள்ளது. மற்றவர்களும் படையெடுத்து வந்தவர்களிடம் சரணடைந்திருக்கிறார்கள் என்பது மெய்தான். ஆனால் அவர்களைப் பொறுத்த வரை அயல்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கலகம் புரிந்த பிறகு சரணடைந்தார்கள். இந்துக்கள் அயல் நாட்டுப் படையெடுப்பாளரின் தாக்குதலை ஒருபோதும் எதிர்த்து நின்றதில்லை என்பது மட்டும் அல்ல, அயல்நாட்டு நுகத்தடியைத் தூக்கியெறிவதற்கான ஒரு புரட்சிக் கலகத்தை நடத்துகிற ஆற்றலை ஒரு போதும் வெளிப்படுத்தியதும் இல்லை. மறுபுறம் அவர்கள் அடிமைத்தனத்தை வசதியானதாக மாற்றவே முயன்றிருக்கிறார்கள். இது குறித்து நேர்மாறாகவும் வாதிட முடியும்; அதாவது இந்துக்களின் இந்த நிர்க்கதியான நிலைக்கு முழுக்க முழுக்க சாதியமைப்புதான் காரணம் என்று சொல்ல முடியும்.

காந்தியின் ஹரிஜன் ஏடு.

நான்காவது பத்தியில் சொல்லப்பட்டுள்ள வாதம் நியாயமானதைப் போல் தோற்றமளிக்கக் கூடியது. ஆனால் சாதி என்பது ஆரம்பக் கல்வியைப் பரப்புவது அல்லது பூசல்களைத் தீர்த்து வைத்து நீதி வழங்குவது போன்ற பணிகளை நிறைவேற்றுவதற்கான ஒரே இயந்திரம் என்று சொல்ல முடியாது. இத்தகைய பணிகளைச் செய்வதற்கான சாதனங்களிலேயே சாதிதான் படுமோசமானது எனலாம். சாதியின் மீது செல்வாக்கு செலுத்துவதும் ஊழல் செய்வதும் எளிது.

ஏனைய நாடுகளில் சாதியமைப்பு இல்லாவிட்டாலும் இத்தகைய பணிகள் இந்தியாவைக் காட்டிலும் அந்நாடுகளில் மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றப் பட்டுள்ளன. படைப் பிரிவுகளைத் திரட்டுவதற்கான அடிப்படையாக சாதியைப் பயன்படுத்துவது என்ற கருத்து வெறும் மனக்கோட்டையே தவிர வேறல்ல. சாதி அமைப்புக்கு அடித்தளமாகிய பரம்பரைத் தொழில் தத்துவத்தின் படி இதை எண்ணிப் பார்க்கவே முடியாது. காந்தியார் அவரது சொந்த மாகாணமாகிய குஜராத்தில் ஒரே ஒரு சாதி கூட என்றைக்கும் ஒரு படைப் பிரிவைத் திரட்டியதில்லை என்பதை அறிந்தவர்தான். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகப் போரில் அது அவ்வாறு செய்யவில்லை. ஆனால் சென்ற உலகப் போரில் கூட அது அவ்வாறு செய்யவில்லை; அப்போது காந்தியார் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் படைக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவராக குஜராத் எங்கிலும் சுற்றுப் பயணம் செய்தார். சாதி அமைப்பில் மக்களை பொதுவான அளவில் பாதுகாப்புக்காக அணி திரட்டுவது உண்மையில் முடியாத காரியம். ஏனென்றால் சாதி அமைப்புக்கு அடித்தளமாய் இருக்கும் பரம்பரைத் தொழில் தத்துவத்தைப் பரவலான அளவில் ஒழித்துக் கட்டினால்தான் மக்களை அணி திரட்டுவதில் சாத்தியமாகும்.

ஐந்தாவது, ஆறாவது பத்திகளில் அடங்கியுள்ள வாதங்கள் மடத்தனமானவை. அருவருப்பானவை. ஐந்தாவது பத்தியில் கூறப்பட்டுள்ள வாதத்தை ஒரு நல்ல வாதம் என்று கூடச் சொல்ல முடியாது. குடும்பம் ஒரு இலட்சிய அலகு என்பதும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் திருமணம் நடைபெறுவதில்லை என்றாலும் கூட குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் மற்றொருவர் பால் நேசமும் பாசமும் கொண்டிருக்கிறார் என்பதும் மெய்தான். வைணவக் குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து உண்பதில்லை என்றாலும், ஒருவர் பால் ஒருவர் நேசமும் பாசமும் நிறைந்தவர்களாய் இருக்கிறார்கள் என்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். இதெல்லாம் மெய்ப்பிப்பது என்ன? சேர்ந்து உண்ணுவதும் கலந்து மணம் புரிவதும் சகோதரதுவத்தை நிலை நாட்டுவதற்கு அவசியம் இல்லை என்பதை இது மெய்ப்பிக்கவில்லை.

படிக்க:
வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை
வங்காளிகள் சாதியத்தை புரிந்து கொள்ளாதது ஏன் ? காஞ்சா அய்லய்யா

சகோதரத்துவத்தைப் பேணிக் காப்பதற்கு – குடும்ப உறவு தொடர்பான உணர்வு போன்ற – வேறு வழிகள் இருக்குமிடத்து – சேர்ந்து உண்ணுவதும் கலந்து மணம் புரிவதும் அவசியமில்லை என்பதையே இது மெய்ப்பிக்கிறது. ஆனால் கட்டிப்பிணைக்கிற சக்தி ஏதும் இல்லாத இடத்து – எடுத்துக்காட்டாக சாதி அமைப்பில் – கலந்து மணம் புரிவதும் சேர்ந்து உண்ணுவதும் இன்றிமையாதது என்பதை மறுக்க முடியாது. குடும்பத்துக்கும் சாதிக்கும் ஒப்புமை ஏதுமில்லை. பல்வேறு சாதியினர் சேர்ந்து உண்பதும் கலப்பு மணம் புரிவதும் அவசியமாகும்; ஏனென்றால் வெவ்வேறு சாதியினரை ஒன்றாகக் கட்டிப் பிணைத்திட வேறு வழியே இல்லை; அதேபோது ஒரு குடும்பத்தைப் பொறுத்த வரை அவர்களை ஒன்றாகக் கட்டிப்பிணைத்திட வேறு சக்திகள் இருக்கின்றன. சேர்ந்து உண்பதற்கும் கலந்து மணம் புரிவதற்கும் தடை விதிக்க வேண்டுமென்று வற்புறுத்தியவர்கள் அதனை ஒப்பிட்டு விழுமியங்கள் தொடர்பான சிக்கலாகக் கருதியிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் அதனை அறுதி நிலை தொடர்பான சிக்கலின் நிலைக்கு உயர்த்தவில்லை.

முதன்முதலாக அதனை அப்படி உயர்த்தியிருப்பவர் காந்தியார்தான். சேர்ந்து உண்பது மோசமானது, அதனால் நன்மை கிடைக்கும் என்றாலும் கூட அப்படிச் செய்யக் கூடாது என்கிறார், ஏன்? ஏனென்றால் சாப்பிடுவது அருவருப்பான செயலாம்? இயற்கைக் கடன் கழிப்பது போலவே அருவருப்பானதாகும். சாதி அமைப்புக்கு ஆதரவாக மற்றவர்களும் கூட வாதிட்டிருக்கிறார்கள். ஆனால் அதை ஆதரிப்பதாக – அதிர்ச்சியளிக்கும் வாதம் என்று சொல்ல முடியா விட்டாலும் – இப்படி ஓர் அசாதரண வாதம் பயன்படுத்தப்படுவதை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன்.

காந்தியார் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் படைக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவராக குஜராத் எங்கிலும் சுற்றுப் பயணம் செய்தார்.

வைதிக மாணவர்களும் கூட “‘காந்தியாரிடமிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள்” என்று கூறக் கூடும். காந்தியார் எந்த அளவுக்கு ஊறிப்போன இந்து என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது. வைதிக இந்துக்களிலேயே மிகவும் வைதிகமானவரையும் அவர் விஞ்சிவிட்டார். இது ஒரு குகை மனிதனின் வாதம் என்று சொன்னால் போதாது. இது உண்மையிலேயே ஒரு பைத்தியக்காரனின் வாதமாகும்.

சாதியமைப்புக்கு ஆதரவாக ஏழாவது பத்தியில் எடுத்துரைக்கப் பட்டுள்ள வாதம் அறவலிமையைக் கட்டி வளர்ப்பது என்ற நோக்கில் அவ்வளவு மதிப்புக்குரியது அல்ல. சாதி அமைப்பானது ஒருவன் தன் சாதியைச் சேராத பெண்ணிடம் காம இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்குத் தடை விதிக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. சாதி அமைப்பானது ஒருவன் தன் சாதியச் சேராத மற்றொருவனின் வீட்டில் சமைத்த உணவுக்கான ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்வதற்குத் தடை விதிக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. அறவொழுக்கம் என்பது கட்டுப்பாடுகளின் அர்த்தம் அல்லது அறிவுடமை பற்றிக் கவலைப் படாமல் இல்லாதக் கட்டுப்பாடுகளைக் கடைபிடிப்பதுதான் என்றால் சாதி அமைப்பை ஒரு அறவொழுக்க அமைப்பாக ஏற்றுக் கொண்டு விடலாம்.

ஆனால் இந்து மதம் அனுமதிக்கக் கூடிய பரந்த சுதந்திரங்கள் இந்த சுலபமான கட்டுப்பாடுகளை சரிக்கட்டி அதற்கும் மேலே போய் விடுகின்றன என்பதைக் காந்தியார் பார்க்கவில்லை. எப்படியென்றால், ஒருவன் தன் சாதியின் எல்லைக்குள் நூறு பெண்களை மணந்து கொள்வதற்கும் நூறு வைப்பாட்டிகள் வைத்துக் கொள்வதற்கும் இந்து மதம் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அவன் தன் சாதிக்காரர்களிடம் விருப்பம் போல் பசியாற விடாமல் அது தடுத்து நிறுத்துவதும் இல்லை .

‘ஹரிஜன’ மக்கள் விடுதலைக்காக காந்தி இந்தியா முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக 1933-ல் மதராசுக்கு (சென்னைக்கு) வருகைபுரிந்தார்.

எட்டாவது பத்தியில் கூறப்பட்டுள்ள வாதம் இந்தப் பிரச்சனை முழுவதையும் அனுமானம் செய்து கொள்வதாகும். குலத் தொழில் முறைமை நல்லதாய் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அது சிலருக்கு ஏற்புடையதாக இருக்கலாம். வேறு சிலருக்கு ஏற்க முடியாததாய் இருக்கலாம். அதை ஓர் அதிகாரப்பூர்வக் கோட்பாட்டின் நிலைக்கு உயர்த்துவது ஏன்? அதை கட்டாயமாக்குவது ஏன்? ஐரோப்பாவில் அது அதிகாரப்பூர்வக் கோட்பாடு அல்ல கட்டாயமும் அல்ல. அது தனிப்பட்டவர்களின் தேர்வுக்கு விடப்படுகிறது; அவர்களில் பெரும்பாலார் தங்கள் மூதாதையரின் தொழிலைத் தொடர்ந்து செய்கிறார்கள், சிலர் அப்படிச் செய்வதில்லை. விரும்பிச் செய்யும் ஏற்பாட்டைக் காட்டிலும் கட்டாய ஏற்பாடு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்று யாரால் கூற முடியும்?

இந்தியாவிலுள்ள மக்களின் பொருளாதார நிலைமைக்கும் ஐரோப்பாவிலுள்ள மக்களின் பொருளாதார நிலைமைக்குமான ஒப்பு நோக்கை வழிகாட்டியாகக் கொள்வோமானால், பகுத்தறிவு மனம் படைத்தோர் இந்தக் காரணத்தின் பேரில் சாதியமைப்பை ஆதரிக்க மாட்டார்கள் என்பதைக் காணலாம். அடிக்கடி தொழிலில் ஏற்படும் மாற்றங்களுக்கு இணையாகப் பெயரை மாற்றிக் கொள்வதிலான இடர்பாட்டைப் பொறுத்த வரை இது செயற்கையானதே ஆகும். குறிப்பிட்ட தொழிலைச் செய்கிறவர்களைக் குறிப்பிடுவதற்கு அடையாளப் பெயர்கள் இருப்பது அவசியம் என்ற கருத்திலிருந்து இந்த இடர்பாடு எழுகிறது. வகுப்பு முத்திரைகள் தேவையற்றவை. இடர்பாடே இல்லாமல் அவற்றை அடியோடு ஒழித்து விடலாம். மேலும் இன்று இந்தியாவில் என்ன நிகழ்கிறது? மனிதர்களின் தொழில்களும் அவர்களின் வகுப்பு முத்திரைகளும் ஒத்தமைவதில்லை.

காந்தியாரின் சாமர்த்தியம் எப்போதும் எங்கும் குள்ளத்தனமானது. குள்ளனக்குரிய வெளித் தோற்றமே இல்லாமல் கள்ளனுக்குரிய பிஞ்சில் பழுத்த தன்மையனைத்தும் அவரிடமுண்டு.

பார்ப்பனர் செருப்பு விற்கிறார், அவர் சாமார் என்று அழைக்கப் படவில்லையே என்று யாரும் கவலைப்படுவதில்லை. சாமார் ஆகிய ஒருவர் அரசு அதிகாரியாகி விடுகிறார். அவர் பார்ப்பனர் என்று அழைக்கப் படவில்லையே என்று யாரும் கவலைப்படுவதில்லை. இந்த வாதம் முழுதும் ஒரு தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தனியொருவரின் வகுப்பு எந்த முத்திரையால் அறியப்படுகிறது என்பது அல்ல, அவர் வழங்கிடும் சேவைதான், சமுதாயத்துக்கு முக்கியமானது.

ஒன்பதாவது பத்தியில் எடுத்துரைக்கப்பட்டுள்ள கடைசி வாதம் சாதி அமைப்புக்கு ஆதரவாக நான் கேள்விப்பட்டிருக்கிற மிகவும் திகைப்பூட்டக் கூடிய வாதங்களில் ஒன்று. இது வரலாற்று வழியில் பொய்யானது. மனு ஸ்மிருதியைப் பற்றி ஏதேனும் அறிந்திருக்கிற எவரும் சாதி அமைப்பை ஓர் இயற்கை அமைப்பு என்று கூற முடியாது. மனு ஸ்மிருதி எதைக் காட்டுகிறது? சாதி அமைப்பானது வாள் முனையில் நிலை நிறுத்தப்பட்ட சட்ட அமைப்பாகும் என்பதையே காட்டுகிறது. அது தப்பிப் பிழைத்துள்ளது என்றால் அதற்கான காரணங்கள்: 1) பெருந்திரளான மக்கள் ஆயுதம் வைத்துக் கொள்ள விடாமல் தடுக்கப்பட்டது; 2) பெருந்திரளான மக்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டது: 3) பெரும்பாலான மக்களுக்கு சொத்துரிமை இல்லாமற் செய்யப்பட்டது. சாதி அமைப்பு இயற்கையானது அல்லவே அல்ல, அது உண்மையில் அடிமை வகுப்புகள் மீது ஆளும் வகுப்புகளால் திணிக்கப்பட்டதே ஆகும்.

1930-32-ல் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற அம்பேத்கர் மற்றும் காந்தி.

காந்தியார் சாதி அமைப்பிலிருந்து வருண அமைப்புக்கு மாறிச் சென்றார் என்பது அவர் ஜனநாயகத்துக்கு விரோதமானவர் என்ற குற்றச்சாட்டை இம்மியளவு கூட மாற்றி விடாது. முதலாவதாக, வருணம் என்ற கருத்துதான் சாதி என்ற கருத்துக்குத் தாயாகும். சாதி என்ற கருத்து நச்சுத்தனமானது என்றால், வருணம் என்ற கருத்து நச்சுத்தனமானது என்பதே அதற்கான அறுதிக் காரணமாகும். இரண்டுமே தீய கருத்துகள்தான்; ஒருவர் வருணத்தை நம்புகிறாரா, சாதியை நம்புகிறாரா என்பது அவ்வளவு முக்கியத்துவம் உடையதல்ல.

வருணம் என்ற கருத்து பௌத்தர்களால் ஈவிரக்கமற்ற முறையில் தாக்கப்பட்டது; அவர்களுக்கு வருணத்தில் நம்பிக்கை இல்லை. வைதிக அல்லது சனாதன வைதிக இந்துக்கள் வருணத்தை ஆதரித்து அறிவார்ந்த முறையில் வாதிடுவதற்கு ஒன்றுமில்லை. அவர்களினால் சொல்ல முடிந்ததெல்லாம், வேதங்களின் கட்டளைப்படி அது நிறுவப்பட்டது, வேதங்கள் பிழையற்றவை என்பதால் வருண அமைப்பும் பிழையற்றது என்பதே பௌத்தர்களின் பகுத்தறிவு வாதத்துக்கெதிராக வருண அமைப்பை பாதுகாக்க இந்த வாதம் போதவில்லை.

வருணம் என்ற கருத்து தப்பிப் பிழைத்துள்ளது என்றால் அதற்கு பகவத் கீதைதான் காரணம்; வருணம் மனிதனின் இயற்கை குணங்களை அடிப்படையாகக் கொண்டதென்று வாதிட்டதன் மூலம் அது வருண அமைப்புக்கு ஒரு தத்துவஞான அடித்தளத்தைப் பயன்படுத்தி வருணம் என்ற கருத்தைத் தூக்கி நிறுத்தி வலுப்படுத்தியது; இல்லையேல் அடி முதல் நுனி வரை அர்த்தமற்றதாகிய ஒன்றில் அர்த்தம் தேடியே அது மங்கி மறைந்து போயிருக்கும். பகவத் கீதையானது வருண அமைப்புக்கு ஒரு புதிய அடிப்படையை, நியாயம் போல் தோன்றக் கூடிய அடிப்படையை அதாவது மனிதனின் இயற்கைக் குணங்கள் என்ற அடிப்படையை வழங்கியதன் மூலம் அவ்வமைப்பின் ஆயுளை நீட்டித்துப் பெருந்தீங்கு செய்து விட்டது.

காந்தியம் எவ்வகையிலும் புரட்சித் தத்துவம் அல்ல. அது அபாரமான பழமை வாதமாகும்… இந்தியாவின் இறந்துபோன, இறந்து போய்க் கொண்டிருக்கிற கடந்த காலத்துக்கு மறுபடியும் உயிர் கொடுப்பதே காந்தியத்தின் நோக்கம்.

பகவத் கீதையின் வருண அமைப்பு எப்படியும் இரு சிறப்புகளைக் கொண்டது. வருண அமைப்பு பிறப்பின் அடிப்படையிலானது என்று அது கூறவில்லை. உள்ளபடியே ஒவ்வொருவரின் வருணமும் அவரவரின் இயற்கைக் குணங்கள் அடிப்படையில் நிர்ணயமாவதாக அது விசேஷமாய்க் குறிப்பிடுகிறது. மகனின் தொழில் தந்தையின் தொழிலாகவே இருக்க வேண்டுமென்று அது கூறவில்லை. ஒருவரின் தொழில் அவரின் இயற்கைக் குணங்களுக்கேற்ப இருக்க வேண்டும், தந்தையின் தொழில் தந்தையின் இயற்கைக் குணங்களுக்கு ஏற்பவும், மகனின் தொழில் மகனின் இயற்கைக் குணங்களுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும் என்றுதான் அது கூறுகிறது. ஆனால் காந்தியார் வருண அமைப்புக்குப் புதிய பொருள் விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் அதனை அடையாளம் தெரியாமல் மாற்றிவிட்டார். பழைய வைதிகப் பொருள் விளக்கத்தில் சாதி என்பது பரம்பரைத் தொழிலைக் குறித்தது, ஆனால் வருணம் அவ்வாறு குறிக்கவில்லை. காந்தியார் விருப்பம் போல் வருணத்துக்குப் புதிய பொருள் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

படிக்க:
திருமணப் பரிசாக ‘ புதிய கலாச்சாரம் ’ வழங்குங்கள் !
இது போராட்டக்காலம் ! புரட்சி வெற்றி கொள்ளும் !! ம.க.இ.க பாடல்

காந்தியாரைப் பொறுத்தவரை வருணம் பிடிப்பினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. அதாவது ஒரு வருணத்தின் தொழில் பரம்பரைக் கோட்பாட்டால் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது வருணம் என்பது சாதிக்கு மறு பெயர்தானே தவிர வேறல்ல. காந்தியார் சாதியிலிருந்து வருணத்துக்கு மாறினார் என்பதே புரட்சிகரமான புதிய கருத்தியல் ஏதும் வளர்ச்சி பெற்றதைக் குறிக்கவில்லை. காந்தியாரின் சாமர்த்தியம் எப்போதும் எங்கும் குள்ளத்தனமானது. குள்ளனக்குரிய வெளித் தோற்றமே இல்லாமல் கள்ளனுக்குரிய பிஞ்சில் பழுத்த தன்மையனைத்தும் அவரிடமுண்டு. ஒரு கள்ளனைப் போலவே அவராலும் ஒரு போதும் வளர முடியாது. சாதிக் கருத்தியலிலிருந்து வெளி வரவே முடியாது. காந்தியார் சில நேரம் செவ்வண்ணம் மிளிர சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் குறித்துப் பேசுகிறார்.

காந்தியத்தைப் பயிலக் கூடியவர்கள் ஜனநாயத்துக்கு ஆதரவாகவும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும் காந்தியார் அவ்வப்போது விலகி வருவதைக் கண்டு ஏமாந்து விட மாட்டார்கள். ஏனென்றால் காந்தியம் எவ்வகையிலும் புரட்சித் தத்துவம் அல்ல. அது அபாரமான பழமை வாதமாகும். இந்தியாவை பொறுத்தவரை, அது ஒரு பிற்போக்குத் தத்துவம் பண்டை காலத்திற்குத் திரும்பிச் செல்வோம் என்ற அறை கூவலைத் தன் பதாகையில் பொறித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் இறந்துபோன, இறந்து போய்க் கொண்டிருக்கிற கடந்த காலத்துக்கு மறுபடியும் உயிர் கொடுப்பதே காந்தியத்தின் நோக்கம்.

தொடரும்
காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.

அடிக்குறிப்புகள்:
(3) யங் இந்தியா 1921 ஜனவரி 26.

முந்தைய பகுதி:
பகுதி – 1: காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்
பகுதி – 2: தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி
பகுதி – 3 : விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதே – காந்தியம் | அம்பேத்கர்

புத்தகக் குறிப்பு:

 • காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
  – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
 • மகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்
 • பக்கம்: 461 + 30
 • முதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998
 • வெளியீடு,
  தலித் சாகித்ய அகாதமி,
  சென்னை – 600 073.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க