ஸ்லாமாஃபோபியா உலகெங்கிலும் பரவிவரும் தொற்றுநோய். இந்தத் தொற்று மேற்குவங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் நீண்ட வருடங்களுக்கு முன்பாகவே பரவிக் கிடக்கிறது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., போன்ற இந்துத்துவ சக்திகளின் சமீபத்திய வளர்ச்சி அந்த மாநிலத்தில் வேகமாகும் பின்னணியுடன் மாநில தலைநகரில் ஒரு முசுலீம் தங்குவதற்கு இடமில்லை என்கிற வெறுப்புக்கும் மறுப்புக்கும் உள்ள தொடர்பை இந்தக் கட்டுரை சொல்கிறது.

ஜாவத்பூர் பல்கலைக்கழகத்தில்  படிப்பைத் தொடங்கிய 2011-ஆம் ஆண்டிலிருந்து கொல்கத்தா வந்துசெல்கிறார் லபானி ஜாங்கி. ஒவ்வொரு நாளும் வரவும் போகவும் என எட்டு மணி நேரம் கொல்கத்தாவுக்கும் அவருடைய சொந்த ஊருக்கும் பயணித்த லபானி, மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு மெஸ்ஸில் நாள் வாடகையில் சேர்கிறார். அவருடைய மதம் காரணமாக இடம் மறுக்கப்பட்டதால், லபானி என்ற முதல் பெயரை மட்டும் வைத்து மெஸ்ஸில் சேர்கிறார். தன்னுடைய பல்கலைக்கழகத்தில் படிக்கும் சி.பி.ஐ. (எம்) கட்சியைச் சார்ந்த அமைப்புகளில் உள்ளவர்கள் அங்கிருந்ததால் பாதுகாப்பாய் உணர்கிறார்.

முதல் நாள் இரவில், மெஸ்ஸில் தங்கியிருக்கும் அனைவரும் ஒன்றுகூடி ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். அப்போது லபானியின் மதத்தை அவர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

கொல்கத்தாவின் வீதி…

லபானி அந்த நிமிடத்தை இப்படிச் சொல்கிறார், “அடுத்த நிமிடமே, அவர்கள் திடுக்கிட்டு, கண்களை அகல விரித்தார்கள். அவர்கள் அனைவரும் பயந்திருந்தது தெரிந்தது”. அதில் ஒருவர் மெஸ்ஸின் உரிமையாளர் அறையின் கதவைத் தட்டி, ஏன் ஒரு முசுலீமுக்கு மெஸ்ஸில் இடம் கொடுத்தீர்கள் என கேட்கிறார். ஒவ்வொரு நாளும் அறையில் தன்னுடன் தங்கிருந்த பெண், ஒரு முசுலீமுடன் தங்க நேர்ந்ததை நினைத்து அழுதுகொண்டே தூங்குவார் என சொல்லும் லபானி தற்போது சமூக அறிவியல் ஆய்வாளராக உள்ளார்.“நான் இப்போது ஒரு புதிய இடத்தைத் தேட வேண்டும். மனதளவில் ஏற்பட்டிருக்கும் இந்த வலி கனக்கச் செய்கிறது. என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை” என்கிறார் லபானி.

ஃப்டாப் ஆலமும் அவருடைய மூன்று நண்பர்களும் இதேபோன்ற அனுபவத்தை இந்த நகரித்தில் பெற்றிருக்கிறார்கள். மருத்துவர்களான இவர்கள் கொல்கத்தாவில் உள்ள குத்கட் பகுதியில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தனர். இடத்தின்  உரிமையாளருக்கு ஒரு பிரச்னையும் இல்லை; ஆனால் பக்கத்தில் இருந்த பார்ப்பனருக்குத்தான் இவர்கள் குடியேறியதில் ஏகப்பட்ட பிரச்சினை. முதலில், இவர்கள் நால்வரும் திருமணமாகாதவர்களாக இருந்தது பிரச்சினையாக இருந்தது. பின், இவர்களுடைய மதத்தை கண்டுபிடித்தபோது, அவர் நேருக்கு நேராகவே ‘தீவிரவாதிகள்’ என அழைக்க ஆரம்பித்தார். அவர்களைக் காணவரும் நண்பர்களிடம் விசிட்டிங் கார்டு கொடுக்கும்படி வற்புறுத்தியதோடு, கொடுக்கவில்லை என்றால் காவல்நிலையத்தில் புகார் செய்வேன் என்றும் மிரட்டியுள்ளார். வீடு கிடைப்பதில் தங்களுக்குள்ள பிரச்சினையை ஆலம் முகநூலில் எழுதுகிறார். அப்போது ‘சன்கதி அபிஜான்’ என்ற அமைப்பைச் சேர்ந்த சமீருல் இஸ்லாம் இந்த விஷயத்தை கேள்விப்படுகிறார்.

ஒருவர் மெஸ்ஸின் உரிமையாளர் அறையின் கதவைத் தட்டி, ஏன் ஒரு முசுலீமுக்கு மெஸ்ஸில் இடம் கொடுத்தீர்கள் என கேட்கிறார். ஒவ்வொரு நாளும் அறையில் தன்னுடன் தங்கிருந்த பெண், ஒரு முசுலீமுடன் தங்க நேர்ந்ததை நினைத்து அழுதுகொண்டே தூங்குவார்.

‘சன்கதி அபிஜான்’ சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் ஓர் இயக்கம்; குறிப்பாக மதத்தை முன்வைத்து உறைவிடங்கள் மறுக்கப்படுவதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது இந்த இயக்கம். சமீருல்-உம் இத்தகைய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர். சி.பி.ஐ.(எம்) ஆட்சியிலிருந்த 2006-ஆம் ஆண்டு கொல்கத்தா வந்த சமீருல், “இந்த நகரத்தில் வாழும் முசுலீம்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என்றாகிவிட்டது. ஆனால், இது எப்போதும் இயல்பான விஷயமாக ஆகிவிடக்கூடாது” என்கிறார்.

அஃப்டாப் ஆலம்.

பா.ஜ.க கால்பதிக்காத மாநிலங்களில் ஒன்று மேற்குவங்கம். முசுலீம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக இப்போது ஆண்டு கொண்டிருக்கும் திரிணாமூல் காங்கிரஸை இந்துக்கள் குற்றம் சாட்டுவதுண்டு. மாநில முதல்வர் மமதா பானர்ஜி, தன் உரையைத் தொடங்கும் முன் ‘இன்ஷா அல்லா’ என சொல்வதிலிருந்து, கைகளை ஏந்தியபடி இறைவணக்கம் செய்வது, சர்ச்சைகளை ஏற்படுத்திய முசுலீம் போதகர்களுக்கு நிதி உதவி அளித்தது வரை இவரின் முசுலீம் ஆதரவு செயல்பாடு வெளிப்பட்டது. 27% வாக்கு வங்கியுடன் நாட்டில் அதிக முசுலீம்கள் உள்ள மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்கம் இருப்பதே மமதாவின் ஆதரவு பின்னணி.

“திரிணாமூல் காங்கிரஸ் அரசியலுக்காக எடுக்கும் ஆதரவுநிலை சுத்த அயோக்கியத்தனம்” என்கிறார் சன்கதி அபிஜானின் உறுப்பினர்கஸ்தூரி பாசு. “திரிணாமூல் ஒரு வெகுஜன கட்சி. வெகுஜனத்தின் மதிப்பை பெறுவதற்காகவே அது உழைக்கிறது. மேற்கு வங்கத்தில் முசுலீம்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, திரிணாமூல் ஆட்சிக்கு வந்த பிறகும்கூட அது மாறவில்லை” என்கிறார்.

2016-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், சில அமைப்புகளுடன் இணைந்து மேற்கு வங்க முசுலீம்களின் சமூக-பொருளாதார நிலைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேற்க வங்க முசுலீம்கள் மிக மிக ஏழ்மை நிலையிலும் அவர்களுடைய வாழ்நிலை சீரழிந்த நிலையிலும் இருப்பதை சுட்டிக்காட்டியது அந்த அறிக்கை. மேலும், உடனடியாக இந்த நிலையை சீரமைக்க வேண்டிய தேவையுள்ளதையும் அந்த அறிக்கை வெளியிட்டபோது அமர்த்தியா சென் வலியுறுத்திருந்தார்.

இயற்பியல் பி.எச்டி மாணவரான நூர் அமீன்,  “திரிணாமூல் காங்கிரஸ் அல்லது சிபிஐ (எம்) இரண்டுமே முசுலீம்கள் எதிர்க்கொள்ளும் இந்தப் பிரச்சினையை பேசவில்லை. இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் இந்த நிலையே நீடித்தது. அதிகரித்து வரும் பா.ஜ.க ஆதரவு முசுலீம்களுக்கு எதிரான உணர்வுகளை மாநிலத்தில் எரியூட்டிக்கொண்டிருக்கிறது” என்கிறார்.  முசுலீம்களுக்கு எதிராக வெளிப்படையான பேச்சுக்களை இப்போது அதிகமாக கேட்க முடிகிறது என்கிற நூர், பா.ஜ.க-வினர் முசுலீம்களை அழித்தொழிப்பார்கள் என மக்கள் பேசிக்கொள்வதாகவும் சொல்கிறார்.

கொல்கத்தா, லால்பஜார் தெருவிலுள்ள குடியிருப்பு வளாகம்.

“முசுலீம்கள் அதிகம் வசிக்கும் அன்வர்ஷா சாலை பகுதிகளில் மக்கள் இப்படி விவாதித்துக் கொள்வதை கேட்டிருக்கிறோம். ‘முசுலீம் போதகரின் குழந்தைகள்’ என கொச்சைப்படுத்தி சொல்வதோடு, அவர்களுடைய ரத்தம் கொதிப்பதாகவும் அதை பா.ஜ.க தணிக்கும் என்றும் பேசிக் கொள்வார்கள். என்னால் அதை எதிர்க்கக்கூட முடியாது. அப்படி நான் எதிர்த்தால், எனக்கு என்ன ஆகுமென்று தெரியாது. அவர்கள் எதுவும் செய்யாமல் இருக்கலாம். ஆனால், அந்த பயம் இருக்கிறதல்லவா? என்னுடைய பெற்றோர் பொது இடங்களில் கவனமாக இருக்கும்படி எப்போதும் எச்சரிப்பார்கள்” என்கிறார் நூர்.

பா.ஜ.க திரிபுராவில் ஆட்சியைப் பிடித்தபோது, பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் தன்னுடைய வீட்டு உரிமையாளரிடம் பா.ஜ.க இங்கே வெற்றிபெற வேண்டும், ரோஹிங்கியா முசுலீம்கள் துரத்தப்பட்டதுபோல இங்கிருக்கும் முசுலீம்களை துரத்த வேண்டும் என சொன்னதாகச் சொல்கிறார் லபானி ஜாங்கி. நாட்டின் வளர்ச்சி கீழிறங்கி உள்ளதற்கு எங்கும் நிறைந்திருக்கும் முசுலீம்களே காரணம் எனவும் அவர் சொல்லியிருக்கிறார்.

“சில நாட்களுக்கு முன் லால்கோலா ரயிலில் கிட்டத்தட்ட அடித்து கொல்லப்படும் நிலையை ஒத்த அனுபவத்தைப் பெற்றேன். உண்மையில் அப்படித்தான் நடந்தது” அழுத்தமான குரலில் சொல்லும் லபானி, “அப்போதிலிருந்து சில மணிநேரங்களுக்கு ஒருமுறை என் சகோதரனை அழைத்து பேசிவிடுகிறேன். அவர் கொல்கத்தாவில் இருக்கிறாரா? ரயிலில் இருக்கிறாரா? என அறிந்துகொள்ளவே அப்படிச் செய்கிறேன். ஏனெனில் ரயிலில் எனக்கு நடந்த அனுபவம், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எது வேண்டுமானாலும் எங்களுக்கு நிகழலாம் என்கிற பயத்தைக் கொடுத்திருக்கிறது”.

பா.ஜ.க திரிபுராவில் ஆட்சியைப் பிடித்தபோது, பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் தன்னுடைய வீட்டு உரிமையாளரிடம் பா.ஜ.க இங்கே வெற்றிபெற வேண்டும், ரோஹிங்கியா முசுலீம்கள் துரத்தப்பட்டதுபோல இங்கிருக்கும் முசுலீம்களை துரத்த வேண்டும் என சொன்னதாகச் சொல்கிறார் லபானி ஜாங்கி.

பா.ஜ.க-வின் செயல், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளது என்கிறார் கஸ்தூரி பாசு. “வங்காளத்திற்கென்று தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. பிரிவினையின்போது ஏற்பட்ட வலியை அது பெற்றிருக்கிறது.  அதிகமாக அகதிகள் வருவதை எல்லையோரமாக உள்ள மக்கள் பிரச்சினையாக பார்க்கிறார்கள். இந்தப் பிரச்சினையை கையாள ஏராளமான வழிமுறைகள் உள்ளன. ஆனால், பா.ஜ.க இருக்கும் அமைப்புகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி சமூகத்தில் பிளவை ஏற்படுத்தப் பார்க்கிறது” என்கிறார் கஸ்தூரி.

விழாக்களில் மதத்தை நுழைப்பதன் வாயிலாக, புதிய புதிய விழாக்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக பா.ஜ.க பலனடையப் பார்க்கிறது. முன்னதாக ராம நவமி ஒரு சில இடங்களில் கொண்டாடப்பட்டது. இப்போது மாநிலம் முழுக்க ராம நவமி கொண்டாட்டங்களை பா.ஜ.க நடத்துகிறது, இந்த விழாக்களில் ஆயுதம் ஏந்தியும் ஊர்வலங்கள் நடத்தியும் கலவர முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு நடந்த ஊர்வலத்தில் மூவர் கொல்லப்பட்டனர் என்கிற தகவலை வேதனையோடு சொல்கிறார் கஸ்தூரி.

“அவர்கள் வேண்டுமென்றே முசுலீம்கள் வசிக்கும் பாதையில் ஊர்வலத்தை நடத்துகிறார்கள். ஒரேஒரு எதிர்வினை வந்தாலும் அதை வைத்து, பெரும் அரசியல் பிழைப்பை பெற்றுவிடும் பா.ஜ.க. உடனே, மேற்கு வங்கத்தில் இந்துக்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என சொல்வார்கள்” என்கிறார். பா.ஜ.க-வின் செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக திரிணாமூல் காங்கிரஸ் ராமநவமி ஊர்வலங்களை நடத்துவதோடு, அனுமன் ஜெயந்தியையும் நடத்துகிறது. காரணம் இந்துக்களின் வாக்கு வங்கி என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

“தங்களுடைய வசிப்பிடத்தில் வேற்று மதத்தினரை அனுமதிக்காத மக்களிடம் இத்தகைய அரசியல் சதிகளையெல்லாம் சொல்ல முடியுமா? மதச்சார்பற்ற தன்மைக்காக அவர்களால் எப்படி போராட முடியும்? அவர்கள் ஏன் போராடப் போகிறார்கள்? இந்துக்கள் மட்டுமே உள்ள வசிப்பிடத்தை விரும்புவதைப் போல, இந்து தேசத்தைத்தான் அவர்கள் விரும்புவார்கள்” – ஆதங்கத்தோடு சொல்கிறார் லபானி.

சன்கதி அபிஜான் அமைப்பின் சார்பில் ”கதவைத் திற” என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் பேசும், தன்வி சுல்தானா.

நில உரிமையாளர்களையும் வீட்டு உரிமையாளர்களையும் மட்டும் லபானி குறைசொல்லவில்லை. தன்னுடன் இருக்கும் பல்கலைக்கழக நண்பர்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்கிறார். அரசியல் செயல்பாட்டாளராக உள்ள இவர், தன்னுடன் உள்ள ‘தோழர்களி’டம் ஒவ்வொருவருடமும் மாணவர்கள் சந்திக்கும் இந்த வீட்டுப் பிரச்சினையை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வலியுறுத்தி வருகிறார், ஆனால் அது நடக்கவில்லை. பதிலாக, தன்னுடைய சொந்த பிரச்சினையை அடையாள அரசியல் ஆதாயம் பெற பயன்படுத்துவதாக அவர்களால் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் இதே கதைகளை நடுத்தர வர்க்க பின்னணியுள்ள இந்து அடையாளத்துடன் எழுதும் பத்திரிகையாளர்கள் சொல்லும்போது, இந்த குற்றச்சாட்டை அவர்கள் வைப்பதில்லை என்கிறார்.

சன்கதி அபிஜான் மட்டுமே தற்போதைக்கு இருக்கும் நம்பிக்கை கீற்று;  நகரத்துக்கு வரும் இளைஞர்கள் இந்த அமைப்பின் உதவியோடு எதிர்த்து நின்று போராடுவார்கள் என்கிறார் லபானி.

சன்கதி அபிஜான், மதத்தை முன்வைத்து வீடு மறுக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களுக்கு விளக்கம் கொடுக்கிறது. ஆரம்பத்தில் உரிமையாளர்கள் தயக்கம் காட்டினாலும் இது பலனளிப்பதாக தெரிவிக்கிறார்கள். பெரும்பான்மையினர் வசிக்கும் வாழிடச் சூழலில் முசுலீம் வாடகைதாரர்களுக்கு இது நல்லதொரு சூழலை உருவாக்குகிறது. அஃப்டாப் ஆலமும் அவருடைய நண்பர்களும் இப்படித்தான் குட்கட் பகுதியில் இடம் கிடைத்து வசிக்கிறார்கள்.

மதத்தின் பெயரால் பாகுபாடு காட்டும் உரிமையாளரை தண்டிக்க சட்டம் எதுவுமில்லை. இது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்தது. ஆனால் இந்திய அரசியலமைப்பில் இது ஒரு இருண்ட பக்கமாகவே உள்ளது. எனவேதான், நாங்கள் குறுகியகால தீர்வுகளை நோக்கிச் செல்கிறோம். இத்தகைய சம்பவங்கள் குறித்த விவரங்களையும் சேகரிக்கிறோம். நீண்டகால தீர்வாக, மத பாகுபாட்டுக்கெதிரான சட்டத் தீர்வை நோக்கி செல்லவிருக்கிறோம் என்கிற இந்த அமைப்பின் கஸ்தூரி பாசு, “பெரும் திரளாக உள்ள எளிய வங்காள மக்களுக்கு மிகப்பெரிய சமூக பொறுப்பு இருக்கிறது. நாம் செயல்பட ஆரம்பித்தால், இது நின்றுவிடும்” என்கிறார்.

நன்றி:த வயரில் சூர்யாதாபா முகர்ஜி எழுதிய கட்டுரை
தமிழாக்கம்: கலைமதி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க