வங்காளிகள் சாதியத்தை புரிந்து கொள்ளாதது ஏன் ? காஞ்சா அய்லய்யா

வங்காள மாணவர்களுடன் உங்களுக்கு மகாத்மா புலே, பெரியார் பற்றி தெரியுமா எனக் கேட்டால், அந்தப் பெயர்கூட அவர்களுக்கு பரிட்சயமானதில்லை என்பது தெரியவரும்.

டதுசாரிகள் ஆட்சி புரிந்த வங்கத்தில் இந்துத்துவ சக்திகள் எப்படி வளர முடியும் என பலருக்கு கேள்வி இருக்கிறது. வங்கத்துக்கும் இந்துத்துவ சக்திகளுக்குமான பிணைப்பு இந்திய ‘தேசத்தின்’ உருவாக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது. காலனிய ஆட்சியில் தேசியவாதத்தோடு தோன்றிய சீர்திருத்தவாதிகளில் அனேகம் பேர் நமது நாடு, நமது பண்பாடு, நமது சிறப்பு என்ற பெயரில் இன்றைய இந்துத்துவாவின் மென் வடிவத்தை முன்வைத்தனர்.

இவர்களில் சிலர் பார்ப்பனியத்தின் பிற்போக்கான நடவடிக்கைகளை எதிர்த்த போதும் பலர் தேசியம் என்ற பெயரில் அவற்றுக்கு ‘தத்துவ விளக்கமும்’ சொன்னார்கள். முக்கியமாக பார்ப்பனியத்தின் வருணாஸ்ரம – சாதி ரீதியான பிரிவினையையும், அதன் பௌதீக அடிப்படைகளையும் ஏற்றுக் கொண்டார்கள். சாதி ரீதியான ஏற்றத்தாழ்வில் சில சீர்திருத்தங்களை செய்யலாம் என்பது போக அவற்றை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் போகவில்லை. இந்தியாவின் அறிவுப்பூர்வமான நடுத்தர வர்க்கம் முதலில் வங்கத்தில் தோன்றியது என்பதாலும் இந்தப் போக்கின் ஊற்றிடம் வங்கமாக இருந்தது. மும்பை, சென்னை போன்ற மாகாணங்கள் வங்கத்தின் பாதையிலேயே சென்றன.

அதே நேரம் இந்த பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிரான கருத்துக்களும் இதே மாகாணங்களில் பின்னர் தோன்றின என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே திராவிட இயக்கம், மராட்டியத்தில் பூலே – அம்பேத்கர், வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் போன்றவர்கள் அப்படி வளர்ந்தார்கள். வங்கத்தில் இன்றும் சாதியக் கொடுமைகள் மற்ற மாநிலங்கள் போல நடப்பதில்லை. அதே நேரம் இன்று அங்கே பா.ஜ.க வளர்கிறது. சி.பி.எம் கூட அரசியல் அதிகாரத்தை தாண்டி பண்பாட்டு அளவில் பார்ப்பனியத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்ததில்லை.அதனுடைய விளைவாக இன்று வங்கத்தில் அவர்களால் பார்ப்பனியத்தின் அரசியல் கட்சியான பா.ஜ.கவை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு பலவீனமாக மாறிவிட்டனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா, அரசியல் இந்துத்துவ சக்திகள் வங்காளத்திலிருந்தே வந்தன என்கிற வரலாற்றுத் தகவலை சொல்லியிருக்கிறார். கொல்கத்தாவில் நடந்த ரிதுபர்ன கோஷ் நினைவு கருத்தரங்கில்  அய்லய்யா  ‘சாதி, பாலினம் மற்றும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் பேசினார். வங்கத்தில் சி.பி.எம் கட்சியினர் ஏன் தோற்றுப் போனார்கள் என்பதாகவும் காஞ்ச அய்லய்யாவின் பேச்சை பரிசீலிக்கலாம்.

அந்த பேச்சிலிருந்து சில துளிகள்…

“ஆர்.எஸ்.எஸ். 1925-ஆம் ஆண்டு ஹெட்கேவர் உள்ளிட்ட மகாராஷ்டிர பார்ப்பன சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால், அரசியல் இந்துத்துவ சக்திகள் வங்கத்திலிருந்தே வந்தன. பங்கிம்சந்திர சட்டோத்பாயா-வின் எழுத்துகள் முதல் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின்  ஜனசங்கத்தின் (முந்தைய பா.ஜ.க.) துவக்கம் வரை வங்கத்திலிருந்தே தொடங்கியது.

ராம் மோகன் ராய், தாகூர், விவேகானந்தர் குறித்து நாட்டின் அனைத்து பகுதியினரும் அறிவர். வங்காள மாணவர்களுடன் உங்களுக்கு மகாத்மா புலே, பெரியார் பற்றி தெரியுமா எனக் கேட்டால். அந்தப் பெயர்கூட அவர்களுக்கு பரிட்சயமானதில்லை என்பது தெரியவரும்.

வங்காளத்தில் தேசியவாதத்தின் வருகை காலனித்துவ வரலாற்றில், நவீன வங்காளிக்கான அடையாளத்தை உருவாக்கிய முக்கியமான தருணம். அந்த தருணத்திலிருந்து வங்காள அறிவுஜீவிகள் சாதியத்தைப் பயன்படுத்தி இந்து மேலாதிக்கக் கருத்தியலை வளர்த்தெடுத்தார்கள்.

நான் புரிந்துகொண்டதிலிருந்து சொல்கிறேன், வங்காள அறிவுஜீவிகள், தேசியவாதத்தை கட்டமைத்ததில் அடிப்படையிலியே ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது. தேசம் குறித்த ஒட்டு மொத்த பிராந்திய புரிதல் வேறாக இருந்தது. உதாரணத்துக்கு பாம்பே மற்றும் மெட்ராஸ் மாகாணங்களில் இரண்டு விதமான உறுதியான கருத்தாக்கங்கள் உருவாகின. இப்போதைய ஆர்.எஸ்.எஸ். உருவானது. ஆனால், அதற்கு சமமாக சாதி எதிர்ப்பியக்கமும் உருவானது. ஆனால், வங்காளத்தில் அவர்களுடைய தாராளவாதத்துக்கு எதிராக, ரிக் வேதம் சொல்லும் நான்கு வர்ணங்களால் முறைப்படுத்தப்பட்ட சாதிய மரபின் தொடர்ச்சியை முன்வைத்தார்கள். வங்கத்தின் அருகே பவுத்தம் இருந்தபோது,  சாதிய உடைப்பை உருவாக்க வங்கம் தவறிவிட்டது.

சாதி, பாலினத்தின் மீது இது பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. இந்த இரண்டிலும் ஒன்று பிரதானமாக இருந்தது. அது ’தொழிலாளர்’ நகரங்களை உருவாக்கவும் கிராமங்களை மாற்றியமைக்கவும் பெண்களும் சூத்திரர்களும் முக்கியமான கருவிகள். பெண்கள் விவசாய உற்பத்தியில் முன்னோடிகளாக இருந்த காரணத்தாலேயே வேளாண் பணிகளில் பாலின பாகுபாடு மிகக் குறைவாகவே இருந்தது.

வங்கத்தில் சமஸ்கிருத அறிஞர்கள் செல்வாக்குடன் விளங்கினார்கள். விவேகானந்தரின் தாத்தா, ஒரு சமஸ்கிருத அறிஞர். என்னுடைய அப்பா, தாத்தாவை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் செம்மறி ஆட்டை வளர்ப்பதிலும், வெள்ளாட்டை மேய்ப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுக்கு படிப்பதற்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது ஏட்டில்தான் இருந்தது.

எப்படி கம்யூனிஸ்டுகள் இந்த பிரச்சினைகளை இழந்தார்கள்? அவர்கள் அடையாள அரசியல் என்ற கருத்தை ஏற்கவில்லை. சாதி என்பதே இந்திய யதார்த்தம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சாதி, வர்க்கத்தால் ஆளப்படுகிறது. மேலும் அவர்கள் பாலின சமத்துவத்தையும் புறக்கணித்தனர். முழு புரட்சி வரும் காலத்தில் அனைத்து சரியாகும் என அவர்கள் நம்பினார்கள். ஆனால், அது சரியல்ல…

அடையாளத்தின் பங்கு எப்படிப்பட்டது என அவர்கள் புரிந்து கொள்ளவும் அடையாளப்படுத்தவும் முயற்சித்திருக்க வேண்டும். சாதிய கட்டுமான குறித்தும் பாலின கட்டுமானம் குறித்தும் அவர்களுடைய செயல்திட்டத்தில் முக்கிய இடம் தந்திருக்க வேண்டும். இன்றைய வலது அமைப்புகள் செய்துகொண்டிருப்பதைக் காட்டிலும் அது (கம்யூனிஸ்டுகளின் திட்டம்) சமத்துவம் தொடர்பான பிரச்சினைகளை நோக்கி நாட்டை தள்ளியிருக்கும். இப்போதும்கூட இளைய வங்காளிகள் இந்த வேறுபாடுகளை இனம்காண முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா.

ராம் மோகன் ராய், தாகூர், விவேகானந்தர் குறித்து நாட்டின் அனைத்து பகுதியினரும் அறிவர். வங்காள மாணவர்களுடன் உங்களுக்கு மகாத்மா புலே, பெரியார் பற்றி தெரியுமா எனக் கேட்டால். அந்தப் பெயர் கூட அவர்களுக்கு பரிட்சயமானதில்லை என்பது தெரியவரும்.” என்ற அய்லய்யா, இன்றைய வங்காளிகள் எதிர்கொண்டுள்ள வேறொரு பிரச்சினையை சுட்டிக்காட்டினார்.

“1931-க்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு முதன் முறையாக ஓ.பி.சி.- க்கள் குறித்த கணக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. ஓ.பி.சி. ஆதரவைப் பெற பா.ஜ.க. முயற்சிக்கும் என நினைக்கிறேன். பா.ஜ.க.வின் ஓ.பி.சி. அடையாள கட்டமைப்பை மமதா பானர்ஜியாலும் தடுக்க முடியாது என நினைக்கிறேன். பா.ஜ.க. ஓ.பி.சி., தலித் சாதி அடையாளத்தை ஒருங்கிணைத்து ஓ.பி.சி. முதலமைச்சர் வேட்பாளர்களை அறிவிக்குமானால், அவர்கள் ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது”

இறுதியாக , “வங்க அறிவுஜீவிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து வங்கத்தில் சாதி குறித்த உரையாடலை தொடங்குங்கள். வங்கத்தில், சாதி கண்டறியப்படாத புற்றுநோயாக உள்ளது!” என பேசி முடித்தார் அய்லய்யா.

மூலக் கட்டுரை: ‘Bengalis have no understanding of caste’
தமிழாக்கம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க